கீற்றில் தேட...

பங்குனி மாதம்
18 பட்டி தீர்த்தக்காவடி
ஆற்றுபடுகையில்  கோவில்
வழி நெடுகிலும் மனித தலைகள்

பெட்ரமாக்ஸ் லைட்
வெளிச்சத்தில்
ஆற்றோர கடைகளின்
ஆரவார அணிவகுப்பு

நவீன மயமாக்கல் !!
ஜோசியத்திற்கு
இப்போது
கிளிக்கு பதில் எலி
எனக்கு நல்லவாக்கு  கொடுத்து
மீண்டும் சிறை சென்றது ..
 
'பாப்பா ஐஸ்'
என்ற அழைப்பை ஏற்று
கைக்கு ஒன்றாய்
பால் ஐஸ்
சேமியா ஐஸ் .....

குச்சி ஐஸ்-ன்  சில்லிப்பு
குளிர்ச்சியாய் உள் பரவ
உற்சாகத்துடன் அடுத்த கடை......

பல வண்ண பாசி மணிகள்
கலர் கலர் கண்ணாடி வளைவி
கண்ணை பறிக்க
பத்து ரூபாய் ஜோடி
என சல்லிசாய்
அதில் இரண்டு
இதில் இரண்டு என ......

கலர் கண்ணாடி  கருத்தை கவர
'கண்ணாடி' காரனுடன் பேரம்
இப்போது கண்ணாடியும் .....

தொப்பி கடை கண்டதும்
அதன் மேல் ஓர் ஆசை
'ஷம்மி போதும் '
'இவர்' மிரட்ட......
கடைசியாய் தொப்பியுடன்
முடிந்தது அன்றைய' ஷாப்பிங் '

ஒரு வழியாய் வீடு 
திரும்பினேன் ....
பாசி, வளைவி, கண்ணாடி, தொப்பி
என  சர்வ அலங்காரத்துடன் ......

குழந்தையாய் வாழ்ந்த திருப்தி
உற்சாகம் கொடுக்க.......
காத்திருப்பு
தொடங்குகிறது ......
அடுத்த பங்குனி தீர்த்தத்துக்கு ......

- ஷம்மி முத்துவேல், சின்ன தாராபுரம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)