யேல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஓவன் எம் ஃபிஸ், "பொருளாதார அளவுகோல்கள்" செயற்கையானது என்றும், சமூக வாழ்வில் பாகுபாடு காட்டுவதற்கு எந்த பொருளாதார அடிப்படையும் இல்லை என்றார்.

சாதி இழிவு என்பது தாழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு சாதியக் குழுவின் பிறப்பதை குறிக்கிறது. பொருளாதார அளவுகோல்கள் அடிப்படையில் அமைந்த குழுக்களுக்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பு தேவையில்லை. அவர்களின் பொருளாதார பொதுமைகள் அல்லது போதாமைகள் அரசியலமைப்பு மதிப்புகளை கோரவில்லை. ஒடுக்கப்பட்டோரை அடையாளங்காண பொருளாதார அளவுகோல்களைப் பயன்படுத்தினால் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட வகுப்பினரை மேலும் ஒடுக்கவே பயன்படும். இதனால்தான் பாகுபாட்டைப் புரிந்துகொள்வதற்கான ஒரே அடிப்படை அளவுகோலாக பொருளாதார அளவுகோல்களை ஆய்வாளர்கள் நிராகரிக்கின்றனர்.

எந்தவொரு நபருக்கும் அவரது பொருளாதார நிலைப்பாட்டின் அடிப்படையில் மட்டுமே இழப்பும், பாகுபாடும், சமூக விலக்கமும் நடைபெறுவதில்லை. உதாரணமாக, 1978 ஆம் ஆண்டில் காசியில் சிலையைத் திறந்து வைத்ததற்காக, அப்போதைய துணைப் பிரதமர் பாபு ஜகஜீவன் ராம் சாதியைக் காரணம் காட்டி அவமானப்படுத்தப்பட்டார். தலித் சாதியில் பிறந்ததால் குடியரசுத் தலைவரைக் கூட கோவிலில் அவமதிக்கக் கூடிய தனிச்சிறப்பு வாய்ந்த நாடு இந்தியா. தலித் என்பதால், பீகார் முதல்வராக இருந்த ஜிதன் ராம் மஞ்சியும் இதேபோன்ற அவமானத்தை எதிர்கொண்டார். பெரிய பதவிகளில் இருந்தாலும், தலித் என்பதால் அவமானப்படுத்தப்பட்ட தலைவர்களின் பட்டியல் மிக அதிகம் உள்ளது.supreme court 600வர்ணாசிரம அமைப்பின் நான்காவது வர்ணமான "சூத்திர" உறுப்பினர்களுக்கு எதிராகத் தொடரும் தீண்டாமை, சமூகப் பாகுபாடுகளுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன. 103 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் செல்லுபடித்தன்மையை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு இந்த உண்மையை நிராகரிக்கவில்லை. இருப்பினும் இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல்களை அறிமுகப்படுத்துவது அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும் என்று பெரும்பான்மைத் தீர்ப்பு கூறியது. நீதிபதி ரவீந்திர பட், தலைமை நீதிபதி யு.யு.லலித் அளித்த மாறுபட்ட தீர்ப்பு கூட, 50% இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை வலியுறுத்தியது போல், பொருளாதார அளவுகோலை நிராகரிக்கவில்லை. அரசியலமைப்பில் எந்த அடிப்படையும் இல்லாமல் நீதித்துறையால் உருவாக்கப்பட்ட இந்த 50% உச்சவரம்பு அளவுகோல், SC, ST, OBC, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரைப் பாதிக்கக்கூடும்.

பொருளாதார அளவுகோல்களை நியாயப்படுத்திய நீதிபதி தினேஷ் மகேஸ்வரி "EWS இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறுவதில் இருந்து அரசியலமைப்புச் சட்டத்தின் 15(4), 16(4) ஆகிய பிரிவுகளின் கீழ் உள்ள SC, ST, OBC வகுப்புகளை விலக்குவது சமநிலைப்படுத்தும் தன்மையில் இருப்பதாகக் கருத்து தெரிவித்தார். இது பாகுபாட்டை ஈடுசெய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவக் குறியீட்டை மீறாது. மேலும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது” என விளக்கமளித்தார்.

இந்தக் கருத்து அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கும், இந்திரா சஹானி வழக்குத் தீர்ப்புக்கும் (1992) முரணானது. நீதிபதி பேலா எம் திரிவேதி, "ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டு நலனுக்காக இட ஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கூறினார்.

நீதிபதி ஜே பி பார்திவாலா, "இட ஒதுக்கீட்டை ஒருசிலர் மட்டும் அனுபவிக்க அனுமதிக்கக் கூடாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெரும்பான்மையானோர் கல்வி, வேலைவாய்ப்பில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளதால், அவர்களை பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து நீக்க வேண்டும்" என்று கூறினார். இட ஒதுக்கீடு உரிமைக்கு தகுதியற்ற உயர்சாதிக்கு 10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், வரலாற்று ரீதியாகவும், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட SC, ST, OBC வகுப்பினரின் உரிமைகளை கட்டுப்படுத்தும் எந்தவொரு பரிந்துரையும் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது. மேலும் அப்படிப்பட்ட தவறை அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்க முடியாதது.

இந்தியாவின் குடியரசுத் தலைவரையும் முதலமைச்சரையும் சாதியின் அடிப்படையில் இழிவுபடுத்தும் சமூகத்தின் மோசமான சமூக நிலைமைகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. சமூக ரீதியான இழிவை மறுப்பதும், பாகுபாட்டைக் அளவிடுவதற்காக பொருளாதாரக் காரணிகளை மட்டும் அங்கீகரிப்பதும் அரசியலமைப்புச் சட்ட ரீதியாக விபரீதமானது, மேலும் இப்படியான கருத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் 17 ஆவது பிரிவின் மூலம் நீக்கப்பட்ட தீண்டாமையை நிலைபெறச்செய்வதாகும்.

