‘எந்த ஓர் இலக்கியத்திற்கும் கரு மற்றும் கதைப்பின்னல் ஆகியன இன்றியமையா கூறுகளாகின்றன. அவ்விரு கூறுகளும் அந்த இலக்கியம் சார்ந்து நிற்கும் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். எனவே, மையப்பாத்திரம் என்பது ஓர் இலக்கியம் சார்ந்து நிற்கும் தத்துவத்தின் கொள்கைகளைக் கரு மற்றும் கதைப்பின்னலோடு இணைக்கும் சக்தி வாய்ந்த இலக்கிய உத்தியாகும். அந்த உத்தியால் தத்துவக் கொள்கைகளை மையப்பாத்திரத்தின் உடலில் ஆசிரியர் ஏற்றுகிறார்’ என்கிறார் டைலர் ஜேம்ஸ். இந்த விளக்கத்தின் அடிப்படையில் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட புதினங்களில் இடம்பெறும் மையப்பாத்திரங்களின் தத்துவக் கட்டமைப்பை அடையாளம் காணுவதாக இவ்வியல் அமைகின்றது.
சங்கக்காலத்திலிருந்து தற்காலம் வரை
திணை அடிப்படையில் மக்களின் வாழ்க்கையை விளக்கும் இலக்கியத் தொகுப்பாகச் சங்க இலக்கியம் அமைகின்றது. அதில் இடம்பெறும் மக்களுடைய வாழ்வியல் உலகாயதம் என்ற தத்துவத்தின்படி அமைந்திருக்கின்றது என்கிறார் நா. வானமாமலை (ஆராய்ச்சி). அதனையொட்டியே சங்கக்கால மையப்பாத்திரத்தின் சித்தரிப்பு அமைந்துள்ளது எனலாம். சங்க இலக்கியத்திற்கு அடுத்தக் காலகட்டம் பக்தி இலக்கியக் காலக்கட்டமாகும். இங்கு இடம்பெறும் மையப்பாத்திரம் சங்க இலக்கிய மையப்பாத்திரத்தின் மாற்றீடாக உள்ளது. ஆனால், வைதீகத்தின் அபகரிப்பு உலகாயதக் கொள்கைகளின் மீது நிகழ்ந்துள்ளதை அறிய முடிகிறது. பக்தி இலக்கியக் கால மக்களின் வாழ்க்கை இறை என்ற கருத்தினைச் சார்ந்து அமைந்துள்ளது. பக்தி இலக்கிய மையப்பாத்திரம் வைதீகத் தத்துவத்தினைச் சாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இறையை மனிதராக உருவித்து அதனையே மையப்பாத்திரம் ஆக்கியுள்ளனர். உபநிஷதத்தை அடுத்து உருவாகிய முழுமுதல் கடவுள் என்ற கருத்துமுதல்வாத வளர்ச்சியை இதில் காணமுடிகிறது.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி முதலான காப்பியக் கால மையப் பாத்திரங்களாகிய கண்ணகி, மணிமேகலை, சீவகன் போன்றோர் சமணம் மற்றும் பௌத்தம் போன்ற பொருள்முதல்வாதத் தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளனர். எனினும், இக்காப்பியங்களில் வினை, முற்பிறப்பு போன்ற சில கருத்துமுதல்வாதக் கொள்கைகளும் இடம்பெற்றிருப்பதைக் காண முடிகிறது.
உரைநடையின் தோற்றம் மற்றும் ஆங்கிலயர்களின் ஆட்சி ஆகியன புதினம் என்ற இலக்கிய வடிவம் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமாகக் காரணமாய் அமைந்தன. தொடக்கக்காலத்தில் எழுதப்பட்ட தமிழ்ப்புதினங்களில் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் ஆகிய தத்துவங்களைச் சார்ந்து நின்று சமூகச் சீர்த்திருத்தம், தேசியம் அல்லது காந்தியம் முதலான கருத்துகளை வெளிப்படுத்தும் மையப்பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. பின்னர், மார்க்சியம், திராவிடம் போன்ற பொருள்முதல்வாதத் தத்துவங்களின் அடிப்படையில் மையப்பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தலித்தியம் என்ற தத்துவம் வளர்த்தெடுக்கப்பட்டது. மரபு இலக்கியங்களில் தத்துவ மயக்கம் என்பது காலச்சூழல், பரபக்கம்[1] முதலான காரணிகளால் ஏற்பட்டன. புதினங்களில் தத்துவச்சார்பு மறைமுகமாக இடம்பெற்றது. அதற்கான காரணங்கள் ஆய்வுக்குரியது. புதினங்கள் பரபக்கம் போன்ற தத்துவ உரையாடல் மரபைப் பெரிதாகப் பின்பற்றவில்லை. அவை ஓர்மையுடன் தாம் சார்ந்து நிற்கும் தத்துவத்தைப் புனைவாக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. எனவே, தத்துவ மயக்கம் என்பது புதினங்களில் காலந்தோறும் அரிதாகிக் கொண்டே வந்துள்ளது.
