karunanidhi_familyஅன்புள்ள மு.க.அ, மு.க.ஸ், மு.க.க, மு.க.அ.க, மு.ம.த.மு.க தலைவர் திரு. மு.க அவர்களுக்கு. இதோட அர்த்தம் உங்களுக்கு நல்லாவே புரியும்னு நினைக்கிறேன் தலைவரே! இருந்தாலும் நான் இதை எழுதும்போது இது என்ன என்னன்னு கேட்டுட்டும் உங்களையே தமிழினத் தலைவரா நம்பி வாழ்ந்துட்டும் இருக்கிற எம் பொண்டாட்டி மாதிரியான அப்பாவிகளுக்காக முழுசாவே சொல்லிரலாம்ணு நெனக்கிறேன். முத்துவேலர் கருணாநிதி அழகிரி, முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின், முத்துவேலர் கருணாநிதி கனிமொழி, முத்துவேலர் கருணாநிதி அழகிரி கயல்விழி, முரசொலிமாறன் தயாநிதி முன்னேற்றக் கழகம்...... அப்பாடா சொல்லவே மூச்சு முட்டுதுங்க தலைவரே..... எம் பொஞ்சாதிய மாதிரி அப்பாவிகளெல்லாம் தி.மு.க.ன்னா இப்பவுங்கூட திராவிட முன்னேற்றக் கழகம்னு சொல்லீட்டு திரியுதுங்க தலைவரே. இந்த மட ஜென்மங்ககிட்ட அதுக்கான அர்த்தம் அதில்ல, திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியோட சுருக்கந்தா தி.மு.க.ன்னா ஒத்துக்கவே மாட்டேங்குறாங்க தலைவரே. நீங்களே செல்லுங்க! நீங்கதான தி.மு.க., தி.மு.க.ன்னா நீங்க தானே.கட்சி பேரச் சொல்லி கண்டதையும் சொல்லி கடைசில, எழுத வந்ததை அப்படியே கோட்டவிட்டுவேன் போல இருக்குது தலைவரே. அதென்னமோ தெரியல, என்ன மாயமோ புரியலை நீங்க பேசுனா எல்லாரும் கொளம்பிப் போகற மாதிரி எனக்கும் உங்களுக்கு எழுதனும்ன்னு பேனா எடுத்தொடனே எல்லாமே கொளம்பிப் போச்சுங்க தலைவரே. சரி, நேரா விசயத்துக்கே வர்றனுங்க.எனக்கு வீட்டுல ரெண்டு வாரமா எம்புள்ளயாள ஒரே பிரச்சனை தலைவரே. அதனால வேலவெட்டிக்குப் போகமுடியல, மனசு நிம்மதியா இல்ல. அப்பத்தான் உங்கள நெனச்சிட்டேன். ஒரே புள்ள, ஒரே பிரச்சனைய வெச்சிட்டு ஒரே வேலைக்குப் போற என்னாலயே ஒழுங்கா வேலை பாக்க முடியலேயே. உங்க நெலமயெல்லாம் அய்யய்யோ.... பாவந்தான் தலைவரே, இருந்தாலும் எம்பிரச்சனையை நீங்க தீத்து வெப்பீங்கன்னுதான் இந்த லெட்டரே எழுதுறேன். புள்ளைங்க பஞ்சாயத்து பாத்துப் பாத்து பழகிப்போன அனுபவஸ்தர் நீங்க. உங்ககிட்ட சொன்னா நிச்சயமா அதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்னு நான் நம்பறேன். ஏன்னா, இது ஈழப் பிரச்சனையில்ல கண்டுக்காம ஆஸ்பத்திரியில படுத்துக்க. புள்ளைங்க பிரச்சனை! அதுனால ஒரு தகப்பனா என் உணர்வை நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நெனைக்கிறேன். சமீப காலமா நீங்க ஒரு நல்ல தலைவரா இருக்கறத விட நல்ல தகப்பனா இருக்கிறதப் பாத்துட்டு ஊருல உள்ள கண்ணெல்லாம் உங்கமேல பட்டுருச்சு. அதனாலதான் இந்த முதுகுவலி, மூட்டுவலியெல்லான்னு நெனைக்கிறேன். திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுங்க தலைவரே.
பாத்தீங்களா! மறுபடியும் நான் என் பிரச்சனையை மறந்துட்டேன். பிரச்சனை என்னன்னா ‘என்னோட அஞ்சு வயசு மவ தெனம் ராத்திரில தூங்கும்போது ஒன்னுக்குப் போயிடறா தலைவரே. வீட்டுல இருக்கிற ஏகப்பட்ட சிக்கலுக்கு இந்த ஒரு பிரச்சனை தான் மூலகாரணம்னா உங்களால நம்பமுடியுதுங்களா தலைவரே! சரி விசயத்தைக் கொஞ்சம் விலாவரியாவே சொல்றனே. எம்மவ ஒன்னுக்குப் போறதுனால எங்கம்மாவுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டையாயிடுது.

