புத்தக விமர்சனம்

தம்பலா-பாரதி வசந்தன், நிவேதிதா புத்ததகப் பூங்கா, 14/260, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை சென்னை - 14

புதுச்சேரி எழுத்தாளர், போற்றுதலுக்குரிய பாரதி வசந்தன் அவர்களின் கைகளை நெஞ்சம் பனிக்க நட்போடு இறுகப் பற்றிக் கொள்ள ஏக்கம் மேலிடுகிறது. தமிழ் மண்ணில் இருந்துகொண்டு மாந்த அன்பையும் உயிர் இரக்கத்தையும் நாடும் எந்தவொரு தனிமனித அகமும் பாரதி என்னும் பெருங்கடற் பரப்பைக் கடந்து ஓர் அடிகூடப் பெயர முடியாது என்பதற்குப் பாரதி வசந்தன் ஒரு நற்சான்று. வரலாற்றின் மிக நெடிய பக்கங்களில் மாந்த அன்பை முன்வைத்துப் புதிய புதிய எழுத்துகள் ஒவ்வொரு கணத்திலும் வியத்தற்குரிய புதிய புதிய கோணங்களில் கோக்கப்பட்டு வருகின்றன. முடிவற்ற அந்த வரலாற்றுப் பக்கங்களில் அன்பை மட்டும், அன்பை மட்டும் வேண்டும் அந்த எழுத்துகள் தொடரத் தொடர வேண்டப்படும் அன்பும் போக்குக் காட்டிக் கொண்டே செல்கிறதாக உள்ளது. ஆனால், எதிர்பாராத ஒரு திருப்பத்தில், ஒரு புள்ளியில் அவை அன்பைத் தொடும். அன்பின் பேரெல்லைக்கு அப்பால் வேறு புதிய ஒரு அத்தியாயம் எழுதப்படத் தொடங்கும். அத்தகைய ஒரு பெருங்கனவு பாரதிக்கு இருந்தது- பாரதியை நெஞ்சார உணரும், அந்த ஆளுமையின் வழித்தோன்றல் களுக்கும் இன்று இருக்கிறது. அத்தகைய அன்பைக் காணத் துடிக்கும் ஆவேசத்தின் பலப்பல கோணங்களில் ஒரு புதிய கோணமாய், புதிய விழிப்பாய், பாரதியிலிருந்து தன்னைப் புதுக்கிச் செதுக்கிக் கொள்ளும் எழுத்துச் சிற்பியாய், புதுச்சேரி பாரதிவசந்தன் தம்மை வடிவமைத்துக் கொண்டுள்ளார் என்பதை அவருடைய ‘தம்பலா’ சிறுகதையின் மூலம் கண்டுணர முடிகிறது.

மனிதன் கபாலம் தொடங்கிப் பாத நரம்புகள்வரை ஊடுருவி, அவற்றையும் கடந்து மண்ணின் அடியாழம்வரை ஊறிப்போய் கிடக்கும் ‘சாதி’ என்னும், அன்பிற்கு எதிரிடையான பிரிவினைச் சக்தி கோலோச்சும் இந்திய மண்ணில், அந்தச் ‘சாதி’யைக் கொல்வதே அன்பை வாழ்விப்பதற்கான முதல் வேலையாக உள்ளது. உடல், உணர்வு, சிந்தை, செயல் என அனைத்திலும் அதன் அசிங்கமான அடையாளம் வந்துவிடாமல் இருப்பதற்காகவே பாரதியின் அக உலகம் சிலிர்த்துச் சிலிர்த்துத் தன்னைத் தற்காத்துக் கொண்டது; அது சேரியைத் தேடித் தேடிப் போய்க் கலந்து தன்னைத் தூய்மையாக்கிக் கொள்ள விழைந்தது. அதற்கு விழைவின் ஒரு அன்பின் துளிதான், புதுச்சேரியில் பாரதி வாழ்ந்த காலத்து, அவர் ‘தம்பலா’ என்னும் தோட்டிச் சமூகத்து மாந்தனோடு கொண்ட அன்பாக மலர்ந்தது. பாரதியை வேண்டியவாறெல்லாம் பிய்த்து எறிந்தவர்கள் ஒரு புறம்; புதுச்சேரியில் இந்த பாரதி, தம்பலா சந்திப்பு ஏன் பதிவாகாமல் போனது? பாரதியால் பிராமணராக்கப்பட்ட கனகலிங்கத்தின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ‘இந்தந் சந்திப்பு’ ஏன் கவனங்கொள்ளப்படவில்லை? இந்தக் தார்மிகக் கேள்வியின் நியாயம் பாரதி வசந்தனால் மட்டுமே உணரப்பட்டது. இந்த நியாயத்தின் அடிப்படையில் ‘இந்தத் தம்பலா யார்?’ என்னும் கேள்விக்கு விடைகாண உழைத்துத் தேடி, அசிங்கமும் அவமானமும் உற்று, ஒரு தலித் மாந்த அன்பின் பரிமாணத்தைக் கண்டடையும் முயற்சியில் தம்பலாவைச் சிறுகதை மூலமாக மீட்டுக் கொண்டுவந்து நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

