உறக்கம்
வாராத இரவுகளில்
மணியடித்தபடி
நிற்காமல் விரைகிற
குல்ஃபி வியாபாரி
விற்றுச்செல்வது
உறைந்து புகைகிற
என் கனவுகளையா...?
*****************
கனவுதானே
என்ற அலட்சியத்தோடு
நீ கேட்கவிழைகையிலெல்லாம்
சொல்லவந்ததைப்
பாதியில் நிறுத்துகிறேன்.
"கனவுகளில்
எத்தனை அன்பானவனாய்
நீயிருந்தாய்"
என்பது துவக்கவாக்கியம்
****************
பயணத்தின் ஜதிக்கேற்ப
நடனமாடும் உடல்.
உன் போலவே வந்தது தெரியாமல்
அணைக்கும் உறக்கம்.
யாருடைய கைரேகைகளிலோ
ஓடிக்கொண்டிருக்கும் இரயில்பொம்மை.
இரவு ஒரு கனவு.
கீற்றில் தேட...
3 கனவுகள்
- விவரங்கள்
- ஆத்மார்த்தி
- பிரிவு: கவிதைகள்