எங்கம்மா என்னடான்னா அஞ்சு வயசுப் புள்ள தெனம் ராத்திரியிலே ஒன்னுக்குப் போவுது பேசாம அவள மெட்ராஸ் ராமச்சந்திரா ஆசுபத்திரியில அட்மிட் பண்ணீரலாம் அப்படீங்குது. நான் சொன்னேன் அம்மா இந்த வயசுல இதெல்லாம் சாதாரணம் அட்மிட் ஆகற அளவுக்கு சிக்கலான விசயம் இல்லம்மான்னேன். ஆனா, அது எனக்கும் தெரியும்னு எங்கம்மா சொல்றாங்க. அப்புறம் ஏன் ஆஸ்பத்திரிக்குப் போலாங்கறேன்னு கேட்டா, அவங்க சொல்றாங்க, அட வயசான மூட்டுவலி வர்றது, முதுகுவலி வர்றது இதெல்லாம் சகஜந்தா, இதெல்லாம் தெரிஞ்சாலும் ஏதாவது ஒரு பிரச்சனைன்னு வரும்போது நம்ப முதல்வரே போய் ஆஸ்பத்திரில படுத்துக்குராறே. நம்ப புள்ளைய மட்டும் ஏன் ஆஸ்பத்திரில படுக்க வெக்கக் கூடாதுன்னு கேக்கறாங்க.

அட உங்களுக்கு இந்தியா. இலங்கை. சிங்கப்பூர். மலேசியான்னு 1431 பயோரியா பல்பொடி ரேஞ்சில பிரச்சனை. இந்தப் புள்ளைக்கு என்னங்க தலைவரே பிரச்சனை? அதையும் எங்கம்மாகிட்ட கேட்டேன். அதுக்கு அவங்க சொல்றாங்க ‘உனக்கென்னடா தெரியும்? நீ காலைல போனா ராத்திரி வர்ற. அதுக்குள்ள பாவம், புள்ள படற பாட்ட என்னான்னு நான் சொல்ல? அவ காலைல எந்திரிச்சவுடனே பல்லுவெளக்கனும். குளிக்கனும். இது பிரச்சனையில்லையா? அவ ஸ்கூலுக்குப் போயிட்டு வந்தா ஹோம் வொர்க் எழுதனுமே அது பிரச்சனையில்லையா? முழுப்பரிட்சை வருதே அதுபிரச்சனையில்லையா? ஏன் சாயந்தரம் அவ “டோராவோட பயணங்கள்” பாக்கும்போது கரண்டு போயிடுதே அது பிரச்சனையில்லையா? பாவம்டா அவ’ங்கறாங்க.

