அனிதா தற்கொலை செய்து கொண்டு இறந்த பொழுது, அதைச் சங்கி கும்பல்கள் கொச்சைப்படுத்தின. அனிதாவுக்கு நீட் தேர்வு எழுதி மருத்துவராகும் அளவுக்குத் தகுதி இல்லை என முத்திரை குத்தின. ஆனால் அனிதா இன்று இருந்திருந்தால் தன் தகுதியைப் பழித்த, தன்னை சாவை நோக்கித் தள்ளிய சங்கிகளின் மீதும், பணக்கார பன்றிகள் மீதும் காறி உமிழ்ந்திருப்பார். காரணம், பல நூற்றாண்டுகளாக கல்வியறிவு மறுக்கப்பட்ட, வர்க்கத் தட்டிலும், சாதியிலும் கடைக்கோடியில் இருக்கும் மாணவர்கள் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, முட்டி மோதி, இரவு பகல் பாராமல் படித்து, எப்படியாவது வாழ்க்கையில் மேல்நிலையை அடைந்து விடமாட்டோமா எனப் போராடி, எழுந்து வரும்போது, அவர்களை மீண்டும் வீட்டிற்கே துரத்தி விடவும், அப்படியும் மீறிப் படித்து அதிக மதிப்பெண் எடுத்து மேலே வரும் போது அவர்களை ஓரேடியாக சாகடிப்பதற்காக பார்ப்பன- பனியா கும்பல்களால் உருவாக்கி வைத்திருக்கும் அயோக்கியத்தனமே - தகுதி, திறமை என்ற சொல்லாடல்கள் என்பது தற்போது அம்பலமாகி பல்லிளிப்பதால்.

anitha ariyalur 311சமூக சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் இல்லாத ஒரு நாட்டில் அனைவருக்குமான பொதுவான தகுதி, திறமை என்ற ஒன்று இருக்க முடியுமா? நிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அப்படி இருந்தும் ஒரு கும்பல் தொடர்ச்சியாக அதைப் பரப்புரை செய்து, அதையே ஒட்டுமொத்த சமூகத்தின் மீது திணிக்கின்றது என்றால், அந்தக் கும்பல் யாராக இருக்க முடியும்? தன்னுடைய சாதிய பலத்தின் மூலமும், பொருளாதார பலத்தின் மூலமும், அதை வைத்து அடைந்த அரசியல் பலத்தின் மூலமும் தொடர்ச்சியாக எளிய மக்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை பறித்துக் கொண்ட மோசடி கும்பலாகவே இருக்க முடியும். அது மட்டுமல்ல தான் செய்த மோசடிகளை மறைப்பதற்காக கொலை செய்யவும் தயங்காத கொடிய குற்றக் கும்பலாகவும் அது இருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே உலுக்கிய வியாபம் ஊழலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மத்தியப் பிரதேச மாநில அரசுப் பணியிடங்களுக்கும், மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் நுழைவுத் தேர்வு மூலம் உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் அமைப்புதான் வியாபம். அது நடத்திய போட்டித் தேர்வுகளின் மூலம் முறை கேடான வழியில் தகுதியற்ற பலர் பணம் கொடுத்தும், ஆள்மாறாட்டம் செய்தும் அரசுப் பணிகளையும், பொறியாளர் பணிகளையும், மருத்துவப் பணிகளிலும் இடம் பிடித்தனர்.

இந்த முறைகேடுகள் குறித்து மேற்கொண்ட விசாரணையில் நுழைவுத் தேர்வுகளிலும், நியமனங்களிலும் நடைபெற்ற முறைகேடுகளில், மாநில ஆளுநர் அலுவலகம், அரசுத் துறைகள், மற்றும் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான், அவர் மனைவி சாதனா சவுகான், மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் என குற்றவாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. இதன் மூலம் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாகவும் காவல் துறை கண்டுபிடித்தது. இந்த ஊழலில் நேரடியாக பிஜேபிக்கு தொடர்பிருப்பதால் வழக்கம் போல குற்றத்தில் தொடர்புடையவர்கள், அதை அம்பலப்படுத்த முயன்றவர்கள் என 46 பேர் வரை மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள்.

இந்த வியாபம் ஊழல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான சுதிர்சர்மா என்பவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணைச் செயலாளர் சுரேஷ் சோனி, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்தரப் பிரதான் மற்றும் பாஜக எம்.பி. அணில் தவான் போன்றோர் ஊழல் பணத்தை பங்கிட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக என்.டி.டி.வி தொலைக்காட்சி செய்தி கூட வெளியிட்டது. அது மட்டுமல்ல, குவாலியர் மருத்துவக் கல்லூரியில் இருந்து வியாபம் ஊழல் தொடர்பான ஆவணங்கள் அனைத்துமே திட்டமிட்ட முறையில் மாயமாகியும் போனது. மர்ம மரணங்களும், ஆவணங்கள் காணாமல் போவதும் எப்படி என்று இதுவரை எந்தப் புலனாய்வு அமைப்புகளாலும் ‘உண்மையிலேயே’ கண்டறியப்பட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழகத்திலும் அதுபோன்ற ஒரு மோசடி நடந்திருப்பது அம்பலமாகி இருக்கின்றது. நீட் தேர்வில் நடைபெற்ற இந்த ஆள் மாறாட்டம் பார்ப்பனக் கும்பலின் தகுதி, திறமை என்ற சொற்களுக்குப் பின்னே இருக்கும் திருட்டுத்தனத்தையும், மோசடித்தனத்தையும் முச்சந்தியில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மோசடியாக தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யாவிடம் சிபிசிஐடி நடத்திய விசாரணையில் பல பேர் இதே போல மோசடியான முறையில் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த மோசடி தொடர்பாக மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட அபிராமி, கிருபா, பிரவீன், ராகுல் ஆகிய 4 பேரையும் கைது செய்துள்ளனர். இதில் பிரவீனின் தந்தை சரவணனும் ஒரு மருத்துவராவர்.

உதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் கேரளாவைச் சேர்ந்த ரஷீத் என்பவர்தான் இந்த மோசடிக்கு இடைத் தரகராக செயல்பட்டதை கண்டுபிடித்திருக்கின்றனர். நீட் தேர்வில் மோசடி செய்வதற்காக இந்த இடைத்தரகரிடம் 20 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்ததாக வெங்கடேசன் கூறியிருக்கின்றார். இவை எல்லாம் நீட் தேர்வில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழலின் ஒரு சிறு துளி என்பது நிச்சயம். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தின் துணையில்லாமல் இவ்வளவு பெரிய மோசடி நடந்திருக்க துளியும் வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை. ஆனால் அதை எல்லாம் தோண்ட ஆரம்பித்தால் வியாபம் ஊழலின் மர்ம மரணங்கள் போல இங்கேயும் பலர் மர்மமாக இறக்க வாய்ப்புள்ளது.

சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பிள்ளைகளிடம் பிடுங்குவதற்குப் பணம் இருக்காது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர்கள் பிளஸ் டூ வில் அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவராகி விட்டால் இந்த ஊழல் பெருச்சாளிகளால் எப்படி பணம் சம்பாதிக்க முடியும்? அதனால் தின்று கொழுத்த பணக்காரப் பன்றிகளின் பிள்ளைகள் படிக்காமல், தேர்வு எழுதாமல் மிக எளிதாக மருத்துவராக உதவுவதன் மூலம் கோடிகளை சுருட்டவே இந்தக் கேடிகள் தகுதித் தேர்வுகளை நடத்துகின்றார்கள் என்பது தற்போது அம்பலமாகி இருக்கின்றது.

பல நூற்றாண்டுகளாக கல்வியை மறுத்து, சாதியின் பெயரால் சுரண்டிக் கொழுத்த கூட்டம் இன்றுவரையிலும் துணிவுடன் அதையே செய்து வருகின்றது. உழைத்தே சாக நிர்பந்திக்கப்பட்ட வர்க்கம் எதற்காக படிக்க வேண்டும் என்பதுதான் இந்தச் சனாதனிகளின் சிந்தனையாகும். அந்தச் சிந்தனைதான் 5, 8 வகுப்புகளுக்கு மாநில அரசுகளால் மாநில அளவில் பொதுத் தேர்வுகள் நடத்தி அவர்களை கல்வி நிலையங்களில் இருந்து ஓட ஓட விரட்டி அடிக்கத் துடிக்கின்றது.

இந்தியாவில் 10 லட்சம் ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளதாக தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 கூறுகின்றது. ஆனால் கல்விப் பணியில் போதிய அனுபவமும், மாணவர்களைப் புரிந்து கொண்டு நடத்தும் பண்பும் பெற்ற ஆசியர்களைக் கொண்டு அதை நிரப்பாமல் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களைக் கொண்டே அதை நிரப்ப வேண்டும் என்கின்றது அற்பவாதிகளின் சிந்தனை. ஒவ்வொன்றிற்கும் தகுதித் தேர்வுகள் கொண்டு வரப்படும் போதும், பாதிக்கப்படுவது சாமானிய மக்களின் குழந்தைகளாகவும், அதனால் பயனடைபவர்கள் வர்க்கத் தட்டில் உயரத்தில் உள்ள அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும், பயிற்சி மையங்களை நடத்தும் கார்ப்ரேட்டுகளுமே ஆவார்கள்.

இந்திய கல்விச் சந்தையின் மதிப்பு சுமார் 7 லட்சம் கோடிகளுக்கு மேல் இருக்கும் என்று சொல்கின்றார்கள். இத்தனை லட்சம் கோடிகள் புழங்கும் ஒரு துறை தங்கள் கையை விட்டுப் போவதை ஒரு போதும் அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும், கார்ப்ரேட்டுகளும், அவர்களை நக்கிப் பிழைக்கும் பார்ப்பன கும்பலும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இவ்வளவு பெரிய மோசடி நடந்தது தெரிந்த பின்பும், தமிழக மக்கள் நீட் தேர்வை ரத்து செய்யச் சொல்லி வீதியில் இறங்கிப் போராடவில்லை என்றால் போலியான இருப்பிடச் சான்றிதழ் கொடுத்தும், நீட் தேர்வில் மோசடி செய்தும், இன்னும் என்ன என்ன தில்லுமுல்லுகள் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து தமிழகத்தில் உள்ள, தமிழக மக்களுக்குச் சொந்தமான எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் அரசியல்வாதிகளின் பிள்ளைகளும், அதிகார வர்க்கத்தின் பிள்ளைகளும், பணக்காரப் பன்றிகளின் பிள்ளைகளும், வட நாட்டு மார்வாடிக் கும்பலின் பிள்ளைகளும் மட்டுமே படிப்பார்கள். நம் பிள்ளைகளை எல்லாம் தூக்குக் கயிற்றுக்கும், நெருப்புக்கும் நாம் தின்னக் கொடுத்துவிட்டு மாரடித்து அழுது கொண்டிருக்க வேண்டியதுதான்.

- செ.கார்கி

Pin It