ஜப்பானில் நில நடுக்கம்; பழங்குடி மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு!
 
          ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தென் கடப்பா, தும்மலப்பள்ளி பகுதியில் அணுகுண்டு, அணு மின்சாரம் ஆகியவற்றிற்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் மூலப் பொருளான யுரேனியம் மிக அதிக அளவில் கிடைப்பதாக, அணுத் தாது கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (Atomic Minerals Directorate for Exploration and Research) 19-3-2011 அன்று தெரிவித்துள்ளது. இந்த யுரேனியத் தாதுவின் தரம் (நெய்வேலி நிலக்கரியைப் போன்று) சற்றுக் குறைவாக இருந்தாலும் 60,000 டன் கிடைக்கும்படியாக மிக அதிகமான அளவு  இருப்பதால், யுரேனிய வளத்தில் உலகில் 20 நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்கும் என்றும் அவ்வியக்ககத்தின் இயக்குநர் திரு.மைத்தானி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அணு ஆற்றலைப் பயன்படுத்த மூலப் பொருட்களுக்காக இனி வெளிநாடுகளின் தயவை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று "நாட்டுப் பற்று" உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதிக்கலாம். அப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களிடமும் ஏதோ பெரிய அதிர்ஷ்டம் வந்து விட்டது என்றும் அவர்களுடைய இடம் வளர்ச்சி அடையப் போகிறது என்றும் கூறி சிறிது காலத்திற்கு மகிழ்ச்சி அடைய வைக்கலாம். ஆனால் நம் அரசுகள் யுரேனிய தாதுக்களைப் பயன்படுத்த ஆரம்பித்தால் அதில் முதல் களப் பலி ஆகப் போவது பழங்குடி மக்கள் தான்.
 
          இப்பொழுது எந்த விதப் பயன்பாடும் இல்லாமல் வெற்று நிலமாக இருக்கும் யுரேனிய வள நிலங்கள், பழங்குடி மக்களின் பெயரில் பட்டா நிலங்களாக இல்லை. அதீதக் கற்பனையாக அது பழங்குடி மக்களின் நிலமாகக் கருதப்பட்டாலும் அதன் வழிகாட்டு மதிப்பு என்று எதுவும் இருக்காது. ஆகவே அதீதக் கற்பனையின் படி ஏதோ ஒரு சிறு தொகையைக் கொடுத்து "சட்டப்படி" அவர்களை வெளியேற்றி விடலாம். உண்மை நிலையின் படி அரசு நிலத்தில் "ஆக்கிரமித்து" இருக்கும் பழங்குடி மக்களை ஒரு தாக்கீது (notice) கொடுத்தோ அல்லது கொடுக்காமலேயே கூடவோ வெளியேற்றி விடலாம். அதனால் அவர்கள் வாழ்விடமும் வாழ்க்கையும் இழந்து தவிப்பதைப் பற்றி அரசு கவலைப்படாது. ஏனெனில் அது அரசின் கடமை அல்ல. அரசின் கடமை முதலாளிகளின் முதலீட்டிற்கு இலாபத்தை உறுதி செய்வதும் அதற்கு இடையூறாக வரும் சக்திகளை எவ்வகையிலேனும் அழித்து ஒழிக்க வேண்டும் என்பதையும் தவிர வேறு எதுவும் இல்லை.
 
          பிறகென்ன? யுரேனியம் படிந்துள்ள இப்பகுதியில் முதலாளிகள் தங்கள் முதலீடுகளை ஈடுபடுத்தி இலாபம் ஈட்டலாம். அதனால் வாழ்விடங்களையும் வாழ்ககையையும் இழக்க நேரிடும் மக்கள் போராடினால், பேச்சு வார்த்தை என்று கூறிக் கொண்டே மக்கள் மடிந்து போகும் வரை காலத்தைக் கடத்தலாம். மடிய விரும்பாத மக்கள் அரசின் செயல்பாட்டை வற்புறுத்திப் போராடினால், மாவோயிஸ்டுகள் என்று கூறி ஒழித்துக் கட்டலாம். ஆக, யுரேனிய வளத்தின் கண்டுபிடிப்பு பழங்குடி மக்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கையாக உருவெடுத்துக் கொண்டு இருக்கிறது.
 
          ஆனால் ஜப்பானின் நில நடுக்கமும் ஆழிப்பேரலையும் அவற்றின் தொடர்ச்சியாக ஏற்பட்ட அணு உலை விபத்துகளும், பாதுகாப்பு வடிவமைப்பு பற்றி அறிவியலாளர்கள் பெற வேண்டிய படிப்பினைகளை விட, இலாபச் சக்கரச் சுழற்சியில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் அதிகமான அச்சுறுத்தலை அளித்துள்ளன. திரு.கிருஸ்டோப் ருயேல் (Christof Ruehl) என்ற பொருளாதார வல்லுநர்  20-3-2011 அன்று, ஜப்பானின் அணு உலை விபத்துகள், அணு ஆற்றல் பயன்பாட்டிற்கான முதலீடு பற்றிப் புதிய படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்துள்ளன என்று கூறியுள்ளார். இதுவரையிலும் அணு ஆற்றல் திட்டங்களுக்கான முதலீடு பற்றிய பகுப்பாய்வில் விபத்து என்ற காரணியைக் கணக்கில் கொள்ளவில்லை என்றும், இப்பொழுது கிடைத்திருக்கும் படிப்பினைகளின்படி அதைக் கணக்கில் கொண்டு பார்த்தால் நீணட காலத்தில், பெட்ரோல், நிலக்கரி, நீர்மின்சாரம் போன்ற திட்டங்களில் ஈடுபடுத்தப்படும் முதலீடுகளுக்குக் கிடைக்கும் இலாபத்தை விட அணு ஆற்றல் திட்டங்களில் ஈடுபடுத்தப்படும் முதலீடுகளுக்கு இலாபம் குறைவாகக் கிடைக்கும் என்றும், ஆகவே இப்பொழுது அணு ஆற்றல் திட்டங்களில் முதலீடு செய்யும் யோசனைகளைக் கைவிட்டு விடலாம் என்றும், 2030 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீளாய்வு செய்யலாம் என்றும் சுறியிருக்கிறார். ஆகவே இப்பொழுது கண்டு பிடிக்கப்பட்டு இருக்கும் யுரேனியப் படிவின் காரணமாக ஆந்திர மாநிலத்தில் பெரிய‌ திட்டங்கள் எதுவும் தீட்டப்படாது என்றும், அதனால் பழங்குடி மக்கள் வாழ்வுரிமையை இழந்து மாவோயிஸ்டுகளாக மாற வேண்டியது இல்லை என்றும் மகிழ்ச்சி அடையலாம்.
 
          பொருளாதார வளர்ச்சிக்காக நாட்டின் வளத்தைப் பயன்படுத்த முனைந்தால் நாட்டு மக்களின் வாழ்க்கை பலியிடப்படுவதும், மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்றால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதுமான இந்த முரண்பாடு ஏன்? இதைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க நாம் ஏன் விரும்புவது இல்லை?

Pin It