அம்மா இதெல்லாம் சாதாரணம் தண்ணி ஊத்துனா குளிக்கிற பிரச்சனை தீர்ந்திடும். படிச்சா பரிச்சை பிரச்சனை தீந்திடும். கரண்டு வந்தா டோரா பிரச்சனை தீர்ந்திடும். இதுக்கெல்லாம் போயி ஆஸ்பத்திரிக்குப் போவாங்களான்னு நான் கேட்டேன். அதுக்கு, ‘போடா போக்கத்தவனே. நம்ம மொதலமைச்சரு உக்காந்து பேசுனா இலங்கை பிரச்சனை தீந்திடும். நின்னு மெரட்டுனா மத்திய அரசாங்கமே நடுங்கிரும். இருந்தாலும் இதையெல்லாம் விட்டுட்டு அவ்வளவு பெரிய மனுசனே ஆஸ்பத்திரியிலே சேர்ந்துட்டாரு. நீ என்னமோ இந்த பச்ச புள்ளய ஆஸ்பத்திரியில சேக்க உடமாட்டீங்கறே’ன்னு எம்மேல கோவப்படுறாங்க தலைவரே. நான் என்ன பண்றது. நீங்கதான் சொல்லனும்.

உங்க புண்ணியத்துல ஒரு ரூவாய்க்கு அரிசி வாங்கிதான் எங்க வீட்டுல ஒலையே கொதிக்குது அப்படி இருக்கும்போது மெட்ராஸ் ராமச்சந்திரா ஆஸ்பத்திரிய எல்லாம் டீவி நியூஸ்ல வரும்போது பாத்துக்கலாம் (டீவியும் உங்க புண்ணியம்) அவ்வளவுதான். மத்தபடி நம்ம ரேஞ்சுக்கெல்லாம் ரெண்டு ரூவா குடுத்து தர்மாஸ்பத்திரிலதான் பாக்க முடியும்னு (ரெண்டு ரூவா குடுத்தாத்தான் அது தர்ம ஆஸ்பத்திரி) எங்கம்மாகிட்ட சொல்லி ஒரு சமாதான ஒப்பந்தத்துக்கு வரலாம்ணு பாத்தா எங்கம்மா, விடுதலைப் புலிக மாதிரி அப்பவும் சண்டைய நிறுத்துனபாடில்ல தலைவரே. அது சொல்லுது. அரிசி ஒரு ரூவா. ஆனா பஸ்டாண்டு பக்கம் போனா அவசரத்துக்கு ஒன்னுக்கு ரெண்டுக்கு அஞ்சு ரூவா தர்றயில்ல. அத மாதிரி இதையும் அவசர பிரச்சனையா நெனச்சி செலவு பண்ணுங்குது.

இந்த இடத்துலதான் எனக்கு சட்டுன்னு ஒரு ஐடியா வந்துச்சு. உடனே ‘அம்மா இனிமே புள்ளைய பேசாம ஸ்கூலுக்கு அனுப்பவேண்டாம். உங்க காலம் மாதிரியே அவ கை தலைய சுத்தி காத தொடும்போது ஸ்கூலுக்குப் போகட்டும். அப்படியே இந்த டீவிய தூக்கி பழைய இரும்புச்சாமான் ஈயம் பித்தளை பிளாஸ்டிக்குக்கு போட்டுடுவோம்’னு சொன்னேன். உடனே எங்கம்மா ‘ஆமாப்பா. பேசாம. அதையே பண்ணிரெலாம். பாவம் சின்ன வயசு அவளால முடியல அவ என்ன பண்ணுவா? நம்பனால நம்ப புள்ளையதான் ஸ்கூல விட்டு நிறுத்தமுடியும். பாவம் நம்ப முதலமைச்சர் பெரிய மனுசன். அவராலயும் முடியல. அவர முதலமைச்சரா இருக்கறதவிட்டு நிறுத்திரலாம்னு யாராச்சும் நினைச்சா தேவல’ன்னு சொல்றாங்க. நான் என்ன சொல்ல முடியும் தலைவரே?

எம் புள்ள இந்த பிஞ்சு வயசுலேயே ஸ்கூலுக்கு போலாமா வேண்டாமான்னுதான் நான் முடிவு பண்ண முடியும். ஏன்னா அவ எம் புள்ள. அதே மாதிரி நீங்க எங்க தலைவரு. உங்கனாலயும் முடியல. நீங்க சட்டசபைக்குப் போக வேண்டான்னு இந்த மக்கள் முடிவு பண்ண மாட்டேங்கறாங்க. உங்க மேல பாசமே இல்லாத மக்கள். நீங்க என்ன பண்ணுவீங்க பாவம்.

எம்புள்ள பாட்டி செத்ததுக்கு பத்து நாள் லீவு போட்டாலே அவங்க மிஸ்ஸூ ‘நீயெல்லாம் ஒரு நல்ல ஸ்டுடண்டா? டாக்டர் சர்டிபிக்கட் எங்க? இஞ்சினீயர் பிளான் எங்க’ன்னல்லாம் திட்டறாங்கலாம். நீங்க பல வருசமா சட்டசபைக்கே போகாம இருந்தீங்களே நீங்கெல்லாம் நல்ல எம்.எல்.ஏவான்னு உங்கள யாரும் கேள்வியே கேக்கலையே தலைவரே.

இந்திய குடிமகன்ற உரிமையை மட்டும் வெச்சுட்டு தமிழ் பேசி தமிழக கடலோரத்துல மீன புடிச்சிட்டிருந்த நானுத்தி சொச்சம் பேர இலங்கை ராணுவம் கொன்னு போட்டுச்சே அப்பக்கூட ஒரு நாட்டோட குடிமகனை காப்பாத்த வக்கில்லாத அரசாங்கம் என்ன அரசாங்கம்? அவன் உயிருக்கு உத்தரவாதம் தராத நாடு ஒரு நாடா? அப்படி ஒரு நாடு தேவையான்னு சத்தமா குரல் கொடுக்க கையாலாகாத இந்த மக்களா உங்கள அப்படியொரு கேள்வி கேக்கப் போறங்க?

எங்கேயோ பிரான்ஸ்ல ஒரு சீக்கிய இளைஞனோட தலப்பாகைய களைச்சிட்டு மயிர இழுத்து பாத்ததுக்கே கொதிச்சு எந்திரிச்சு அவனுக்காக பிரான்ஸ்கிட்ட பேச இந்திய மந்திரிய அனுப்பிச்சாங்க சீக்கிய மக்கள். அப்பக் கூட ‘அடே மத்திய அரசே சீக்கியனோட மயிருக்கிருக்கிற மரியாத கூட தமிழன் உயிருக்கு இல்லையா’ன்னு வீதிக்கு வந்து கேக்க நாதியத்த ஊமப் பயலுக உங்களப் பாத்து கேள்வி கேப்பாங்க? ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கே உரிய மத உணர்வுகளை மதிச்ச அரசாங்கமே தெனம் தெனம் செத்துப் பிழைக்கற தமிழ் மனித உயிர்களை ஏண்டா புரிஞ்சிக்கலன்னு ஒன்னு கூடி ஒப்பாரி வைக்கக் கூட கையாலாகாத இந்த தமிழனுகளா உங்களப் பாத்து விரல் நீட்டிப் பேசுவானுங்க? வாய்ப்பே இல்லை தலைவரே. அதுக்கெல்லாம் ஒரு தில்லு வேணும் தலைவரே. அதெல்லாம் ஏதோ உங்க மாதிரி ஆளுக பேச்சுல இருக்கிற புறநானுறுலயும். அகநானுறுலயும் கேக்கறதோட சரி. விஜயோட வில்லுலயும், விக்ரமோட அந்நியன்லேயும் பாக்கறதோட சரி.

ஊர்ல வேலவெட்டிக்குப் போகாத பெருசுக கோயில் அரசமரத் திண்ணைல உக்காந்திட்டு ஆடுபுலி ஆட்டம் ஆடும்போது பேசிட்டு இருந்ததை ஒரு நாள் கேட்டேன். (நான் ஏன் வேலைக்குப் போலைன்னு கேக்கமாட்டீங்க நீங்க. ஏன்னா இருக்கிற கரண்டு கட்டுல எல்லா வேலையும் என்ன லட்சணத்துல நடக்குதுன்னு உங்களுக்கே நல்லா தெரியும்) அதுல ஒரு பழமொழி டக்குன்னு மனசுக்குள்ள வந்து அப்படியே சம்மணம் போட்டு உக்காந்துருச்சுங்க தலைவரே. அது என்னன்னா.

