வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் ‘நிறுவனங்களைத்’ தொடங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபலின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து பல வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இந்தியக் கல்விச்சந்தையைக் குறிவைத்துக் கல்லாப்பெட்டியுடன் களமிறங்கத் தயாராகிவிட்டன. இந்தியாவின் கல்விச்சந்தை மிகவும் பெரியது; விரிவானது. இவ்வளவு நாளாக இதில் உள்நாட்டு முதலாளிகளே கொள்ளை கொள்ளையாக அறுவடை செய்து வந்தனர். இதனை வெளிநாட்டு முதலாளிகளும் கொஞ்சம் அனுபவித்துவிட்டுப் போகட்டுமே என்கிற மத்திய அரசின் ‘பெருந்தன்மை’ மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் நுழைவதால் உண்டாகப் போகும் விளைவுகள் பற்றி அறிஞர்களிடையே பலத்த விவாதங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்தப் பல்கலைக்கழங்களின் வரவால் உண்டாகும் போட்டியால் இந்தியப் பல்கலைக்கழகங்களின் தரமும் உயரும் என்பது ஒரு தரப்பின் வாதம். இதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும் உயரப்போவது என்ன மாதிரியான தரம் என்பதில்தான் சிக்கல். வெளிநாட்டுப் பல்கலைக்கழங்கள் இங்கு கல்விச்சேவை புரிய வரவில்லை என்பது கபில்சிபலுக்கும் தெரியும்; கையில் பணத்துடனும் கண்ணில் கனவுடனும் காத்திருக்கும் பெற்றோர்களுக்கும் தெரியும். கல்வி என்பது இங்கே கொழுத்த வியாபாரமாகிப் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த நிலை மேலும் தீவிரப்படும். இங்கு வரும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டுக்கு இடம் இருக்காது என்று பூடகமாகத் தெரிவிக்கப்பட்டு விட்டாயிற்று. ‘கையில காசு; வாயில தோசை’ என்று கடைச்சரக்காய் பட்டங்கள் கூவிக் கூவி விற்கப்படலாம்.
உயர்கல்வி என்று குறிப்பிடப்படும் அந்தஸ்தை கலைப்பாடங்கள் இங்கு ஏற்கனவே இழந்துவிட்டன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான ‘மாணவ எந்திரங்களை’ உருவாக்கித் தரும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகள் மட்டுமே இங்கு உயர்கல்வி என்று ஊடகங்களின் உதவியுடன் தொடர்ந்து அடையாளம் காட்டப்படுகின்றன. இதனுடன் வணிகம் மற்றும் மேலாண்மை சார்ந்த படிப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம். நிறுவனங்களின் லாபக் கொள்கைகளை நிர்வகிக்கும் வெறும் ‘உற்பத்திப் பொருட்களாக’ மாணவர்களை உருவாக்கித் தருவதாகவே இங்குள்ள மேலாண்மைப் படிப்புகள் விளங்குகின்றன. சூடு, சொரணையின்றி நிறுவனம் சொல்வதைப் புன்னகையுடன் கேட்டு அடிபணிவதே ‘ஸ்ட்ரெஸ் மேனஜ்மென்ட்’ என்று இங்கு கற்றுத் தரப்படுகிறது. ‘சிந்தித்துக் கொண்டிருக்காதே; சொல்வதை மட்டும் கேள்’. இதுவே மாணவர்களுக்கான நம் நாட்டின் கல்விக் கொள்கையாக மாறிப் போயுள்ளது.
நம்முடைய கல்விமுறை உருவாக்கியுள்ள புதிய தலைமுறை இளைஞர்கள் மிகப்பெரும் கவுரவப் பொறுப்புகளாக நினைக்கும் வேலைகளை இரண்டு விதமாகப் பிரித்துவிடலாம். ஒன்று, வெளிநாட்டில் வேலை பார்ப்பது; இரண்டு, வெளிநாட்டுக்காக வேலை பார்ப்பது. இப்படி ஒரு தலைமுறையை உருவாக்கும் கல்விக் கொள்கையால் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் இந்தியா தன்னுடைய செவ்வியல் மதிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதாகச் சில மேல்நாட்டு அறிஞர்களே எச்சரித்துள்ளனர். ஆனால் அடிமைகளாய் இருப்பதில் பேரானந்தம் கொள்ளும் நம் அறிவுக்கு அதெல்லாம் உரைப்பதேயில்லை; உரைக்க விடுவதுமில்லை. கல்வியின் வழியாக நம்மைக் காலனி நாடாக்கும் சதி வலையில் தெரிந்தே வீழ்ந்திருக்கிறோம். ‘என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?’ என்று ஏங்கிய பாரதி சீக்கிரம் செத்துப்போனதும் நல்லதுதான்.
எது எப்படியோ, எல்லாக் கூத்துகளையும் மெல்லிய புன்னகையுடன் கண்டு கொள்ளாமல் கடந்து செல்கிறது காலம். நாமும் வேறு வழியின்றி அந்த நிலையில்தான் இருக்க வேண்டியிருக்கிறது. ‘வெளிநாட்டு நிறுவனங்களை இங்கு தொழில் செய்ய அனுமதித்ததால் இன்று முதல் நீ திறந்த வீட்டில் நுழையவிட்ட புலிகேசி என்று அன்போடு அழைக்கப்படுவாய்’! ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் இந்த வசனம் உங்களுக்கு மறந்திருக்காது. இன்றைய சூழலில் இந்தப் ‘பெருமை’க்குரிய பட்டம் யாருக்குப் பொருந்தும் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
- கணேஷ் எபி (