russia ukraine war 638உலக நாடுகள் தமது இலாப வெறி நோக்கிற்காகவும், அடுத்த நிலத்தை கைப்பற்றும் முயற்சியும், எண்ணெய் வயல்கள் எரிபொருள் மூலங்களையும் இயற்கை வளங்களையும் தன்வயப்படுத்தவும், தனது வல்லாண்மையை நலைநாட்டவும், பிறரை அச்சசுறுத்தவும், நேச நாடுகள் பக்கம் இருக்கிறது என்று குற்றச்சாட்டியும், ஜி8 நாடுகள் இல்லை என்று காரணம் காட்டியும், தீவிரவாதத்தை வளர்த்து விடுகிறது என பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி வரலாறு நெடுகிலும் அதிகாரபூர்வ வெளிப்படையான ஆக்கிரமிப்பு போரினை பிற நாடுகளில் மேற்கொண்டு வருவதை நாம் கேட்டும், படித்தும், கண்டும் வருகிறோம்.

காட்டுமிராண்டி காலத்திலிருந்து எல்லா வகையிலும் மேம்பட்ட நிலையில் வளமான நிலையில் முன்னேறிய நிலையில் உள்ள அறிவார்ந்த மனித சமூகம் போரினை முன்னெடுக்கும் இழி செயலானது காட்டுமிராண்டி காலத்து மனிதனை விட இன்னும் பின்தங்கிய காட்டுமிராண்டி மனிதன்தான் என்பதை மெய்ப்பிப்பதாக உள்ளது.

இயற்கையைச் சுரண்டி தனக்கு வளமான வாழ்வை அமைத்துக் கொள்ளும் அறிவார்ந்த மனித சமூகம் போர் மூலம் சக மனிதனை கண்மூடித்தனமாக கொல்லும் ஈவு இரக்கமற்ற கொடூர செயலை எவ்வகையிலும் நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது.

குளிரூட்டப்பட்ட பளிங்கு அறைக்குள்ளிருந்து கோட்டு சூட்டு போட்ட ஒரு சில மனிதர்கள் மேற்கொள்ளும் போர் நடவடிக்கைகள் எங்கோ இருக்கும் ஏதுமறியா அப்பாவி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சாதாரண குடிமக்கள் குற்றுயிரும் குலையுயிருமாக துண்டு துண்டாகி விழுந்து துடிதுடித்து உயிரையும் தம் உடைமைகளை இழப்பதையும் இரசிக்கும் கொடூர எண்ணம் கொண்டவர்கள் இப்பூவுலகில் இருந்து முற்றாக துடைத்தெறியப்பட வேண்டியவர்கள்.

ஒரு நாட்டின் மீது குறிவைத்து தொடுக்கப்படும் போரானது அந்நாட்டின் மனித வளம், அமைதி, இயற்கை வளம், சொத்துகள், பொருளாதாரம் என அனைத்தையும் சீரழித்து விடுகிறது. இதனால் வறுமை, பசி, பட்டினி, உள்நாட்டு குழப்பம், உறுதியற்ற தன்மை, அகதிகளாக இடப்பெயர்வு என போருக்கு உள்ளாகும் நாடு ஒன்றும் இல்லாமல் வெறுமையாக்கி விடப்படுகிறது. இந்நாடுகள் மீண்டெழுந்து இயல்பு நிலைக்கு திரும்ப பல்லாண்டுகள் தேவைப்படுகின்றன.

மிக அண்மையில் நடந்து முடிந்த வளைகுடாப் போர்கள், ஆப்கானித்தானம் மீதான போர், ஈராக்கு மீதான போர், சிரியா மீதான போர், பாலத்தீனம் மீதான போர் , தமிழீழம் மீதான போர் என பல நாடுகளின் மீது நிகழ்த்தப்பட்ட வன் போர்களின் முடிவினை இன்றைய தலைமுறையினர் கண்கூடாக அறிந்திருக்கிறோம்.

உலக அணு வல்லரசு நாடுகள் ஒன்று சேர்ந்து தமிழீழ நாட்டின் தமிழ் மக்கள் மீதான முற்றான இன அழிப்பு போரினை மேற்கொண்ட போது உலக சமூகங்கள் வாய் மூடி மௌனித்து நின்றன.

தமிழீழ நாட்டை நிறுவிய தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களையும் தங்கள் நாட்டு மக்களையும் தற்காத்துக் கொள்ள தற்காப்புப் போரில் ஈடுபட்ட போது எதிரணியின் இராணுவ நிலைகள் மீதும், படை முகாம்கள் மீதும் மட்டும் தமது தற்காப்புத் தாக்குதல்களை தொடுத்தார்களே அன்றி சிங்கள நாட்டு சாதாரண குடிமக்கள் போரில் பாதிக்கப்படக் கூடாது என்கிற உயரிய போர் அறத்தை கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அவ்வாறே போராடி தம் உயிரையும் துறந்து காவியமான வரலாற்றையும் நடுநிலையோடு ஆராய்பவர்கள் அறிவார்கள்.

