வேத காலத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி படிப்படியாக வர்க்கங்களின் தோற்றமானது; வர்க்கங்களின் பிளவுகள் வர்ணங்களின் பிரிவுகளாக (நான்கு வர்ணங்களாக) மாறியது. எனவே, பண்டைய கால இந்தியாவில் வர்ணாசிரமத்திற்கு எதிரான போராட்டங்கள் வர்க்க போராட்டங்களாகவே இருந்தன. பரந்து விரிந்த நம் நாட்டில் வேத காலத்தில் பார்ப்பனர்களும் சத்திரியர்களும் ஆளும் வர்க்கங்களாக மாறினர். இந்த ஆளும் வர்க்கத்தினரை எதிர்த்து, வைசியர்களும் சூத்திரர்களும் ஒருங்கிணைந்து ஆளும் வர்க்கமாக அதே காலத்தில் உருவாக ஆரம்பித்தனர். அக்கால சூழலுக்கு தகுந்தவாறு, இவர்களின் ஒருங்கிணைப்பானது உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களும் நாட்டின் உழைக்கும் மக்களும் சேர்ந்து உருவான கூட்டணியாகும்.

 அரசு எனும் அமைப்பானது இத்தகைய வர்க்க பிரிவினையின் அடிப்படையில் உறுவானதே; மேலும், இது வேத காலத்தின் பிற்பகுதியில் சபா மற்றும் சமிதியை மாற்றியதால் வளர்ந்தது; பிறகு ஆரியர்கள் ஐநூறு வருடங்களுக்கு மேல் தனது செல்வாக்கால் ஆட்சியில் இருந்தனர்.

ஆரியர் காலத்தின் முடிவு மௌரியர்களின் தொடக்க ஆட்சி காலத்துடன் பொருந்துவது தற்செயல் நிகழ்வாக அமைந்தது; இவர்களின் ஆட்சி காலத்தில் தான் ’மனுவாதி’ அல்லது மனுவின் ஆட்சி தொடங்கியது என்பது குறிப்பிடதக்கது. இந்த புதிய ஆட்சி முறையானது வர்ணாசிரமம் இந்திய சமூகத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது; அது சாதிய அமைப்பு முறையாக உருமாறியது. மனுசுருதி, மனுவாதி அரசின் கருத்தாக்கமானது, இது அனைத்து பெண்களையும் சூத்திரர்களாக கருதியது. இந்த கொடுமையான ஆணாதிக்க ஆட்சி முறை, பண்டைய இந்தியாவில் தோன்றியது. இன்றும் அதன் பண்புகள் மாறாமல் தொடர்ந்து கொண்டிருகின்றது. இதன் விளைவாக, வர்க்க மற்றும் பாலின சமத்துவ போராட்டங்கள் இவை இரண்டும் இணைந்ததாகவே இந்திய வர்க்க போராட்டங்கள் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நடைபெற்றன.

இன்றைய சாதி அமைப்பு முறை வர்ணசிரமம் தோன்றியதிலிந்து உயிர்ப்புடன் இருந்துவருகின்றது. எனவே, நாம் சாதிய முறையை வர்ண அமைப்பாக கருதுகிறோம். அனைத்து மக்களையும் வர்ணாசிரம முறை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்துகின்றது. அவை, பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள். சமூகத்தில் பார்ப்பனர்களும் சத்திரியர்களும் ஆளும் வர்க்கத்தை சார்ந்தவர்கள். சத்திரியர்களின் வேலை அரசை நடத்துவதும் போர் புரிவதும். அதனால், ஆளும் வர்க்கத்தை அவர்களை கொண்டே அமைத்தனர். ஆனால், சத்திரியர்களால் மட்டுமே அரசை நிர்வகிக்க முடியாது. நான்கு வர்ணங்களை உருவாக்கியதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்; இது மக்களை பிளவு படுத்தியது, அதற்கு கடவுளின் அனுமதியும் தேவைப்பட்டது. இதற்காகவே, ஸ்மிருதி-ஸ்ருதி இவை இரண்டும் இணைக்கப்பட்டது. ஸ்மிருதி என்பது சட்டம் அல்லது சட்டங்களின் தொகுப்பு. ஸ்ருதி என்பது வேதங்கள். இவை இரண்டின் (ஸ்மிருதி-ஸ்ருதி) இணைப்பின் அரசியல் விளைவாக பார்ப்பனர்களும் சத்திரியர்களும் அதிகார வர்க்கங்களாக மாறினர். பார்ப்பனர்கள்-சத்திரியர்கள் இயல்பாகவே சேர்ந்து ஆளும் வர்க்கங்களாக மாறினர். இதை திசை மாற்றும் விதத்தில், உற்பத்தியில் ஈடுபடும் வேலையை வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும் பொருப்பாக ஏற்றுகொள்ள செய்தனர்.