மேட்டங்காட்ட உழுதவனும் கெட்டான்
மேனா மினுக்கிய கட்டுனவனும் கெட்டான்.

அதென்னமோ நீங்க ஜெயலலிதா அம்மாவோட பழைய செருப்பு, புது செருப்பு, நகை, நட்டு, போல்டு எல்லாத்தையும் அப்போ உங்களோடதா இருந்த சன் டீவியில போட்டுப் போட்டு காட்டி அந்தம்மாவ மக்கள் முன்னாடி மேனா மினுக்கியாவே சித்தரிச்சுட்டீங்க. அந்தம்மாவுக்கு முதலமைச்சர் பட்டம் கட்டுனவனும் கெட்டான்னு நீங்க சொன்னதா நெனச்சுதான் நம்ம தமிழ்ப் பயலுகலெல்லாம் உங்களுக்கு ஓட்டு போட்டு உங்கள மொதலமைச்சரா ஆக்குனாங்களோன்னு ஒரு சந்தேகம் எனக்கு. மேனாமினுக்கிக்கு மொதலமைச்சரா பட்டங்கட்டி கெடக் கூடாதுன்னு நெனச்ச வீணாபோன தமிழன் அப்படியே உங்களுக்கு ஓட்டக் குத்தனான் பாருங்க. அப்ப தெரியல நாம மேட்டாங்காட்ட உழுது கெடப்போறோம்னு. இப்ப புரிஞ்சுதுன்னு புலம்பி என்ன பிரியோஜனம் இல்லீங்களா தலைவரே.

இப்ப இன்னொன்னுங்கூட தோணுது தலைவரே. பேசாம இதுக்கு மேனா மினுக்கிய கட்டியே கெட்டிருக்கலாம். ஏன்னு கேளுங்க. அந்தம்மா மட்டும் இப்ப முதலமைச்சாரா இருந்திருந்தா எப்படியும் ஈழத்தமிழர்களுக்கு எதிராத்ததான் முடிவெடுத்திருப்பாங்க. (இப்ப மட்டும் என்ன வாழுதாம்) அப்படி ஒருசமயத்தில எதிர்கட்சியா மட்டும் நீங்க இருந்திருந்தா உங்களுக்கு முதுகுவலி வந்திருக்குமா? இல்ல முடியாமதான் போயிருக்குமா? அப்ப யாராச்சும் இந்த மாதிரி படுத்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க. எத்தனை பேருக்கு தமிழின துரோகின்னு பட்டங்கட்டியிருப்பீங்க? கால்குலேட்டர் வெச்சாவது கணக்குப் போட்டுப்பாருங்க. அப்படி ஒரு சூழல்ல முரசொலில நீங்க எழுதற லெடடர்களும் அதுல நீங்க குடுக்கற புள்ளி விவரங்களும் என்னவா இருந்திருக்கும். இன்னைக்கு தமிழ்நாடு பூர எழுச்சி உண்டுபண்ணியிருக்கிற முத்துக் குமாரோட இறுதியறிக்கை எழுத்தெல்லாம் உங்க எழுத்துக்கு முன்னாடி கால் தூசிக்குப் பெறுமா? அவன மாதிரி ஒரு தமிழ் போராளி உயிர் போகுமளவுக்கு மந்தமாகத்தான் நீங்கள் போராட்டத்தை முன்னெடுத்திருப்பீங்களா? யோசுச்சுப் பாருங்க தலைவரே.

