Nallakannuஈழப்பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் காரணமாக அதிருப்தியில் இருக்கும் பலர் ஒட்டுமொத்தமாக இந்த அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும் என்ற உணர்வுகளை எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில் இருக்கும் இரு பெரும் அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக போன்றவற்றின் செயல்பாடுகள் இந்தப் பிரச்சனையில் அதிருப்தியை ஏற்படுத்தியது ஒரு புறம் என்றால் பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளின் செயல்பாடுகளிலும் பெரிய ஆரோக்கியம் இல்லை. தேர்தலுக்கு ஒரு கூட்டணி, ஈழத்திற்கு ஒரு கூட்டணி என்று எந்த வகையிலும் ஈழமக்களுக்கு உதவாத சந்தர்ப்பவாத நிலைப்பாட்டினை தான் இந்த சிறிய கட்சிகள் எடுத்திருக்கின்றன. எனவே இந்த அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். அதற்கு தேர்தல் புறக்கணிப்பு ஒன்றே சரியானதாக இருக்கும் என்ற கருத்தை தமிழகத்தில் பலர் முன்வைத்து வருகின்றனர். இன்றைக்கு உள்ள சந்தர்ப்பவாத கட்சிகளின் போக்கினால் அத்தகைய எண்ணம் எழுந்தது. தவிரவும், ஓட்டு அரசியல், மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை புறந்தள்ளுவதும் இந்த எண்ணம் வலுப்பெற்றதற்கு காரணம்.

ஆனால் இது சரியானது தானா? நடைமுறையில் இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பன போன்று யோசித்தவைகளை முன்வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

தேர்தல் அரசியலை மறுக்கும் போக்கு தமிழகத்திற்கு ஒன்றும் புதிது அல்ல. திராவிடர் கழகம் தேர்தலை மறுத்து வந்த இயக்கம் தான். திராவிட முன்னேற்ற கழகத்தை பேரறிஞர் அண்ணா துவக்கியதற்குக் காரணம் கூட இந்த கொள்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தான் என்பதை நாம் அறிவோம். திராவிடர் கழகம் தவிர தற்பொழுது அரசியலில் இருக்கும் கட்சிகளான பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவையும் தேர்தல் அரசியலை ஆரம்பகாலங்களில் மறுத்து வந்தன. இவை தவிரவும் தமிழகத்தில் இருக்கின்ற பல இடதுசாரி அமைப்புகள் தொடர்ந்து தேர்தல் அரசியலை மறுத்து வருகின்றன. தேர்தல் அரசியல் சந்தர்ப்பவாத சூழ்நிலையை ஏற்படுத்துவது தான் இதற்குக் காரணம் என்பது ஒரு முக்கியமான உண்மை. மக்களின் உண்மையான பிரச்சனைகள் புறந்தள்ளப்பட்டு வாக்கு வங்கி அரசியல் தான் இந்தக் கட்சிகளின் குறிக்கோளாக உள்ளது. இந்த வாக்குவங்கியை தக்க வைக்க மக்களிடையே சாதி, மத ரீதியிலான பிளவுகளை இந்தக் கட்சிகள் உருவாக்குகின்றன.

தற்போதைய தமிழக அரசியலிலும் கூட தங்களின் அரசியல் எதிர்காலம் கருதி இந்தக் கட்சிகள் எடுத்துள்ள சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளால் தான் இன்றைக்கு இந்தியா சிறீலங்கா அரசாங்கத்திற்கு எவ்வித தயக்கமும் இல்லாமல் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அவ்வாறான சூழ்நிலையில் நாம் ஏன் இத்தகையை சந்தர்ப்பவாத அரசியலை ஊக்குவிக்க வேண்டும், இந்தக் கட்சிகளை ஏன் புறந்தள்ளி நம் எதிர்ப்பை வெளிப்படுத்தக்கூடாது என்ற எண்ணம் எழுவது மிகவும் இயல்பானதே.

சித்தாந்தங்களைச் சார்ந்த பார்வைக்கு இது சரியாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமற்றது. காரணம் இந்தியாவில் ஜனநாயகம் என்பது தேர்தல் ஜனநாயகம் தான். தேர்தல் நடப்பது தான் இங்கே ஜனநாயகம். எனவே நாம் புறக்கணிப்பதால் தேர்தல் நடக்காமல் இருக்காது. நிச்சயமாக நடக்கும். கட்சிகளும் போட்டியிடாமல் இருக்காது. நிச்சயமாக போட்டியிடும். நம்மைப் போன்றவர்கள் ஓட்டளிக்காவிட்டாலும் பெருவாரியான மக்கள் ஓட்டளிப்பார்கள். ஏனெனில் தேர்தல் என்பது இந்தியாவில்/தமிழகத்தில் ஒரு கொண்டாட்டம் போன்றதே. தேர்தலுக்கும், திருவிழாவிற்கும் நம் மக்களுக்கு பெரிய வேறுபாடுகள் இல்லை. திருவிழாவில் மக்களின் கைப்பணம் செலவாகும். தேர்தலில் கைக்கு காசு கிடைக்கும். திருமங்கலம் தேர்தல் அதைத் தான் வெளிப்படுத்திக் காட்டுகிறது. எனவே இத்தகைய தேர்தல் கொண்டாட்டங்களில் மக்கள் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளவே செய்வார்கள். மக்களின் இத்தகைய போக்கு தான் பல இடதுசாரி இயக்கங்கள் செய்து வந்த தேர்தல் மறுப்பினை தோல்வி அடைய செய்திருக்கிறது. இதனை அந்த அமைப்புகளே கூட ஒப்புக் கொள்வார்கள்.

ஈழத்தின் மேல் அக்கறை கொண்ட மக்கள் தேர்தலை புறக்கணிக்கும் பொழுது அது திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கே சாதகமாக அமைந்து விடும். இந்தக் கட்சிகள் தங்களுடைய வாக்கு வங்கி கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று விடும். அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி இவர்களின் கைகளுக்குச் சென்று விடும். நம்முடைய தேர்தல் புறக்கணிப்பு மறக்கடிக்கப்பட்டு விடும். இன்று மக்கள் மனதில் எரியும் ஈழப்பிரச்சனை அணைந்து போய் விடும். அதைத் தான் இந்திய அரசாங்கமும் எதிர்பார்த்து இருக்கிறது.

இதைத் தானா நாம் விரும்புகிறோம்?

மேலே நான் கூறியது ஏதோ கற்பனை அல்ல. நிகழ்காலத்திலும் நடந்து இருக்கிறது. அதிகம் அல்ல. சில மாதங்களுக்கு முன்பு இத்தகைய ஒன்று காஷ்மீரில் நடந்தது. தமிழகத்தில் தற்பொழுது இருந்ததைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான எழுச்சி கொண்டு காஷ்மீர் மக்கள் காஷ்மீரின் விடுதலையை முன்னெடுத்தனர். இந்த எழுச்சி இந்திய அரசையே அச்சப்படுத்தியது. ஆனால் இத்தகையப் பிரச்சனைகளை காலம் கடத்தினால் நீர்த்துப் போக செய்ய முடியும் என இந்திய அரசுக்கு தெரியும். எனவே சில அடக்குமுறைகளைப் பிரயோகித்து அடக்கி ஒடுக்கியது.

அடுத்த சில மாதங்களில் தேர்தல் வந்தது. காஷ்மீர் மக்களின் மத்தியில் அதிக ஆதரவு பெற்ற ஹூரியத் மாநாட்டுக் கட்சி இந்திய அதிகாரத்தை மறுத்து வந்த காரணத்தால் தேர்தலில் போட்டியிடவில்லை. ஹூரியத் இந்திய அதிகாரத்தை எதிர்த்து வரும் நிலையில் இந்திய அரசாங்கம் நடத்தும் தேர்தலில் போட்டியிடுவது சித்தாந்த ரீதியாக தவறாக இருந்தது. எனவே கடந்த பல தேர்தல்களில் கூறியது போலவே தேர்தலைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்தது. ஹுரியத் கூட்டணியின் அந்த நிலைப்பாடு இந்தியாவிற்கு சாதகமாக மாறி விட்டது. இந்திய தேசியத்திற்கு ஆதரவான கட்சிகள் மட்டுமே போட்டியிட்ட தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களித்ததாக இந்தியா கூறுகிறது. அதிக அளவில் மக்கள் வாக்களித்ததால் இந்திய தேசியத்தை காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டதாக கூறுகிறது.

இந்திய அதிகாரத்தை எதிர்த்து காஷ்மீரில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் அடுத்த சில மாதங்களிலேயே இந்தியாவின் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டது என்பது நம்புவதற்கு நமக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் அப்படி தான் உலகம் நம்புகிறது. இன்றைக்கு காஷ்மீரின் எழுச்சி மறைந்து போய் விட்டது. இனி மேல் அத்தகைய எழுச்சி வருமா என்பது சந்தேகமே. அது தான் இந்தியாவிற்கு தேவை. காலம் கடத்தினால் எல்லாம் சரியாகி விடும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு எல்லா இடங்களிலும் இப்படி தான் வேலை செய்கிறது.

