அறிமுகம்

மனிதமூளை உயிர்ப்புடன் சிந்திப்பதால் விழையும் எண்ணங்கள், கருத்துக்கள், உணர்ச்சிகளைப் பிறரோடு பரிமாறிக்கொள்ளப் பயன்படும் ஒரு கருவிதான் மொழி. மனிதன் கண்டுபிடித்த கருவிகளிலேயே இந்த மொழி எனும் கருவிதான் மகத்தானதாகக் கருதப்படுகிறது. தாய்க்கு இணையான தகுதியுடைய மொழி மனித சமூகம் பெற்ற மகத்தான வரமாகும். ஒரு குறிப்பிட்ட இனத்தின் புற அடையாளமாக விளங்கும் மொழி அக்குறிப்பிட்ட மொழியைப் பேசும் மக்களின் மதக் கோட்பாடு, கலை, அரசியல், வரலாறு, சடங்கு முறைகள், பழக்கவழக்கங்கள், வழக்காறுகள் முதலான பண்பாட்டுக் கூறுகளை வாழவைப்பதாகவும் அதன் செயற்பாடு அமைகிறது. அவற்றை அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கடத்தும் ஊடகமாகவும் மொழி செயலாற்றுகிறது.

மொழியும் சமூகமும்

மொழிகள் ஓர் இனக் கலாசாரத்தின் உயிர்நாடியாகத் திகழ்வதுடன், அவை, நமக்கு அடையாளத்தையும் சுயமரியாதையையும் தருபவை. உலகில் தோன்றிய ஒவ்வொரு மொழியும் அதன் சமூகக் கடமைகளை ஆற்றுவதோடு சமூகத்தின் ஒரு முக்கிய பகுதியாகவும் உள்ளது. அடிப்படையில் மொழியும் சமூகமும் நெருங்கிய உறவுடையவை. உயிர் இல்லாமல் எப்படி ஒருவர் வாழ முடியாதோ, அதேபோல் மொழி இல்லாமலும் ஒருவரால் உயிர் வாழ முடியாது. எந்த ஒரு சமூகமும் மொழி இல்லாமல் இயங்குவதாகச் சான்றுகள் இல்லை. மொழி ஒரு சமூகத்தின் பாதுகாவலாகவும், ஓர் இனத்தின் உயிராகவும், அடையாளமாகவும், பண்பாட்டின் சின்னமாகவும், பாதுகாப்பு அரணாகவும் விளங்குகிறது. ஆக, ஒரு மொழியின் சிறப்பு அதன் தொன்மையைத் தாங்கி நிற்பதோடு பண்பாட்டுத் தொடர்ச்சி கொண்டதாகவும் இருக்கிறது.

உலக மொழிகளின் மொத்த எண்ணிக்கை, அவற்றின் அழிவு மற்றும் இருப்பு குறித்த துல்லியமான கணக்குகளைக் கணிக்க முடியவில்லையெனினும், உலகம் முழுவதும் சுமார் 7105- க்கும் மேற்பட்ட மொழிகளும், இந்தியா முழுக்க சுமார் 1,652-க்கும் மேற்பட்ட மொழிகளும் உள்ளதாக மொழியியலாளார் கணக்கிட்டுள்ளனர். இவற்றை மக்கள், தாய்மொழிகளாகவும், கிளைமொழிகளாகவும் பேசியும் எழுதியும் வருகின்றனர். எழுத்து வடிவம் இல்லாத மொழிகளும் இவற்றில் அடங்கும். சில மொழிகள் எழுத்து மொழியாகவும், பேச்சு மொழியாகவும் இருந்து வருகின்றன.

