0
மழையோடு பேசுங்கள்
அதன் ஒவ்வொரு
தாளத்திலும்
பிடிபடாத ஒரு சொல்
நனைந்தே செல்கிறது.
0
கவனமாக இருங்கள்
மழையோடு பேசும் போது
மழை வந்தாலும்
வந்து விடலாம்
0
மழை வரும் போது
மழையோடு பேசுவதே
நன்று என்கிறீர்களா
அப்படி தான் இருந்து
விட்டு போங்களேன்.
0
மழை பெய்தால் போதும்
விட்டில்கள் வந்து விடுகின்றன
வண்டுகளும் பூச்சிகளும்
வந்து விடுகின்றன
என்றாலும்
இதையெல்லாம் சொல்லாமல்
வெறுமனே
இரண்டு வரி
மழையைப் பற்றி
சொல்லவும் இயலுமோ?
0
மழைநீர் அருவியாய்
வீழ்கிறது
இப்போதெல்லாம்
மழையில் இறங்கி
குளிக்காமல் போன
மனம் வாய்த்ததேன்?
0
நேற்று பெய்த மழையில்
வீட்டின் கூரை
பெயர்ந்து போனது
வீடு நல்ல வெளிச்சமாச்சு
மனசு மெல்ல குளமாச்சு
0
மழை பெய்தால் போதும்
வீட்டில் பல இடங்களிலும்
தண்ணீர் தேங்கி விடுகிறது
மழை மீது புகார் சொல்ல
இயலாத என்னிலும்
உண்டோ கவனபிழைகள்?
- நட்சத்திரவாசி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )