அண்மைக் காலமாய் உரத்து ஒலிக்கும் சொல்லாடல் இறையாண்மை. இறையாண்மை என்பதன் உண்மைப் பொருளறிய விழையா நிலையில் அது குறித்து தேனீர்க்கடை பொழுதுபோக்கிகள் முதல் அறிவாளி அரசில்வாதிகள் வரை பேசத் தயங்குவதில்லை. நமது நாட்டின் இறையாண்மை, அண்டை நாட்டின் இறையாண்மை என்ற இவர்களின் தொடர் முழக்கத்தில், சாமானியர்களுக்கு அது ஏதோ கேள்வி கேட்கக்கூடாத, சர்வ வல்லமை கொண்ட ஜந்துவாகவே தெரிகிறது. சரி, இறையாண்மை என்பதுதான் என்ன?

Rajapakse and Manmohan Singhஇயற்கையாய் அமைந்த உண்மை தேசங்கள், தன் நலன் காக்க பயன்படுத்தும் தன்னகத்தே அமைந்த அதிகாரமும், உரிமையுமே இறையாண்மை. இங்கு இயற்கையாய் அமைந்த உண்மை தேசம் என்ற சொற்றொடர் ஆழ்ந்த பொருள் கொண்டது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தேசங்களல்ல. இந்தியா உட்பட. நாடு கூடி முன்னேறுவதற்கான ஒரு ஏற்பாடு. பெரும்பான்மை நாடுகள் தேசிய இனங்களின் கூட்டாக உள்ளன. தேசிய இனங்களுக்கிடையே சுரண்டல்கள் இல்லாதவரை ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் அமைதி நடைபோடுகின்றது. பேரினவாத உணர்வு ஒரு நாட்டின் இருப்பை கேள்விக்குறியாக்குகிறது. அத்தகையச் சூழலில் சிறுபாண்மை தேசிய இனத்திற்கெதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவது தான் இந்த இறையாண்மை என்ற கற்பிதம்.

இலங்கையில் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய இன அழிப்பை வசதியாய் மூடி மறைக்கவும், நியாயம் கற்பிக்கவும் அந்த நாட்டாலும் இந்தியாவாலும் பயன்படுத்தப்பட்டு வரும் அதிசய அஸ்திரம் இவ்விறையாண்மையே. இறையாண்மை என்ற நவீன அரசியல் கற்பிதத்தின் அபத்தப் பயன்பாட்டை இலங்கை மற்றும் இந்திய நாடுகளின் மேலேற்றிப் பார்ப்பது பலரின் தலைக்கேறிய பித்தத்தைத் தணிக்க உதவும்.

நாடு மக்களுக்கானது என்பதே ஒரு நாட்டின் அடிப்படை. மக்கள் நலனை காப்பது என்பதிலேயே நாட்டின் இருப்பு அமைந்துள்ளது. அங்கத்தினர் அனைவரும் இது என் நாடு என்று உணருமளவிற்கு ஒரு நாடு தன் மக்களின் மீதான நலனை விருப்பு வெறுப்பின்றி எந்த பேதமுமின்றி பேண வேண்டும். குறிப்பாக இனம், மொழி மற்றும் பண்பாடு போன்ற தேசியக் காரணிகள் சார்ந்த ஒதுக்கல் அல்லது முன்னுரிமைப் போக்கு ஒரு நாட்டின் அடிப்படையை வலுவிழக்கச் செய்யும். இலங்கையில் நிகழ்வது இதுவே. பூர்வகுடி தமிழினத்தின் தேசியக் காரணிகள் மற்றும் வளமையை திட்டமிட்டு ஒடுக்கவும் அழிக்கவும் முற்படும் சிங்களப் பேரினவாதம் சிறுபான்மை தமிழினத்தை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் சென்றுள்ளது. அமைதி வழியை விடுத்து ஆயுதப்போராட்டத்திற்கு கட்டாயப்படுத்தியதோடு, அப்போராட்டத்திற்கு பயங்கரவாத முத்திரை குத்தி ஒட்டுமொத்த உலகநாடுகளின் துணைகொண்டு ஒரு இனத்தையே அழிக்கும் நோக்கில் சிங்களப் பேரினவாத அரசு செயல்படுகிறது.