உலகெங்கும் நடக்கும் போர்களின் கொடூர முகத்தை அவ்வப்போது சில புகைப்படங்கள் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. வியட்நாம் மீதான ஆக்கிரமிப்பு போரின் போது குண்டுவீச்சிலிருந்து காயங்களுடன் தப்பித்து ஆடையின்றி அழுது கொண்டே ஓடி வரும் சிறுமியின் புகைப்படம், ஈராக்கு மீதான ஆக்கிரமிப்பு போரில் குண்டுவீச்சில் சிதிலமடைந்த கட்டிட இடிபாடுகளில் அழுதுகொண்டே தம் பெற்றோரை தேடும் சிறுவனின் புகைப்படம், தமிழீழப்போரின் போது சிறுவன் பாலச்சந்திரன் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிர் துறந்து கிடக்கும் நிலையில் வெளியான புகைப்படம், ஆப்கானித்தானம் மீதான ஆக்கிரமிப்பு போரில் தரைமட்டமான தம் குடியிருப்பின் முன்னால் அழும் சிறுமியின் புகைப்படம் , சிரியாவின் மீதான ஆக்கிரமிப்பு போரில் தப்பிச் செல்ல முனையும் போது படகு மூழ்கி உயிரிழந்து கவிழ்ந்த நிலையில் இருக்கும் சிறுவனின் புகைப்படம் உள்ளிட்டவை யாவும் இந்த மனித சமூகத்தின் மூளையில் ஓங்கி ஒலிக்கவில்லையா? இன்னொரு போர் வேண்டாம் என்று சொல்லவில்லையா? போரின் கொடூரத்திற்கு இன்னும் எத்தனை பிஞ்சுகளை பலி வாங்கப் போகிறீர்கள்? என்ற வினாக்களுக்கு இந்த அறிவார்ந்த மனித சமூகத்திடம் மறுமொழி இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

முதலாளித்துவ நாடுகள்தான் இப்போரினை முன் நடத்துகின்றன , சர்வாதிகாரிகளும், கொடுங்கோலாட்சி நடத்தும் நாடுகளும் இத்தகைய போர் நடவடிக்கையில் இறங்குகின்றன என எவ்வகையிலான வாதத்தையும் புறக்கணிக்க வேண்டும். இது வளர்ச்சியடைந்த அறிவார்ந்த மனித சமூகம் தனது சக மனித சமூகத்தின் மீது பேரளவில் நிகழ்த்தும் கொடுங்குற்றச்சாட்டாக மனித்தன்மை அற்ற செயலாக முன்வைக்க வேண்டும்.

பழந்தமிழகத்தில் அதியமான், தொண்டைமான் இளந்திரையன் ஆகிய இரு மன்னர்கள் அவர்களின் இரு நாட்டுக்கும் நடக்க இருந்த போரை தூது சென்று கொடிய போர்களின் கோரமுகத்தை எடுத்துரைத்து போரை தடுத்து நிறுத்திய செய்த ஔவையார் என்னும் பெண்பாற் புலவர் வாழ்ந்த தமிழ்மண் என்கிற பின்புல அடிப்படையில் உலகெங்கும் சாதாரண மக்கள் மீது நடக்கும் வெளிப்படையான ஆக்கிரமிப்பு போருக்கு எதிராக நம் தமிழ்க்குரலை உயர்த்துவோம். "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்கிற மாந்தநேய அடிப்படையில் போருக்கெதிராய் கைகோர்ப்போம்.

இன்றைய இளம் குழந்தைகள் நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ வேண்டுமானால் "கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்" என்ற பாவேந்தரின் முழக்கத்தை முன்னெடுப்போம்.

போர் ஒழிப்பிற்கும் உலக அமைதிக்கும் தன் வாழ்நாள் முழுவதும் போராட்டக் குரல் எழுப்பிய இந்தியாவின் முதல் பொதுவுடைமையாளர் தோழர் சிங்காரவேலர் அவர்கள் தான் இறக்கும் தருவாயில் முழங்கிய "போரில்லாத இவ்வுலகத்தில் அமைதி தவழட்டும்" என்கிற அறைகூவலே இன்றைய தலைமுறையினர் நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டிய முதன்மை முழக்கமும் ஆகும்.

- அசுரன் வேணுகோபால், எண்ணூர்

Pin It