ஜெயலலிதா மட்டும் முதல்வரா இருந்திருந்தா வாழ்வோ, சாவோ, போராடிப் பாப்போம்னு எல்லாரும் அந்தம்மாவ எதிர்த்து நின்னிருப்பாங்க. ஆனா துரதிஸ்டவசமா நீங்க முதலமைச்சர். நீங்க போராட்டத்த முன்னெடுப்பீங்கற ஒரே காரணத்துக்கா தான் உங்களுக்காக எல்லாரும் காத்திருந்தாங்க. நீங்க என்ன செஞ்சீங்க? உங்களுக்கு முன்னால இருந்த வராலாற்றுக் கடமை என்ன? நீங்க செஞ்சிட்டு இருக்கிறது என்ன? நீங்க மட்டும் ஒரு தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தா ஒரு போராளி செத்திருப்பானா? யோசிச்சுப்பாருங்க தலைவரே.

இந்த நேரத்துல நாங்க ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம் இல்ல இல்லை நீங்க அந்த கட்டாயத்துக்கு எங்கள தள்ளீட்டீங்க தலைவரே. உடலை எரிச்சு உயிரைவிட நாங்க எல்லாரும் தைரியசாலிகளில்லை. ஆனாலும் எதையாவது எரிச்சு எங்க எதிர்ப்பை காட்டுற அளவுக்கு எங்க ஒடம்புலயும் தன்மான தமிழ்ரத்தம் கொஞ்சமாச்சு ஓடுது. அதனால நான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன். தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட என் கைக்கு ஒரு சூட்ட போட்டுடலாம்னு இருக்கேன். ஓட்டுபோட அனுமதி அளிக்கிற உங்க அரசாங்கம் சூடுபோட அனுமதி தருமா? ஏன்னா நாளைக்கு உங்களுக்கெல்லாம் சூடு சொரணையே இல்லையான்னு எவனும் என்னப் பாத்து ஒரு கேள்வி கேட்டுற கூடாதில்லீங்களா தலைவரே!

உங்க அளவுக்கு இல்லைன்னாலும் உங்கள்ல ஒரு ஐஞ்சு பர்ஸண்ட் அறிவாவது இருந்திருந்தா தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட என்ன மாதிரி எல்லாருக்கும் முரசொலிலயோ. இல்ல என் மூக்கு சளிலயோ அலைகடலென திரண்டு வா உடன்பிறப்பே. தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட கைக்கு ஒரு சூட்டை போட சூரியனாய் எழுந்து வா உடன்பிறப்புகளேன்னு எழுதி ஒரு கூட்டங் கூட்டி இருப்பேன். ஆனா அந்த அளவுக்கு அறிவோ, பணமோ, அதிகார பலமோ இல்லாத என்னால என்ன பண்ணமுடியும்? தனியா ஒத்த ஆளா நின்னு இனிமே திமுகவுக்கு ஓட்டு போடுவியா கேட்டு என் வலது கையில வலிக்கிற மாதிரி ஒரு சூடு போடுவேன். இதுல உடன்பாடு இருக்கிற எல்லாரும் சேர்ந்து சூடுபோட போடலாம்னு முடிவெடுத்து ஒரு நாள் ஒரு இடம் ஒரு நேரம் குறிச்சா அதில நானும் ஒருத்தனா பங்கெடுக்க முடியும் அவ்வளவுதான்.

அடுத்தவன் போயிட்டு வந்ததுக்கு பேராசிரியர் விளக்கம் சொல்ற மாதிரி யார் யாரோ சூடு போட நான் ஏற்பாடு பண்ற அளவுக்கு என்னைய நான் இன்னும் வளர்த்துக்கல. ஆமா தலைவரே பேச்சுவார்த்தை நல்லாயிருக்கு. மேனனோட பயணம் ஓ.கே. பிரணாப் முகர்ஜியோட பயணம் ஓ.கே.ன்னு எல்லாம் சொல்றீங்களே. அப்ப நெஜமாலுமே இலங்கை அரசாங்கம் செய்றதெல்லாம் சரிதானுங்களா.

