கீழ்வெண்மணி, உஞ்சனை, விழுப்புரம் படுகொலைகளைப் போலவே மேலவளவு படுகொலையும் நமது நினைவுகளிலிருந்து மெல்ல மறையத் தொடங்கிவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, சாதிவெறியர்களின் கொடூரத் தாக்குதலுக்குப் பலியான மேலவளவு போராளிகள் சிந்திய ரத்தம், இப்போதும்கூட காய்ந்து விடவில்லை. பத்தாண்டுகள் உருண்டோடிவிட்டன. ‘திமிறி எழுவோம், திருப்பி அடிப்போம்' என்றெல்லாம் முழக்கமிடும் தலித் அமைப்புகள் கண்டன ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தியதோடு நின்றுவிட்டன; வழக்கை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் முனைப்புக் காட்டவில்லை.

Murugesan
மனித உரிமைகளுக்காகப் போராடி வரும் வழக்குரைஞர் ரத்தினம் மற்றும் அவரது தோழமை வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் போராடி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்துள்ளனர். கொலை நடந்த விதமும், வழக்கு நடந்த விதமும் திகிலூட்டக் கூடியதாக இருந்தது. சாட்சிகள் மிரட்டப் பட்டார்கள்; வழக்குரைஞர்களுக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. ஆட்சியாளர்களும் ஆதிக்க சாதி அரசு அலுவலர்களும் கொலையாளிகளைத் தப்புவிக்க நடத்திய முயற்சிகள், நாட்டின் நீதி முறையையே கேலிக்கூத்தாக்கின. இவற்றையெல்லாம் கடந்து, 18.4.2006 அன்று சென்னை உயர் நீதிமன்றம், கொலையாளிகள் 17 பேருக்கு ஆயுள் சிறை தண்டனையை உறுதி செய்தது.

தேர்தல் பரபரப்புகளுக்கிடையிலும், கருத்துக் கணிப்புகளுக்கிடையிலும் கரைந்துபோன சென்னை உயர் நீதிமன்றத்தின் மேலவளவு படுகொலை தொடர்பான மேல்முறையீட்டின் மீதான மறுசீராய்வு மனுவின் மீதான தீர்ப்பு (18.4.2006) பற்றி தலித் தலைவர்களோ, தலித் வாக்குகளை அறுவடை செய்யத் துடிக்கும் திராவிடக் கட்சிகளோ, அதன் கூட்டணிக் கட்சிகளோ கிஞ்சித்தும் அக்கறை கொள்ளவில்லை.
மேலவளவு படுகொலையை விசாரித்த சேலம் அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 40 பேரில் 17 பேருக்கு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 302 மற்றும் 34இன் கீழ் ஆயுள் தண்டனை விதித்து, எஞ்சியுள்ள 23 பேரை விடுதலை செய்தது. மேலவளவு படுகொலையை விசாரித்த சேலம் அமர்வு நீதிமன்றம் கொலையுண்ட அறுவரும் தலித்துகள், காயமுற்ற மூவரும் தலித்துகள், எதிரிகள் 40 பேரும் சாதி இந்துக்கள்; குறிப்பாக, இருவரைத் தவிர 38 பேர் கள்ளர் சாதியைச் சார்ந்தவர்கள் என தனது தீர்ப்புரையில் குறிப்பிட்டிருந்தும், எதிரிகள் அனைவர் மீதும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் 1989 பிரிவு 3 (2) (V) மற்றும் 3 (1) (X) இன் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தும், எவரும் சேலம் அமர்வு நீதிமன்றத்தால் இப்பிரிவுகளின் கீழும் தண்டிக்கப்படவில்லை என்பது, மிகவும் கவலை தருவதாகும்.

மேலும், விசாரணை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றச் செயல் புரிவதற்காகச் சதித்திட்டம் தீட்டினார்கள் என்றோ, குற்றம் புரிவதற்கான உள்நோக்கம் மற்றும் எண்ணம் அவர்களுக்கு இருந்தது என்றோ சொல்வதற்கில்லை எனவும் முடிவிற்கு வந்துள்ளது.

தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் 17 பேரும் தண்டனையை ரத்து செய்யக் கோரி குற்றவாளிகள் மேல்முறையீடும், இவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 23 பேரின் விடுதலையை எதிர்த்து மீளவும், இவ்வெதிரிகள் மீது தொடக்கத்திலிருந்து விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டுமெனக் கோரி காயம்பட்ட அரசுத் தரப்புச் சாட்சிகளான குமார், பெரியவர் மற்றும் மாயவர் ஆகியோரும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். சீராய்வு மனுதாக்கல் செய்தவர்கள் சார்பாக மூத்த வழக்குரைஞர் கோபிநாத்தும், வழக்குரைஞர் ரத்தினமும் வாதாடினார்கள்.

மேலவளவு படுகொலைக்குக் காரணம் என்ன? இதற்கு சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புரையே தெளிவான காரணங்களைக் குறிப்பிட்டுள்ளது :

“குற்றமுறையிடுவோர் பட்டியல் சாதியினர். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அம்பலக்காரர் சாதியைச் சார்ந்தவர்கள். அடிக்கடி இவ்விரு பிரிவினருக்கிடையே சிறு சிறு விஷயத்திற்குக்கூட சிறு சண்டைகளும் தகராறும் நடந்து வந்துள்ளன. இவ்வாறு சச்சரவுக்குள்ளான ஒரு பொருள் 1996இல் தமிழக அரசு மேலவளவை தனித் தொகுதியாக அறிவித்ததும், மேலவளவு கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதுமாகும். இதனால் ஆத்திரமடைந்த அம்பலக்கார சாதியினர், எந்த ஒரு பட்டியல் சாதியினரும் / தலித்தும் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். 1996 வரை எதிரி 1 (அழகர் சாமி) இந்த ஊராட்சியின் தலைவராக இருந்துள்ளார். இத்தொகுதி தனித் தொகுதியானவுடன் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, அம்பலக்காரர்களிடமிருந்து எதிர்ப்பு வருமென அஞ்சிய பட்டியல் சாதியினர் எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை'' (பத்தி 12).

“இரண்டாவது முறையாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பட்டியல் சாதி வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அரசு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், முருகேசன் (டி1) கிராமத் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். இச்செயலால் ஆத்திரமடைந்த சில விஷக்கிருமிகள், பட்டியல் சாதியினர் சிலரின் வீடுகளுக்குத் தீயிட்டதால், மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு மூன்றாவது முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த முறையும் (இறந்துபோன நபர்) முருகேசன் மனுதாக்கல் செய்தார். அவருக்குப் போதிய பாதுகாப்பும் வழங்கப்பட்டது. தொடக்கத்தில் தேர்தல் அமைதியாகவே நடந்தது.

ஆனால், பின்னர் அம்பலக்கார மற்றும் கள்ளர் சாதியைச் சார்ந்தவர்கள் வாக்குப் பெட்டிகளைக் கைப்பற்றியதால் நிலைமை மோசமாகி, வாக்கு எண்ணிக்கை நடைபெற முடியாமல் போனதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் நான்காவது முறையாக சாதி ஆதிக்கமுள்ள இக்கிராமத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இம்முறையும்கூட (இறந்துபோன நபர்) முருகேசன் மனு தாக்கல் செய்து தேர்தலிலும் வெற்றி பெற்றார். அவர் பதவிப் பிரமாணம் எடுத்தபோதிலும் பட்டியல் சாதியினர் தவிர்த்து பிற சாதியினரின் கடும் எதிர்ப்பு காரணமாக, அப்பதவியில் அமர முடியவில்லை. வாக்குப் பெட்டிகளைக் கைப்பற்றிய குற்றத்திற்காக ஏற்கெனவே எதிரிகள் பொன்னையா (எ3) செல்வம் (எ21) தண்டனை பெற்றிருந்ததால் அவர்கள் கோபமாய் இருந்தனர்'' (பத்தி 12).