 வாழ்க்கைக்கு தேவையான பொருள்கள் அனைத்தையும் உற்பத்தி செய்வதும் விநியோகிப்பதும் இவர்களின் பணியானது. ஆனால், இவர்களுக்கு சமூக உற்பத்தியின் உபரி பங்கு கிடைக்கவில்லை, அதிலும் சூத்திரர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டது. சில வைசியர்கள் வணிகத்தில் ஈடுபட்டனர். இதன் மூலம் இவர்கள் பொருளாதார பலம் பெற்றிருப்பினும் அரசியல் அதிகாரமோ சமூகத்தில் மதிப்போ இவர்களுக்கு கிடைக்கவில்லை; இவர்கள் பார்ப்பனர்கள், சத்திரியர்களுக்கு அடுத்த நிலையில் இருந்தனர். வைசியர்களில் அதிகமானோர் விவசாயத்தில் ஈடுபடிருந்தனர். இவர்களுக்கு மறுக்கப்படிருந்த அரசியல் மற்றும் சமூக அதிகாரங்களுடன் சமூக உற்பத்தியின் உபரி பங்கு கிடைக்கவில்லையே எனும் வலியும் சேர்ந்துகொண்டது. சூத்திரர்களுக்கு இவற்றில் எந்த உரிமையும் இல்லை. இவர்கள் முழுமையாக உற்பத்தியில் மட்டுமே பங்கேற்றனர்; இதனால் அடுத்த நாள் உணவுகாக வேலை செய்யும் நிலையிலேயே இவர்கள் எப்போதும் இருந்து வந்தனர். இதன் வழியாக, பண்டைய இந்தியாவில் வர்க்க போராட்டம் என்பது பார்ப்பனர்கள்-சத்திரியர்களின் கூட்டணியின் விளைவாகவும் வைசிய-சூத்திர கூட்டணியின் விளைவாகவும் தோன்றியது. பண்டைய இந்தியாவில் வர்க்கங்கள் வர்ணாசிரமாத்தாலேயே தோன்றின. 

இந்திய மார்க்சிஸ்ட்கள் இந்திய சமூகத்தின் வளர்ச்சி போக்கை பற்றி குறைவாகவே புரிந்திருந்தது. அவர்களுக்கு மிக பெரும் சவாலாக இருந்தது. அவர்களுக்கு சமூக வளர்ச்சி பற்றிய ஆய்வு என்பது ஐரோப்பிய சமூகத்தை பற்றிய ஆய்வுகளாக பார்த்தனர்; இந்திய சமூகத்தின் ஆய்வை கணக்கில் எடுத்துகொள்ளவில்லை. ஒரு சில மார்க்சிய தத்துவவாதிகள் மற்றும் சமூகவியலாளர்கள் இந்திய சமூகத்தை ஆராய்ந்தனர், அதுவும் தனி நபராக இதை செய்தனர். எனவே, இது கம்யுனிச கட்சிகளின் செயல்பாடுகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

