கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

‘குடிஅரசு’ வழக்கு: தீர்ப்பு தள்ளி வைப்பு

பெரியாரின் ‘குடிஅரசு’ இதழ்களிலிருந்து பெரியார் எழுத்துப் பேச்சுகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட தடை கோரி, கி. வீரமணி தொடர்ந்த வழக்கு, விசாரணை முடிவடைந்தது. தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர். விரைவில் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடந்த மார்ச் 8 ஆம் தேதி இறுதியான விசாரணை. நீதிபதிகள் எப்.எம். இப்ராகிம் கலிபுல்லா, எஸ். கிருபாகரன் முன்னிலையில் வந்தது. இந்த வழக்கில், தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தஞ்சை இரத்தினகிரி தாக்கல் செய்த மனுவை, ஏற்கனவே உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இரத்தினகிரி சார்பில், மேல் அமர்வு மன்றத்திலும், முன்னாள் அரசு வழக்கறிஞர் வேங்கடபதி மனுதாக்கல் செய்து வாதிட்டார். வேங்கடபதி முன் வைத்த வாதங்களுக்கு, கழக சார்பில் நேர் நின்ற மூத்த வழக்கறிஞர் ஆர். தியாகராசன் பதிலளித்து மனுவை தள்ளுபடி செய்யக் கோரினார். இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டனர்.
 
இந்த நிலையில், திராவிடர் கழக வழக்கறிஞர் வீரசேகரன் பேச எழுந்தபோது, நீதிபதிகள், ஏற்கனவே விவாதங்கள் முடிந்து விட்டதால் மீண்டும் பேச அனுமதிக்கவில்லை. உயர்நீதிமன்றத்தில் நடந்த வாதங்களைத் தொகுத்து, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிட்ட இதழ்களை நகல் எடுத்து, நீதிபதிகளிடம் காட்டி வழக்கறிஞர் வீரசேகரன் புகார் செய்தார். இந்த வழக்குப் பற்றி ஊடகங்கள் பரப்பும் செய்திகளை, நீதிபதிகள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புவதாகக் கூறினார். நீதிபதிகள், அதையெல்லாம் கேட்கத் தயாராக இல்லை என்று கூறிவிட்டனர்.
 
“ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் பற்றி எல்லாம் நாங்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை. இந்த நீதிமன்றத்தின் முன் உள்ள வழக்கு, அது தொடர்பான ஆவணங்களை மட்டுமே நாங்கள் பரிசீலிப்போம்” என்று நீதிபதிகள், தி.க. வழக்கறிஞர் வீரசேகரின் கோரிக்கையை நிராகரித்தனர்.
 
தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதி கலிஃபுல்லா அறிவித்தார், வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, ஆர். தியாகராசன், இளங்கோ, கிளேடியல் மற்றும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் குமாரதேவன், வழக்கறிஞர் அமர்நாத், கழகத் தோழர்கள் தபசி குமரன், உமாபதி, மயிலை சுகுமாறன், குணா, கோபி, செல்வம் ஆகியோர் நீதிமன்றம் வந்திருந்தனர்.