மூளையைக் குடைந்து
இருக்கும் ஈரத்தையும்
உறிஞ்சும் வெப்பம். 

காலடியில் தவமாய்க் கிடந்தும்
பருக்கையளவு நிழல் தர மறுக்கிறது
கஞ்சன் பெற்ற சாலையோர ஒற்றை மரம்.

தேடித்தேடி அலைந்ததில்
தோல் இளைத்து
நெடும்பயணத்தை முடித்துக் கொண்ட,
சுருண்டு கிடக்கும்
சில ஒற்றை செருப்புகள்
கஞ்சி ஊற்ற காத்திருக்கின்றது. 

கண்கள் கணுக்கால்களுக்கு கீழே அலைகிறது
வாழ்க்கையைத் தேடி
நிமிர்ந்து வானம் பார்ப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. 

எத்தனை முறை ஒட்டுப் போட்டாலும்
வளம் பெறாத இந்த வாழ்க்கையை
எந்தத் தோல் கொண்டு தைப்பது? 

தங்கமாய் பளபளக்கும்
பருத்த பார்ப்பனச்சாதி
தோலுரிக்க காத்திருக்கிறது
வார் அறுக்கும் கத்தியும் நூல் துளைக்கும் ஊசியும்.

Pin It