“விசாரணை நீதிமன்றம் எதிரிகளுக்கு குற்றச்செயல் புரிவதற்கு உள்நோக்கம், குற்றம் புரிய வேண்டுமென்ற எண்ணம் ஏதுமில்லை என்ற முடிவிற்கு வந்தது. ஆனால், அரசுத் தரப்பில் சொல்லப்பட்ட சாட்சியங்கள் மூலம் இது முறியடிக்கப்படுகிறது'' (பத்தி 13).

“மேலவளவு அக்கிரகாரம் கள்ளுக்கடைக்குப் பேருந்து வந்தவுடன் இரண்டாம் எதிரி துரைபாண்டி (எ2) பேருந்து ஓட்டுநரிடம் பேருந்தை நிறுத்தச் சொல்லி கூச்சலிட்டுள்ளார். பேருந்து நின்றவுடன் ஆயுதம் தாங்கிய எதிரிகள் அனைவரும் நாற்பதாவது எதிரி ராமர் (எ40) தலைமையில் பேருந்தைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் தலைவர் (டி1), துணைத் தலைவர் (டி2), இறந்து போன பிறர் மற்றும் காயமுற்ற சாட்சிகளைத் தாக்கியுள்ளனர். மேலே சொல்லப்பட்டுள்ள தொடர் நிகழ்வுகள் அனைத்தும் பலியாக்கப்பட்ட நிராயுத பாணிகள் மீது எதிரிகள் திட்டமிட்டே, முன்யோசனையோடு தாக்கியுள்ளது அய்யத்திற்கிடமின்றி நிரூபிரிக்கின்றன'' (பத்தி 13).

நாற்பது எதிரிகளில் எ5, எ6, எ19, எ25, எ26, எ28, எ30 மற்றும் எ40 ஆகியோர் பக்கத்து கிராமங்களிலிருந்து வந்த அம்பலக்கார சாதியினர். பிற எதிரிகளைப் போன்றே இவர்களும் ஆயுதம் வைத்திருந்துள்ளனர். இதிலிருந்து, பட்டியல் சாதியினருக்காகவே ஊராட்சி "ரிசர்வ்' செய்யப்பட்டதன் விளைவாகவே இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது மட்டுமின்றி, தேர்தலில் போட்டியிடும் பட்டியல் சாதியினருக்கும் பிறசாதியினருக்கும் உள்ள பகைமை, மேலவளவு கிராமத்திற்குள் மட்டும் இல்லை என்பதும் தெளிவாகிறது'' (பத்தி 13).

“சுத்துப்பத்து கிராமங்களில் இருந்து நிறைய எதிரிகள் ஆயுதம் தாங்கி வந்து பட்டியல் சாதியைச் சேர்ந்த தலைவரையும், வயது வந்தவர்களையும் குறிவைத்துத் தாக்கியுள்ள ஒட்டுமொத்த தாக்குதல், பட்டியல் சாதியினர் மீது திட்டமிட்ட, முன் யோசனையோடு குறிவைக்கப்பட்ட ஒன்று என்பது மிகத் தெளிவாகிறது. இந்தப் பேருந்து மிக நீண்ட தொலைவு பயணிக்கின்ற ஒன்று. ..... இரண்டாம் எதிரியின் மிரட்டலின் பேரில் வழக்கத்திற்கு மாறான இடத்தில் (மேலவளவு அக்கிரகாரம் கள்ளுக் கடை) நிறுத்தப்படுகிறது. பேருந்து நின்ற வுடன் ஆயுதம் தாங்கிய எதிரிகள் பேருந்தைச் சூழ்ந்து கொள்கின்றனர். தெளிவான இத்தொடர் நிகழ்வு களே தவறுக்கிடமின்றி திட்டமிட்டத்தாக்குதலிது எனக் காட்டு கின்றன'' (பத்தி 13).

“கிடைக்கக்கூடிய அபரிமிதமான ஆதாரங்களின் அடிப்படையில் கற்றறிந்த அமர்வு நீதிபதி அவர்களின் முடிவுடன் ஒத்துப்போக முடியாத நாங்கள், அரசுத் தரப்பில் குற்ற நிகழ் வுக்கான உள்நோக்கத்தை நிரூபித்துள்ளார்கள் என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது'' (பத்தி 13).

