பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% EWS இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்திய 103வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 2022 மாதம் தொடக்கத்தில் உறுதி செய்தது. 10% EWS இட ஒதுக்கீடும் அதைத் தொடர்ந்து வந்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பும் இந்தியாவில் சாதி அடிப்படையிலான மரபார்ந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றிய விவாதத்தை முற்றிலும் மாற்றியுள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம், "பொருளாதாரப் பின்தங்கிய நிலையிலிருந்து உருவான ஏற்றத்தாழ்வு" என்ற உலகளாவிய அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூகக் கொள்கைக்கான ஒருமித்த கருத்து இந்தியாவிலும் வலுப்பெற்றுள்ளது எனலாம். கடந்த இருபது ஆண்டுகளாக உலகெங்கும் அதிகரித்து வரும் வேலையின்மையும் பொருளாதார பாதுகாப்பின்மையின் அதிகரிப்பும் அத்தகைய கருத்திற்கு நம்பகத் தன்மையை தந்துள்ளன.

எவ்வாறாயினும், சாதி அடிப்படையில் பொருளாதாரச் சமத்துவமின்மை இந்தியாவில் வலுவடைந்து வருவதைக் கருத்தில் கொண்டால், இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கான அடிப்படையில் இருந்து சாதியை தவிர்ப்பது ஒரு மாபெரும் தவறு.

நலன் தரும் உரிமைகளும் உண்மைகளும்:

உலகளாவிய ரீதியில் வேரூன்றியிருக்கும் புதிய ஒருமித்த கருத்தானது, சாதி, இன வேறுபாடின்றி ஒவ்வொரு தனிநபரும் அவருக்குரிய நலன்தரும் (Welfare Entitlement) உரிமையைப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் வருகிறது. இக்கூற்று புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தாலும், அது களத்தில் நிலவும் அடிப்படை உண்மைகளுடன் ஆராயப்பட வேண்டும். சில குழுக்கள் அனுபவிக்கும் கூட்டுப் பாதகம் ஒவ்வொன்றும் ஒரு வகையில் தனித்துவமானது. மேலும் அவர்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான குறைபாடுகளை களைய தீர்மானகரமான குறிப்பிட்ட முடிவுகள் தேவைப்படுகின்றன.Inequality in Indiaஒருவர் சமகாலத்தில் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள் அவரது வாழ்நாளில் மட்டும் உருவாக்கப்பட்டதில்லை. வெவ்வேறு சமூகங்கள் எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், அவர்களின் வேறுபட்ட லட்சியம், திறன், முயற்சி காரணமாக இல்லை, மாறாக அது தலைமுறை தலைமுறையாக அவர்கள் மீது திணிக்கப்பட்டவை. இப்படியாக மரபு ரீதியாக சுமத்தப்படும் ஏற்றத்தாழ்வுகள், தலைமுறைகளுக்கு பிறப்பு சார்ந்து கடத்தப்படுகின்றன. அவ்வகையில் பல தலைமுறைகள் கடந்தும் சமத்துவம் இல்லாமல் கடத்தப்படும் ஒரு வளம் பொருளாதாரம். இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக பொருளாதாரத்தை கடத்தும் வேலையை சாதி செய்கிறது.

2021 ஆண்டில் வெளியிடப்பட்ட அகில இந்திய கடன் மற்றும் சேமிப்பு குறித்த ஆய்வு (AIIDIS-2019) இந்தியாவில் சாதிய அடிப்படையில் வளர்ந்துவரும் ஆழமான பொருளாதாரச் சமத்துவமின்மையைத் தெளிவாகக் சுட்டிக்காட்டுகிறது. மக்களிடம் உள்ள சொந்த நிலம், கால்நடைகள், வீடு, விவசாய இயந்திரங்கள், போக்குவரத்து உபகரணங்கள் உள்ளிட்ட அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள், பங்குகள் (Shares), வைப்புத்தொகை (Deposits) போன்ற நிதிசார் சொத்துக்கள் (Financial Assets) பற்றிய தகவல்களை சேகரித்து அதனடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, AIIDIS கணக்கீட்டுத் தரவுகள் வெளியிடப்படுகின்றன. வருமானத்தையும் நுகர்வையும் விட, ஒருவரின் செல்வச் செழிப்பும் சொத்து மதிப்பும் அவருடைய பொருளாதார நிலையை கண்டறிய உதவும் சிறந்த அளவுகோல் ஆகும். ஒருவருடைய செல்வச் செழிப்பும் அசையும் அசையாச்சொத்தும் நீண்ட காலம் மாறாமல் நிலைத்து நிற்கும் மாறிலி. ஆனால் ஒருவருடைய வருமானமும், நுகர்வும் அடிக்கடி மாறும் தன்மை கொண்டவை.