தமிழகமும் தேர்தலை புறக்கணித்தால் இது தான் நடக்கப் போகிறது. ஒரு வேளை காங்கிரஸ்-திமுக வெற்றி பெற்றால் தமிழக மக்கள் ஈழப் போராட்டத்தை நிராகரித்து விட்டார்கள் என கூறுவார்கள். அதிமுக வெற்றி பெற்றாலும் அதையே தான் கூறுவார்கள். எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், தோல்வி என்னவோ நமக்கு தான். மாறாக தற்போதைய மக்கள் எழுச்சியை அரசியல் சக்தியாக மாற்றினால் இந்தியாவை தமிழகம் நோக்கி திரும்பி பார்க்க செய்யலாம். ஈழமக்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை உண்டாக்கலாம்.

மாற்றம், மாற்றம் என கூறுகிறோம். ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியம்? அப்படி ஒரு சாத்தியம் இருந்தால் தேர்தல் புறக்கணிப்பு அவசியம் இல்லையே என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு. இன்றைய தமிழக அரசியல் சூழலில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை ஒரு மாற்று அரசியல் இயக்கமாக முன்வைப்பதிலும், அந்த மாற்று அரசியல் ஆரோக்கியமற்றதாக உள்ளதாகவும் நிலவும் கருத்துக்கள் உண்மையே. பாமக, மதிமுக போன்ற கட்சிகள் எடுத்த சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள் அந்தக் கட்சிகளை மாற்று கட்சிகளாக நம்மை பார்க்க விடுவதில்லை.

இன்றைக்கு நாம் மாற்று கூட்டணி நோக்கி அழைக்கும் கட்சிகள் - பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையே.

பாமக தமிழர்களின் முதல் எதிரியாக இருக்ககூடிய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் மைய அரசில் தன்னுடைய மகன் அன்புமணியை அமைச்சராக்கி இருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இந்தக் கூட்டணியை விட்டு வெளியே வந்தால் தன்னுடைய அரசியல் எதிர்காலமும், தன்னுடைய மகனின் மைய அமைச்சர் பதவியும் பறி போய் விடுமோ என்ற சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்காக இந்தக் கூட்டணியை விட்டு வெளியே வர ராமதாஸ் இது வரை முன்வரவில்லை. வெகு சமீபத்தில் கூட சோனியா காந்தியை சந்தித்து விட்டு பேச்சு திருப்தி அளிப்பதாகக் கூறி இன்னும் தான் காங்கிரஸ் கூட்டணியில் தான் இருக்கிறேன் என ராமதாஸ் வெளிபடுத்தியிருக்கிறார். அது தவிர தன்னுடைய அரசியல் எதிர்காலத்திற்காக எந்தக் கூட்டணிக்கும் தாவக்கூடியவர். திமுகவின் குடும்ப அரசியல் போலவே தன்னுடைய குடும்பத்தை அரசியல்களில் நுழைத்து இருக்கிறார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழர்களின் மற்றொரு எதிரியாக இருக்ககூடிய ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறார். அந்தக் கூட்டணியை விட்டு வெளியே வர இவரும் இது வரையில் முன்வரவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமா திமுக கூட்டணியில் இருக்கிறார். ஆனால் ராமதாஸ், வைகோ போல அல்லாமல் தன்னுடைய நிலைப்பாட்டில் மிக தெளிவாகவே இருந்து வந்திருக்கிறார் என்பதும், அனைத்து தமிழர் கட்சிகளையும் ஒன்றிணைக்க தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் என்பதும் இவருடைய சமீபத்தைய பேட்டியை கவனித்தவர்களுக்குப் புரியும். எனவே மற்ற இரு கட்சிகளுடன் ஒப்பிடும் பொழுது திருமா ஒன்றும் சந்தர்ப்பவாதியல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பிரிவு ஈழப்போராட்டங்களில் ஈடுபட்டாலும் அதன் அகில இந்திய தலைமை இதுவரை ஒரு தெளிவான முன்னெடுப்பை செய்யவில்லை. தற்பொழுது இக் கட்சி ஜெயலலிதா தலைமையிலான கூட்டணியில் இருக்கிறது

Tha.pandianஆக மாற்று கட்சிகளாக முன்வைக்கப்படும் அனைத்து கட்சிகளும் தமிழர்களின் எதிரிக்கட்சிகளிடம் கூட்டணி அமைத்திருக்கின்றனர். இவர்கள் ஈழப்பிரச்சனைக்காக மட்டுமே அமைத்திருக்கிற இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் மட்டும் ஈழப்போராட்டத்தை முன்வைக்கின்றனர். இத்தகைய சூழலில் இந்தக் கட்சிகளுக்கும் திமுக, அதிமுகவிற்கும், காங்கிரசுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை உள்ளது.

