ross_mallick_200ராஸ் மாலிக், வளர்ச்சித் திட்ட ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், "மேற்கு வங்கத்தின் மேம்பாட்டுக் கொள்கைகள்' என்ற தலைப்பிலான முனைவர் பட்ட ஆய்வுக்காக இவர் மேற்கு வங்கம் சென்றார். இவருடைய நீண்ட ஆய்வில் மரிச்ஜாப்பி படுகொலைகள் பற்றிய பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த ஆய்வு, பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக வெளியீடாகவும் வந்தது. இவருடைய குடும்பத்தினர் பிரிட்டிஷ் இந்தியாவில், நாமசூத்திரர்கள் இயக்கத்தின் அமைப்பாளர்களாக செயல்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவருடைய முக்கிய நூல்கள் : 1. Development, Ethnicity and Human Rights in South Asia; 2. Development Policy of A Communist Government : West Bengal since 1977; 3. Indian Communism : Opposition, Collaboration and Institutionalization

Refugee Resettlement in Forest Reserves : West Bengal Policy Reversal and the Marichjhapi Massacre  என்ற கட்டுரையையே இங்கு மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளோம்.

 தமிழில் : இனியன் இளங்கோ

காடுகளில் வாழும் புலிகளின் வனச்சரணாலயத்தைப் பார்ப்பதற்காக,   நான் கங்கை நதியில் படகு சவாரி செய்து கொண்டிருந்தபோது, நதிக்கரையில் நதியைப் பார்த்தவாறு இருந்த சில சிலைகளை நான் கவனித்தேன். இந்த சிலைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி கேட்டபொழுது, புலியொன்று பெண்ணைக் கொன்று இழுத்துச் சென்றுவிட்டதாகவும், எதிர் காலத்தில் அத்தகைய தாக்குதல்கள் புலிகளால் ஏற்படாமல் தடுக்க இச்சிலைகள் எழுப்பப்பட்டிருப்பதாகவும் விளக்கப்பட்டது. நான் மேற்கு வங்காள அரசின் செயலாளரோடு சுற்றுப் பயணம் செய்து வந்ததால், அந்த செயலாளருக்கு காவல் துறை பாதுகாவலர்கள் புலிகள் மற்றும் கடற்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்கியிருந்தனர். அதனால், மற்ற உள்ளூர் மக்களுக்கு இருந்த அச்சம் எங்களுக்கு இருக்கவில்லை. நதியின் கீழ்ப்பகுதி நோக்கி சவாரியை தொடர்ந்த பொழுது அரசு அதிகாரிகளிடையே நிகழ்ந்த உரையாடல், ஓர் எதிர்பாராத திருப்பத்தை சந்தித்தது!

வனச் சரணாலயத்தில் சட்டத்திற்குப் புறம்பாகத் தங்கியிருந்த தீண்டத்தகாத அகதிகள் படுகொலை செய்யப்பட்டது குறித்து அவர்கள் பேசினர். இப்படுகொலையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறினர்.

இப்படுகொலை நடைபெற்ற இடத்தைப் பார்ப்பதும், அந்த இடம் சுற்றுலா தலமாகவும் இருப்பதை அறிவதும் – சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கும் மனித வளர்ச்சிக்கும் இடையே உள்ள மோதலை வெளிப்படுத்தியது. சுற்றுலா பயணிகளின் மனமகிழ்வுக்காக, அந்த இயற்கையான சூழ்நிலையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்பட்டதற்கு கொடுக்கப்பட்ட விலையை – சுற்றுலா பயணிகள் ஊகித்திருக்க முடியாது. மனிதக் குடியிருப்புகள் குறைந்து வரும் இயற்கைச் சரணாலயங்களில், இத்தகைய உயிர்த்தியாகம் தேவையா என்பதை சுற்றுப்புறச் சூழல்வாதிகள் சிந்திக்க வேண்டும். ஆயிரக்கணக்கான தீண்டத்தகாத மக்கள் கொல்லப்பட்டதில் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை அறிந்து, அதற்கு யார் பொறுப்பு என்பதைத் தெரிந்து கொள்ள நான் முடிவு செய்தேன். இந்த ஆய்வு, அரசியல் திசை நோக்கி என்னை அழைத்துச் சென்றபோது – மதச்சார்பற்ற அமைப்புகளின் தோல்வி குறித்தும், தீண்டத்தகாத, பிற விளிம்பு நிலை மக்கள் மற்றும் அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறிக்கொள்ளுபவர்கள், உண்மையில் இம்மக்களை எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பது குறித்தும் மரிச்ஜாப்பி படுகொலை கேள்விகளை எழுப்பியது.

