சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதன் மூலம், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் கூட்டணியானது, பா.ஜ.கவிற்கு எதிரான வாக்குகள் சிதறுவதைத் தடுத்து நிறுத்துவதுடன் மட்டுமின்றி, பா.ஜ.கவின் பெரும்பான்மைவாத செயல்திட்டத்தை எதிர்த்து முறியடித்திடவும் முடியும்.

இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக, மக்கள் நல அரசாங்கக் கட்டமைப்பைப் பாதுகாத்திட எதிர்கட்சிகளின் கூட்டணி உறுதியேற்கிறது. இந்திய நாடு ஒரு குடியரசு நாடாக உருவெடுத்த போது, "அரசியலில் சமத்துவத்தையும், சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் நாம் சமத்துவமின்மையையும் கொண்டிருப்போம்." என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எச்சரித்திருந்தார். அரசியல், சமூக மற்றும் பொருளாதார - சமத்துவம் எனும் கருத்தாக்கமே - தற்போது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. சமத்துவமற்ற அரசியல், சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறையை நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் வளர்த்தெடுத்து வருகிறது. சமூக வாழ்வின் அனைத்து பரிமாணங்களிலும் சமத்துவமின்மை வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக, மக்கள்நல கட்டமைப்பு மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்திட, எதிர்த்து முறியடித்திட அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தேவையை வரலாறு சுட்டிக் காட்டுகிறது.india alliance 690புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.கவின் பிரிவினைவாத, சலுகைசார் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் முற்போக்கான மாற்று அணி ஆகும். மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகள் ஓரணியாகத் திரண்டு வருவதைக் கண்டு கலக்கமடைந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டம், இந்தியா அணி குறித்து இழிவாகப் பேசுகிறது. இந்தியா கூட்டணியை கிழக்கிந்திய கம்பெனியுடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி கருத்து வெளியிட்டுள்ளார். கிழக்கிந்திய கம்பெனியையும் அதன் நீட்சியான பிரிட்டிஷ் ஆட்சியையும் நாட்டைவிட்டு விரட்டியடித்த தேசபக்த, இடதுசாரி சக்திகளின் வீரவரலாற்றை அவர் வேண்டுமென்றே மறந்துவிட்டுப் பிதற்றுகிறார். காலனியாதிக்க அரசுக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமே போராடிக் கொண்டிருந்த போது, பிரிட்டிஷாருக்குச் சேவகம் செய்து கொண்டிருந்தவர்கள் யார் என்பதை அவர் உட்பட அனைவரும் அறிவோம் என்பதால் அவர் இவ்வாறு செயல்படுகிறார்.

ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் முற்றிலும் நிர்வாகச் சீர்கேடுகள் தான் மலிந்துள்ளது. பண மதிப்பிழப்பு போன்ற தன்னிச்சையான நடவடிக்கைகளால் தேசப் பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையும் நலிவடைந்து வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) போன்ற கூட்டாட்சி முறைக்கு எதிரான நடைமுறைகளால் அமைப்புசாரா தொழில்துறை மிகக் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. தவறான பொருளாதார நடவடிக்கைகள், வேலைவாய்ப்பின்மை என்ற நெருக்கடியான நிலைக்கு நாட்டை இட்டுச் சென்றுள்ளது. கோவிட் பெருந்தொற்று நிலையைத் தவறாகக் கையாண்டதால் பேரழிவு ஏற்பட்டது. சமூக நலத்துறையைப் புறக்கணித்துவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகைகளை மோடி வாரி வழங்கியதால் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் செல்வந்தர்களின் சொத்துக்குவிப்பு அதிகரித்து வருவது திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டு வரும் சூழ்ச்சி ஆகும். கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை ஏழை எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிட்டது. எனவே, சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடி வருகிறார்கள். அதிகார வெறிபிடித்த பா.ஜ.க, மதம், ஜாதி, மொழி மற்றும் பிராந்திய அடிப்படையில் இந்திய சமுதாயத்தைப் பிளவுபடுத்தி வருகிறது.