இந்தக் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது என்பதை மறுக்க முடியாத அதே நேரத்தில் பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் ஈழப்போராட்டம் சார்ந்த தங்களுடைய நிலைப்பாட்டில் இது வரை எந்த சமரசமும் செய்து கொண்டதில்லை என்பதையும் கவனிக்க முடியும். ஈழத்தமிழர்களுக்குத் தீர்வு தமிழ் ஈழம் மட்டுமே என்பதிலும் ஈழத்தமிழர்களுக்கு விடுதலைப் புலிகளால் மட்டுமே பாதுகாப்பு கிடைக்கும் என்பதையும் இந்தக் கட்சிகள் எந்த தருணத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை. திமுக போல காலத்திற்கு காலம் ஈழப்போராட்டத்தில் தங்கள் கொள்கைகளை இந்தக் கட்சிகள் சமரசம் செய்து கொண்டதில்லை. அதனால் தான் தற்போதையை ஈழப் போராட்டம் சார்ந்த சூழலில் மாற்றத்திற்காக இந்தக் கட்சிகளை நாம் எதிர்நோக்கி இருக்கிறோம்.

தமிழகத்தில் வைகோவின் ஈழப்போராட்ட நிலைப்பாடு அனைவரும் அறிந்ததே. அவரின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டிற்காக ஒரு ஆண்டு காலம் ஜெயலலிதாவால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த சூழ்நிலைக்குப் பிறகும் கூட ஈழப்போராட்டத்தில் அவர் எந்த சமரசங்களையும் செய்து கொண்டதில்லை. ஆரம்பகாலம் தொடங்கி இன்று வரை ஈழத்தமிழர்களின் வாழ்வில் அக்கறை கொண்டிருக்கிற தலைவர்களில் வைகோ முதன்மையானவர். இது தவிர தமிழர் நலனில் அக்கறை கொண்ட நல்ல தலைவர். தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் சக்தியாக வளர்ந்திருக்க வேண்டிய வைகோ, தன்னுடைய உணர்ச்சிப்பூர்வமான நிலைப்பாடுகளால் அரசியல் வாழ்வை சிதைத்துக் கொண்டவர். தன்னுடைய அரசியல் வாழ்வை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய சூழலில் தான் இன்று தன்னை ஒரு வருடம் சிறையில் அடைத்த ஜெயலலிதாவின் அணியில் இருக்க வேண்டிய அவல நிலையில் உள்ளார். உணர்ச்சிகளைக் குறைத்து, சூழ்நிலைக்கு ஏற்ற மதிநுட்பத்துடன் செயலாற்றி இருந்தால் ஒரு நல்ல தலைவராக கருணாநிதியைக் கடந்து சென்றிருக்க முடியும்.

இன்றைக்கு காங்கிரஸ் கட்சியுடன் தோழமை பாராட்டும் பாமகவை கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஒரு தீண்டத்தகாத கட்சியாகவே கருதியது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக போன்ற கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சியும் தேர்தலை சந்தித்த சூழ்நிலையில் எங்களுடைய கூட்டு திமுகவுடன் மட்டுமே, பாமக உடன் அல்ல என காங்கிரஸ் கூறியது. இதற்குக் காரணம் பாமகவின் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழ ஆதரவு நிலைப்பாடுகளே. 1991க்குப் பிறகு விடுதலைப் புலிகளைப் பற்றி பேசவே முடியாத சூழ்நிலையில் 1992ல் சென்னையில் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை நடத்திய பாமக அப்பொழுது தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக கோரிக்கைகளை எழுப்பியது. இதனால் பாமகவை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை எழுப்பியது. தமிழக சட்டமன்றமே பாமகவை தடை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. ஒரு அரசியல் கட்சி இந்தியாவில் இது வரை தடை செய்யப்படவில்லை என்ற ஒரே காரணத்தால் பாமக தடையில் இருந்து தப்பித்தது. இவ்வாறு ஈழப்பிரச்சனையில் பாமகவின் நிலைப்பாடு சமரசங்கள் இல்லாமல் தான் இருந்து வந்துள்ளது.