தீண்டத்தகாத அகதி மக்கள் 

       தீண்டத்தகாத அகதி மக்களின் படுகொலைக்கு வித்திட்ட நிகழ்வுகள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வேர் கொண்டிருந்த வகுப்பு மற்றும் வர்க்க மோதல்களின் வழித்தடத்தை வெளிப்படுத்தின.

பெரும்பாலான வங்காள முஸ்லிம்கள் தங்கள் வங்காளப் பண்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டு, இஸ்லாத்தின் சமத்துவக் கொள்கைக்கு மாறிய தீண்டத்தகாத மற்றும் கீழ்சாதி மக்களாவர். எனவே, முஸ்லிம் மற்றும் தீண்டத்தகாத மக்களுக்கு இடையேயிருந்த இடைவெளி, தீண்டத்தகாத மக்களுக்கும் மேல்சாதி நிலச்சுவான்தார்களுக்கும் இடையே இருந்த பெரிய இடைவெளியைப்போல் இருக்கவில்லை. காலனிய ஆதிக்க காலத்தில், இந்து நிலச்சுவான்தார்கள் ஆதிக்கம் செலுத்திய வங்காள காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, தீண்டத்தகாத மக்களும் முஸ்லிம்களும் ஓர் அரசியல் அணியில் திரண்டனர்.

காலனிய ஆதிக்க காலத்தில் இருந்த கிழக்கு வங்காள நாமசூத்ரா இயக்கம், இந்தியாவில் உருவான மிக ஆற்றல் வாய்ந்த அரசியல் திரட்சியை ஏற்படுத்திய தீண்டத்தகாத மக்களின் இயக்கங்களில் ஒன்றாகும். இவ்வியக்கம் 1920 களிலிருந்து முஸ்லிம்களின் துணையோடு, வங்காள காங்கிரஸ் கட்சியை எதிர்க் கட்சியாகவே வைத்திருந்தது. மேல்சாதி இந்துக்கள் அரசியல் அதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதால் – இந்து ஆளும் வகுப்பினரும் காங்கிரஸ் கட்சியினரும் – மேற்கு வங்காளத்தை தங்கள் ஆளுகைக்குள் வைத்துக் கொள்வதற்காக, சுதந்திரத்தின் போது வங்காளத்தின் பிரிவினையை கோரினர்.

marichjhapi_4மேல்சாதி இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே அரசியல் பேரம் பேசக்கூடிய வாக்குவங்கியாக இருந்த தீண்டத்தகாத மக்கள் – தங்கள் வலிமையை பிரிவினைக்குப் பிறகு இழந்து, இரு நாடுகளிலும் அரசியல் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட சிறுபான்மை மக்களாக மாறினர். இந்தியாவின் பிரிவினையால், மேல்சாதி நிலவுடைமை ஆளும் வர்க்கம் மிகுந்த இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப் பட்டு, இந்தியாவுக்கு இடம் பெயரக்கூடிய அளவுக்கு கல்வியையும் சொத்துகளையும் பெற்றிருந்தனர். மிகுந்த பணக்காரர்களாக இல்லாத மேல் சாதியினர் கூட, இந்தியாவில் விரைவாக தங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தக்கூடிய தொடர்புகளைப் பெற்றிருந்தனர்.

பாரம்பரிய மேல்சாதி ஆளும் வர்க்கத்தினரே முதன் முதலாக அகதிகளாக வந்தனர். சூன் 1948 க்குள் வந்த பதினொரு லட்சம் அகதிகளில், 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் நகரம் சார்ந்த நடுத்தர வர்க்கத்தினராகவும்; 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் கிராமம் சார்ந்த நடுத்தர வர்க்கத்தினராகவும்; ஒரு லட்சத்திற்கும் சற்று அதிகமானவர்கள் விவசாயிகளாகவும், ஒரு லட்சத்திற்கும் சற்றுக் குறைவானவர்கள் கைவினை விற்பன்னர்களாகவும் இருந்தனர். இந்தியாவில் வீடுகளும் சொத்துகளும் இல்லாத மேல் சாதி அகதிகள் –பொது நிலங்களையும் தனியார் நிலங்களையும் ஆக்கிரமித்து, தங்களை அந்நிலங்களிலிருந்து வெளியேற்றும் அனைத்து செயல்பாடுகளையும் எதிர்த்தனர். காங்கிரஸ் அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு நிலவுரிமை கொடுக்க இயலாமல் போனதும், நிலங்களை ஆக்கிரமித்த அகதிகளை வெளியேற்ற முனைந்ததும் – கம்யூனிஸ்ட் எதிர்க் கட்சியினருக்கு அகதிகள் மத்தியில் செல்வாக்கை ஏற்படுத்தியது. ஆகவே, அகதிகள் கம்யூனிஸ்டு அமைப்புகளால் அமைப்பு ரீதியாக மெல்ல அணி திரட்டப்பட்டனர். இந்த எதிர்ப்பை சந்திக்க நேர்ந்ததாலும், உறவினர்கள் மற்றும் மேல் சாதி உறுப்பினர்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகள் ஏற்படுத்திய பொது இரக்கம் காரணமாகவும் – காங்கிரஸ் அரசு சட்டத்திற்குப் புறம்பான இந்நில ஆக்கிரமிப்பை ஏற்றுக் கொண்டது.

கிழக்கு பாகிஸ்தானில் இருந்து இந்து மேல்சாதி நிலவுடைமை ஆளும் வர்க்கத்தினர் மற்றும் நகரம் சார்ந்த நடுத்தர வர்க்கத்தினர் மொத்தமாக வெளியேறியதால், மதவெறி எதிர்ப்பு அங்கிருந்த இந்து தீண்டத்தகாத மக்கள் மீது திரும்பியது. அதற்குப் பிறகு, அகதி மக்கள் கீழ் வர்க்கங்களிலிருந்து வரத்தொடங்கினர். இம்மக்களிடம் பொருள் வசதி இல்லாததால், அரசின் உதவிகளை சார்ந்திருந்தனர். இவர்களுக்கு முன்பு வந்திருந்த மேல்சாதி நடுத்தர வர்க்க அகதிகளைப் போல, குடும்பத் தொடர்பு கள் மற்றும் சாதி தொடர்புகள் இல்லாத தீண்டத்தகாத அகதிகள், தங்களை குடியமர்த்த மேற்கு வங்காளத்தில் நிலமில்லை என்று சொல்ல, வேறு மாநிலங்களில் குடியமர்த்தும் அரசின் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

மேற்கூறிய காரணத்தால், காங்கிரஸ் அரசு, நாம சூத்ரா இயக்கத்தை உடைத்து தீண்டத்தகாத மக்களை வங்காளத்திற்கு வெளியே அகதிகள் குடியிருப்புகளில் சிதறடித்தது. இதனால், வங்காளத்தில் மூன்று பாரம்பரிய மேல் சாதியினரின் ஆதிக்கம் அதிகரித்தது. பிற மாநிலங்களில் (ஒரிசா, சட்டீஸ்கர்) தீண்டத்தகாத அகதிகள் குடியமர்த்தப்பட்ட நிலங்கள், பாரம்பரியமாக பழங்குடியினர் வாழ்ந்து வந்த வனப் பகுதிகளாகும். இப்பழங்குடியினர், தங்கள் நிலங்களில் தீண்டத்தகாதவர்கள் குடியமர்த்தப்படுவதை எதிர்த்தனர். தீண்டத்தகாத அகதி மக்களின் விளை பொருட்களை அறுவடை செய்து கொள்வதும், விவசாய செயல்பாடுகளை முடக்குவதும் பழங்குடியினரின் வழக்கமாக இருந்தது. “நிலம் மோசமானதாக இருக்கிறது; நீர்ப்பாசன வசதி இல்லை. எங்கள் விளை பொருட்களை உள்ளூர் பழங்குடியினர் கொள்ளையடித்துச் செல்கின்றனர். பழங்குடியினர் வில் அம்புகளைக் கொண்டு தாக்குவதால், எங்களால் அவர்களை எதிர்க்க முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால், தீண்டத்தகாத அகதிகளுக்கு எதிராக செயல்படும் காவல் துறை, பழங்குடியினருக்கு பாதுகாப்பு தருகிறது'' என்று தீண்டத்தகாத அகதி ஒருவர் கூறுகிறார்.