இந்தியாவில் 1990 ஆம் ஆண்டுக்கும் 2020 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், குறிப்பாக 2000 ங்களின் முற்பகுதியில் சமத்துவமின்மை பரவலாகக் அதிகரித்தது. குறிப்பாக பொருளாதாரச் சமத்துவமின்மையும், வருமானம் மற்றும் நுகர்வு சமத்துவமின்மையும் கடுமையாக உயர்ந்தது. பொருளாதாரச் சமத்துவமின்மையை குறிப்பிடும் கினி குறியீடு (Gini Index) 1992 ஆம் ஆண்டில் 0.62 என்ற அளவிலும், 2002 ஆம் ஆண்டில் 0.63 என்ற அளவிலும், 2012 ஆம் ஆண்டில் 0.67 என்ற அளவிலும், 2019 ஆம் ஆண்டில் 0.68 என்ற அளவிலும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

2012 ஆம் ஆண்டின் வருமானம் மற்றும் நுகர்வு குறீயிட்டு எண்ணுடன் (0.37) ஒப்பிட்டு பார்த்தால், பொருளாதாரச் சமத்துவமின்மையின் உண்மை நிலவரம் புரியும். உயர் சாதியினரின் சராசரி தனிநபர் சொத்து மதிப்பு 2019 ஆம் ஆண்டில் ₹28,03,977 ஆக இருந்தது. அதே 2019 ஆம் ஆண்டில், OBC வகுப்பினரின் சராசரி தனிநபர் சொத்து மதிப்பு ₹4,09,792 ஆகவும், தலித்துகளின் சராசரி தனிநபர் சொத்து மதிப்பு ₹2,28,388 ஆகவும், பழங்குடியினரிம் சராசரி தனிநபர் சொத்து மதிப்பு ₹2,32,349 ஆகவும் இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சராசரியாக, உயர் சாதியினர் தலித்துகளையும் பழங்குடிகளையும் ஒப்பிடுகையில், மூன்று மடங்குக்கும் கூடுதலான சொத்துக்களையும், OBC மக்களோடு ஒப்பிடுகையில் அவர்களை விட இரண்டு மடங்குக கூடுதலான சொத்துக்களையும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் நாட்டின் மொத்த சொத்து மதிப்பிம் 45 விழுக்காட்டை உயர்சாதியினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், அதைத் தொடர்ந்து OBC வகுப்பினர் 40%, தலித்துகள் 10% பழங்குடியினர் 5% சொத்து மதிப்பையும் தங்கள் வசம் வைத்துள்ளனர்.

உயர் சாதியினர் சொத்து மதிப்பிம் பெரும் பங்கை வைத்திருப்பது மட்டுமல்லாமல், வகைதொகையின்றி உயர்மட்ட பொருளாதார அடுக்கில் குவிந்துள்ளனர். அதாவது சொத்து மதிப்பில் மட்டுமின்றி, மற்ற சாதிகளை ஒப்பிடுகையில் உயர்சாதியினர் இடையே பணக்காரர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகிறது. பெரும்பணக்காரர்களிடம் உள்ள சொத்துமதிப்பில் 55 விழுக்காடு உயர் சாதியினரிடம் உள்ளது. அதற்கு மாறாக சொத்து மதிப்பில் 36 விழுக்காடு OBC சாதியினரிடமும், 5 விழுக்காடு SC சாதியினரிடமும், 3 விழுக்காடு பழங்குடியினரிடமும் உள்ளது. பொதுவெளியில் பரவலாக காணப்படும் கருத்தான “தனிநபர்களின் வருமானமும் சேமிப்பும், அவை சார்ந்த நடத்தைகளும், பொருளாதாரச் சமத்துவமின்மையை உருவாக்கவில்லை”, மாறாக குறிப்பிட்ட சாதிக் குழுக்களை விலக்கி வைத்து நிறுவனமயப்படுத்தப்பட்ட நீண்ட வரலாற்றின் விளைவாகவே ஆழமான பொருளாதாரச் சமத்துவமின்மை உருவாக்கப்பட்டது.