அரசியல்வாதிகளை சந்தர்ப்பவாதிகள் என கூறும் தமிழக மக்கள் தங்களையே கேட்டுக் கொள்ள வேண்டியது ஒரு கேள்வி உண்டு. திருமா போன்ற ஒரு தலைவரை எப்படி ஒரு சாதித்தலைவர் என்று உங்களால் பார்க்க முடிகிறது? திருமா தலித் மக்களின் விடுதலையை முன்னெடுத்த தலைவர் என்றளவில் இருந்தாலும் ஒட்டுமொத்த தமிழினத்தையே வழி நடத்தக்கூடிய ஒரு தலைவராக அவரிடம் குண நலன்கள் இல்லையா? கடந்த தேர்தலில் ஜெயலலிதாவிடம் கூட்டணி அமைத்துக் கொண்டது தவிர அவர் வேறு என்ன சந்தர்ப்பதவாத அரசியலை செய்தார்? அதுவும் கூட கருணாநிதியின் விட்டுக்கொடுக்காத மனப்பான்மை தான் திருமாவை ஜெயலலிதாவிடம் கொண்டு சேர்த்தது என்பதை மறக்கமுடியுமா? இன்றைக்கு இருக்கின்ற அனைத்து தலைவர்களைக் காட்டிலும் திருமாவளவன் தான் கொண்ட லட்சியங்களுக்காவும், கொள்கைகளுக்காவும் திருமணம் கூட செய்து கொள்ளாமல் தன்னை அர்பணித்துக் கொண்டவர். இவரை விட ஒரு சிறந்த தலைவரை நாம் பார்க்க முடியாது. ஆனால் தமிழக மக்கள் அவரை மறந்து விட்டு வேறு ஒரு தலைவருக்காக தேடி அலைந்து கொண்டிருகிறோம்.

தமிழக கட்சிகளின் நிலை இவ்வாறு என்றால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சியும் இம்முறை ஈழ மக்களின் இன அழிப்பை உறுதியாக எதிர்த்து வந்திருக்கிறது. அக் கட்சியின் தலைவர் தா.பாண்டியன் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பொழுது காயம் அடைந்தவர்களில் ஒருவர். தமிழக காங்கிரஸ் கட்சியின் அடிமைக் கூட்டங்கள் போல அவர் தனக்கு நேர்ந்த பாதிப்புகளுக்காக ஒரு இனத்தையே கொன்று குவிக்க ஆதரவு கொடுக்கவில்லை. ஒரு இனத்தின் அழிவை ஏற்றுக் கொள்ள மறுத்து போராட்டத்தில் இறங்கினர். தா.பாண்டியன், நல்லக்கண்ணு போன்ற நல்ல தலைவர்களைக் கொண்ட கட்சியாகவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் சிறிய கட்சிகளாக இருந்த நிலையில் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தை தக்கவைக்கவே அதிமுக, திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை நேரிட்டுள்ளது. அப்படியான சூழ்நிலையில் கூட ஈழப்போராட்டத்திற்கான தங்களுடைய நிலைப்பாட்டில் இந்தக் கட்சிகள் எவ்வித சமரசங்களையும் செய்து கொண்டதில்லை. எனவே தான் இந்தக் கட்சிகளை நாம் தற்போதைய ஈழபோராட்டம் சார்ந்த சூழ்நிலையில் ஒரு மாற்று அணியினை அமைக்க அழைக்கிறோம். அந்த மாற்று அணி ஈழத்தமிழர் நலன் சார்ந்தது மட்டுமல்ல. தமிழக அரசியல் நலன் சார்ந்ததும் கூட. ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் அரசியலால் இழந்த தமிழர் அரசியலை மீட்கும் அரசியலாகவும் இது அமையும்.

