கீற்றில் தேட...


தவளையின் முதுகில்
கல்லைக்கட்டி அதை
எம்பச்செய்தேன்

வண்ணத்துப்பூச்சியின்
சிறகுகளைப் பிய்த்துவிட்டு
அதைப் பறக்கச்செய்தேன்

ஊறிக்கொண்டிருக்கும்
எறும்புகளின் பாதையில்
ஆழமாகக் கோடிழுத்து
அவற்றை அலைபாயச் செய்தேன்

திருப்பிப்போடப்பட்ட
ஆமைகளின்
வயிற்றுப்பகுதியில்
கால் மிதிபட
அவற்றின் மீதோடினேன்

தமது தொண்டைக்குள் மட்டும்
ஒலியெழுப்பி முயங்கிக்கொண்டிருந்த
புறாக்களை திடீரெனப் பயங்காட்டி
பறக்கச் செய்தேன்

குட்டி நாயின் காதுகளை
வலிக்குமளவு திருகி
அவற்றை ஊளையிடச் செய்தேன்

என் நெஞ்சு முழுக்க
இப்போது நான் கல் சுமந்து
திரிகின்றேன்.

- சின்னப்பயல் ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)