பொருளாதாரச் சமத்துவமின்மைக்கு ஆதாரம் வரலாற்றின் பக்கங்களிலும், பரம்பரை பரம்பரையாக கடத்தப்படுவதிலும் உள்ளது. சொத்துமதிப்பை தனித்தனியே பிரித்தெடுத்தால், நிலமும் கட்டிடமும் ஒருவரிடம் உள்ள சொத்து மதிப்பின் பெரும்பகுதியைக் கொண்டிருக்கின்றன. அவை முறையே 60 மற்றும் 22 விழுக்காடாகவும், அதைத் தொடர்ந்து 7 விழுக்காடு நிதிச் சொத்துக்களாகவும் உள்ளன. நிலமும் கட்டிடங்களும் பெரும்பாலும் மரபுரிமையாக உள்ளன. குறிப்பாக இந்தியச் சமூகங்களுக்கு இடையேயான நிலச் சமத்துவமின்மை பிரிட்டிஷ் காலனித்துவ காலம் வரை பின்னோக்கிச் செல்லும் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட சில சாதிகளுக்கு மட்டுமே நில உரிமையை வழங்கிய காலனித்துவத் தலையீட்டின் பாரம்பரியம் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் தொடர்ந்தது. இந்தியாவின் நிலச் சீர்திருத்த சட்டங்களும் இந்தப் பாரம்பரியத்தை மாற்றவில்லை. 1990 ஆண்டுகளுக்குப் பிந்தைய ரியல் எஸ்டேட் வணிகப் பெருக்கம், ஏற்கனவே நிலம், கட்டிடங்கள் வைத்திருப்பவர்கள் தங்கள் செல்வத்தை ஒருங்கிணைக்க உதவியது. மேலும் நிலத்தின் மதிப்பும் அதிகரித்தது. இந்தியாவின் தேசிய வருமானத்தை ஒப்பிடுகையில் 1980 ஆம் ஆண்டில் 290% ஆக இருந்த தனியார் சொத்து மதிப்பு, 2020 ஆம் ஆண்டில் 555% ஆக அதிகரித்தது. இது உலகின் மற்ற நாடுகளில் இல்லாத வளர்ச்சி என சமத்துவமின்மை அறிக்கை 2022 (World Inequality Report 2022) மதிப்பிடுகிறது. இந்தியாவில் வாரிசுரிமை வரி (Inheritance Tax) பூஜ்ஜியமாக இருப்பதால் சமத்துவமின்மையின் பூதாகரமான வளர்ச்சி ஆச்சரியமல்ல.

சாதிகளுக்கு இடையேயான, இத்தகைய ஆழமான பொருளாதாரச் சமத்துவமின்மை நீடித்து நிலைபெற்றுள்ள இந்தச் சூழலில், அரசின் கொள்கையை எப்படி வடிவமைப்பது? சாதியைக் கணக்கில் கொள்ளாத அரசின் நடுநிலைக் கொள்கை (Caste Neutral Policy) சாதிகளுக்கு இடையேயான பொருளாதார இடைவெளியை குறைக்குமா? சாதியைக் கணக்கில் கொள்ளாமல் அரசின் கொள்கையும் திட்டங்களையும் வடிவமைக்கவேண்டும் என வாதிடுபவர்கள், சாதிகளுக்கு இடையேயான நீடித்து வரும் சமத்துவமின்மையை நியாயப்படுத்துவதாகவே தெரிகிறது.

சாதியைக் கணக்கில் கொள்ளாமல் வடிவமைக்கப்படும் அரசின் கொள்கைகளால் சமத்துவமின்மையின் வரலாற்று மரபை மாற்ற இயலாது. பொருளாதரத்தில் உள்ள சாதிய இடைவெளியின் அளவைக் குறைக்க, அப்படிப்பட்ட கொள்கைகள் போதுமானதாக இல்லை. இந்தியாவில் சாதி அடிப்படையிலான சமத்துவமின்மையைத் தீர்க்க இட ஒதுக்கீடு என்பது ஒரு ஒற்றைக் கொள்கை கருவியாக மாறியது துரதிர்ஷ்டவசமானது. கல்வி, வேலை வாய்ப்புகள், மேம்பட்ட வருவாய்க்கான அணுகுமுறையை மேம்படுத்துவதில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றங்கள் இட ஒதுக்கீட்டால் ஏற்பட்டபோதிலும், அது சமூகம் சார்ந்த வரலாற்றுக் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை குறைக்கத் தவறிவிட்டது.

