கீற்றில் தேட...

கொடிய நோயொன்றின் வாதைக்கு
உள்ளாகியிருப்பவனின் மனோநிலை குறித்த
குறிப்புகள் எவ்விடத்துமில்லை.
வரையறுக்கப் பட்ட அறையுள்ளிருந்து
திருட்டு வழியொன்றில் பயணிக்க நேர்ந்தவன்
மரணத்தின் தொகுப்பறையுள் அடைபட்டது
ஒரு தாங்கொணாத நிகழ்வே
விரயமெனவறிந்தும் கடவுளைத் தொழுவதின் சூட்சுமம்
அவனுக்கும் பிடிபடாது
பெரும் மலைகளையும்
தம் சிரம் கொண்டு முட்டி முட்டி
பிளந்தபடியேயிருந்தான்
ஆலோசனை மையயெண்ணை
இரகசியக் குரலில் தொடர்பு கொண்டவன்
பேரலறலொன்றை தொலைபேசியிடம்
உதிர்த்து விட்டு இருளுள் உதிர்ந்தான்
சில நேரம் நீர்ப் பெருக பேருந்து ஜன்னல்களில்
அமர்ந்திருப்பவன் சாலையின் போதிப்பு
பலகைகளை கண்ணுறுகையில்
தன் குறியை தானே வெட்டியெறியும் படியான
குரோதமொன்றை அவன் வளர்த்துக் கொண்டேயிருப்பதும்
பின்பு அக் குரோதத்தை வெட்டியெறிவதுமாகவே இருந்தான்
தன் பயணம் வரை.

- அருள்குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)