குடியமர்த்தப்பட்ட இடங்களில் தீண்டத்தகாத அகதிகள் மற்றவர்களோடு இணைக்கப்படுவது மிகக்குறைவாகவே நடைபெற்றது. தீண்டத்தகாத அகதிகளுக்கு பற்றாக்குறையான உதவிப் பொருட்களே வழங்கப்பட்டன. இந்த உதவிப் பொருட்கள், பெரும்பாலும் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளால் களவாடப்பட்டன. அவர்களின் மீள் குடியமர்த்தலுக்கு முன்னால் தீண்டத்தகாத அகதிகள், ஒடுக்குமுறையும் ஊழலும் நிறைந்த முகாம் அதிகாரிகளின் கீழ் பல ஆண்டுகள் வாழ்ந்தனர். எதிர்த்தவர்கள் காவல் துறையினரால் கொல்லப்பட்டனர் அல்லது சிறை வைக்கப்பட்டனர். இவ்வாறு இழுத்து வரப்பட்ட 42 ஆயிரம் தீண்டத்தகாத அகதி குடும்பங்களில், 27 ஆயிரத்து 30 குடும்பங்கள் கொல்லப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன. இப்பொழுது 15 ஆயிரம் குடும்பங்கள்தான் மனிதத் தன்மைக்கு கீழான நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றனர். பல விசாரணைகள் மற்றும் அரசு ஆவணங்கள் குறிப்பிட்டதைப் போன்று, இம்மீள் குடியிருப்பு சிறை முகாம்களில் மிக மோசமான நிலை காணப்பட்டதாக அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர்.

இக்காலகட்டத்தில் இடதுசாரி எதிர்க் கட்சியினர், அகதிகளின் உரிமையை ஆதரித்து, அகதிகள் இந்தியாவின் பிற மாநிலங்களில் மற்ற மக்களின் நிலங்களில் சிதறடிக்கப்படாமல், அவர்களுடைய சொந்த மாநிலமாகிய வங்காளத்திலேயே குடியமர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜோதிபாசு பின்வருமாறு கூறினார்: “அகதிகளை மேற்கு வங்காளத்தில் உள்ள குடியிருப்புகளில் இருந்து அப்புறப்படுத்துவது, ஓர் எளிதான நிர்வாகச் செயல்! ஆனால், ஒன்றுபட்ட இயக்கம், அகதிகளை வெளியேற்றும் அரசின் சட்ட வரைவை ஒன்றுமில்லாததாக்கி விடும்.''

Marichjhapi-1தீண்டத்தகாத அகதிகளை குடியேற்றுவதற்காக மேற்கு வங்காளத்தில் குறிப்பிடப்பட்ட இடங்கள், கங்கைக் கரையின் சுந்தர்பான் பகுதியும், மாநிலம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் இருந்த வெற்று நிலங்களுமாகும். 1976 இல் மேற்கு வங்காளத்தில் 5 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் வெற்று நிலங்கள் இருந்தன. இதில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் விவசாயத்திற்காகப் பயன்படக் கூடியவை. 1 லட்சத்து 36 ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் அகதிகளாக அக்காலகட்டம் வரை வந்திருக்கக்கூடிய நிலையில், இந்த நிலம் ஒவ்வொரு நபருக்கும் அப்பொழுது விவசாயிகளால் பயன்பட்டு வந்த நில விகிதத்தைவிட அதிகமாக அதாவது, ஒரு நபருக்கு 0.321 ஏக்கர்களைவிட அதிகமாக நிலத்தைத் தந்திருக்கும். எனினும், நிலங்களைப் பிரித்து வழங்கி, அதில் அகதிகளை மறுகுடியேற்றுவதற்கு மிகப் பெரிய நிர்வாக முயற்சி தேவைப்பட்டிருக்கும்.