இந்தக் கூட்டணிக்கு யார் தலைமை என்பதும், எந்தக் கட்சி தலைமை வகிக்கும் போன்ற கேள்விகளும் எழுந்து வருகின்றன. கூட்டணி அரசியல் என்பது இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து சாத்தியமாகி வருகிறது. கூட்டுத்தலைமை என்பதும் சாத்தியமான ஒன்று தான். மேற்குவங்காளத்திலும், கேரளாவிலும் உள்ளது போன்று தொடர்ச்சியான தமிழர் நலம் சார்ந்த கூட்டணியாக இந்தக் கூட்டணி செயல்பட முடியும். பழ.நெடுமாறன், தா.பாண்டியன், நல்லக்கண்ணு போன்ற தலைவர்கள் பொதுவான தலைவர்களாக இந்தக் கூட்டணியை வழிநடத்த முடியும். தவிரவும், தற்போதைய பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி தான் தேவையே தவிர தலைமை என்பது அவசியம் இல்லாதது. கூட்டுத்தலைமையை முன்வைக்கலாம்.

எல்லாம் நன்றாகத் தான் உள்ளது. ஆனால் இந்தக் கட்சிகள் இதற்குத் தயாராக இருக்கின்றனவா? இருக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தலைவர்களிடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் நாம் இதனை வலியுறுத்த வேண்டும். ஆனால் அப்படி ஒரு கூட்டணி அமையாவிட்டால் நம்முடைய “மாற்றம்” இயக்கம் (http://www.Changefortn.org) என்னவாகும்?

மக்கள் மத்தியில் எழுந்துள்ள எழுச்சி இந்த தலைவர்களுக்குத் தெரியும் என நம்புகிறோம். அதே நேரத்தில் பாமக தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்காக போராடி இருக்கலாம். வைகோ ஈழத்தமிழர் பிரச்சனைக்காக சிறை சென்றிருக்கலாம். ஆனால் இதுவெல்லாம் கடந்த காலம். தற்போதைய நிகழ்காலம் கடந்த கால நிலைப்பாடுகளை எல்லாம் கடந்தது. ஒரு இனம் அழிந்து கொண்டிருக்கிற சூழலில் கடந்த கால நிலைப்பாடுகளை மட்டும் பேசிக்கொண்டிருக்க முடியாது. நிகழ்காலத்தில் இந்தக் கட்சியிகளின் நிலைப்பாடுகள் எவ்வாறு அமைகின்றதோ அதன் பொருட்டே அக் கட்சிகளுக்கான நம்முடைய ஆதரவும் அமையும். பாமக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக மறுத்தால் காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்து பாமகவும் அழிக்கப்பட வேண்டும். மதிமுக ஜெயலலிதா கூட்டணியில் இருந்து விலக மறுத்தால் ஜெயலலிதாவுடன் சேர்ந்து மதிமுகவும் புதைக்கப்பட வேண்டும்.

நாம் “மாற்றத்தை” நோக்கி நம் பயணத்தை தொடருவோம்.

வரலாற்றில் சோதனையான காலக்கட்டங்களில் தான் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. புதிய தலைமைகள் உருவாகி இருக்கின்றன. எனவே மாற்றம் அடையும் வரை நாம் நம் பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்போம். மாற்றம் கிடைக்கும் வரை நாம் ஓயப்போவதில்லை. அந்த உறுதி நம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் மாற்றம் சாத்தியப்படும். மாற்றம் தேவை என்ற குரலை ஓங்கி ஒலிக்கவே இந்த இயக்கத்தை (http://www.Changefortn.org) தொடங்கி இருக்கிறோம். குறிப்பிட்ட தலைமைகளைச் சார்ந்து இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. எந்த தலைவரையும் பதவியில் அமர்த்தும் நோக்கமும் நமக்கு இல்லை. இன்றைக்கு இருக்கின்ற சூழலில் நிலை நிறுத்தப்பட்ட சில அரசியல் கட்சிகளை (மதிமுக, பாமக, விசி, இ.க.க) கொண்டு தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான திமுக, அதிமுகவையும், காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற அகில இந்திய பாசிச கட்சிகளையும் அகற்றுவதே நமது நோக்கம். ஆனால் இந்த அரசியல் கட்சிகள் அதற்கு இணங்க மறுத்தாலும் நமது பயணம் தொடரும்.

மாற்றம் தேவை என்ற குரலை தமிழகம் எங்கும் ஓங்கி ஒலிப்போம். நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்குரிய முயற்சி மேற்கொண்டால் மாற்றம் சாத்தியப்படும்.

தற்போதைய பாரளுமன்ற தேர்தல் ஒரு தொடக்கம் மட்டுமே. அடுத்த இரண்டு ஆண்டுகளிலோ அல்லது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வர வாய்ப்பு இருக்கிற சட்டமன்ற தேர்தல் நோக்கியும் நமது பயணம் தொடரும்.

நம்மால் முடியும் என நம்புவோம் 

- தமிழ்சசி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It