தலித்தியம் தத்துவமாதல்
தத்துவத்தை வரையறை செய்தல் என்பதே ஒரு தத்துவச் சிக்கலாக இருப்பதால் அதனை வரையறை செய்தல் கடினமாக உள்ளது. தத்துவம் என்றால் என்ன? என்பதைப் புரிந்துகொள்வதற்குத் தொகுப்பு முறையிலான பார்வை உதவி செய்கிறது. அதன் அடிப்படையில் அமைந்த தத்துவக் களஞ்சியத்தின் விளக்கம் பின்வருமாறு அமைகின்றது. “தத்துவம் மனித வாழ்க்கையை அனைத்துப் பரிமாணங்களிலும் கேள்வியெழுப்பி, அதிலுள்ள அனைத்துச் சிக்கல்களுக்கும் தீர்வுக்காண முயல்கிறது” (Borchert :329-331). இக்களஞ்சியம் தத்துவத்தின் முதன்மை கூறுகளாகப் பட்டியலிடுவன வருமாறு:
- அறிவாய்வியல் (Epistemology)
- அறம் (Ethics)
- தருக்கம் (Logic)
- மீயியற்கை (Metaphysics)
- தத்துவ வரலாறு (The history of philosophy)
அறிவு உருவாகும் முறையை ஆராய்வது அறிவாய்வியல் எனப்படும். இது உண்மையின் இயல்பை (Nature of truth) அறிய முயன்று அறிவை உற்பத்தி செய்கிறது. இது பின்வரும் நான்கு கூறுகளுக்கும் அடித்தளமாய் விளங்குகிறது. அதாவது, உற்பத்தி செய்யப்பட்ட அறிவின் மூலம் அவை நான்கும் விளக்கப்படுகின்றன. அறம் என்பது நன்மை x தீமையைத் தார்மீக (Morality) அடிப்படையில் வகைப்படுத்தல். தருக்கம் என்பது ஏற்கத்தக்கன, தகாதவை என்று வாதங்களை வகைப்படுத்தல். மீயியற்கை என்பது இருத்தலைப் (Ontology) பற்றிய ஆராய்ச்சி முறைமையாகும். தத்துவ வரலாறு என்பது தத்துவத்தின் வரலாறு அல்ல. ஒரு பொருளினைத் (Subject) தத்துவம் மற்றும் வரலாற்றின் அடிப்படையில் விளக்கும் முறைமையாகும். இக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டு தத்துவத்தை மனிதர்களுடைய இருத்தல், வாழ்க்கைமுறை போன்றவற்றை விளக்கும் ஓர் அறிவுசார் அணுகுமுறை எனலாம். அது தரும் விளக்கங்களின் மூலம் வாழ்வதற்கான ஒரு முறைமை உற்பத்திச் செய்யப்பட்டுச் சமூகத்தில் பரவலாக்கம் பெறுகிறது. இவ்வாறாக உலகெங்கிலும் பல்வேறு தத்துவங்கள் தோன்றியுள்ளன. அவற்றினைப் பொதுவாகப் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்று இரண்டாகப் பிரிப்பர்[2].
தலித் என்னும் மராத்திய சொல் ‘உடைந்த’ அல்லது ‘சிதறிய’ என்பதான பொருளுடையது. ஜோதி ராவ் பூலே என்பவரால் 19ம் நூற்றாண்டில் இச்சொல் முதன்முறையாக, இந்துச்சமூகத்தில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. தலித் என்ற அடையாளத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் பலரும் தங்களுடைய துயரம் நிறைந்த வரலாற்றையும் சமூகப் புறக்கணிப்பையும் வெளிப்படுத்திக்கொண்டு ஒன்று சேர்ந்து தலித் இயக்கங்களை உருவாக்கினர். அந்த இயக்கங்களின் மூலம் ‘தலித் ஓர்மை’ (Dalit Consciousness) என்னும் நிலை கட்டமைக்கபட்டது. அதேவேளையில், சாதி எதிர்ப்பை அடித்தளமாகக் கொண்ட அம்பேத்கரியக் கொள்கைகளும் சேர்ந்து தலித்தியம் என்ற ஒரு மரபுமீறலை உருவாக்கின. விளைவாக, தலித்திய இலக்கியம் என்ற வகைமை தோன்றியது. இது தலித்துகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கின்றது. தலித்துக்கள் என்பதில் “பட்டியலினத்தவர், பழங்குடியினர், புதிய பௌத்தர்கள், உழைக்கும் மக்கள், நிலமற்றவர்கள், ஏழை விவசாயிகள், பெண்கள், அரசியல் ரீதியாகப், பொருளாதார ரீதியாக மற்றும் மதத்தின் பெயரால் சுரண்டப்படுபவர்கள் அனைவரும் உள்ளடங்குவதாக எஸ். கே. பால் குறிப்பிடுகிறார். தலித்திய இலக்கியத்தில் இடம்பெறும் மையப்பாத்திரம் பின்வரும் தன்மையில் அமைந்திருக்கின்றன.
தலித்திய மையப்பாத்திரங்கள் தங்களுடைய அறிவை அவர்களுடைய சமூகநிலையிலிருந்து உற்பத்தி செய்கின்றன. அதன்மூலம் அவர்களுடைய உடல் எதனால்? எவ்வாறு? எப்படியெல்லாம் ஒடுக்கப்படுகிறது? என்ற ஓர்மையைப் பெறுகின்றனர். தாங்கள் காலந்தோறும் அனுபவித்த கொடுமைகளை அடிப்படையாகக் கொண்டு தங்களுடைய அறத்தினைக் கட்டமைக்கின்றனர். தங்களை ஒடுக்குவதற்குக் காரணமாக அமையும் வாதங்கள் அனைத்தையும் தருக்க அடிப்படையில் நிராகரிக்கின்றனர். தங்களுடைய இருத்தலை ஆதிக்கத்திற்கு எதிராக அமைத்துக் கொள்கின்றனர். மீயியற்கையில் நாட்டமில்லாதவர்களாக உள்ளனர். தங்களுடைய தத்துவ வரலாற்றைத் தங்கள் அறிவின் பின்புலத்தால் உருவாக்குகின்றனர். இவ்வாறாகத் தலித்தியத்தை ஒரு தத்துவம் என்று குறிப்பிடலாம்.