எனக்கு ஒரு சந்தேகம் முல்லைத்தீவு பகுதில 2 லட்சம் தமிழர்கள் மாட்டீட்டாங்க. இலங்கை அரசு இந்திய அரசு இவங்கல்லாம் சொல்ற மாதிரி புலிகள் தீவிரவாதிகள்னே வச்சிக்கிடுவோம். 2 லட்சம் தமிழர்கள் புலிகள் கிட்ட மாட்டி முல்லை தீவுல இருக்காங்கன்னே வச்சுக்குவோம். இப்ப இலங்கை அரசாங்கம் சொல்லுது மக்கள் வெளியே வராவிட்டால் அவர்கள் உயிருக்கு இலங்கை அரசு பொறுப்பேற்காதுன்னு. இது எந்த வகைல நியாயம்? விடுதலைப் புலிகளே தீவிரவாதிகளாச்சே. அவங்க மக்களை விடமாட்டாங்கதான அப்புறம் எப்படி அந்த மக்கள் வெளியே வருவாங்க. வெளியே வந்தா நீங்க சொல்ற மாதிரி புலிகள் கொல்லுவாங்க (ஏன்னா அவங்க தீவிரவாதிகள்) வரலைன்னா நீங்க குண்டு போடுவீங்க. அப்ப அந்த மக்களுக்கு வாழ்வதற்கு உரிமை உண்டா? இல்லையா?

ஆமா போனா மாசம் மும்பைல தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டலை புடிச்சப்ப மக்களே நீங்களே வெளியே வந்திருங்க. இல்லைன்னா உங்க உயிருக்கு நாங்க பாதுகாப்பு தரமுடியாதுன்னு சொல்லி உங்க மத்திய அரசாங்கம் குண்டு போட்டிருந்தா மூனுநாள் யுத்தம் நடந்தே இருக்காதே. ஏன் குண்டு போடுல? அங்கிருந்தவனெல்லாம் முதலாளிகள். வெளிநாட்டுக்காரர்கள். ஏன்? என்ன காரணத்துனால உங்க மத்திய அரசு தாஜ் ஹோட்டல் மேல குண்டு போடல? ஒருவேளை இழிச்சவாய தமிழ்ப் பயலுக மட்டும் உள்ளார இருந்திருந்தா குண்டு போட்டிருப்பீங்க. ஏன்னா கேக்க நாதியத்த கேணப்பயலுகதான தமிழ் பயலுக.

நீங்க சொல்லுங்க தலைவரே. மும்பைல தீவிரவாதிகள் மேல இந்திய இராணுவம் குண்டு போடாதது சரின்னா. முல்லைத்தீவுல புலிகள் மீது குண்டு போடாம இருக்கறதுதானே சரி. முல்லைத்தீவுல குண்டு போடறது சரின்னா? இந்திய ராணுவம் தாஜ் ஹோட்டல் மேல குண்டு போட்டு ஒரேநாள்ள தீவிரவாதிகள அழிச்சிருக்கலாம்ல. அது தான சரி. ஒரு பதிலச் சொல்லுங்க தலைவரே.

இதையெல்லாம் ஏன் காங்கிரஸ்காரங்கிட்ட கேக்காம உங்ககிட்ட கேக்கறோம் தெரியுங்களா தலைவரே! அவனெல்லம் ஒரு ஆளு மயிருனு நமக்கு சமானமா ஒக்கார வெச்சுப் பேச நானொன்னும் மானங்கெட்ட திமுககாரனில்லீங்க தலைவரே.

நம்ம வெளியீட்டு கழக செயலாளர் திருச்சி செல்வேந்திரன் அய்யா முன்ன ஒருதடவை கூட்டத்துல பேசும்போது சொன்னாரு “காங்கிரஸ்காரன திட்டாதீங்கய்ய! அவன் ஒரு கோயில் மாடு. அத பாத்தீங்கன்னா கொஞ்ச நேரம் குப்ப தொட்டீல வாய வெக்கும். அப்பறம் மார்கெட்டுக்கு வரும். கொஞ்ச நேரம் மார்கெட்டுலயும் வாய வெக்கும். யாரும் அத திட்டமாட்டங்க. ஏன்ன அது கோயில் மாடு. காங்கிரஸ்காரனும் அப்பிடிதான். கொஞ்ச நாள் திமுக கூட இருப்பான். கொஞ்ச நாள் அதிமுக கூட இருப்பான். அவன திட்டாதீங்கய்ய பாவம் அவன் ஒரு கோயில் மாடு” அதனாலதான் அவன நாங்க திட்டல தலைவரே. அப்பறம் மார்கெட் யாரு குப்ப தொட்டி யாருன்னு கேட்டு சொல்லுங்களே. ஏன்னா செல்வேந்திரன் அய்யா நாங்க கேட்டா இப்ப சொல்ல மாட்டாரு.