இலங்கையில் இன்றையச் சூழலை உற்றுநோக்கும் பொதுநோக்கர்களுக்கு ஈழத்தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் சிங்களப் பேரினவாதிகளின் சாதுரிய திட்டமிடலால் அனைத்துலக நாடுகளை முட்டாளாக்கி இருட்டடிப்புச் செய்யப்பட்டதுடன் மீண்டும் தமிழர்கள் அடிமைத்தளைக்குக் கொண்டு செல்லப்படுவதும் புலப்படும். விடுதலைப்புலிகளும் அவர்களைப் பற்றிப் பேசுபவர்களும் தீவிரவாதிகள் என்ற எளிய சமன்பாட்டை உலகின் பொதுபுத்திக்குள் புகுத்த சிங்கள அரசுகள் கடினப்பட்டதேயில்லை. அதற்கு அவர்களுக்குக் கைகொடுத்தக் கற்பிதம் இறையாண்மை. இதோ பாருங்கள் ! விடுதலைப்புலிகள் எங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுகின்றனர். நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்கின்றனர். தனி நாடு கேட்கின்றனர் என அவர்கள் போட்ட கூப்பாடு அநியாயத்தின் மேல் கட்டப்பட்ட பல நாடுகளின் செவிகளுக்கு நியாயமாகவே பட்டது. ஏனெனில், எல்லா நாடுகளும் இறையாண்மை என்ற இன்மையை அடக்குமுறைக் கருவியாகவே பயன்படுத்தி வந்துள்ளன. இன்னொரு தேசிய இனத்தை ஒடுக்கவோ அல்லது தான் விரும்பாத நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடவோ இறையாண்மை ஏதுவாயுள்ளது.

இலங்கையில் நடைபெற்றுவரும் நெடிய போர், அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி தமிழர்களின் இலக்காண தனித் தாயகத்தை அடைய இயலாத நிலைக்கு இலங்கை மற்றும் இந்தியாவின் இறையாண்மை பிதற்றலே காரணமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்ற முறையில் இலங்கையின் இறையாண்மை (அவ்வாறு ஒன்றிருந்தால்) சிங்கள, தமிழ் மற்றும் தமிழ் இஸ்லாமியர்களின் இறையாண்மையின் கூட்டேயாகும். ஒவ்வொரு தேசிய இனத்திற்கும், அது எண்ணிக்கையில் எவ்வாறு இருந்தாலும் அதற்கான இறையாண்மை பிற இனங்களின் இறையாண்மைக்கு இணையாக உள்ளது என்பதே உண்மை. மக்களே நாட்டிற்கு அடிப்படை என்ற முறையில் நாட்டின் இறையாண்மை என்பது மக்கள் அல்லது தேசிய இனங்களின் இறையாண்மையே. இலங்கையின் இறையாண்மை என்பதை சிங்கள மக்களின் இறையாண்மை என தவறாக புரிந்துகொண்டதன் விளைவே இன்றைய சிக்கலின் ஊற்றுக்கண்.

சிங்களப் பேரினவாதம், தமிழர்களின் உணர்வுகளை மதித்ததற்கான சான்றுகள் மிகக்குறைவு. தன்னுரிமைக்காகப் போராடியபோதெல்லாம் தமிழர்கள் சந்தித்தது சாவையும் பேரிழப்பையும்தான். தன் மண்ணில் பிறருக்குத் தாழ்ந்த நிலையில் வாழ்வதையும், வாழ நிர்ப்பந்திக்கப்படுவதையும் மானமுள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள இயலாது. அடக்குமுறையின் எதிர்வினையாக வெடித்த ஈழப்போராட்டம் பேரிழப்புகளுக்குப்பின் ஒடுக்கப்படும் நிலையில் உள்ளது.

