போய்விட்டாயா
அம்மா!

parvathi_304ஒரு புலிமகனை
ஈழமண்ணுக்குத் தந்த
புறநானூற்றுத் தாயே!
 
போய்விட்டாயா
அம்மா!

“ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ
போர்க்களத்தானே!”

 இந்தப் புரட்சி வரியைப்
புதுப்பித்த
புரட்சித் தீயே !

போய்விட்டாயா
அம்மா!

இரவு விடியும் முன்
ஈழத்தை மீட்டும் முன்

போய்விட்டாயா
அம்மா!

தம்பியோ
தாயில்லாப் பிள்ளை
ஆகிவிட்டானே
அம்மா!

ஆயிரம் அன்னையர்
கிடைக்கலாம்
இந்தப் பூமியில்
எங்களுக்கு !

ஆனால்
நீதான் நீதான்
எங்களின்
ஆருயிர் அன்னை !

இலட்ச இலட்சமாய்
இழப்புகளை
எங்கள் தம்பி
சந்தித்து இருக்கலாம்
அவற்றுள்
உன் இழப்பும்
ஒன்றல்லவே!

உன் இழப்பு
உயிரினும் மேலான
இழப்பு!

ஒரு தாய் காவியத்தை
அல்லவா
இழந்து தவிக்கிறோம்
நாங்கள் !

இனி எங்கே
பிறக்கப் போகிறாள்
இன்னொரு வீரத்தாய்
உன்போல்?

நோய் உடலோடு
நீ பந்தாடப்பட்டாய்!

மருத்துவத் தேவைக்கு
மடிப்பிச்சை ஏந்தாமல்
தாய் மண்ணிலேயே
முடிவெய்திய
மானமறத்தி நீ!

உலகில் மூலை
முடுக்கெல்லாம்
சிதறிக் கிடக்கும்
உண்மைத் தமிழர்கள்
உடைந்த உள்ளத்தோடும்
உதிரக் கண்ணீரோடும்
முழங்காலை நிலந்தாழ்த்தி
வீரவணக்கம்
செலுத்தினார்களே அம்மா
உனக்கு !

 நீ பேறு பெற்றவள்
பெருமையுற்றவள்
உலகில்
எவருக்குக் கிடைக்கும் இந்தச் சிறப்பு !

அன்று –
உன்மகனை
ஈழமகளிடம்
ஒப்படைத்தாய் !

இன்றோ-
தலைவிரிகோலத்தோடும்
தாங்காத் துயரத்தோடும்
தாரை தாரையாய்
வழியும் கண்ணீரோடும்
உனது தலைமாட்டில் குந்தி அழுகிறாள்
அவள் !

 இதோ உனக்குக்  
கொள்ளிவைத்துத்
திரும்பி விட்டோம்
நாங்கள் !

உனது சிதைமேட்டில்
நடத்தப்பட்ட
கொடூரம் எங்கள்
குலைகளை
நடுக்க வைத்துவிட்டதே
அம்மா !

ஈமத் தீயில் எரிந்த
உன் நோயுடலை
உதைத்து மிதித்து 
சிதைத்துக்
கூத்தாடினவாம்
இராணுவத்தின்
பூட்சு கால்கள் !

வீரம் மணக்கும்
உனது சாம்பலும்
எங்களுக்குக்
கிடைத்து விடக் கூடாதாம் !

சுட்டுக் கொல்லப்பட்ட
மூன்று நாய்களை
நீ வேகும்
மயான நெருப்பில்
வீசி எறிந்து
ஏக்காளம் இட்டனவாம்
சிங்கள நாய்கள் !

என்ன கொடுமை
அம்மா இது ! உலகில்
எங்கே நடக்கும் அம்மா
இந்தக் கேவலம் ?

நீ எரிந்து தணிந்த அந்தச் சுடுகாட்டு
மண்மேல் ஆணை !

சூரியனுக்கு மரணமில்லை !
சுட்டெரிப்பான்
நாளை வந்து !

Pin It