மொழிகளின் எதிர்காலம்

உலகத்தோடு ஒப்பிடும் போது அதிக மொழிகள் பேசும் நாடுகள் வரிசையில் இந்தியாவும் இடம் பெற்றிருக்கிறது. உலக அளவில் பல மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக அண்மைக்கால அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இரண்டு வாரத்திற்கு ஒரு மொழி என்ற விகிதத்தில் மொழிகள் அழிவைச் சந்திக்கி்ன்றன என இந்திய ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி. டில்லிபாபு பதிவு செய்கிறார். வரும் காலங்களில் 40 சதவீத மொழிகள் இந்த ஆபத்தான நிலையைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மொழியியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளார். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகத்திலிருக்கும் ஈராயிரம் மொழிகளில் தொண்ணூறு சதவீத மொழிகள் இல்லாமல் போய்விடும் என்று சமூக மொழியியல் ஆய்வாளர்கள் அச்சுறுத்துகின்றனர். மொழிகள் ஒரு தலைமுறைக்கு 20 சதவீத வேகத்தில் அழிந்து வருகின்றன என்று மானிடவியலாளர்கள் கவலைப்படுகின்றனர். இந்த உலகில் பேசப்படும் மொத்த மொழிகளில் ஐம்பது விழுக்காடு மொழிகள் மறைந்துவிடும் என்றும், இன்றைய இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் 196 மொழிகள் மரணமுறும் என்றும் யுனெஸ்கோ அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. 1921-2011 ஆண்டுகளில் வழக்கிலிருந்த 1599 மொழிகளில் 220 மொழிகள் அழிந்து விட்டதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

22 அட்டவணை மொழிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட அட்டவணை அல்லாத மொழிகளும் இந்தியாவில் அதிக அளவிலான மக்களால் பேசப்பட்டு வருகின்றன. மேற்குறித்த இந்திய அட்டவணை மொழிகள் தவிர பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளால் 31 மொழிகள் ஆட்சி மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில், பத்தாயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலான மக்களால் பேசப்பட்டுவரும் 42 மொழிகள் அழியும் நிலையில் இருப்பதாக உள்த்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. அந்தமான்-நிக்கோபர் தீவுகளில் பேசப்படும் 11 மொழிகளும் இதில் அடங்கும். மணிப்பூரில் 7, இமாச்சலப் பிரதேசத்தில் 4, ஒடிசாவில் 3, அருணாசலப் பிரதேசத்தில் 2, அஸ்ஸாமில் 2, உத்தராகண்ட், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், மேகாலயம், மேற்கு வங்கம் ஆகிய மொழிகளில் தலா ஒன்று, கர்நாடகத்தில் பேசப்படும் குருபா மொழி, ஆந்திரப்பிரதேசத்தில் பேசப்படும் கடபா, நாய்கி மொழிகள், தமிழகத்தில் பேசப்படும் கோடா, தோடர் மொழிகள் என அழிநிலையில் இருக்கும் மொழிகளின் எண்ணிக்கை நீண்டுகொண்டே போய்க் கொண்டிருக்கிறது. 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் தமிழ் மொழி யுனெஸ்கோவாவால் வெளியிடப்பட்டுள்ள அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் பதினேழாவது இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 2057- இல் பேசப்படும் மொழியாகத் தமிழ் இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மனித சமூகம் தனது கருத்துப் பரிமாற்றத்திற்காக உருவாக்கிக் கொண்ட பல மொழிகள் காலப்போக்கில் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து விட்டன. இன்னும் ஏராளமான மொழிகள் அழிவின் விழிம்பில் இருக்கின்றன. செவ்வியல் மொழிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. செவ்வியல் மொழிகளான கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், வடமொழி, சீனம் மற்றும் தமிழ் ஆகியவற்றில் சீனமும் தமிழும் இன்றும் வழக்கில் இருக்கின்றன. ஏனையவை வழக்கொழிந்து போயின. எனினும் மொழிகளின் வரலாற்றில் அவை இடம்பெறுவது தவிர்க்கமுடியாததே. ஹார்ட்வார்ட் பல்கலைக்கழகத்தில் அவற்றிற்கு இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதே அதற்கு ஆதாரம்.