சாதிகளுக்கு இடையேயான பொருளாதார் இடைவெளி என்பது கல்வி, வேலை, வருமானம் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளின் விளைபொருளல்ல. மாறாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு வாரிசுரிமையாகக் கடத்தப்படும் சமத்துவமின்மையே ஆகும். எனவே, கல்வியில் முன்னேற்றம், வேலை வாய்ப்புகள் ஆகியவை மட்டுமே இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைக்காது. சாதிய அளவுகோலை அடிப்படையாகக் கொண்ட தற்போதுள்ள இட ஒதுக்கீட்டுக் கட்டமைப்பை சிதைத்து, பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டின் அடிப்படை அளவுகோலாக மாற்றுவதன் மூலம், இதுவரை இட ஒதுக்கீட்டினால் கிடைத்த குறைந்தபட்ச முன்னேற்றங்களை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல், சாதிகளுக்கு இடையே உள்ள கட்டமைப்பு சார்ந்த சமத்துவமின்மையை மேலும் அதிகரிக்கும்.

உலகளாவிய அனுபவம்:

சமூக, கலாச்சார மூலதனத்தையும் மரியாதையும் இழப்பது குறித்த கவலைகள், குறிப்பாக இட ஒதுக்கீடு (Affirmative Action) செயல்படுத்தப்படும் பல நாடுகளில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகரித்து வருகிறது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில், கறுப்பின அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டினால் கறுப்பின மக்களுக்கு ஏற்பட்ட முன்னேற்றங்கள் வெள்ளையர்களின் ஆத்திரத்தை பெற்றன. இட ஒதுக்கீட்டு எதிர்ப்பில் ஆரம்பித்து 10% EWS இட ஒதுக்கீட்டில் உச்சக்கட்டமாக வந்து நிற்கும் சாதி ரீதியான இட ஒதுக்கீட்டு எதிர்ப்பும் இதைப் போன்றியதே. சாதியப் பாகுபாட்டையும், நிற-இனம் சார்ந்த பாகுபாட்டையும் ஒன்றாக கருத முடியாதெனினும், அவற்றின் வரலாறுகளில் வேறுபாடுகள் இருந்த போதிலும், இரண்டும் சமத்துவமின்மையின் நீடித்த நிறுவனங்களாகத் தொடர்கின்றன. இந்த நிறுவனங்களின் மரபுகள் ஒன்றுக்கொன்று ஒப்பிட முடியாதவை என்றாலும், நிறவேறுபாடு அற்ற அரசுக் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என அமெரிக்காவில் எழுந்துள்ள வாதம், சாதியை கணக்கில் கொள்ளாமல் கொள்கை உருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்று இந்தியாவில் எழுந்துள்ள கருத்தாக்கத்துடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது. மிக சமீபத்தில், டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன், கறுப்பின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை நிறுத்த அமெரிக்கா முயற்சித்தது. அதன் பின்னர் பதவிக்கு வந்த ஜோ பிடன் தலைமையிலான புதிய அரசாங்கம் டிரம்ப் அரசாங்கத்தின் முடிவுகளை மாற்ற முனையவில்லை.

எந்தவொரு சமூகத்திலும் நிலைபெற்றுள்ள சமத்துவமின்மை ஒரு அரசியல் தேர்வாகும். கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமத்துவமின்மை குறித்து ஆய்வு செய்த தாமஸ் பிக்கெட்டி, "சொத்து விநியோகத்தின் வரலாறு (சமத்துவமின்மை) எப்போதுமே அரசியல் நடவடிக்கை சார்ந்து இருந்ததே தவிர, அதை முற்றிலும் பொருளாதார ரீதியான திட்டங்களால் குறைக்க முடியாது" என்கிறார்.

மரபார்ந்த சமத்துவமின்மையை தடுத்து நிறுத்தி, வாய்ப்புகளையும், வாழ்க்கைத் தேர்வுகளையும் அனைவருக்கும் பொது உரிமையாக மாற்றத் தேவையான சமத்துவமான களத்தை உருவாக்க வேண்டிய கடமை ஒரு நியாயமான சமூக அமைப்பிற்கு உள்ளது.

(கட்டுரையாசிரியர் கலையரசன் இந்தியாவின் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸில் (MIDS) உதவிப் பேராசிரியராகவும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தெற்காசியா நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகவும் உள்ளார். 

நன்றி: The Hindu நாளிதழ் (2022, டிசம்பர் 8 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: ஆயிஷா உமர்

Pin It