கவிதை எழுதும் நேரத்தில் கவிதை குறித்து பேசுவோர்கள்
கவிதையின் ஆடை தொளதொளவென்றிருக்கிறது.
ஜீன்ஸை மாட்டிவிடு என்றார்கள்
கவிதை எழுதும் போது அவனைக் கொன்றுவிடனும்
முடிந்தால் இவனைக் கொன்றுவிடனும் என்றார்கள்.
கவிதைக்குள் உள்ளொளி வெளிச்சத்தின் தீற்றல் இருக்காது என்றார்கள்.
கவிதை ஆண்தன்மையும் பெண் தன்மையுமாயிருக்கிறது
ஏதாவது ஒரு குறியை செருகிவை என்றார்கள்
குறியீடு இல்லாத கவிதையையம் படிமமில்லாத சொற்களையும்
காக்கைக்குப் போட வேண்டுமென்றார்கள்
சிலர் வருத்தப்படக் கூடாதென்றார்கள்
ஆதலினால் என்னுடனே இருந்துவிடுகின்றன கவிதைகள்
ஏனெனில் கவிதை தன்னை எழுதச் சொல்லி
என்னிடம் கேட்டதில்லை.
நானும் கவிதையை வாழவைப்பதாய் வாக்குறுதி தரவில்லை
என் துயரங்களைச் சொல்லும் போதும்
கனவுகளைச் சொல்லும் போகும்
கவிதை குறுக்கே வந்து சந்திக்கிறது.
கவிதைக்கு என்னைத் தெரியும்
எனக்கு கவிதையைத் தெரியும்
அவ்வளவுதான் கவிதைக்கும் எனக்குமான உறவு
கீற்றில் தேட...
கவிதைக்கும் எனக்குமான உறவு
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்