மாற்றுத்திறனாளி சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்த சம்பவம் மனசாட்சியை உலுக்கும் துயரச் செய்தி மட்டும் அல்ல; மனித உயிரின் மதிப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் அரசின் கடப்பாடுகளையும் தார்மீகப் பொறுப்பையும் அரசதிகாரம் மீறுவதைச் சுட்டிக்காட்டும் மனித உரிமை மீறல் ஆகும்.
சம்பவச் சுருக்கம்:
தமிழ்நாட்டின் தென்கிழக்கில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டத்தில், அனைத்துச் சமயங்களையும் சேர்ந்த பக்தர்கள் வழிபடும் மதச்சார்பற்ற அய்யாவழி தலைமைப் பதியாக உள்ள சாமித்தோப்பு கிராமத்திற்கு அருகில் உள்ள தென்தாமரைகுளம் - ஈத்தங்காடு என்ற சிற்றூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் (35), வாழ்வாதாரத்திற்காக பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஜூலை 9 ஆம் தேதி அன்று நேசமணி நகர் காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
குடும்பத்தினர் கூற்றுப்படி, "சிறை செல்லும்போது நல்ல உடல்நலத்துடன் இருந்தார்" என்று கூறப்படுகிறது. ஆனால் நான்கு நாட்களுக்குள், ஜூலை 13 அன்று இறந்துவிட்டார் என்பது ஏற்புடையதாக இல்லாமல் பெருத்த ஐயத்தை ஏற்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து இவரது சடலம் வைக்கப்பட்டிருந்த ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்களும் பொதுமக்களும் நீதி கேட்டுச் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006 (Food Safety and Standards Act 2006 - FSSA)
இந்தியாவில் இது உணவுப் பாதுகாப்பிற்கான ஒருங்கிணைந்த சட்டம் ஆகும். உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் தடைசெய்யப்பட்டவை ஆகும். இவற்றை விற்பனை செய்வதும், பதுக்கி வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இக்குற்றத்தை முதல்முறை செய்தால் 15 நாட்களுக்குக் கடை மூடப்படும்; ₹25,000 அபராதம் விதிக்கப்படும்.
இக்குற்றத்தை இரண்டாம் முறை செய்தால் 30 நாட்களுக்குக் கடை மூடப்படும்; ₹50,000 அபராதம் விதிக்கப்படும்.
இக்குற்றத்தை மூன்றாம் முறை செய்தால் 90 நாட்களுக்குக் கடை மூடப்படும்; ₹1,00,000 அபராதம் விதிக்கப்படும்.
மேலும், குற்றச்செயல் ஏற்படுத்தும் தீங்கினை வகைப்படுத்தி அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று இச்சட்டம் கூறுகிறது. நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்த சபரிவர்மன் இக்குற்றத்தை மூன்றாம் முறையாகச் செய்ததாகக் கூறப்படுகிறது.
கண்டறிந்தவை:
- ஏழு ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனை உள்ள வழக்குகளுக்கு நீதிமன்றக் காவல் தேவையில்லை என்று அர்னேஷ்குமார் எதிர் பீகார் வழக்கில் (02.07.2014) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சபரிவர்மன் மீதான குற்றச்சாட்டுக்கு இத்தீர்ப்பு பொருந்தும். காவல்துறையும் குற்றவியல் நடுவரும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை முறையாகப் பின்பற்றாமல் செயல்பட்டிருப்பது கண்கூடு.
- டி.கே.பாசு எதிர் மேற்கு வங்க மாநிலம் வழக்கில் (18.12.1996) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஒருவரைக் கைதுசெய்யும்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளைத் தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) நடைமுறைச் சட்டப்பிரிவு 35 & 36 ஆகியவற்றிலும் இது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சபரிவர்மன் கைது நடவடிக்கையில் இவை எதுவும் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது.
- சடலக் கூராய்வு அறிக்கையில் சபரிவர்மன் உடலில் 19 கொடுங்காயங்கள் காணப்பட்டன என்று கூறப்படுகிறது. இதன் மூலம் சபரிவர்மன் நீதிமன்றக் காவல் சித்திரவதையால் மரணம் அடைந்துள்ளார் என்பது தெளிவாகிறது.
- நாகர்கோவில் மூன்றாவது குற்றவியல் நடுவர், கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் சிறைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். சிசிடிவி கேமராக்களின் ஒளிப்பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் ஒரு முதன்மை சிறைக்காவலர், இரண்டு சிறைக்காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பணியிடைநீக்கம் செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் எட்டு சிறைக் கைதிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதிமன்றக் காவலில் சிறையில் இருக்கும்போதுதான் சபரிவர்மன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, அதன் காரணமாக மரணம் அடைந்துள்ளார் என்பது தெளிவாகிறது.
