1.ரியர் வியூ...
..............................................................................................................
கூட்டமொன்றில் நகர்ந்து கொண்டிருக்கையில்
சின்ன தருணத்தின் இடைவெளியில்
எனது செல்பேசியை
பிடுங்கிக் கொண்டு ஓடுகிறான் அவன்.

கைகளை வீசி நடந்து கொண்டிருந்த உடல்களை
வெகு லாவகமாக தாண்டி ஓடுகிற அவனை
பதற்றமுடன் துரத்துகிறேன்

கூட்டத்திரளினின்றும் வெளியேறி அடுத்த சாலையில்
நகர்ந்து கொண்டிருக்கிறான் அவன்.
எட்டிப் பிடித்துவிட எத்தனிக்கையில்
அவன் என் சட்டையை
அணிந்திருப்பதைக் கவனிக்கிறேன்.

ஓரிடத்தில் நின்றுகொண்டிருக்கிறான் இப்பொழுது
மெல்லப் பொதுத் தொலைபேசியை அணுகி
எனது எண்ணைச் சுழற்றுகிறேன்.

எடுத்தவன் என் குரலில் வினவுகிறான்
பேசுவது எவரென்று.
துண்டிக்கிறேன்.

வியர்வையைத் துடைக்கையில் கவனிக்கிறேன்.
எனது வாகனத்தை அவன் சாவி போட்டுத்
திறப்பதையும் மெல்ல நகரத்துவங்குவதையும்.

அவன் வாகனத்தின் பின்னிருக்கையில்
இயல்பாக வந்தமர்கிறாள்
என் காதலி.

கிளம்பிச் செல்கிறபோது
அந்த வாகனத்தின் இடதுபுறத்திலிருந்த
கண்ணாடி தரையில் விழுகிறது.
எடுத்து அதனுள் நுழைகிறேன்.

சாலையொன்றில்
கியர்களை மாற்றிப் பறக்கிறேன்
என் பின்னாலிருப்பவள் சொன்ன
நகைச்சுவைத் துணுக்கொன்றிற்கு
அதிகபட்சமாய்ச் சிரித்தபடி.
..................................................................................................................................

2.செவிலி
..........................................................
மட்டியம் ஒலிக்கையில்
மத்தியானம் கெடுமோ என்றழத் தொடங்கிய
தொட்டிலைத் தொடவில்லை
தூக்கவுமில்லை
படுத்திருந்த இடத்திலிருந்தே
ஓங்கிக் குரல்கொடுத்தாள்.
தொட்டிலொலி நின்றடங்கும்
நேரத்தில்
நகர்ந்து படுத்தவன்
உறங்குமட்டும் கிடந்தாள் அருகில்
மெல்லவெழுந்து புறம்வந்தாள்.
தூளியை விலக்கிப் பார்க்கப்
புன்சிரித்த சின்னப்பயல்
அழுகையை அடக்கியது
யாரோ எனத் தேடுகிறாள்
அரவமற்ற தோட்டத்தில்
இத்திசையும் அத்திசையும்.
சப்தம் கேட்டவுடன்
சிச்சிலிக் குருவி
சரசரவெனப் பறந்து செல்வதை
அவளறியாள்.
......................................................................................
3.காதல்
......................................................
நீ என்னிடமிருந்து பிடுங்கிச் சென்றதும்
நான் உன்னிடமிருந்து மீட்டு வந்ததும்
நீ பிடுங்க முயல்கையில்
நான் தட்டிப் பறித்ததும்
நீ தடுத்ததை மீறி நான் பறித்துக்கொண்டதும்
எனது வாயிலை நீ தாண்டாமல்
காத்துக்கொண்டதும்
உனது மதில்கள் தாண்டி உட்புகுந்ததும்
உனக்குமெனக்கும்
வானோர் வரம்.
..............................................................
4.அற்ற மொழி
அகராதியில் எத்தனை சொற்களுக்கு அர்த்தம் தெரியும்..?
அதற்குள் எப்படி அறுதியிட்டுச் சொல்ல முடியும்
ஒரு மொழியில் நீ தேர்ந்தவன் என்று

உனக்குத் தெரியாத மொழி வேறு
உனக்குத் தெரிந்த மொழியினுள்
ஒவ்வொரு முறையும்
கைகளை நுழைத்து
அலசி அலசி
வெளியே எடுத்துக் கொள்கிறாய்.
மொழி அப்பிக்கொள்கிறது கைகளில்.

வார்த்தைகளாக
வாக்கியங்களாக
அர்த்தங்களாக
சப்தங்களாக
உனக்கு வசப்பட்டது போன்றே
தோற்றமளிக்கக் கூடும்.

ஆனால் ஒருபோதும்
தம்மை உபயோகிக்கிற
ஒருவனுக்கும் சொந்தமாவதில்லை
எந்த ஒரு மொழியுமே.

இதில் ஒப்புமை இல்லாதவராகவும்
நீ இருக்கக் கூடும்.
ஒருவேளை ஒப்புக்கொள்ளவும் முன்வரலாம்.

வார்த்தைகளை
கலைத்துப் போட்டு அடுக்கிப்பார்க்கிற
வாய்ப்புக் கிடைத்ததனாலேயே
ஒரு மொழி வசப்படுவதில்லை என்ற உண்மை
அறிந்தவர்கள்
ஒருபோதும் சொல்லிக்கொள்வதே இல்லை
மொழி வசப்பட்டது என்று.

மாறாக
மௌனிப்பதன் மூலம்
அமைதியாயிருப்பதன் மூலம்
பரஸ்பரப் புன்னகைகளின் மூலம்
அவர்கள்
ஒரு மொழி தம்மைக் கடந்து போவதை
உற்று நோக்கியபடி இருக்கிறார்கள்.

மொழியைப் போலக் குதூகலித்து
உட்புகுந்து வெளியேறும்
உயிர்க்காற்றை
தரிசித்தபடி

Pin It