ஒரு தலித்தாகப் பிறந்துவிட்டதனால், இந்தச் சாதிச் சமூகம் இழைக்கின்ற வேதனைகள், அவலங்கள், அவமானங்கள் ஆகியவற்றையெல்லாம் கடந்துதான், பாரதி வசந்தன் தம்பலா பற்றிய வரலாற்றுத் தரவுகளைத் தொகுக்க வேண்டியிருக்கிறது; சக எழுத்தாளர்களாலேய அவமதிப்பிற்கு உள்ளாக நேர்கிறது; தரவுகள் அடைய முடியாமல் துரத்தப்படுதல்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது; இத்தனை இன்னல்களையும் தாண்டிக் குடிசை வீட்டில் உட்கார்ந்து எழுத்தெண்ணி, ஒவ்வொரு வரியாக, பத்தியாக, பக்கங்களாக ‘தம்பலா’ சிறுகதை ஒரு தவமாகத் திரள்கிறது. எழுதி முடித்த பின்பு - ஓர் இடப்பரப்புச் சார்ந்து பல எழுத்தாளர்களின் கதைகளுள் ஒன்றாய் இந்தத் ‘தம்பலா’ இடம்பெறக் கூடிய நிலையில் வெறுப்புகளையும், வீண் வம்புகளையும் எதிர்கொள்ள நேர்கிறது. ஆனால், தம்பலா சிறுகதை மாந்த இருப்பிற்கு மூல ஊற்றான அன்பைத் தேடுகிறது. அதனால்தான் அன்பையே உணர்வின் மூல ஊற்றாகக் கொண்ட பாரதியையும், மலம் அள்ளுகிற தோட்டிச் சமூகத்தின் தலைவனான தம்பலாவையும் ஒரு தராசின் இருதட்டுகளாக - இணைத்துக் காண்கிறது. இந்தச் சாதிச் சமூகத்தில் பாரதி ஒரு தேவை என்றால், இன்னொரு தேவை தம்பலா. இதை, பாரதி வசந்தனின் படைப்புள்ளம், மாந்த உறவிற்கு முரணான சாதிய விதிமைகளைக் கண்டு குமுறும் அன்பின் அடிப்படையில் அமைந்த புரட்சியுள்ளம் ‘சிறுகதை’ என்னும் கலை வடிவமாக்கியுள்ளது.

பாரதி வசந்தனுக்குள் பாரதியும் இருக்கிறார்; தம்பலாவும் இருக்கிறார். மாந்த வேறுபாடுகளைக் களைய முனையும் இருவேறு ஆளுமைகளாகப் பாரதியும், தம்பலாவும் பாரதி வசந்தனின் படைப்புலகில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதனால்தான் சிறுகதையில் பாரதியின் நடை, உடை, பேச்சு, செயல் அத்தனையும் பாரதியுடையவை ஆகின்றன; பாரதியை நேரில் காண முடிகிறது. தம்பலா, தோட்டிச் சமூகத்தின் புரட்சிக் குரலாக ஒலிக்கிறார். அன்பின் அடிப்படை பற்றிய இந்தத் தெளிவும் இந்தத் தெளிவுக்கு எதிரானவற்றைப் புறந்தள்ளும் துணிச்சலும் பாரதி வசந்தனிடம் படைப்பாக்க நிகழ்விலும் படைப்பை முன்வைத்த புறச்சூழலிலும் வெளிப்படுகின்றன.