 இதன் விளைவாக, மார்க்சிய தத்துவவாதிகளின் மற்றும் சமூகவியலாளர்களின் ஆராச்சி முடிவுகள் இந்தியாவில் புரட்சி ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு பயனுள்ள உத்திகளையோ தந்திரங்களையோ தர இயலவில்லை. கம்யுனிஸ்ட் கட்சிகள் நடைமுறை படுத்திய மார்க்ஸிய தத்துவம் மற்றும் முயற்சி செய்த மார்க்சிய வழிகள் எல்லாம் அப்போதைய சூழலை தெளிவாக வரையறை செய்த மார்க்ஸிய பகுப்பாய்வுகளின் அடிப்படையில் அமைந்தது கிடையாது. இதன் விளைவாக, பலருக்கு சாதி என்பது இந்தியாவில் வர்க்கம் தான் என்று தெளிவாக புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்ப்பட்டது. 

சூத்திரர்கள் அவர்களின் வேலையை மட்டும் செய்ய வேண்டும்; அவர்களுக்கு சொத்து சேர்ப்பதற்க்கு உரிமை கிடையாது என்று சொல்வது வேறெதுவுமில்லை அது ஒரு தனி வகையான சமூக உபரி மதிப்பின் சேகரிப்பு என்பதை புரிந்துகொள்வதில் நமக்கு சிரமம் இருக்காது. 

வருணாசிரம-சாதிய அமைப்பு முறை பற்றி விவாதிக்கும் போது, வர்க்கங்களின் வரலாறும், வர்க்கப் போராட்டத்தின் வரலாறும், மற்றும் இந்திய அரசின் தோற்றமும் வருணாசிரம-சாதிய முறையோடு தொடர்புடையது என்பதை நாம் நன்றாக புரிந்திருக்க வேண்டும். இந்த விவாதம் ஒரு தத்துவ மோகமல்ல, அல்லது கம்யுனிச கட்சியை சமூகத்திலுள்ள தலித் மக்களிடம் பிரபல படுத்தும் நோக்கதிலும் செய்த தந்திரமல்ல. இந்த விவாதமானது உண்மையில், இந்திய வர்க்கங்கள், வர்க போராட்டம் மற்றும் அரசு போன்றவற்றை உண்மையான ஆய்வின் அடிப்படையில் புரிந்துகொள்ளபட்டவை. இதன் மூலமாகவே, நம்மால் சரியான உத்திகள் மற்றும் தந்திரங்களை பெற முடியும்.

இந்தியா மிக பெரிய நாடு என்பது முற்றிலும் உண்மை. அதன் பண்முக தன்மையும் முடிவற்றது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் வர்க்கங்கள், வர்க போராடங்கள் மற்றும் அரசு ஆகியவை ஒரே மாதிரி தோன்றியவை அல்ல. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியின் வரலாறும் வெவ்வேறு மாதிரியானவை. ஆனால், ஆரியர்கள் ஆளும் வர்க்கமாக ஒரு ஆட்சி பகுதியில் பரவி, பின்பு, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அவர்களின் ஆட்சி முறை பரவியது. ஆரியர்கள் இந்தியாவிற்குள் வடமேற்கு பகுதியின் வழியாக நுழைந்தனர்; பிறகு அவர்களின் ஆதிக்கம் பெரும்பாலான வட இந்தியாவில் நிறுவப்பட்டது. இந்த அடிப்படையில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்களின் ஆதிக்கத்திற்க்குள் உள்ள பகுதிகள் ஆரியவர்தா என்று அழைக்கப்பட்டது. வர்ணாசிரம பிரிவுகள் இந்த ஆரியவர்தாவில் தான் முதன் முதலில் துவங்கியது; இந்த முறையானது படிபடியாக இந்தியாவின் பல பகுதிகளில் நடைமுறை படுத்தப்பட்டது.

