கீற்றில் தேட...

நேற்று
அழுகை வழிந்த
என் அறைக்குள்
பறந்து திரிகின்றன
பட்டாம்பூச்சிகள்.

குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்
தூர்ந்துபோன
என் வழித்தடங்களை
செப்பனிடுகின்றன
சிற்பியின் கைவண்ணத்தோடு.

சிதைந்துபோன
என் கனவுகளும்
சந்தோஷங்களும்
உயிர்த்தெழுகின்றன
மழலை ததும்பும் கொஞ்சல்களால்.

நான்கு சுவர்களுக்குள்
முடங்கிப்போன
என் சிறகுகளை
பிரபஞ்ச வெளி நோக்கி
பறக்கச் செய்யும்
மந்திரக்கோலை
சிரிப்புக்குள் மறைத்தபடி
என் கரம் பற்றி
என்னோடு நடக்கிறாள்
‘ட்விங்கொள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ பாடியபடி.

ஆதியில் இருந்த சொற்கள்
அவளின்
மழலைகளாகத்தான்
இருந்திருக்க வேண்டும்.