- நேசமணி காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்குப் பின் குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டு నాగர்கோவில் கிளைச் சிறைக்குச் செல்லும் வரை சபரிவர்மன் உடல்நலத்துடன் சீரான ஆரோக்கியத்துடன் இருந்தார் என்பதை அவரது உறவினர்கள் கூறுவதிலிருந்து அறியமுடிகிறது.
- சபரிவர்மனின் நீதிமன்றக் காவல் மரணம் என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21 உறுதிப்படுத்தும் வாழ்வுரிமைக்கு முற்றிலும் எதிரானது என்பது தெளிவாகிறது.
பரிந்துரைகள்:
- நீலபதி பெஹ்ரா எதிர் ஒடிசா மாநிலம் வழக்கில் (1993) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவல் மரணத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளது. இதனடிப்படையில் நீதிமன்றக் காவலில் மரணம் அடைந்த சபரிவர்மன் குடும்பத்திற்கு ₹10,00,000 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சபரிவர்மன் மரணத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவரது மனைவிக்குத் தற்காலிக அரசு வேலை அளிக்கப்பட உள்ளது. ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கில் பின்பற்றப்பட்ட இழப்பீடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை இங்கே பின்பற்றி அதையே ஒரு முன்னுதாரணமாக்க வேண்டும்.
- ஜோகிந்தர்குமார் எதிர் உத்தரப்பிரதேச மாநிலம் வழக்கில் (1994) உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஒருவரைக் கைதுசெய்வது என்பது கடைசி வழிமுறையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த வழிகாட்டுதலைக் காவல் அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.
- தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மரணம் தொடர்பான விசாரணைகள் சுதந்திரமாக நடைபெற வேண்டும்.
- சிறை நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய சமூகக் கண்காணிப்பு அமைப்புகளுக்குச் சட்டப்பூர்வ அதிகாரமளிக்க வேண்டும்.
- நீதிமன்றக் காவலில் உள்ளோருக்கு ஆரம்ப மருத்துவப் பரிசோதனையும் காலமுறை மருத்துவப் பரிசோதனையும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- ஐக்கிய நாடுகள் அவையின் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையில் (1997) இந்தியா கையொப்பமிட்டிருந்தாலும் இதுவரை ஏற்புறுதி செய்யவில்லை என்பது கவலைக்குரியதே. இந்தியா இதை ஏற்புறுதி செய்து சித்திரவதைக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.
- சிறைத்துறையினருக்கு முறையான மனித உரிமைப் பயிற்சி அளிப்பதுடன், மனித உரிமை ஆணையங்களின் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.
முடிவுரை:
நீதிமன்றக் காவல் மரணங்கள் என்பது நிர்வாக அலட்சியத்தின், மனித உரிமை மீறலின் பட்டியல் ஆகும். அவை மனித உரிமைகளின் செயலாக்க நிலையை அளவிடும் சமூகக் குறியீடுகள் என்பது வெளிப்படை. ஒவ்வொரு காவல் மரணமும் எதிர்காலத்தில் உயிரிழப்பு ஏற்படாமல் காப்பாற்றும் சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டும். உயிர்களைக் காப்பாற்றத் தவறும் போது, சட்டத்தை முறையாகச் செயற்படுத்தி நீதியை நிலைபெறச் செய்ய வேண்டும்.
மனித மாண்பைப் பாதுகாப்பதே நீதியின் உயர்ந்த வடிவமாகும் என்பதைக் கருத்திற்கொண்டு காவல்துறை, சிறைத்துறை இரண்டும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பாகச் செயற்படத் தொடர்ந்து சீர்திருத்தம் செய்யப்பெற வேண்டும்.
கடந்த காலங்களில் ஜெயராஜ் - பென்னிக்ஸ் காவல் மரண வழக்கில் ஒன்பது காவல்துறையினருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அதற்குப் பின்னரும் அஜித்குமார், ஆகாஷ் எனக் காவல் மரணங்கள் தொடர்கின்றன என்றால், நிர்வாகச் சீர்கேடுகள் இன்னும் முழுமையாகக் களையப்படவில்லை என்றே பொருள்படும். எனவே, காவல் மரணத்திற்குத் தீர்வு ஆயுள் தண்டனையே!
- ச.மோகன்