 தக்காண பீடபூமி, கிழக்கு இந்தியாவில் வர்ணாசிரமம் எப்போது நடைமுறைக்கு வந்தது பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன. முழுமையான கண்ணோட்டத்தில், சதவாகனா அரசாட்சியில் தக்காணத்திலும் மற்றும் குப்தர்களின் காலத்தில் கிழக்கு இந்தியாவிலும் சாதி அடிப்படியிலான பிரிவினைகள் சிறிது சிறிதாக நடைமுறைபடுத்தப்பட்டது.

வர்ணாசிரம முறை பிற்கால வேத காலம் முதல் குப்தர்களின் காலம் வரை, கடந்த ஆயிரம் வருடங்களாக மாற்றத்துக்கு உட்பட்டுக்கொண்டே தான் வந்திருகின்றது.

 கவுடில்யரின் ‘அர்த்தசாஸ்த்ரா’-வையும் மற்றும் மனு சம்யிதாவையும் ஒப்பிடுகையில் பல்வேறு மாற்றங்கள் இருப்பது தெரிகின்றது. அர்த்தசாஸ்த்ரா வர்ணாசிரம அடிப்படையில் அமைந்தது. மனு வர்ணாசிரமத்தை மாற்ற முடியாத முறையாக வடிவமைத்தது. அவர் கடவுளின் அனுமதியோடு, வேதங்களின் துணையோடு இதை செய்து முடித்தனர். இதன் விளைவாக, மனு சட்டங்களின் படி, பார்ப்பனர்கள் இந்த பூமியின் மேலுள்ள அனைத்திற்க்கும் உரிமையாளர்களாக அறிவித்து கொண்டனர். இதில், சூத்திரர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. மனு சம்யிதா புதிய சமூக அடுக்காக மாறியது. இதற்கிடையில், ஆரியர்கள் தோற்க்கடிக்கப்பட்ட ஆரியர்கள்-அல்லாதவர்கள் அனைவரையும் ‘அவர்ணாஸ்’ அல்லது வர்ணத்தில் சேராதவர்கள் என்று அழைத்தனர், இவர்களுக்கு சாதி கிடையாது. ஆரியர்கள் சமூகத்தில் இல்லாமல் வேறு சமூகத்தில் இருந்து வந்ததால் அவர்களுக்கு இந்த பெயர் வந்தது. ஆனால், சூத்திரர்களுக்கும் வர்ணத்தை சேராதவர்களுக்கும் இடையில் கலப்பு ஏற்ப்பட்டது. வைசியர்களில் பெரும் பகுதியை சார்ந்தவர்கள், இவர்கள் பெரும்பாலும் விவசாயிகளாக இருந்தனர்.

 சமூகத்தில் பின் தங்கி இருந்ததால் இவர்களுக்குள்ளும் இனகலப்புக் ஏற்பட்டது. கால ஓட்டத்தில், இந்தியாவில் உழைக்கும் மக்கள் பெரும்பாலானோர்களாக மாறினர்; இவர்களை ’தாழ்த்தப்பட்ட சாதி மக்கள்’ அல்லது தலித், சில முறை இவர்களை ‘நமசூத்திரர்கள்’ என்று அழைத்தனர். இவர்களின் நில உரிமை மிக குறைவே. இவர்கள் இந்திய நாட்டில் பல பகுதிகளில் நிலம் இருந்தும், அவை பெரும்பாலும் தரிசு நிலங்களே. நிலமற்ற விவசாயிகள், விவசாய கூலிகள், நகர சேரிவாழ் மக்கள், அமைப்பற்ற தொழிச்சாலை தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், மற்றும் தூய்மை தொழிலாளர்கள், அனைவரும் பெரும் பகுதியாக கீழ் சாதியில் அல்லது தலித்துகளாக இருந்தனர்.

இவர்கள் மத்தியிலும் வெவ்வேறு பிரிவுகள் உருவாகியிருந்தன. மனு சட்டங்களின் படி தலித்துகள் உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும் என கூறுகிறது. மனுவிற்கு பிந்தைய இந்தியாவில் படிப்படியாக சூத்திரர்களுக்கும் வர்ணங்களற்றவர்களுக்கும் இடையிலும் பல்வேறு பிரிவினைகள் ஏற்ப்பட்டன.

