நாமும் நீயும்
எத்தனைக் கூட்டத்தின் இரைச்சலிலும்
என் குரல் லாவகமாய் உன்வசப்படுகிறது
அவர் துரத்தி வந்ததில்
ஒளிந்து கொண்டதாய் எண்ணி
என் கால் இடுக்குகளில்
முகம் புதைக்கிறாய்
சேலைத் தலைப்பு கொண்டு
நான் உன்னை போர்த்திக் கொண்டதில்
வெற்றி பெற்றதாய் முழக்கமிட்டு
முகம் காட்டுகிறாய்.
காய்ச்சலும் நீயும்
அம்மாவுக்குக் காய்ச்சலென்ற
பொய்யான வார்த்தையில்
நிஜ டாக்டராகியிருந்தாய்.
ஆட்காட்டி விரல் கொண்டு
இடுப்புப் பகுதியில் ஊசி போட்டாய்.
பேப்பரில் ஏதோ கிறுக்கி
வீட்டிலிருந்த மருந்து மாத்திரை
அனைத்தையும் கட்டிலின்
மேல் கடைவிரித்தாய்.
பாட்டியிடம் ஏதோ சொல்லி
விபூதி சுவைத்த உதட்டோடு வந்து
வெற்று ஆட்காட்டி விரலில்
விபூதியிட்டு விட்டாய்.
பின்பு ஐந்து நிமிடம் அமைதி காத்து
அழுது கொண்டே என் வயிற்றில்
கை வைத்து உறங்கிப் போனாய்.
- சோமா