இத்தகைய அரசியலின் விளைவுகள், தேசம் முழுவதிலும் வெளிப்படையாகத் தெரிகிறது... மணிப்பூர் மாநிலமே பற்றி எரிகிறது. கொடூரமான சட்டங்கள் மூலமாக அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனக் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. ஜனநாயக விழுமியங்களும், பண்புகளும் வீழ்ச்சியடைந்து வருகின்றன. நமது தேசத்தில் ஜனநாயகம் உயிர் பிழைக்குமா என்பது தான் தற்போது நம் அனைவரின் முன் உள்ள மிக முக்கியமான கேள்வி ஆகும். இந்தப் பின்புலத்தில் தான், இன்றைக்கு இந்தியா கூட்டணியின் உருவாக்கத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒன்றுபட்ட எதிரணியால் மட்டுமே அரசியலமைப்புச் சட்ட விழுமியங்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த முடியும் என்று நீண்ட காலமாகவே கருதப்பட்டு வந்தது. மத்தியில், பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியதை 'வெறும் ஆட்சி மாற்றம்' என்றில்லாமல், தேசத்தின் அரசியலமைப்பைச் சீர்குலைக்கக்கூடிய பண்புசார் மாற்றமாகவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பீடு செய்தது. பா.ஜ.கவை அரசியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் எதிர்கொள்ள மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் தேசாபிமான சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம். எனினும், இந்துத்துவ அரசியலுக்கு எதிரான மாற்று என்பது, பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் அரசியலில் இருந்து அடிப்படையில் வேறுபட்டதாக இருந்திட வேண்டும்.

சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதன் மூலம், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் கூட்டணியானது, பா.ஜ.கவிற்கு எதிரான வாக்குகள் சிதறுவதைத் தடுத்து நிறுத்துவதுடன் மட்டுமின்றி, பா.ஜ.கவின் பெரும்பான்மைவாத செயல்திட்டத்தை எதிர்த்து முறியடித்திடவும் முடியும். எனினும், அத்தகையதொரு அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் புரிதலை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் தத்தம் கட்சி நலன்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பா.ஜ.கவை முறியடிக்க வேண்டும் என்ற பொதுவான உறுதிப்பாடு தேசிய அளவில் எழுச்சி கொண்டு விட்டது. அதற்கான நடைமுறைகள் மாநில அளவில் வகுக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில், இந்தியா அணியின் மிகப்பெரிய கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கியமான பொறுப்பு இருக்கிறது. இந்த நோக்கங்களை அடையும் பொருட்டு, கடந்த ஜூன் மாதத்தில் 15 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் பாட்னா நகரில் நடைபெற்றது. அதன் தொடர் முன்னேற்றமாக, 26 அரசியல் கட்சிகள் பங்கேற்ற கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தான் எதிர்கட்சிகளின் இந்தக் கூட்டணிக்கு INDIA (Indian National Developmental Inclusive Alliance) என்று பெயர் வைத்திட முடிவு செய்யப்பட்டது.

ஒற்றுமைக்கான இந்த நடவடிக்கை பா.ஜ.கவைக் கலக்கமடையச் செய்தது என்பது, இந்தியா கூட்டணி பெங்களூரில் கூடிய அதே நாளில், செயலற்றுப் போன தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தைப் பிரதமர் மோடி கூட்டியதில் இருந்து தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. "எல்லோரையும் சமாளிக்க இவர் ஒருவரே போதும்" (Ek Akela Sab Par Bhaari) என்று ஆணவம் கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சி, 37 அரசியல் கட்சிகளுடன் கரம் கோர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது!

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்து நாட்டை விடுவித்த மகத்தான பாரம்பரியத்தை உடைய கட்சிகள் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அந்தக் கட்சிகள் பொதுத்துறைக்கு கட்டியம் கூறின; நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்தன. சமூக பாகுபாடு, மொழிவெறிப் பேரினவாதம் மற்றும் கூட்டாட்சிக்கு எதிரான அரசியல் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா அணியில் உள்ள கட்சிகள் மகத்தான பங்காற்றியுள்ளன. தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய கட்சிகளாக இந்தக் கட்சிகள் திகழ்கின்றன.

நமது விடுதலைப் போராட்ட இயக்கத்தின் தலைவர்கள் ஒரு வலுவான, நல்லிணக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேசத்தை உருவகித்திருந்தார்கள். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியானது, அத்தகையதொரு தேசத்தின் அடித்தளமாக இருந்தது. இந்தக் கருத்தியலுக்கு எதிராக நின்றது ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத பிளவுகளையும், சாதிய படிநிலைகளையும், பாலின ஒடுக்குமுறையையும் ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்தியது. வெறுப்பு அரசியலில் இருந்து நாட்டை விடுவித்திட, சமூக நல்லிணக்கம் தழைத்தோங்கச் செய்திட, இந்தியா கூட்டணி உதயமாகி இருக்கிறது. நாம் வெற்றியடைவது சர்வ நிச்சயம்!

- து.ராஜா, பொதுச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தமிழில் - அருண் அசோகன்
நன்றி - இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் - 03.08.2023

Pin It