 அவர்களில் ஒரு பிரிவினர் தங்களை உயர்ந்தவர்களாகவும் மற்றவர்கள் தாழ்ந்தவர்களாகவும் கருதினர். இது போல பல்வேறு துணைப்பிரிவுகள் அல்லது கிளை சாதிகள் உறுவாகின; இதனாலே அம்பேத்கர் சாதிய முறையை சமத்துவமில்லாத பல்வேறு குழுக்களை கொண்ட அமைப்பு என்று கூறியுள்ளார். பழமை வாய்ந்த வர்ணாசிரம முறை எப்போது இன்று இருக்கும் சாதிய முறையாக மாறியது என கூறுவது மிக கடினம். ஆனால் குப்தர்களின் காலத்தில் ஏற்ப்பட்ட பொருளாதர வள குவிப்புடன் இது தொடர்புடையாத தெரிகிறது. சமூதத்தில் தாழ்த்தபட்ட வகுப்பினரிடையே மட்டும் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டன என புரிந்துகொள்வது நிச்சயமாக தவறானதாகும். ஆளும் வர்க்கங்கள் மத்தியிலும் ஒரு பிரிவினர் தங்களை உயர்ந்தவர்களாகவும் மற்றவர்களை தாழ்ந்தவர் களாகவும் கருதுகின்றனர்; இதை பற்றி முரண்பட்ட கருத்துக்கள் எப்போதும் நிலவி வருகின்றது. புராணங்களில் பார்ப்பனர்களுக்கும் சத்திரியர்களுக்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக கதைகள் எழுதப்படிருக்கும். 

பார்ப்பனர்கள் மத்தியிலும் உயர்ந்த பார்ப்பனர்கள் தாழ்ந்த பார்ப்பனர்கள் என்ற வேறுபாடு உள்ளது. ஆளும் வர்கத்தினருக்கும், ஆட்சிக்கு உட்பட்ட மக்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தனித்துவமானது; ஆளும் வர்கத்தினரிடையே ஆயிரமாயிரம் பிரச்சனைகள் இருப்பினும் அவர்கள் தங்களுக்கிடையே ஒற்றுமையை கடைபிடித்தனர். ஆட்சிக்கு உட்பட்ட மக்கள் ஒன்றினைய முடியாததாக இருந்தது. ஆட்சிக்கு உட்பட்ட மக்கள் கணக்கில் அடங்காத சிறு சிறு குழுக்களா எப்போதும் பிரிந்து இருந்தனர்; இவர்கள் ஆளும் வர்கத்தினருக்கு சாதகமாக இருந்தனர். 

தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே எத்தனை பிரிவுகள் இருப்பினும், பார்ப்பனர்களுக்கும் சத்திரியர்களுக்கும் ஒரே அடையாளமாக, அதுவும் தலித்துகளாகத்தான் கருதினர். தலித்துகள் தங்களின் உரிமைகள் அனைத்தையும் இழந்த பிரிவினராகவே இருந்தனர். ஐரோப்பிய சமூகத்தின் படி நிலையில், ஒருவர் உழைக்கும் வகுப்பினராக இருந்தாலும் அவர் உயர்ந்த நிலையை அடைய எந்த விதமான நிர்வாக ரீதியிலான தடைகளும் கிடையாது. ஆனால், இந்திய பாகுபாட்டின் படி ஒரு வகுப்பில் இருந்து இன்னொரு வகுப்பினராக மாற பெரும் தடை இருக்கிறது. சூத்திரர் ஒருவர் திறமை வாய்ந்தவராக இருப்பினும் அவர் பொருள் வளம் சேர்க்க கூடாது என்று மனு சட்டம் தெளிவாக கூறுகின்றது. இது தான் வர்ணாசிரமத்தின் பண்பு.