அகதிகள் முகாமை உருவாக்குவது, மறுவாழ்வுத் துறைக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தாலும் இம் முகாம்களை உருவாக்குவது, மறுகுடியேற்றத்தை எந்தத் தீர்வுமின்றி பல ஆண்டுகள் இழுத்தடித்தது. பிற மாநிலங்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தண்டகாரண்யா திட்டத்தின் விலை மட்டும் 100 கோடிகளாக இருந்தது. இதில் 23 கோடிகள் நிர்வாகச் செயல்பாடுகளுக்கு செலவானது. ஆகவே, புதிய அகதி முகாம்களை உருவாக்குவது அரசு ஒப்பந்ததாரர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வசதியாக இருந்து வந்தது மட்டுமின்றி – உண்மையான மறுவாழ்வை இல்லாமல் செய்வதில் அவர்களுக்கு ஒரு தீய நோக்கும் இருந்தது. ஏனெனில், அகதிகளுக்கான நலத் திட்டங்கள் நியாயமாக செயல்படுத்தப்படுமானால், அவர்களின் ஒப்பந்தங்களும் தனிப்பட்ட வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுவிடும்.

மேல் சாதி நில ஆக்கிரமிப்பாளர்களின் குடியிருப்புகள் சட்டப்பூர்வமாக்கப்பட்டு, பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் – தீண்டத்தகாதவர்கள் மற்ற மாநிலங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு, அங்கு அவர்கள் உள்ளூர் மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. மேற்கு வங்காளத்தில் இருந்திருந்தால், தீண்டத்தகாத மக்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய இடஒதுக்கீடு கூட, மற்ற மாநிலங்களில் குடியமர்த்தப்பட்டதால் கிடைக்கவில்லை. ஏனெனில், அவர்களுடைய சாதிகள் மற்ற மாநிலங்களில் தீண்டத்தகாதோர் பட்டியலில் இடம்பெறவில்லை. இடதுசாரி எதிர்க்கட்சியினர் இம்மக்களின் மனக்குறைகளைப் பயன்படுத்தி, மேற்கு வங்காளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட தீண்டத்தகாத அகதிகள் மத்தியிலும் மற்றும் மேற்கு வங்காளத்தில் வாழ்ந்திருந்த அவர்களின் சக சாதி உறுப்பினர்கள் மத்தியிலும் – அரசியல் அடித்தளத்தை அமைத்துக் கொண்டனர்.

இத்தகைய குறைபாடுகள், மீள் குடியிருப்பு முகாம்களில் அகதிகளை அமைப்பு ரீதியாக ஒருங்கிணைத்தது. இந்த இயக்கம் "மணா' முகாம்களில் தொடங்கியது. இம்முகாம்களில் தீண்டத்தகாத அகதிகள், 12 ஆண்டுகளுக்கு மேலாக போர்க் கைதிகளைப் போலவும் அடிமைகளைப் போலவும் ராணுவ அதிகாரிகளின் கீழ் வைக்கப்பட்டிருந்தனர். அகதிகள் முகாம்களில் உள்ள உயர் அதிகாரிகள், கடைநிலைப் பணியாளர்களோடு தொழில் தகராறில் ஈடுபட்டிருந்தனர். கடைநிலைப் பணியாளர்கள் தீண்டத்தகாத அகதிகளிடம் இரக்கம் காட்டுபவர்களாக இருந்தனர். 1970 இல் உயர் அதிகாரி ஒருவர், தீண்டத்தகாத அகதிகள் அவர்களுடைய சொந்த அமைப்பை – "உத்பாஸ்டு உன்யான்ஷிப் சமிதி' என்ற பெயரில் உருவாக்க ஊக்குவித்தார். இது, கடைநிலைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது. மாறாக, இந்த அமைப்பு உயர் அதிகாரிக்கு எதிராக கடைநிலைப் பணியாளர்களை ஆதரித்தது. ஆனால், உயர் அதிகாரிக்கு மாற்றாக வந்தவர், அவரைவிட மோசமானவராக இருந்தார். தீண்டத்தகாத அகதி மக்களின் கோரிக்கைகளான ரேஷன் உணவை அதிகப்படுத்துவது, முகாம்களுக்கு வெளியே வேலை செய்வதற்கான உரிமை, புதிய இடங்களில் குடியேற்றுவதற்கு முன்னர் அகதிகளோடு கலந்தாலோசிப்பது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து – "உத்பாஸ்டு உன்யான்ஷிப் சமிதி' போராடியது.