தலித்தியப் புதினங்களில் மையப்பாத்திரம்
கடந்த ஆண்டு (2025) நீலம் பதிப்பகத்தில் வெளியான ஆறு புதினங்களில் மையப்பாத்திரம் இடம்பெறும் தன்மைகளைப் பின்வருமாறு பகுத்துக்கொள்ளலாம்.
அ) ஒற்றைநிலை மையப்பாத்திரம்
ஒரு பாத்திரம் மட்டுமே மையமாக இடம்பெறும் புதினங்களை ஒற்றைநிலை மையப்பாத்திரம் உடையவை எனலாம். ‘இடுக்கண் படினும்’ புதினத்தில் ‘இன்பா’ என்ற ஒற்றைப் பாத்திரத்தை மையமிட்டுக் கதைப்பின்னல் அமைகின்றது. அவனுடைய வயிற்றுவலியில் கதை துவங்குகிறது. ஆனால், உண்மையில் அது வயிற்றுவலியில்லை. அது அவனுடைய மனநிலை. வளைகுடா நாடுகளில் உள்ள உயர்ந்த கோபுரம் ஒன்றில் இன்பா தன் நண்பனோடு பணிபுரிகிறான். அச்சமயத்தில் விபத்து ஏற்பட்டு அவனுடைய நண்பன் உயிரிழந்து விடுகிறான். அது தன்னால் நிகழ்ந்த கொலையென இன்பா தன்னைத்தானே உளவியல் ரீதியாக வருத்துகிறான். தன் சுயத்தைத் தானே கேள்வியெழுப்பிக் குற்றம் சுமத்திக்கொள்கிறான். இந்தச் சிக்கலில் அவனுடைய சுயமானது முற்றிலும் தொலைந்து விடுகிறது. அதனைக் கண்டடைவதாக இப்புதினம் அமைகிறது.
‘தளவாய்த் தீட்டு’ புதினத்தில் இராமப்பய்யன் என்ற பாத்திரத்தை மையமிட்டுக் கதைப்பின்னல் அமைகின்றது. இராமப்பய்யன் தில்லை நாயக்கரின் தளவாயாகப் (படைத்தளபதி) பணிபுரியும் பிராமணர். தில்லை நாயக்கருக்கு மிகவும் நெருக்கமானவர் மற்றும் மன்னருக்கு அடுத்தநிலையில் அதிகாரம் படைத்தவர். தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி பழனிமலையில் தமிழ்ப் பண்டாரங்கள் செய்துவரும் தமிழ்வழிப்பாட்டைச் சமஸ்கிருதமயமாக்குகிறார். பண்டாரங்களுக்குப் பதிலாகக் கருவறைக்குள் பிராமணர்களைக் கொண்டு வருகிறார். இதனால், பண்டாரங்கள் தங்களுடைய மரபுரிமையை இழக்கின்றனர். ஆனால், அதிகாரம் பொருந்திய தளவாயின் கட்டளையை அவர்களால் தவிர்க்க இயலவில்லை. எனவே, முருகன் இராமப்பய்யனுக்குக் காட்சியளித்து அவருடைய மனநிலையைப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறான். எனினும், இராமப்பய்யனைக் கொலை செய்ய முருகன் விரும்பவில்லை. அதற்கு வாய்ப்பிருக்கும் சூழல்களையும் நிகழாமல் தடுக்கிறான்.
இவ்விரு புதினங்களும் ஒற்றைப்பாத்திரத்தை மையமாகக் கொண்டு வழமையின் நீட்சியாகத் திகழ்கின்றன. இன்பா, இராமப்பய்யன் இருவரும் தங்களுடைய சுயத்தை இழக்கின்றனர். இன்பா குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட்டுத் தன்னுடைய சுயத்தைத் தானே இழந்தவன்[3]. ஆனால், இராமப்பய்யன் தமிழ்ப் பண்டாரங்களைக் கருவறையிலிருந்து நீக்கியமைக்காகத் தண்டனை பெற்றுச் சுயத்தை இழக்கிறார். இன்பா நேர்மறை பாத்திரமாக உள்ளான். இராமப்பய்யன் எதிர்மறை பாத்திரமாக உள்ளார். இன்பா சுயத்தை அடைதல் கதையின் முடிவாக அமைகின்றது. இராமப்பய்யன் சுயத்தை இழத்தல் கதையின் முடிவாக அமைகின்றது.
ஆ) பன்மைநிலை மையப்பாத்திரம்
‘உப்பளத்தான்’ மற்றும் ‘ஒட்டாரம்’ ஆகிய இரு புதினங்களும் ஒன்றிற்கும் மேற்பட்ட பாத்திரங்களை மையப்பாத்திரமாகக் கொண்டுள்ளன. எனவே, இவற்றை பன்மைநிலையில் மையப்பாத்திரம் உடைய புதினங்கள் எனலாம். இவ்விரண்டு புதினங்களும் பொதுவாகத், தலைமுறைதோறும் ஒரு குடும்பத்திற்கு நிகழும் இன்னல்களைப் பதிவுசெய்யும் விதத்தில் அமைந்துள்ளன.