ஒருங்கிணைந்த முயற்சிகள்

அழிந்துவரும் - அழியப்போகும் இந்திய மொழிகளை அடையாளம் கண்டு அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

  • மொழிகளை அழியாமல் பாதுகாக்க நாம் அனைவரும் விளிப்புணர்வோடு இருப்பதோடு அரசு மேற்கொள்ளும் முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பும் நல்க வேண்டும்.
  • இந்திய அரசோடு, யுனெஸ்கோ மற்றும் தில்லியிலுள்ள கலைகளுக்கான இந்திரா காந்தி தேசிய மையம் (Indira Gandhi National Centre for the Arts- IGNCA) ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து 700 அழியும் நிலையிலுள்ள மொழிகளைப் பாதுகாக்கும் ஆக்கப்பூர்வ முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆர்வமிக்க துறைசார் இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து பிராமி, மோடி, கோரகா, இருளா, சோளகா, சாரதா, கைத்தி, தக்ரி முதலான அழிநிலை மொழிகளை அதன் வளமான இலக்கியங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளைக் கொண்டு மீட்டுருவாக்கம் செய்து வருகின்றது.
  • இந்தியாவிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் அழிநிலை மொழிகள் மையங்களை நிறுவுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அதற்கான உதவிகளையும் பல்கலைக்கழக மானியாக்குழு (UGC) 2014-இல் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தலா 00 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஒன்பது மத்தியப் பல்கலைக்கழகங்களில் அழிநிலை மொழிகள் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
  • மொழிகளை அழியாமல் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளில் மைசூரிலுள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனமும் (Central Institute of Indian Languages- CIIL) ஈடுபட்டுள்ளது. அருகிவரும் மொழிகளைப் பாதுகாக்க ஒருங்கிணைந்த ஆக்கப்பூர்வ முயற்சிகள் தேவை என்பதை இது உணர்த்துகிறது.

மொழிகளின் சிதைவும் மரணமும்

உலக மொழிகளை வாழும் மொழிகள், அழிந்துவரும் மொழிகள் என இரண்டு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். ‘கிறித்தவம் தான் ஆட்சியில் இருந்த நாடுகளில் எல்லாவற்றிலும் அவற்றின் பன்முகத் தன்மைகளை அழித்து ஒரு கடவுள், ஒரு புத்தகம், ஒரே இனம், ஒரே மொழி எனும் தத்துவத்தை நிலைநிறுத்தியது. அதன் பொருட்டு அது கொலை, அச்சுறுத்தல் ஆகிய காரணிகளைக் கையெலெடுத்தது. அதற்கு முதலாவதாகப் பலியானது ஹீப்ரு (Hebrew), கோயின் கிரேக்கம் (Koine Greek), காலிக் (Gaulic) ஆகிய பழமையான மொழிகளாகும். (உமரி காசிவேலு, 2018: 60-64). அயர்லாந்துக் கத்தோலிக்கக் கிறித்தவர்களின் தாய் மொழியான காலிக் (Gaulic) ஆங்கில மொழியைவிட அனைத்து விதத்திலும் சிறப்பு வாய்ந்தது. ஆதாமும் ஏவாளும் பேசிய மொழி என்றும் அவர்கள் நம்பினர். ஆனால், புராட்டஸ்டாண்ட் கிறித்தவர்கள் கத்தோலிக்கர்களின் சிலை வழிபாட்டிற்கும் காலிக் மொழி பேசுவதற்கும் தொடர்புபடுத்தி அம்மொழியை அழிக்க எண்ணினர். விளைவு அயர்லாந்தில் காலிக் மொழி பேசுவதைத் தடை செய்தது ஆங்கில அரசு. காலப்போக்கில் காலிக் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

வட மாநிலங்களில் மலைப்பிரதேச மாநிலமான உத்தராகன்ட்டில் கர்வாலி, குமாவோனி, ஜான்சாரி ஆகிய மொழிகள் மக்களால் பேசப்பட்டு வருகின்றன. இவை வாழும் மொழிகளாகவும் விளங்குகின்றன. ஆயின், அம்மாநில மக்கள் மத்தியில் இந்தி மொழியின் ஆதிக்கமும், பயன்பாடும் அதிகமாக உள்ளதால் மேற்குறித்த மொழிகளின் பயன்பாடு மக்களிடையே குறைந்து அழியும் அபாயத்தில் உள்ளன. மொழிகளின் சிதைவு என்றே இதனைக் குறிப்பிடலாம். வழக்கொழியும் நிலையில் உள்ள இம்மொழிகள் யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள அழிநிலை மொழிகளின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன. எல்லா மொழிகளும் அவற்றின் அமைப்பு அடிப்படையில் சமமானவை என்று மொழியியலாளர்கள் கருதுகின்றனர். ஆனால், மக்கள் பயன்படுத்தும் மொழிகளில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டுவிட்டன. தங்கள் தாய்மொழி மீதான தாழ்வு மனப்பான்மை பெரும்பாலான இந்திய வட்டார மொழிகளில் உருவாகிவிட்டது.

மொழிகள் தோன்றிய காலத்திலிருந்தே அவற்றில் சில அழிவையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. வரலாற்று ரீதியாக காலனித்துவம் பல மொழிகளுக்கு அழிவை ஏற்படுத்தியிருக்கிறது. மொழிகளின் மறைவு அல்லது மரணத்தைப் போகிற போக்கில் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் அழிவு இயற்கையப் பாதிக்கும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். இதே போல்தான் மொழிகளின் அழிவு அவை சார்ந்த சமூகங்களையும் பாதிக்கும். எனவே, மொழி என்பது மனிதனையும் அவன் சார்ந்த சமூகத்தையும் இணைக்கும் பாலமாகத் திகழ்கிறது என்றால் அது மிகையில்லை.

மொழிகளின் அழிவிற்கான காரணிகள்

  • குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடமிருந்து அவர்கள் பயன்படுத்தும் மொழியைக் கற்றுக்கொள்ளவில்லை என்றால் அந்த குறிப்பிட்ட மொழியின் இருப்பும் நீட்சியும் கேள்விக்குரியதாகிவிடும், அதாவது ஒரு தலைமுறையினர் முந்தைய தலைமுறையினரிடமிருந்து மொழியைப் பெறத் தவறும் போது அந்த மொழி மறையத் தொடங்குகிறது என்று மொழிகளின் மரணத்திற்கான முழுமுதற் காரணிகளாக முன்வைக்கின்றனர் மொழியியலாளர்கள்.
  • மொழியின் வளர்ச்சிக்குச் சாதகமான அரசியல் மற்றும் சமூகச் சூழல் இல்லையென்றாலும் அது அழிந்துபோக வாய்ப்புள்ளது.
  • ஒரு பெரிய மொழி சிறிய மொழி ஒன்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் போது அல்லது உட்கொள்ளும் போது மொழி இழப்பு ஏற்படுகிறது.
  • ஒரு குறிப்பிட்ட மொழி பேசுவோரின் எண்ணிக்கை நூற்றுக்கும் கீழாக இருந்தாலும் காலப்போக்கில் மறைய வாய்ப்புள்ளது.
  • தாய்மொழி ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, நீதி மொழியாக, வழிபாட்டு மொழியாக இல்லாவிட்டால் அக்குறிப்பிட்ட மொழி அழிந்துவிடும் என்று மொழி அழிவிற்குரிய முக்கிய காரணிகளாக முன்வைக்கப்படுகின்றன.
  • மொழிக்கலப்பு, பிறமொழி மீது மோகம், தாய் மொழி மீது ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை, இடம்பெயர்தல், மதமாற்றம் ஆகியனவும் மொழி அழிவிற்கு வழிவகுக்கும் காரணிகளாக அமைகின்றன.
  • குழந்தைகள் தாய்மொழியை விடுத்துப் புதிய மொழியைக் கற்பதாலும், தங்கள் தாய் மொழியைக் கற்காமல் புறக்கணிப்பதாலும் மொழிகள் அழிவைச் சந்திக்கின்றன.

அனைவரும் தங்களின் தாய் மொழியை உயர்வானதாக மதிப்பதும் அதனை நேசிப்பதும் இயல்பானதே. ஆனால், காலப்போக்கில் ஏற்படும் சமூக-பொருளாதார மாற்றங்களால் அதே சமூக-பொருளாதார மேம்பாட்டைத் தரக்கூடிய மொழியை உயர்வானதாகவும், தங்கள் தாய் மொழியைத் தாழ்வானதாகவும் கருதும் மனப்பான்மைக்கு மக்கள் ஆட்பட்டுவிடுகிறார்கள். இளைய தலைமுறையினர் மத்தியில், தாய்மொழி தங்களின் எதிர்கால வாழ்விற்கும் வளத்திற்கும் பெரிதும் பயன்படாது என்ற எண்ணம் வேரூன்றி விட்டது. ’எங்கள் பிள்ளைகளுக்குத் தாய்மொழியில் எழுதப் படிக்கத் தெரியாது, ஏனென்றால் அவர்கள் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள்' என்று பெருமையாகச் சொல்லக்கூடிய பெற்றோர்களும் இருக்கிறார்கள். ஆந்திர மக்களில் வீட்டிற்கு ஒருவர் அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்பதும், கேரள மக்களில் குடும்பத்தில் ஒருவர் அல்லது ஒட்டுமொத்தக் குடும்பமும் வளைகுடா நாடுகளில் குடியேறிவிட வேண்டும் என்பதும் எழுதப்படாத சட்டமாக உள்ளது. பஞ்சாபியர்கள் கனடாவில் குடியேறுவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். அதை நோக்கிய பயணத்தில் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டும் வருகிறார்கள். சென்ற இடத்தில் தாய்மொழியை விடுத்துப் புதிய மொழி ஒன்றைக் கற்க நேர்கிறது. தாய்மொழி கைவிடப்படுகிறது. வீட்டுச் சூழலில் தாய் மொழியின் பயன்பாடு குறையும் போது அம்மொழி மெல்ல மெல்ல மரணத்தை எதிர்கொள்ள நேர்கிறது. ஒரு மொழியின் பயன்பாடு குறையும் போது அந்த மொழி சுருங்கும், சிதையும் இறுதியாக மரணிக்கும். எனவே, பயன்பாட்டு மொழியே உயிரோடு இருக்கும்; பாதுகாக்கவும்படும்.

செய்ய வேண்டிய செயற்பாடுகள்

அழியும் மொழிகளைப் பாதுகாப்பதற்கான எதிர்காலச் செயற்பாடுகளாகச் சிலவற்றை முன்மொழியலாம்.

  • மொழிகளைப் பாதுகாக்க ஒருங்கிணைந்த புதிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
  • மொழிகள் உயிர்ப்புடன் இருக்கும்போதே அவற்றின் அமைப்பு, இலக்கண- இலக்கியங்கள், வரலாறு மற்றும் வழக்காறுகள் முதலான தரவுகளை ஆவணப்படுத்த வேண்டும்.
  • மொழிகளின் வாழும் கலாச்சாரக் கூறுகளை பாதுகாக்க ஓர் மக்கள் இயக்கம் உருவாக்கப்பட வேண்டும். அவரவர் தாய்மொழியை அழியாமல் பாதுகாக்கும் கடமை உணர்வு ஏற்பட வேண்டும்.
  • மொழிகளை மேலும் வளமாக்க ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகள் தேவை.
  • மொழியைப் புத்துயிர் பெறச் செய்வதற்கான, தொலைநோக்குப் பார்வை கொண்ட கல்வித் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
  • டிஜிட்டல் வளங்கள் மூலம் மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • சமூகங்களும், சட்டங்களும் மொழி அழிவை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்ப வேண்டும்.
  • அரசியல் ஜனநாயகத்திற்கு நிகராக மொழிகளின் ஜனநாயகமும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

தேவை அழிநிலை மொழிகளுக்கான ஆணையம்

மொழிகளைப் பாதுகாக்க வேண்டிய சூழல் உலக அளவில் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் அது நிலைபெற வேண்டும். அதற்கு, ஆளும் இந்திய அரசு தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி அழிநிலை மொழிகளைப் பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே மொழி வல்லுனர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மொழிநல விரும்பிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. விலங்குகளும் பறவையினங்களும் இயற்கையாகவே அழியும் இயல்புடையவை. அவற்றைக் காப்பதில் மக்களுக்கு இருக்கும் ஆர்வம் மொழிகளைக் காப்பதில் இல்லை. விலங்குகள் நல ஆர்வலர்கள் அரசிடம் முறையிட்டு வெற்றியும் பெறும் போது, நமது சமூக அடையாளமாக விளங்கும் மொழிகளின் அழிவைப் பாதுகாக்க அரசிடம் முறையிட்டு, அழிவின் விளிம்பில் தத்தளிக்கும் மொழிகளைக் பாதுகாப்போம்.