”Shaktena api hi shudrena na karyah

Dhanasanchayah shudrah hi dhanamasadya Brahmanan eba Badhate”

அதாவது, "சூத்திரர் ஒருவர் தகுதியிருப்பினும், அவர்கள் பொருளாதாரத்தை சேர்க்க கூடாது. சூத்திரர் ஒருவர் பொருளாதாரத்தை சேர்ப்பது பார்ப்பனர்களை நேரடியாக பாதிக்கும்"

இது தான் அன்றாட வாழ்வில் நடக்கும் சாதிய ஒடுக்கு முறையின் சாரம், இது இன்றும் இந்திய சமூகத்தில் நடைபெற்றுகொண்டுதான் இருக்கின்றது. கீழ் சாதியில் இருப்பவர்கள் வளமாக வாழ்வதும் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைவதும் உயர்ந்த சாதியில் உள்ளவர்கள் தனிபட்ட விதத்தில் தாக்குதலுக்குள்ளானதாகவே இன்றும் கருதுகின்றனர்.

இன்றும், சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் கழித்தும் மத்திய காலம் மற்றும் ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்திற்க்கு பிறகும் சாதிய முறை உயிர்ப்புடன் இருந்து வருகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இதற்கு இடையில், சாதிய அமைப்பு பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதன் அடிப்படை கூறுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இதற்கு முக்கியமான காரணாமாக உழைக்கும் வர்க்கத்தினருக்கு எவ்வித உரிமைகளும் கொடுக்கப்படாமல் இந்த அமைப்பு கட்டுப்படுத்தியது; அதன் மூலமாக மூலதனமானது அளவுக்கு அதிகமான லாபத்தை பெற முடிந்தது. 

சுல்தான் மற்றும் முகலாயர்களின் ஆட்சி காலத்தில், மன்னர்களாக இருந்தவர்கள் இந்தியாவின் சமூக அமைப்பை அப்படியே தக்கவைத்தனர் (அதை மாற்றவே இல்லை). அதன் விளைவாக, சாதிய முறை தொடர்ந்து இருந்துவந்ததில் எந்த பிரச்சனைகளும் இல்லை. ஆங்கிலேயர்களும் சாதிய முறையை நேரடியாக மாற்றவில்லை. அவர்கள் சில சீர்திருத்தங்களை செய்தனர். ஆனால், இது சாதியை ஒழிப்பதற்க்கு போதுமானதாக இருக்கவில்லை. 

மார்க்சும் எங்கல்ஸ்சும் அவர்களின் ஆரம்ப கால கட்டத்தில் பாட்டாளி வர்க்க போராட்டத்தை மிகைப்படுத்தி மதிப்பிட்டுருந்தனர் என்பது நமக்கு இப்போழுது புரிகிறது. அவர்கள் ஆரம்பகாலத்தில் எழுதியதில் இத்ததைய மிகைப்படுத்துதல் வெளிப்பட்டிருக்கும். இந்திய மார்க்ஸிட்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்ஸின் நூல்களை மட்டும் படிதிருந்ததால், முதலாளித்துவ வளர்ச்சியே தவிற்க இயலாத காரணங்களால் வர்ணாசிரம-சாதிய பிரிவினைகளை அழித்துவிடும் என அவர்கள், மார்க்ஸின்- எங்கல்ஸின் கருத்துகளின் படி யூகித்தனர்; 

மேலும் முதலாளித்துவமே அனைத்து உழைப்பாளர்களையும் ஓர் அணியில் திரள வைக்கும் எனவும் கருதினர். மார்க்ஸும் எங்கல்சும் தங்களின் மிகைபடுத்தப்பட்ட கருத்துகளை திருந்தி கொண்டனர்; ஆனால், இந்திய தோழர்கள் அவர்களின் பழைய தவறான கருத்துகளிலே இருந்தனர். இதன் விளைவாக, இந்திய கம்யுனிஸ்டுகள் வர்ணாசிரம-சாதிய முறையை முக்கியமற்றதாக கருதினர்; தலித்துகளின் போராட்டங்களை புறக்கணித்தனர்; வர்ணாசிரம-சாதிய முறையை பொருளாதாரத்தின் மேலடுக்கில் உள்ள பிரச்சனையாகவே பார்த்தனர்; 