உப்பளத்தான் புதினத்தில் உப்பள தொழிலாளியான கிச்சு மையப்பாத்திரமாகத் திகழ்ந்து அளங்களில் தொழிலாளர்கள் சந்திக்கும் சிக்கல்களைச் சித்தரிக்க உதவுகிறான். பின்னர், அவனுடைய மகன் உத்தம் வழக்கறிஞராகித் தொழிலாளர்களின் சிக்கல்களுக்குத் தீர்வு காண்கிறான். கிச்சுவிடமிருந்த மையப்பாத்திரத்தன்மை உத்தமிற்கு வந்துவிட்டதை கிச்சுவின் இறப்பு உறுதிச்செய்கிறது.
ஒட்டாரம் புதினத்தில் பிச்சமுத்து, அவருடைய மகன் கொழந்தவேலு, கொழந்தவேலுவின் மகன் தங்கராசு என மையப்பாத்திரத்தின் நிலை ஒவ்வொருவருக்கும் கடத்தப்படுகின்றது. பிச்சமுத்து சாதிய ஆதிக்கத்திற்கு முரண்பட்டுத் தன் ஊரிலுள்ள அனைவரையும் ஒன்றுதிரட்டி அனைத்து வீடுகளுக்கும் மண்சுவர் எழுப்பித் தருகிறார். அவருடைய மறைவிற்குப் பிறகு, அவருடைய குடும்பம் சாதிய-பொருளாதார சிக்கல்களைச் சந்திக்கிறது. எனவே, கொழந்தவேலு ஆதிக்கத்திற்கு அடிபணிந்து வாழ்க்கையைக் கடத்துகிறார். பின்னர், தங்கராசு கல்வி கற்று சாதிய ஆதிக்கத்தைச் சட்டரீதியாக எதிர்க்கிறான். இப்புதினத்தில் சாதிய ஆதிக்கம் என்பதை எதிரியாக உருவித்து முறையே முரண்படுதல், அடிபணிதல், எதிர்த்தல் என்னும் நிலைகளில் மையப்பாத்திர நிலையானது கடத்தப்படுகின்றது.
இவ்விரண்டு புதினங்களும் தலைமுறைகளின் நகர்வைப் பதிவு செய்வதால் முறையே வர்க்கம், சாதி ஆகிய ஆதிக்கங்களுக்கு எதிராகச் செயல்படுபவரை மையப்பாத்திரமாகக் கொள்கின்றன. இவர்களில் யாரேனும் ஒருவரை மையப்பாத்திரம் எனக் கொள்ளும்போது கதை நகர்வு என்பது தடைப்படுகின்றது. எனவே, இப்புதினங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட பாத்திரங்களை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன.
இ) மையப்பாத்திரம் இல்லாநிலை
கதைக்கருவினை வெளிப்படுத்துவதற்கு முதன்மை அளித்து நபர்களை அல்லது பாத்திரங்களை முதன்மைபடுத்த மறுக்கும் புதினங்களை மையப்பாத்திரம் இல்லாநிலையில் அமைந்திருப்பவை எனலாம். இக்கதைகளில் இடம்பெறும் அனைத்து பாத்திரங்களையும் சம அளவில் இடம்பெறச்செய்யும்பொழுது மையப்பாத்திரம் என்னும் நிலை இன்மையாகிறது.
‘மணிப்பல்லவம்’ புதினத்தின் நோக்கம் குமுதினி கொலைச்சம்பவம் (1985) என்ற வரலாற்று நிகழ்வைப் புனைவாக்கம் செய்வதாக உள்ளது. ஷோபா தன்னுடைய கணவன் சித்தாந்தனைப் பிரிந்து தவிக்கிறாள். சித்தானந்தன் சிங்கள அதிபரிடம் பணிபுரிந்து வந்தான். அதிபரின் உண்மைநிலை அறிந்து புலிகள் படையில் இணைந்து விட்டான். சுந்தராஜன் தனிச் சிங்களச் சட்டத்தால் அரசுப்பணியை இழந்து சமையல்காரர் ஆகிறார். பண்டார என்னும் சிங்கள இராணுவ வீரன் தமிழர்களிடம் அன்பாகப் பழுகுகிறான். கொத்தலாவ என்னும் சிங்கள இராணுவ வீரன் தமிழர்களை வெறுக்கிறான். குமுதினி சம்பவத்தில் ஷோபா கொல்லப்படுகிறாள். விக்கி (சித்தானந்தனின் வேறு பெயராக வருவதால் விக்கியைச் சித்தானந்தன் என்றும் கருதலாம்) குமுதினி சம்பவத்திற்கு எதிர்த்தாக்குதல் நிகழ்த்த புலிகள் படைக்குத் தலைமை தாங்குகிறான். சுந்தராஜன் குமுதினி கொலைச்சம்பவம் பற்றிய செய்தியை வாசிக்கிறான். பண்டார அதனைக் கேட்டு மனம் வருந்துகிறான். சித்தானந்தன் ஷோபாவுக்கு அளித்த காதல் பரிசான பனையோலை தொப்பியைக் கொத்தலாவ அணிந்திருக்கிறான். இவ்வாறு அனைவருடைய வாழ்க்கையையும் அவரவர் பார்வையில் இப்புதினம் விவரிக்கிறது. ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்ளவில்லை. எனவே, இந்தப் பாத்திரங்களுக்கு இடையேயான உறவை வாசகர்களே தீர்மானித்துக் கொள்வதற்கு இப்புதினம் இடமளிக்கிறது. குறிப்பிட்ட சம்பவத்தை மையப்படுத்துவதால் யாரேனும் ஒருவரை மையப்பாத்திரம் எனக் கருதுவதற்கும் வழியில்லை.