மேலும், சிறந்த படைப்பாளியாக பாரதி காலத்துப் புதுச்சேரியும், மொழியும் பாரதி வசந்தனுக்கு அருமையாக வாய்த்து விடுகின்றன. வசந்தனுக்குள் வாழும் பாரதி, சிறுகதைக்குள் அச்சுப்பிசகாமல் வெளிப் படுவதால் தம்பலா சிறுகதை - இதுவரை வெளியில் வராத பாரதியின் அபூர்வமான சிறுகதைகளுள் ஒன்றை வாசிக்கின்ற வாசிப்பு அனுபவத்தைத் தந்துவிடுகிறது. பெரிய வியப்புத்தான் இது. இந்த அடிப்படைகளால்தான் ‘தம்பலா’ சிறுகதை தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு என்னும் மும்மொழிகளில் ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளது. அது அப்படைப்பின் பேராற்றலுக்குக் கிடைத்த வெற்றி. ஆங்கிலத்தில் பி. ராஜாவும், பிரெஞ்சில் சு.ஆ. வெங்கடசுப்புராய நாயக்கரும் மொழிபெயர்த்து மூன்று மொழிகளில் ஒரு தொகுப்பாக வெளிவரும் முதல் சிறுகதை என்னும் பெருமையைப் பெறுவது அச்சிறுகதையின் வடிவம், உத்திகள் தாண்டி அதன் உள்ளடக்கம் பெற்றுள்ள தார்மீக அறம் பற்றியே; சாகித்திய அகாடமியின் திமீறீறீஷீஷ் மனோஜ்தாஸ், நீதியரசர் தாவீது அன்னுசாமி ஆகியோர் இக்கதையைச் சிலாகித்து எழுதுவதும் அதன் பொருட்டே.

2009, நிவேதிதா புத்தகப் பூங்கா வெளியீடாக, மும் மொழித் தொகுப்பாக வெளிவந்துள்ள ‘தம்பலா’ சிறுகதை 2001-ல் ‘20-ஆம் நூற்றாண்டு புதுவைக் கதைகள்’ தொகுப்பில் வெளிவந்து பரவலாகப் பேசப்பட்டதும் இந்தக் கதையின் தார்மீக அறம் பற்றித்தான். செல்லுமிடமெல்லாம் திருப்பூர் கிருஷ்ணன் பாரதி வசந்தனையும் தம்பலாவையும் ஒருசேரப் பாராட்டுகிறார். பிரபஞ்சன் அதன் கலை நேர்த்தியையும் படைப்பு நேர்மையையும் வியக்கிறார்.

டிராட்ஸ்கி மருது அற்புதமான அட்டைப்பட ஓவியம் தருகிறார். இச்சிறுகதைப் பொருளின் ஆழத்தையும் தேவையையும் உணர்ந்த ‘அமுதசுரபி’, ‘கவிதாசரண்’ ‘திசை எட்டும்’ ஆகிய இதழ்கள், இக்கதையை வெளியிட்டுப் பெருமை கொண்டுள்ளன. சாகித்திய அகாடமி இந்திய இலக்கியங்கள் வரிசையில் தமிழ்த் தம்பலாவை வைத்து, தான் சிறப்புப் பெற்றுக் கொண்டது.

இந்தப் படைப்பின் சொந்தக்காரர் இக்கதை குறித்து, அதன் படைப்பாளியாகப் பெருமை கொள்கிறார் என்பதைவிட, ஒரு மூன்றாம் மனிதராக இப்படைப்பின் தேவையை மனத்தில் வைத்துச் செயல்பட்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் இப்படைப்பு எழுந்த சூழல், படைப்பின் வெற்றி, படைப்பின் மீதான எதிர்வினைகள், விவாதங்கள், விமரிசனங்கள் ஆகியவற்றைத் திறந்த மனத்தோடு தொகுப்பின் இறுதியில் தொகுத்துத் தந்துள்ளார். படைப்பின் முழு பரிமாணத்தைத் தெரிந்துகொள்ள இத்தகைய எதிர்வினைகளையும் உடன் தருதல் ஒரு படைப்பாளியின் வரலாற்றுக் கடமையாக அமைவதை எண்ணிப் பாராட்டத் தோன்றுகிறது.

இவை அனைத்தையும் உள்ளடக்கிய மும்மொழித் தொகுப்பாய் வெளிவந்துள்ள தமிழின் முதல் நூலான இந்தத் ‘தம்பலா’வை சாதியம் களைந்து மனிதம் வேண்டும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டும்
Pin It