"உத்பாஸ்டு உன்யான்ஷிப் சமிதி' 13 நாட்கள் பட்டினிப் போராட்டத்தை நடத்தியது. இது, அகதிகளுக்கு வழங்கப்பட்ட பண விகிதத்தை அதிகப்படுத்தினாலும் மீள் குடியிருப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், தீண்டத்தகாத அகதிகள் வறண்ட, பயன்படுத்தப்பட முடியாத இடங்களில் வாழ்க்கையை தொடர நேர்ந்தது. 1974 இல் அகதிகளை அப்புறப்படுத்துவதற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம், காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் முடிந்து, பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. அதற்கடுத்த ஆண்டு மேற்கு வங்காளத்தின் சுந்தர்பான் பகுதியில் அகதிகளை மீள் குடியமர்த்த ஒரு தேசிய இயக்கத்தை தொடங்க "உத்பாஸ்டு உன்யான்ஷிப் சமிதி' முடிவு செய்தது. இவ்வியக்கத்தின் அமைப்பினர் வெளியிட்ட ஒரு துண்டறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது :

“மே மாதத்தில் "மணா' பகுதியின் "உத்பாஸ்டு உன்யான்ஷிப் சமிதி' பிரதிநிதிகள், அஸ்நாபாத்தில் இருந்து கொசாபா காவல் நிலையம் இருந்த மரிச்ஜாப்பிக்கு சென்றனர். 125 சதுர மைல் அளவு கொண்ட கடலில் இருந்து வெளியே வந்த மண்மேட்டில், 100 ஆண்டுகள் பழமையான கிராமம் இருக்கிறது. அந்த கிராமத்தின் மக்கள், கடல் அலைகள் அய்ந்து அடிக்கு மேல் உயர்வதில்லை என்று கூறினர். நாங்கள் கடல் உப்பு நீரைத் தடுக்க 5 அடி உயரத்திற்கு தடுப்பணைகளைக் கட்டி 100 ஆண்டுகள் வாழ்ந்திருக்கும்போது, நீங்களும் ஏன் அவ்வாறே வாழக்கூடாது? இங்கு மீன் பிடிப்பதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறினார். "மணா' பகுதியில் இருந்து 16 ஆயிரம் குடும்பங்கள் இத்தீவில் மட்டும் குடியமர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. அருகில் உள்ள "டத்தா பசூரில்' இன்னும் 30 ஆயிரம் குடும்பங்கள் குடியமர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.''

இருப்பினும், அகதிகள் ரயில்வே தண்டவாளங்கள் வழியாக மேற்கு வங்கத்திற்கு நடந்து சென்றபோது, காங்கிரஸ் அரசால் கைது செய்யப்பட்டனர். அகதிகளின் தலைவர்கள் ஓராண்டுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டபோது, தண்டகாரண்யாவில் இருந்து வெளியேற்றுதல் விரைவாக்கப்பட்டிருப்பதை அறிந்தனர். ஆனால், இப்பொழுது இடதுசாரியினர் மேற்கு வங்காளத்தில் அரசு அதிகாரத்தை ஏற்றிருந்தனர்.

(தலித் முரசு பிப்ரவரி 2011 இதழில் வெளியானது)

Pin It