‘மையெருமை’ புதினத்தின் நோக்கம் சமூக இயங்கியலைப் புனைவாக்கம் செய்வதாக அமைகிறது. இதிலிடம்பெரும் மந்திரமூர்த்தி என்பவர் மந்திரத்தந்திரங்கள் செய்பவராக இருக்கிறார். சிவஞானத் தேவர், சந்தனக் கோனார், வேளாளர் ஆகிய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிக்கல்கள் உள்ளன. சிவஞானத் தேவர் சாதி வேற்றுமை பார்க்காதவர். அவருக்கும் அவருடைய தம்பிக்கும் சொத்துத் தகராறு ஏற்படுகிறது. சிவஞானத் தேவரின் தம்பி மனைவி செய்வினை வைத்து, அவருடைய மகளின் ஆண்பிள்ளைக்கு முடக்குவாதத்தை ஏற்படுத்தி விடுகிறார். அதனைக் களைய சிவஞானத் தேவர் மந்திரமூர்த்தி வீட்டிற்குச் செல்கிறார். சந்தனக் கோனாரின் எருமை தொலைந்துவிட்டது என்பது அவருடைய சிக்கல். வேளாளர், அவருடைய வீட்டுக்கோழிகள் இறந்ததற்குக் காரணம் யாரெனக் குறிக்கேட்டுச் செல்ல வந்துள்ளார். தீர்வுக்காக மூர்த்தியின் வீட்டில் அனைவரும் கூடும்பொழுது மூர்த்திக்கு இருக்கும் சிக்கல் விவரிக்கப்படுகிறது. மூர்த்தியின் மனதிற்குள் ஒலிக்கும் குரல் ஏற்கனவே அவரைக் கட்டுப்படுத்திக் கொலை (பலி) செய்ய வைத்துள்ளது. பன்னிரண்டு வருடங்கழிந்ததால் மீண்டும் கொலை செய்யத்தூண்டுகிறது. மூர்த்தி கொலை செய்ய மறுக்கிறார். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. கதை முடிந்துவிடுகிறது. இப்புதினம் சிவஞானத் தேவரின் கதையின்வழி சாதி, வர்க்க அதிகாரங்களை எதிர்க்கிறது. சந்தனக்கோனாரின் எருமையின் வழி பல்வேறு சமூக நாகரீகங்களை எருமையோடு பொருத்திக் கூறுகிறது. வேளாளர் கதையின்வழி நாகரீகம் என்ற பெயரில் மனிதன் மிருகமானதைச் சுட்டிக் காட்டுகிறது. மந்திரமூர்த்தியின் கதையின்வழி பேய்களின் தன்மையை விளக்கி மனிதர்கள் பேய்கள் போல் திகழ்வதைச் சுட்டிக்காட்டுகிறது. இதன்வாயிலாக, வரலாறு நெடுகிலும் மனிதனுக்கு இருக்கின்ற அதிகாரத்திற்கான தேடலை அடையாள படுத்துகின்றது.
இவ்விரு புதினங்களும் குறிப்பிடத்தக்க மையப்பாத்திரச் சித்தரிப்பைப் பெறாமல் கருவினை விளக்குதலையே முதன்மைப்படுத்துகின்றன. எனவே, இப்புதினங்கள் மையப்பாத்திரம் இடம்பெறாது அமைந்துள்ளன.
மையப்பாத்திரங்களில் தத்துவம் செயற்படுதல்
ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தலித்தியப் புதினங்களில் மையப்பாத்திரத்தின் தத்துவக் கட்டமைப்புச் செயற்படும் முறையைப் பின்வருமாறு விளக்கலாம்.
அ) அறிவாய்வியல்
மையப்பாத்திரங்களின் அறிவு அவர்கள் எதிர்க்கொள்ளும் சாதி, வர்க்கம், இனம் மற்றும் அதிகாரம் போன்ற சிக்கல்களின் வழியாக உற்பத்தி செய்யப்படுகின்றது. சாதியக் கொடுமைகளை எதிர்கொள்ளும் பிச்சமுத்து, கொழந்தவேலு, தங்கராசு தங்களுடைய இருத்தலை ஆதிக்கச் சாதிக்காரர்களோடு முரண்படுதல், அடிபணிதல், எதிர்த்தல் ஆகிய நிலையில் அமைத்துக்கொள்கின்றனர். இவர்களுடைய மூவரின் நிலையும் வெவ்வேறாக இருப்பினும் ஆதிக்கச் சாதியினர் தங்களுக்கு மதிப்பளிக்கவில்லை என்ற ஓர்மை உடையவர்களாகத் திகழ்கின்றனர். கிச்சு, உத்தம் ஆகியோர் தங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை என்பதை அறிந்து, அதனைப் பெறவேண்டும் என்ற நோக்கோடு செயல்படுகின்றனர். ஷோபாவிற்குத் தன் கணவன் புலிகள் படையில் இருப்பது உவப்பானதாக இல்லையெனினும், சிங்களர்கள் மீது வெறுப்புடையவளாய் இருக்கிறாள். தளவாய்த் தீட்டில் இடம்பெறும் தமிழ்ப் பண்டாரங்களுக்குக் கருவறையை விட்டு நீங்குவதில் விருப்பம் இல்லையெனினும், அதிகாரத்திற்குக் கட்டுபடவில்லை என்றால் அழிக்கப்படுவோம் என்ற ஓர்மையுடன் கட்டுபடுகின்றனர். மையெருமையில் இடம்பெறும் பாத்திரங்கள் சமூகம் வளர்ச்சியுற்ற நிலையிலும் மனிதர்களுக்குள் வெளிப்படும் குரூரத்தன்மை பற்றிய ஓர்மையுடையனவாக உள்ளன. இன்பா மீது நேரடியாக எந்த ஆதிக்கமும் செயல்படவில்லை. குற்றவுணர்ச்சியால் தன்னைத்தானே வருத்திக் கொள்கிறான். மனிதர்கள் தவறு செய்வது இயல்பானது. அதை உணர்ந்து மீண்டும் நடக்காமல் சரிசெய்தல் வேண்டும் என்ற மனப்பக்குவத்தை அவன் அடைகிறான். அவனுடைய குற்றவுணர்ச்சியே அவனுக்கு அறிவை உற்பத்தி செய்யும் காரணியாய் அமைகின்றது.