“பட்டியல் சாதியினர், பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டப் பிரிவு 3 (2) (V) குற்றவாளிகள்பால் ஈர்க்கப்படுவதை அரசு தரப்பால் மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் எந்தப் பின்னணியில் நடந்துள்ளது எனப் பார்க்க முடிகிறது. வழக்கமாக மேலவளவு ஊராட்சி பொதுத் தொகுதியாக இருந்துள்ளது. 1996இல் இந்த ஊராட்சி தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. 1996க்கு முன்னர் எ1 இந்த ஊராட்சியின் தலைவராக இருந்துள்ளார். இவ்வறிவிப்பு அம்பலக்கார சாதியினரால் விரும்பப்படவில்லை. அவர்கள் பட்டியல் சாதியைச் சார்ந்த ஒருவர் ஊராட்சித் தலைவராவதை விரும்பவில்லை. ஊராட்சித் தலைவராக ஒரு பட்டியல் சாதிக்காரர் ஆவதைத் தடுக்கவும் மீண்டும் இத்தொகுதியை பொதுத் தொகுதியாக ஆக்கவும் இவர்கள் முயன்றனர்.

மேலவளவு தொகுதியின் தன்மை மாற்றப்பட்டதையொட்டி, அய்ந்து பட்டியல் சாதியினர் கொலை செய்யப்பட்டது மற்றும் முருகேசன் கொடூரமாகவும் கோரமாகவும் கொலை செய்யப்பட்டது வரை நடந்த நிகழ்வுகளை எ1, 47, 48 ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த சாட்சியத்திலிருந்து, முதலில் இவ்வூராட்சிக்கு ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்தவரைக் கொண்டு தலைவர் பதவியை நிரப்ப தேர்தல் விண்ணப்பங்கள் முடிவின்படி, எந்த ஒரு தலித்தும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று விடுக்கப்பட்ட அச்சுறுத்தலால், தலித்துகள் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்துள்ளனர்'' (பத்தி 39).

“அரசுத் தரப்பு முதல் சாட்சியின் கூற்றுப்படி, அரசு அலுவலர்களின் ஆலோசனையின் பேரில் தலித்துகள் 9.10.1996 அன்று நடைபெறவிருந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய ஊக்குவிக்கப்பட்டனர். அதன் பிறகு இறந்துபோன டி1 முருகேசன், டி2 பூபதி, வையக்கருப்பன் உட்பட சில தலித்துகள் முடிவு செய்தவுடன் இறந்துபோன டி3 சேவுகமூர்த்தி, அரசு சாட்சி 12 கஞ்சிவனம், பாண்டியம்மாள் ஆகியோருடைய வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அச்சத்தால் தலித் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தனித் தொகுதியான பிறகு 10.12.1996 அன்று ஊராட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. டி1, டி3 மற்றும் கருப்பன் ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர். அதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

28.12.1996 அன்று இரண்டாவது முறையாக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. டி1 மற்றும் ஏழு நபர்கள் தலைவர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதே நாளில் நான்கு இடங்களில் அம்பலக்காரர் மற்றும் கள்ளர் சாதியினரால் வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதலும் கலவரமும் நடந்தது. இதில் ஈடுபட்ட எ3 மற்றும் எ21 ஆகியோர் குற்றம் புரிந்ததாகக் காணப்பட்டு தண்டிக்கப்பட்டனர். அதன் பிறகு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் 31.12.1996 அன்று நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதே நாளில் நடந்த தேர்தலில் டி1 மற்றும் ஏழு நபர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

இறந்துபோன முருகேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். டி2 மூக்கன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறந்து போன முருகேசன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு அலுவலகத்தில் நுழைய தடை செய்யப்பட்டதுமின்றி, தலைவருக்கான அலுவலகக் கடமைகளைச் செய்ய அம்பலக்காரர் சாதியினரால் அனுமதிக்கப்படவில்லை. இந்த சாதிக் கசப்பும் பகைமையும் நிறைந்த, வன்முறை ஊறிய வரலாற்றுப் பின்னணியில் டி1 தலை துண்டிக்கப்பட்ட, அய்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது'' (பத்தி 40).

“தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களை அச்சுறுத்தவும், அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கவும் குற்றம் சாட்டப்பட்ட குழுவால் இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அதுவும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள் என்பதால். இங்கே எதற்கு அழுத்தம் தரவேண்டியது என்றால், ஊராட்சித் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் தனியாக குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதே. கூடுதலாக இறந்துபோன ஏனையோரும் பட்டியல் சாதியைச் சார்ந்தவர்களே. அதைத் தவிர்த்து, காயமுற்றவர்களும் இதே சாதியைச் சார்ந்தவர்கள். அவர்கள் தலித்துகள் என்பதாலும், பட்டியல் சாதியினர் என்பதாலுமே குறிவைக்கப்பட்டுள்ளனர்.

Muregasan Memorial
இந்த திட்டமிட்ட தாக்குதலும், கொலையின் கொடூரத்தன்மையும் பட்டியல் சாதி மக்களை அச்சுறுத்தவே என்பதைத் தெளிவுபடுத்துவதுடன் அவர்கள் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பாடமாகக் காட்டவே என்பதும் புலனாகிறது. எனவே, எதை அம்பலக்காரர்கள் சட்டப்படி செய்ய முடியாதோ, அதைச் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, வன்முறையில் ஈடுபடுவதன் மூலம் செய்ய முனைந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் தனிப்பட்ட பகைமை ஏதுமில்லை. எனவே, பாதிப்புக்குள்ளானவர்கள் தாக்கப்பட்டதற்கான ஒரே காரணம், அவர்கள் பட்டியல் சாதியைச் சார்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறெந்தக் காரணமுமில்லை என்பது, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்தே தெரிய வருகிறது. இந்த வழக்கில் பட்டியல் சாதியினர் மீது தொடுக்கப்பட்டுள்ள வன்கொடுமைகள்பால் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் 1989 பிரிவு 3 (2) (V) ஈர்க்கும். விசாரணை நீதிமன்றம் ஆவணங்களிலுள்ள நம்பக்கூடிய சாட்சியங்களையும் வாக்குமூலங்களையும் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் செயலானது இறந்துபோனவர்களைக் கொல்லமட்டுமின்றி, ஊராட்சித் தேர்தலில் போட்டியிடத் துணிந்தமைக்காக ஒட்டுமொத்த பட்டியல் சாதியினரை அச்சுறுத்தவும்கூட'' (பத்தி 41).

“அரசு தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் திட்டமிட்ட சதி நிரூபணமாகியுள்ளது என்று சொல்லியுள்ளோம். இக்குற்றச் செயலுக்கான உள்நோக்கத்தையும் அரசுத் தரப்பில் நிரூபித்துள்ளனர் என்ற முடிவிற்கு வந்துள்ளோம்.கற்றறிந்த விசாரணை நீதிபதி மேற்சொல்லப்பட்டவற்றை ஏற்க மறுத்திருந்தாலும், அரசுத் தரப்பில் எந்தவித அய்யத்திற்கும் இடமின்றி ‘சதி' மற்றும் உள்நோக்கம் நிரூபிக்கப்பட்டுள்ளது'' (பத்தி 51).

“குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவர் மீதும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் 1989 பிரிவு 3 (1) (V) இன் கீழான குற்றம் புரிந்ததற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் கெடுவாய்ப்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து (மாநில) அரசு மேல்முறையீடு செய்யவில்லை. அரசு தரப்புச் சாட்சிகள் 2, 5 மற்றும் 9 ஆகியோர் மட்டுமே மறுசீராய்வு (Criminal revision) மனு தாக்கல் செய்துள்ளனர்'' (பத்தி 52).

“ஆயுள் தண்டனை பெற்றவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடும், இவ்வழக்கில் 23 நபர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காயமடைந்த சாட்சிகள் மறுசீராய்வு (Criminal revision) மனுவும் தாக்கல் செய்துள்ளனர். எனினும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து (மாநில) அரசு மேல்முறையீடு செய்யவில்லை.'' (பத்தி 6).

அடுத்த இதழிலும்

-அய். இளங்கோவன்
Pin It