இட்டுக் கொண்ட முத்தங்களும்
கட்டிக் கொண்ட தழுவல்களும்
மூர்ச்சையற்று முடங்கிக்
கிடக்கின்றன-பாம்பு
துரத்தும் உன் கனவுகளில்
என்னோடும் என் பிரியங்களோடும்.
பிணைந்திருந்த நம் மீது
நஞ்சு கக்கி மேலும்
மயக்கத்தில் ஆழ்த்திய
காலப்பாம்புகள் உன்
விழிப்பிற்குக் காத்துக்
கிடப்பதாய் கண்கள்
திறக்க மறுத்தாய்.
தினமொரு பாம்பு உன்னை
விழுங்கித் துப்புவதாய்
சொல்லி என் நிழல்களின்
எல்லை கடந்து
தொலைந்து போனாய்.
பாம்புகள் துரத்தும்
கனவுகளில் ஓடத்
தொடங்கிய உன் கால்கள்
என் கைகளைத் தவிர்த்து
என்னையும் துரத்தாததற்கான
குற்றம் சுமத்தி
விலகிச் சென்றன.
மிகுந்த சிரமங்களுக்கிடையில்
ஒளித்து வைத்திருக்கிறேன்
உன் மீதான என் பிரியங்களை
கனவுகள் என்னையும்
துரத்தத் துவங்கிவிட்டன.
- சோமா
கீற்றில் தேட...
காலப்பாம்பு கனவுகள்
- விவரங்கள்
- சோமா
- பிரிவு: கவிதைகள்