ஆ) அறம்
வழமையான இலக்கியங்களில் கூறப்படும் அறம் என்பது தலித்துகளின் அறமாக அமையவில்லை. தங்களுடைய அனுபவங்களிலிருந்து தலித்துகள் அவர்களுடைய அறத்தினைக் கட்டமைக்கின்றனர். கிச்சு தன்னுடைய மூத்த மகனைப் படிக்க வைக்கவில்லை. இரண்டாவது மகன் உத்தம் அடம்பிடித்ததால் அவனைப் படிக்க வைக்கிறார். உத்தமின் அறிவுப்பூர்வமான பேச்சினால் கவரப்படுகிறார். கல்வியின் சிறப்பை உணர்ந்து தன்னுடைய மூன்றாவது மகள் தேவியைத் தானே பள்ளியில் சேர்க்கிறார். மழைக்காலத்தில் தன்னுடைய குடும்பம் ஊதியமின்றித் துன்பமுறும் வேளையிலும் தன் மகன் படிக்க விரும்பும்வரை அவனைப் படிக்க வைக்க வேண்டுமென்று உறுதியேற்கிறார். கிச்சுவின் அறம் என்பது பிள்ளைகளுக்குக் கல்வி வழங்குவதாகிறது. தன் அப்பாவின் வழியே உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை அவலங்களை உத்தம் உணர்கிறான். அவனுடைய கல்வியைக் கொண்டு தொழிலாளர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவது உத்தமின் அறமாகிறது.
இன்பா வங்காள நாடுகளில் பணியாற்றும் ஓர் தொழிலாளன். கல்வி அறிவைப் பெற்றுள்ளான். தன் ஊரிலுள்ள பலருக்கும் வேலை வாங்கித் தருகிறான். தன்னைச் சார்ந்திருப்பவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்யவேண்டும் என்று கருதுவது அவனுடைய அறமாகிறது. எனவேதான், தன்னால் ஓர் உயிர் பறிப்போனது என்பதை அவனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. பிச்சமுத்து அவருடைய சமூக மக்களுக்குத் தன்னால் இயன்றதைச் செய்து (மண்சுவர் அமைத்தல்) அவர்களுடைய முன்னேற்றத்திற்கு உதவுகிறார். தங்கராசு தான் பெற்ற கல்வியின் மூலம் சட்டரீதியாக தன் சமூக மக்களுக்கு உதவுகிறான். கொழந்தவேலுவிற்குப் பெற்றோரை இழந்த வருத்தம் மற்றும் தன் தம்பிகளைக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற பொறுப்பு இளம்வயதிலேயே உண்டாவதால், அவரால் தன்னுடைய சமூக மக்களுக்கு எவ்வகையிலும் உதவ இயலவில்லை. ஆதிக்கத்திற்கு அடிபணிகிறார். தமிழ்ப்பண்டாரங்கள் தமிழ்க்கடவுள் முருகனுக்குத் தாங்கள் தமிழில் வழிபாடு செய்வதையே கடமையாகக் கருதுகின்றனர். அவர்கள் சமஸ்கிருத வழிபாடு மற்றும் பிராமணர்கள் வழிபாட்டை நடத்துவதை விரும்பவில்லை. எனினும், தங்களால் இயன்றவரை அரசோடு பேரம் பேசுகின்றனர். தம்முடைய மரபை கைவிடாது தொடர்தலே அவர்களுடைய அறமாகிறது. சித்தானந்தன் சிங்கள அதிபரின் உண்மை முகத்தைத் தெரிந்துகொண்டதன் வழி சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு எதிராகச் செயல்படுவதை உணர்கிறான். தாமதிக்காமல் தன்னுடைய ஆசிரியப்பணியைத் துறந்து புலிகளோடு இணைந்து போர் புரிகிறான். தன்னின மக்களுக்காக ஆசிரியப்பணியைத் துறந்து, தன் மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து போர் புரிய வேண்டுமென்பது சித்தானந்தனின் அறமாகிறது. மந்திரமூர்த்தி ஏற்கனவே கொலை செய்த குற்றவுணர்ச்சியில் உள்ளார். மீண்டும் அவருடைய மனக்குரல் பலி கேட்கிறது. அதற்கு உடன்பட மறுக்கிறார். எனினும், அவருடைய உதவியை எதிர்ப்பார்த்து பலரும் காத்திருக்கின்றனர். அவர்களுடைய நிலையை நினைத்து மூர்த்தி வருந்துகிறார். அக்குரலுக்குக் கட்டுப்பட்டு கொலை செய்வாரா? மாட்டாரா? என்ற அறப்போராட்டத்தை மையெருமை புதினம் வாசக மனங்களில் நிகழ்த்துவதாக அமைகிறது.