எந்த மொழி பேசி உங்க வாழ்க்கையை துவங்கினீங்களோ, எந்த மொழி உங்களுக்கு இந்த அதிகாரத்தையும் செல்வாக்கையும் கொடுத்ததோ, எந்த மொழிபேசுகிற மக்கள் உங்களை உலக தலைவர்ன்னு கொண்டாடுகிறாங்களோ, அந்த மொழி பேசுகிற ஒரேயொரு காரணத்துக்காக ஒதுக்கப்பட்டு, வாழ்வுரிமை மறுக்கப்பட்டு, இருக்க இடம், குடிக்க நீர் ஏதுமின்றி அனாதைகளாக அலையுறாங்களே...... நம்ம மொழி பேசுகிற அந்த மக்கள் உங்கள் சமகாலத்தில் சமாதியாக்கப்பட்டால் அதை அப்படியே சரித்திரம் பதிவு செய்யுமே என்ன செய்ய போகிறீங்க?

தயவு செய்து அவங்களுக்கும் உங்க இதயத்துல இடம் இருக்குதுன்னு மட்டும் சொல்லீறாதீங்க. ஏன்னா தேர்தல்ல நிக்க கூட இடங்குடுக்காதவங்களுக்கு எல்லாம் நீங்க இதயத்திலதான் இடம் கொடுப்பீங்கன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். ஆனா ஈழத்துல நம்ம மக்கள் உட்கார, நிற்க, நடக்க சுதந்திரமாக வாழ, தன்னைத்தானே ஆள ஒரு நிலத்தை கேக்கறாங்க. அதுக்காக போராடறாங்க. அதுனால தயுவு செஞ்சு அவங்களுக்கு உங்க இதயத்துல இடங்குடுத்து கேவலப்படுத்தீறாதீங்க தலைவரே

கடைசி ஒன்னே ஒன்னு அந்த ஒன்னுக்கு மேட்டருதான் தலைவரே! இரண்டு, மூணு நாளா புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பறதில்ல. அதனால ராத்திரியில அவ ஒன்னுக்கும் போறதில்ல. ஒரு வழியா பிரச்சனை எனக்கு முடிஞ்சிபோச்சுது. நீங்களும் பேசாம இன்னைல்ல இருந்து மொதலமைச்சரா போறதில்லைன்னு ஒரு முடிவு பண்ணுங்க. ஒரு வேள உங்க முதுகுவலி போனாலும் போயிரும்

இப்படிக்கு
இரா.செந்தில்குமார்

பின் குறிப்பு: ஒரு மூத்த தலைவருடைய உடல்நலக் குறைவை மோசமாக விமர்சனம் செய்வது நாகரிகம் இல்லைதான் இருந்தாலும் என் கோபம் உண்மையானதெனில் அதில் நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது. நாகரிகமாக நான் கோபப்பட்டால் அதில் உண்மை இருக்க முடியாது. இந்த வார்த்தைகள் உங்களுக்கு வலிக்கும்தான் இருந்தாலும் இத்தனை ஆண்டுகளாய் உங்களையே நம்பி இருந்த என் போன்றவர்களின் இதயத்திலிருக்கும் வலியோடு ஒப்பிட்டால் உங்கள் வலி ஒரு பொருட்டல்ல.... ஓட்டுப்போட எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ திட்டவும் அதே உரிமை இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

- இரா.செந்தில்குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It