corona awarnessவேட்டைச் சமூகத்தில் இருப்பது போல தான் நினைக்க முடிகிறது. விடிந்ததும் அன்றாடத் தேவைக்கு ரோடு ரோடாய் அலைவது.

ஒவ்வொரு நாளும் இங்கு ஒவ்வொரு நாளாய் மாறி விட்டதை மனம் நடுங்க காண்கிறேன். கவிதைக்காரனுக்கு எப்போதும் பயம் கிடையாது. பரிதவிப்பு மேலோங்கி இருப்பதை தான் சொற்களில் சேர்க்க முடியாமல் தவிக்க வேண்டி இருக்கிறது.

இன்று கூட "தம்பி விவெ" உடன் பேசும் போது இவ்வாழ்வின் பேரியக்கங்களைப் பற்றி தான் மாறி மாறி புலம்பிக் கொண்டோம். புதிர் நிறைந்த நாட்களில் புலம்பிக் கொள்ளுதல் நலம் சேர்க்கும்.

நெருங்கிய மரணங்கள் படுத்தும் பாடு பிதற்று நிலைக்கு தள்ளுகிறது. திரும்பும் பக்கமெல்லாம் மரணம். மரணங்கள் மீது எப்போதுமே வசீகரம் உண்டு. ஆனால் அகால மரணங்களை அனுமதிக்க முடியாது. கூடிக் களித்தலுக்கான நேரம் இது இல்லை.

நண்பர்கள் சந்திப்புக்கான காலமும் இது இல்லை. இடைவெளியும் கவசமும்... போர்வீரர்களுக்கு அவசியம். இது யுத்த பூமி என்றால் நம்பித்தானே வேண்டும். மரணத்தின் அருகே நிற்பவனுக்கு சொற்கள் இருக்காது. அவன் அருகே நிற்பவனுக்கு முற்கள் அது.

அத்தியாவசிய தேவைக்கு வெளியே வர வேண்டிய சூழல் தான். ஆனால் அதை பக்குவமாகச் செய்ய வேண்டும் என்று ஏன் தோன்றுவதில்லை. யாரோ ஒருவரின் அலட்சியம்... யாரோ ஒரு லட்சியவாதியை கொன்று போடுவதை எப்படி சகித்துக் கொள்வது.

இன்றும் கடையோரத்தில் நின்று சிகரெட் பிடிக்கும் மனிதர்களைக் காணும் போது... போகிற போக்கில் நடு சாலையில் துப்பிச் செல்லும் மனிதர்களைக் காணும் போது... இரண்டடி கூட இடைவெளிப் பற்றி யோசிக்காமல் ஒட்டிக் கொண்டே நிற்கும் மனிதர்களைக் காணும் போது வேறு வழியின்றி சத்தியமாகச் செருப்பைக் கழட்டி அடிக்கத் தோன்றுகிறது.

ஒரு முறை GH க்கு சென்று பார்த்து விடுங்கள். பிறகு விட்டேத்தி தனம் எல்லாவற்றையும் மூடிக் கொண்டு வீட்டுக்குள் அமரும். ஒவ்வொரு மரணமும் ஒரு வீட்டைச் சாய்த்துக் கொண்டிருப்பதை உணர்கையில்.. உள்ளே பெருந்துக்கம் வெடிப்பதை உணர்கிறேன்.

நாம் ஒவ்வொருவரும் வேட்டைக்காரன்களாய் நடந்து கொள்வது முக்கியம். வேட்டையாடப்பட வேண்டியது... இன்னொரு உயிர் அல்ல. உயிர்க் கொல்லி... சீன பூச்சி. நிரம்பி வழியும் மருத்துவமனைகள் இந்த பூமியின் அடைபட்ட வாசல்களை முடிந்தளவு திறக்கின்றன. உடன் நின்று உதவ வேண்டியது வேட்டைக்காரன்களின் கடமை.

பசி போக்குவது மட்டுமல்ல... தற்காத்துக் கொள்வதும் தான் சர்வைவல். துக்கத்தை வெளிக்கொணர கூட முடியாத இயலாமை நம்மை சூழும் போதெல்லாம் இழந்து விடக் கூடாதது நிதானம். பயம் கொள்ளல் ஆகாது. பிரஷர் ஏற்படுத்தி நிகழக் கூடாததை நிகழ்த்தும். "உடம்பை வளர்த்தேன்... உயிர் வளர்த்தேன்..." முப்பாட்டன் திருமூலர் வார்த்தை எத்தனை உண்மை.

மிளகு ரசத்தில் இருந்து ஆரம்பிக்கட்டும்... உணவு மாற்றம். உடற்பயிற்சி... உள்ளார்ந்த நம்பிக்கையை வளர்க்கும். பாசிட்டிவ் எனெர்ஜியை பெருக்கிக் கொள்வோம். விட்டு விடாத மனம் வளர்ப்போம்.

நின்று சாதிக்க வேண்டும் என்ற நிலைமை எல்லாம் மாறி... மறைந்து உயிர் காத்துக் கொள் என்று வாழ்வியலின் தத்துவம் சொல்கிறது. சேத்துக்குள் ஆமையைப் போல பதுங்கி கொள் என்கிறது சொல் ஞானம். ஒதுங்கி இருத்தல் தான் உண்மை எனில்... உண்மையோடு நடை போடுவது தானே உன்னதம்.

- கவிஜி

Pin It