இ) தருக்கம்
தங்களின் துயரத்திற்குத் தீர்வளிக்காத அல்லது காரணமாய் அமையும் அனைத்து வாதங்களையும் மையப்பாத்திரங்கள் நிராகரிக்கின்றனர். இன்பா உளவியல் ரீதியாகப் பாதிப்புக்குள்ளாகும் போது அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்கின்றனர். கிச்சுவும், உத்தமும் கடவுள் நம்பிக்கையற்றவர்களாகத் திகழ்கின்றனர். கிச்சுவின் மனைவி சிவதாய் கோயிலுக்குச் செல்லுதல், ஜோசியம் பார்த்தல் போன்ற நம்பிக்கைகளை வெளிப்படுத்தும்பொழுது இருவரும் சிவதாயியைக் கேலிச் செய்கின்றனர். ஒட்டாரத்தில் தலித் மக்கள் ஆதிக்கச் சாதியினர் வழிபடும் கோயிலைப் பயன்படுத்தாமல் தங்களுக்கென்று தனித்த கோயிலைக் கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் கோயில் சடங்குகளில் பங்கெடுக்க ஆதிக்கச் சாதியினரைச் சார்ந்திருக்க வேண்டிய தேவையில்லை. தளவாய்த் தீட்டில் தமிழ்ப் பண்டாரங்கள் தங்களுடைய மரபுரிமையைக் குறிப்பிட்டுச் சமஸ்கிருத சாஸ்திரங்கள் நிர்ணயிக்கும் கோயில் பணிகளைப் பின்பற்ற மறுக்கின்றனர். மையெருமையில் சிவஞானத் தேவர் பாத்திரத்தின் வாயிலாகச் சாதி மறுக்கப்படுகின்றது. மணிப்பல்லவத்தில் சிங்கள ராணுவ முகாம் அமைந்திருக்கும் பகுதிக்கருகில் வாழ்ந்த தமிழர்கள் வேறிடத்தில் குடியேறுகின்றனர். ஆனால், ஷோபா அதேபகுதியில் வசிக்கிறாள். அவர்களைக் கண்டு மற்றவர்களைப் போல் அவள் பயம் கொள்ளவில்லை.
ஈ) மீயியற்கை
மையப்பாத்திரங்கள் மீயியற்கை தன்மையில் ஈடுபாடு இல்லாதவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இன்பா உளவியல் சிக்கலால் துன்புறும்போது அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதன் வாயிலாக இன்பாவைப் பேய் பிடித்திருக்கிறது என்ற கருத்துநிலை அவர்களிடையே இல்லாதது புலப்படுகின்றது. உத்தம் போல கிச்சு கல்வியறிவு அற்றவனாக இருந்தும் கடவுள் நம்பிக்கை அற்றவனாக இருக்கிறான். தங்கராசு பிற சாதியைச் சார்ந்த மைனர் பிரபுவுடன் பழகுவதன் மூலம் கடவுள் உருவாக்கிய கொள்கையாகக் கூறப்படும் சாதியைப் புறக்கணிக்கிறான். கடவுளே இல்லை எனும்போது அவன் உருவாக்கிய சாதியும் இல்லை என்பதன வாதம் இடம்பெறுகின்றது. இம்மூன்று புதினங்களுக்கு மாறாக, தளவாய்த் தீட்டில் முருகன் இராமப்பய்யனுக்குத் தோற்றமளித்து தொல்லையளிக்கிறான். மையெருமையில் மந்திரமூர்த்தி பாத்திரத்தின் வாயிலாக மீயியற்கை தன்மை பரவலாகக் காணப்படுகின்றது. மணிப்பல்லவத்தில் சிங்கள ராணுவ வீரர்கள் போரில் தங்களைக் காத்துக்கொள்ள கடவுளிடம் வேண்டி கையில் பச்சை நிறக்கயிறு கட்டிக்கொள்கின்றனர்.
உ) தத்துவ வரலாறு
மையப்பாத்திரங்களின் அறிவு மற்றும் இருத்தல் அளவில் பின்வரும் மாற்றங்களை அடைகின்றன. இன்பா தன்னுடைய நண்பன் இறப்பிற்குத் தன்னுடைய அலட்சியம்தான் காரணமெனத் தன்னை வருத்திக் கொள்கிறான். இறுதியில், தவறிழைத்தல் என்பது மனித இயல்பு என்ற புரிதலுடன் தன்னுடைய சுயத்தைக் கண்டடைகிறான். இராமப்பய்யன் தன்னுடைய சாதிப்பெருமையை மனதிற்கொண்டு தமிழ்ப்பண்டாரங்களைக் கருவறையிலிருந்து விலக்கினார். முருகன் அவருடைய மனநிலையைப் பாதிப்பிற்குள்ளாக்கி விட்டான். படிப்பறிவில்லாத உடலுழைப்பாளி கிச்சு தன்னுடைய மகனுக்குக் கல்வியை வழங்கித் தொழிலாளர்களின் சிக்கலுக்குத் தீர்வு காண்கிறார். பிச்சமுத்து தலைமுறையிலிருந்த சாதி எதிர்ப்புக்குணம் தங்கராசு தலைமுறையில் தீவிரமடைகிறது. மணிப்பல்லவத்தில் எளிய மக்களின் மீது அரசதிகாரம் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. அதன்பிடியில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். மையெருமையில் தங்களுக்கென தனித்த சிக்கல்கள் இருந்தும் பிறர் துன்பத்தில் பாத்திரங்கள் அக்கறை செலுத்துகின்றன.