அம்பேத்கரின் செயல்பாடுகளை; அதாவது தலித்துகளை ஒன்றினைத்து அரசியல் அதிகாரத்தை கைபற்றும் விதமாக செயல்பட்டதை, உழைக்கும் வர்கத்தினரை பிரிக்கும் வேலையாகவே இவர்கள் கருதினர். இந்திய கம்யுனிஸ்டுகள் அம்பேத்கரையும் அவரின் அமைப்புகளையும் தங்களின் அணியை சேர்ந்தவர்கள் என்பதை விட தங்களுக்கு எதிரானவர்களாகவே கருதினர். 

1940-க்கு பிறகு, சுதந்திர போராட்டத்தின் இறுதி கால கட்டத்தில் ஆங்கிலேய அரசை எதிர்த்தவர்கள் நான்கு அமைப்புகளே; கம்யுனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் அம்பேத்கர் முன்னெடுத்த பட்டியலின சாதிகளின் கூட்டமைப்பு (Scheduled Castes Federation, SCF). காந்தியின் அம்பேத்கருடனான உறவு மிகவும் மோசமானதாக இருந்தது. அம்பேத்கர் காந்தியை நம்பிக்கைகுறியவராகவே பார்க்கவில்லை. காங்கிரஸையும் அதே கண்ணோட்டதிலேயே பார்த்தார். இதற்கிடையில், கம்யுனிஸ்டுகள் இந்த நான்கு அரசியல் சக்திகளையும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒருங்கிணைக்க முயன்றனர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் (1942) கம்யுனிஸ்டுகள் பங்கேற்காததை காந்தி எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 இருந்தபோதும், பி. சி. ஜோசி தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சி காந்தியின் தலைமையில் இந்த நான்கு அரசியல் சக்திகளையும் ஒருங்கிணைத்து ஐக்கிய முன்னணி ஒன்றை ஏற்படுத்த முயன்றார். காங்கிரஸ் என்பது இந்து நிலவுடைமையாளர்கள், முதலாளிகள் இணைந்து உருவாக்கிய கட்சியாகவே அம்பேத்கர் மதிப்பிட்டிருந்தார். அவர்கள் சுதந்திரதிற்காக ஆங்கிலேயர்களுடன் மோதவில்லை; அவர்களுக்கு பதிலாக தாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவே எதிர்தனர். தலித்துகள் மட்டுமே உண்மையான சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் என்று அந்த கால கட்டத்தில் அம்பேத்கர் பல்வேறு சமயங்களில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதனால், அம்பேத்கர் காந்தியின் தலைமையை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. கம்யுனிஸ்டுகளும் இந்திய சுதந்திர போராட்டத்தை தலைமையேற்று நடத்த விரும்பவில்லை. அதன் விளைவாக, கம்யுன்ஸ்டுகளின் ஒரு பகுதியினர் அம்பேத்கர் சுதந்திரத்திற்கு எதிரானவராகவும் ஆங்கிலேயர்களின் கைகூலி எனவும் விமர்சித்தனர். இது தலித் இயக்கங்களுக்கும் கம்யுனிஸ்டுகளுக்கும் அதற்கு முன் உள்ள உறவை மேலும் மோசமாக்கியது. 

