உலகெங்கும் ஒளிந்திருக்கும்
இந்த இருள் மனிதர்களைத்
தூக்கிச் சுமக்க முடியாமல்
இருளும் தடுமாறுகிறது
இவர்களின் எண்ணிக்கை அப்படி
நாட்காட்டியும் மணிக் கூடும் இவர்கள்
அதிசயிக்கும் பொருட்களுள் ஒன்று
உதித்து மறையும் ஆதவனையும்
சிலிர்க்கச் செய்யும் தென்றலையும்
இவர்களின் தேகம் மறந்தே விட்டது
தம் உடலை எப்பொழுதும்
இறுக்கி இருக்கும் கயிற்றினை
அவிழ்த்த பிறகும் இவர்கள் அதே
உணர்வில் அசையாமல் இருக்கிறார்கள்
வலியும் வன்மமும் இல்லாத
இரவுகள் இவர்களுக்கு தீபாவளி
இவர்களின் அசைவுகளை
அடுத்த வீடும் அறிந்ததில்லை
உலக இயக்கங்கள் இவர்களின்
கண்களுக்கு முற்றிலும் அப்பாற்பட்டது
அங்கே பல்லியும் பாய்ச்சலும்
கூட செத்து மடிக்கின்றன
அச்சூழலில் வாழ முடியாமல்
இவர்களின் கூக்குரல்கள் இதுவரை
அந்த சுவர்களைத் தாண்டியதே இல்லை
இவர்களின் துயரம் அறிந்த
சில வண்ணாத்திகள் மட்டுமே
தாளாத வேதனையில் அவர்களின்
இருப்பிடங்களையே சுற்றிவருகின்றன
இவர்கள் இருக்குமிடம்...
நறுமணம் பூசி நாகரிக மனிதர்களாய்
உங்களுடனும் என்னுடனும் நட்பு
பாராட்டும் யாரோ ஒருவரின்
திறக்கப் படாத பாதாள அறையில்...
-அருண் காந்தி(