தொகுப்புரை
புதினத்திற்கு அடிப்படையாகக் அமைந்திருக்கும் கருத்தினை வெளிப்படுத்துவதற்கு ஏதேனும் ஒரு தத்துவம் பயன்படுத்தப்படுகிறது. அந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே அப்புதினத்தின் மையப்பாத்திரம் கட்டமைக்கப்படுகிறது. ஒற்றைநிலை, பன்மைநிலை மற்றும் இல்லாநிலை என மூன்று நிலைகளில் மையப்பாத்திரங்கள் இடம்பெறுகின்றன. எனினும், அனைத்து நிலைகளிலும் தலித்தியக் கோட்பாட்டை விலகாமல் வெளிப்படுத்துகின்றன. தத்துவத்தின் கூறுகள் தலித்தியத்திலும் தென்படுவதால் தலித்தியத்தை ஒரு தத்துவமாகக் கருத முடிகின்றது.
தலித்தியப் புதினங்களில் கட்டமைக்கப்படும் மையப்பாத்திரங்கள் ஆதிக்கத்திற்கு அடிபணிதல் என்ற நிலையிலிருந்து எதிர்க்கும் நிலைக்கு நகர்தல்; தன்னைப் போல ஒடுக்கப்படும் பிறருக்கு உதவுதல், வாழ்விற்கு வழிக்காட்டுதல்; கல்வியறிவைப் பொருட்படுத்தாமல், கடவுள் மறுப்பு, ஆதிக்கச் சடங்குகளைக் கைவிடுதல் போன்ற ஓர்மையைக் கொண்டிருத்தல் ஆகிய நிலைகளில் தலித்தியத் தத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.
- குர்குரே
துணைநூற்பட்டியல்
முதன்மை தரவுகள்
அலையாத்தி செந்தில். மையெருமை. நீலம் பதிப்பகம், சென்னை, 2025.
ஆறு பேச்சிபாண்டியன். உப்பளத்தான். நீலம் பதிப்பகம், சென்னை, 2025.
சக்திவேல் ராமன். ஒட்டாரம். நீலம் பதிப்பகம், சென்னை, 2025.
நிர்மல். இடுக்கண் படினும். நீலம் பதிப்பகம், சென்னை, 2025.
மீனாசுந்தர். தளவாய்த் தீட்டு. நீலம் பதிப்பகம், சென்னை, 2025.
வாசு முருகவேல். மணிபல்லவம். நீலம் பதிப்பகம், சென்னை, 2025.
துணைத்தரவுகள்
எம். ஜி. சுரேஷ். பின்நவீனத்துவம் என்றால் என்ன? அடையாளம் பதிப்பகம், 2009. (நூல் வெளியான ஆண்டு 2004)
க. பஞ்சாங்கம். இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும் (இரண்டாம் பதிப்பு). அன்னம் பதிப்பகம், 2016.
கோ. கேசவன். கோ. கேசவன் நூல் தொகுப்பு 2 – தலித்தியம். கோ. கேசவன் அறக்கட்டளை, 2022.
நா. வானமாமலை. இந்தியத் தத்துவமரபும் மார்க்சிய இயக்கவியலும். அலைகள் வெளியீட்டகம், 2009.
நா. வானமாமலை. “பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள்முதல்வாதக் கருத்துகள்.” ஆராய்ச்சி, மலர் 2, இதழ் 1, அக்டோபர், 1970.
முத்துசண்முகன். தமிழ் இலக்கியக் கோட்பாடுகள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2014.
ராஜ் கௌதமன். தலித் பண்பாடு (மூன்றாம் பதிப்பு). நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2024.
Borchert, Donald M. Encyclopedia of Philosophy / 7. Abbagnano - Byzantine Philosophy. Macmillan, 2006.
Dalvoy Expert Team. “The Term ‘Dalit’: Evolution & Consciousness | UPSC Mains SOCIOLOGY-PAPER-II 2011.” Dalvoy - UPSC Preparation, Dalvoy, 31 Dec. 2025, https://www.dalvoy.com/en/upsc/mains/previous-years/2011/sociology-paper-ii/dalit-term-evolution-consciousness.
James, Taylor. THE IDEA in the CHARACTER: PROTAGONISTS DEFINED by PHILSOPHIC PRINCIPLES. 2017, taylormichaeljames.com/wp-content/uploads/2020/03/critical-thesis.pdf. Accessed 25 Feb. 2026.
Heidegger, Martin. What Is Philosophy? College & University Press, New Haven, Connecticut, 1956.
Paul, S. K. “Dalitism: Its Growth and Evolution.” Dalit Literature (a Critical Exploration), edited by Amar Nath Prasad and M.B. Gaijan, Sarup & Sons, 2007.
[1] பரபக்கம் என்பது ஒரு தத்துவம் தன்னுடைய கொள்கைகளை விளக்க முற்படும்போது எதிர் தத்துவத்தின் கொள்கைகளையும் விளக்குவதாகும். இவ்விளக்கம் அத்தத்துவத்தை மறுப்பதற்காகக் கூறப்படுகிறது.
[2] பொருள்முதல்வாதம் என்பது நிறை மற்றும் இடத்தை அடைத்துக் கொள்ளும் தன்மை உடைய ஒரு பொருளானது பூதம்/அணுக்களின் சேர்க்கையால் உருவானது; இந்தச் சேர்க்கையானது தன்னிச்சையாக நிகழ்பவை என்று விளக்கும். மாறாக, கருத்துமுதல்வாதம் ஆத்மாவே பூதம்/அணுக்களை இயக்குவதாக விளக்கும். அந்த ஆத்மாவே கடவுள் என்ற கருத்திற்கு ஆதாரமாக உள்ளது.
[3] வயது அடிப்படையில் னகர ஈறு பயன்படுத்தப்பட்டுள்ளது