அந்த கால கட்டத்தில் கம்யுனிஸ்ட் கட்சிக்கும் தலித் கூட்டமைப்புக்கும் இடையில் ஒருங்கிணைப்பு இருந்திருந்தால், இந்திய சுதந்திர போராட்டம் வேறு வகையில் இருந்திருக்கும் என்பதை சொல்ல தேவையில்லை. 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு அறிமுகம் செய்து, 1947-க்கு பிறகு, 75 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதற்கிடையில், தலித் இயக்கங்களும் கம்யுனிஸ இயக்கங்களும் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. அம்பேத்கர் சாதி ஒழிப்பு இயக்கத்தை ஆரம்பித்தார். ஆனால், இன்று அம்பேத்கரை முன் நிறுத்தும் தலைவர்களில் ஒரு பகுதியினர் அவரால் கிடைக்க பெற்ற இட ஒதுக்கீட்டு பலன்களை பெருவதில் மட்டுமே ஆர்வமாயிருக்கின்றனர்.

 இவர்களுக்கு சாதியை ஒழிப்பதை காட்டிலும், இந்த சாதிய அமைப்பு முறை தொடரவே விரும்புகின்றனர். நாம் இவர்களை புதிய அம்பேகரிஸ்டுகள் (நவ அம்பேத்கரிஸ்டுகள், Neo-Ambedkarists) என்று கூறுகிறோம்; இவர்கள் அம்பேத்கரின் அரசியல் பாதையில் இருந்து விலகி அரசியலில் பயணிக்கின்றனர். மறுபுறம், கம்யுனிஸ்ட் இயக்கங்களும் பல அமைப்புகளாக பிரிந்திருக்கின்றன.

 இன்று, இந்த இயக்கம் பொதுவாக இரண்டு பிரிவுகளாக இருக்கின்றது; சீர்திருத்தவாதிகள்; புரட்சியாளர்கள். இன்று, புரட்சிகர கம்யுனிஸ்டுகள் தலித் இயக்கங்களுடன் ஒருங்கிணைப்பை இந்திய புரட்சிக்காக ஏற்ப்படுத்த வேண்டும். இது தந்திர அடிப்படையிலான புரட்சி அல்ல; இது ஒரு உத்தி தான். இது நம் அரசியல் எதிரிகள் யார் நட்பு சக்திகள் யார் என்ற கேள்விக்கான வரையறையே.

இது இந்திய உழைக்கும் வர்க்கத்தை முழுவதுமாக ஒருங்கிணைத்து வர்ணாசிரம-சாதிய முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதோ, எங்கெல்லாம் சாதிய ஒழிப்பு நடைபெற்று வருகின்றதோ அதற்க்கு உதவி செய்ய வேண்டும் என்பதோ கிடையாது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்; ஆனால், இது உழைக்கும் வர்கத்தின் தன்னிச்சையான போராட்டமாகும். இந்தியாவில் தலித்துகளில் பெரும்பாலானோர் உழைக்கும் வர்க்கத்தினராகவே இன்றும் திரண்டுள்ளனர். வர்ணாசிரம-சாதிய முறையை ஒழிப்பதென்பது வெறுமனே பொருளாதர மேலடுக்கிலுள்ள சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதல்ல; இதன் மூலமாக பொருளுற்பத்தி உறவுகளையும் சேர்த்து மாற்றுவதாகும். சுருக்கமாக சொல்வதெனில், வர்ணாசிரம-சாதிய பிரிவினைகளை ஒழிப்பதென்பது உண்மையில் வர்க்கங்களை முற்றிலும் ஒழிப்பதாகும். எனவே, இந்தியாவில் வர்க்க போராட்டம் என்பது வர்ணாசிரம-சாதிய முறையை ஒழிக்காமல் முழுமை பெறாது. 

இந்த கண்ணோட்டங்களை நினைவில் கொண்டு புரட்சிகர கம்யுனிஸ்டுகள் தங்களின் உத்திகளையும் தந்திரங்களையும் மேற்க்கொள்ள வேண்டும். 

 (இந்த கட்டுரை 2024, டிசம்பர் 6-ல் நடந்த சாதி ஒழிப்பு மாநாட்டில் சமர்பிக்கப்பட்டது)

- சங்கர், மேற்கு வங்கம்