இந்தியா தன் அங்கத்தினர்களான தமிழகத்தமிழர்களின் தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழனின் இறையாண்மையை அழிக்க தன்னாலியன்ற அனைத்து உதவிகளையும் சிங்களனுக்குச் செய்கிறது. இலங்கை மற்றும் இந்தியாவின் இறையாண்மையை காக்கும் நோக்கமே இதற்கான காரணமாக முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு சப்பைக்கட்டே என்றாலும், தமிழீழப்போராட்டத்தின் முதுகெலும்பான விடுதலைப் புலிகளை சில நியாயமற்ற காரணங்களுக்காக அழித்து ஈழத்தமிழர்களின் குரல்வளையை நெரிப்பதும் அதன்மூலம் இந்திய நாட்டின் தமிழர்களை ஆண்மையிழக்கச் செய்து அடிமை கொள்வதுமே வடவர்களின் உள்ளக்கிடக்கை. இங்கிருக்கும் கழைக்கூத்தாடிகள் இன, மொழி மற்றும் பண்பாட்டு உணர்வின்றி மக்கட்பண்பு சிறிதுமின்றி தன்னலத்திற்காக சோரம் போகின்றனர் என்பதே வெட்கக்கேடு.

இறையாண்மை குறித்த சரியான புரிதலிருந்தால், இந்தியா ஈழத் தமிழர்களின் இறையாண்மையை மீட்டுத்தர பாடுபட்டிருக்க வேண்டும். எதையும் தனிமனிதன் மற்றும் இயக்கத்தின் மேலேற்றிப் பழகிப்போன அரசியற்கோமாளிகள் ஒரு இனத்தின் நியாயமான கோரிக்கையை ஒட்டுமொத்தமாய்ப் புறந்தள்ளி அவர்களை அழித்தொழித்தாவது தங்களின் தீர்வை திணிக்க முயற்சிக்கின்றனர். இந்தியா என்ற தெற்காசிய வல்லரசின் ஆட்சியாளர்கள் தாம் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாய் கற்பிதம் செய்துகொண்டு இனவெறி அரசுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குகின்றனர். தன் கையைக் கொண்டே தன் கண்களைக் குத்திக்கொள்வது போல், தமிழகத்தமிழர்களின் தயவால் ஆட்சியிலிருந்து கொண்டே ஈழத்தமிழர்களை அழித்து அடிமையாக்கி விட்டனர். பல தலைமுறையாய் காயடிக்கப்பட்ட தமிழகத்தமிழர்கள் சராசரி சிங்களவனின் குரலாகவும், தமிழகத்தை ஆள்வோர் ராசபக்சேவின் குரலாகவும் ஒலிக்கின்றனர். இல்லாத இந்திய தேசியத்திற்காக பரிந்து பேசவும், இறையாண்மை குறித்து கவலைப்படவும் ஏராளமானோர் அணி திரள்கின்றனர்.

துரோகமும், நயவஞ்சகமும் ஒரு இனத்தை காவு கொண்டு விட்டது. மானமுள்ள வாழ்வா இல்லை மரணமா என்றவற்றில் எத்தனை ஆயிரம் பேர் இந்த உலகைவிட்டு வெளியேறி விட்டனர். இருப்பது ஒரு உயிர். எப்படியும் 85 ஆண்டுகட்கு மேல் அரியணைக்காக வாழ்வதைவிட பிறக்கும் முன்னே இறப்பது மேல் என இறந்து கிடக்கும் ஈழக்குழந்தையின் சூத்தில் தெரிகிறது இந்தியா மற்றும் இலங்கையின் இறையாண்மை.

-ஏ.அழகியநம்பி(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It