சான்றாதாரங்கள்

  1. அரங்கன். கி. ‘மொழிகளின் மரணம்’, முத்தமிழ். த. (தொ.ஆ.), தமிழ் மொழியியல் ஆய்வு : பன்முக வாசிப்பு நூலிலுள்ள கட்டுரை, சென்னை : நெய்தல் பதிப்பகம்..
  2. ஆனைமுத்து. வே. ‘2057- இல் பேசப்படும் மொழியாகத் தமிழ் இருக்குமா?’, சிந்தனையாளன், அக்டோபர், 2017.
  3. இன்னாசி. சூ.2004. இந்திய மொழிக் கொடை, சென்னை : நிலா நூலகம்.
  4. இராமலிங்கம். கே.பி. ‘உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்கும் பிரதமர்!’. தினமணி, 26.10.2022.
  5. உதையை மு. வீரையன். ‘எத்தனை காலம்தான் மறைக்க முடியும்?’, தினமணி, 20.2.2016.
  6. உமரி காசிவேலு. பிஷப் கால்டுவெல்: பிழையுரையும் பொய்யுரையும்...- திராவிட இனவாதமும், சென்னை: வர்சன் பிரசுரம்.
  7. ஔவை அருள். ‘மாந்தர் பெற்ற மகத்தான வாரம்’, தினமணி, 21.2.2022.
  8. கதிரவன். இரா. மொழிகளின் எதிர்நீச்சல், தினமணி, 2.2.2016.
  9. கந்தசாமி. சா. 2018. ‘இந்தியர்கள் அறியாத தமிழ் மொழி’, தினமணி, 4.2028.
  10. ------------------. 2017. ‘உலகெங்கும் ஒரே மொழி’, தினமணி, 7.2017.
  11. -------------------2017. ‘தாய்மொழி அழிப்பும் இந்தித் திணிப்பும்’, தினமணி, 5.2017.
  12. கோதை ஜோதிலட்சுமி. ‘நமது மொழி - வேற்றுமையில் ஒற்றுமை’, தினமணி, 9.6.2025.
  13. சிதம்பரநாதன். பெ. 2017. ‘தாய்மொழியின்றி கல்வியில்லை’, தினமணி, 4.2017.
  14. பூரணச்சந்திரன் .க. இந்திய மொழிகள்: ஓர் அறிமுகம், திருச்சி: நிவேதா: நல்வாழ்வு கல்வி அறக்கட்டளை.
  15. மலையமான். ’ தாய்மொழியைப் போற்ற ஒரு தினம்’, தினமணி, 21.2.2018
  16. -----------------. 2017.. அழிவின் விளிம்பில் நெளியும் மொழிகள், தினமணி, 11.2017.
  17. நெல்லை சு. முத்து. ‘மொழி என்பது பேச்சா? எழுத்தா ?’, தினமணி, 11.4.2017.
  18. விசயராகவன். கோ. ‘அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்’, தினமணி, 7.2.2023.
  19. ஜெயபாஸ்கரன். ‘அருகி வரும் அறிஞர் இனம்’, தினமணி, 19.7.2017
  20. Ritwiz Sarma. 2022. Language Endangerment and Culture Loss-A Case Study of Tai Khamti, A-AA+play_circleListen, October, 28, 2022.

- முனைவர் ச.சீனிவாசன் (தமிழக அரசின் சிறந்த நூல் மற்றும் நூலாசிரியர் விருதாளர்)
பேராசிரியர் & தலைவர், தமிழ்த்துறை
திருமலா திருப்பதி தேவஸ்தானம்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி (தில்லிப் பல்கலைக்கழகம்)
புது தில்லி-110 021