அரசியலமைப்ப் நிர்ணய சபையின் நீண்ட விவாதத்திற்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இருந்து பெறப்படுகின்றன. கேசவானந்த பாரதி வழக்கில் (1973) அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை மாற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று சமூக ஜனநாயகம். சமூக ஜனநாயகம் என்பது ஜனநாயகத்தின் உண்மையான முகம். சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதே ஜனநாயகத்தின் சாராம்சம்.

இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதார அடிப்படையை வழங்குவதன் மூலம், சமூகத்தின் அனைத்து பிரிவினரின் சமூக ஜனநாயக உரிமைகளை பறிக்க பாராளுமன்றம் முயற்சித்துள்ளது. மொத்த மக்கள்தொகையில் 10 முதல் 15% இருக்கும் உயர் சாதியினர் ஏற்கனவே மொத்தப் பணிகளில் 45 முதல் 50% வரை பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர், அதேசமயம் SC, ST, OBC வகுப்பினர் இந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு 49.5% இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படுகிறது. SC, ST, OBC வகுப்பினர் அரசுத் துறை பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் போதுமான அளவிலான பிரதிநிதித்துவத்தை இன்னும் அடையவில்லை. அதே நேரத்தில் உயர் சாதியினர் ஏற்கனவே இந்தத் துறைகளில் அதிக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்.

மேலும், 77 ஆவது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு 27 ஆண்டுகள் ஆகியும் இன்னும் SC, ST பிரிவினருக்கான பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. ஜர்னைல் சிங் வழக்குத் தீர்ப்பில் (2018) இந்திரா சஹானி வழக்குத் தீர்ப்பு எம் நாகராஜ் (2006) வழக்கை கட்டுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. ஆயினும்கூட பதவி உயர்வில் SC, ST இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் அந்த நாள் நம் கண்ணுக்குத் தெரியவில்லை.

இட ஒதுக்கீட்டு கொள்கையின் அடிப்படையை மாற்றியமைக்கும் சட்டத்திருத்ததை விவாதிக்காமல் சட்டமாக்கியதால், பாராளுமன்றம் அதன் கடமையில் தோல்வியடைந்தது. 103 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தின் எந்தவொரு குழுவிலும் விவாதிக்கப்படவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னோடிகளால் வழங்கப்பட்ட "சமூக, கல்வியில் பின்தங்கிய நிலை" என்ற அடிப்படைத் கோட்பாட்டை, எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாமல், எவ்வித பொருத்தமான தரவுகளும் இல்லாமல் "பொருளாதார பின்தங்கிய நிலை" என மாற்ற முடியுமா என்பதுதான் இப்போதைய மையப் பிரச்சினை. சட்டத்திருத்தத்தை நிறைவேற்றும் போது பாராளுமன்றம் தனது விவாத மரபைக் கடைப்பிடிக்காததால், உச்ச நீதிமன்றம் "விவாத ஜனநாயகம்" பற்றிய பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு கடமையை விவாதித்திருக்க வேண்டும்.

தொலைநோக்குப் பார்வை அரசிலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது அரசியலமைப்பு நிர்ணய சபை ஏற்றுக்கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை EWS இட ஒதுக்கீட்டுத் தீர்ப்பு மறுக்கிறது. இந்திய சமூகத்தில் சாதி அமைப்பு ஆழமாக வேரூன்றியுள்ளது. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் (SC, ST, OBC) சமத்துவத்தை மறுத்த உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு 90% மக்களின் கண்ணியத்தை மறுத்துள்ளது.

இந்திய சமூகம் சமத்துவமற்ற படிநிலை அமைப்பை அடிப்படையாக கொண்டே வளர்ந்துள்ளது. சமூகத் தீண்டாமை, ஏற்றத்தாழ்வான படிநிலை ஆகியவற்றை பார்ப்பனிய அமைப்பின் சமூக ஒழுங்கு புனிதப்படுத்துகிறது. அண்ணல் அம்பேத்கர் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் சமூகப்பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் மனித மாண்பைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளை அரசியலமைப்புச் சட்டத்தில் உருவாக்க முடியும் என்பதை நிறுவினார்.

பார்ப்பனிய சக்திகள் சமூக சமத்துவமின்மையில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள். அதை மென்மேலும் நிலைநிறுத்துவதற்காக உழைக்கின்றனர். அரசியலமைப்புச் சட்டம் சமத்துவமான சமூக ஒழுங்கை நிறுவ விரும்புகிறது. அதன்படி எந்த விதமான பாகுபாட்டிற்கும் வாய்ப்பில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம், மதம், இனம், சாதி, பாலினம், வம்சாவளி, பிறந்த இடம், வசிப்பிடம் போன்றவற்றின் மூலம் ஏற்படும் பாகுபாடுகளை அகற்றி சமத்துவ சமுதாயத்திற்கு அடித்தளம் அமைப்பதில் அம்பேத்கர் வெற்றி பெற்றார்.

EWS இட ஒதுக்கீட்டுத் தீர்ப்பு, துரதிர்ஷ்டவசமாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய பெரிய பிரிவினரின் அரசியலமைப்பு உரிமைகளை மறுக்கிறது.

- கே.எஸ்.சவுகான், இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்

நன்றி: Indian Express  நாளிதழ் (2022, நவம்பர் 10 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: விஜயபாஸ்கர்

Pin It