கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

amith shah 300

இன்றைய நவீன இந்தி மொழியின் பிறப்பிடம் கல்கத்தா தான்; கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையிலேயே தான் அன்றைய ஆங்கிலேய அரசு அதனை உருவாக்கியது, என எனது பாட்டி நான் சிறுவனாக இருந்த காலத்தில் என்னிடம் கூறினார். மறைந்த எனது பாட்டி 1940-களில் கல்கத்தாவில் மெய்யியலிலும் உயிரியலிலும் பட்டம் பெற்றவர்.

அண்மையில் நிறைவுற்ற ‘இந்தி நாளைத்’ (Hindi Divas) தொடர்ந்து, இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சரான அமித் சா, இந்தியை மீண்டும் தேசிய மொழியாக்க முயற்சியில் இறங்குவோம் எனப் பேசியிருப்பதை தினசரிகளில் வாசிக்க நேர்ந்த பொழுது, எனது பாட்டி இந்தியின் பிறப்பு குறித்து அன்று எனக்கு உரைத்தவை எனது நினைவுக்கு வந்தன.

அமித்சாவின் இந்திக் குறித்த இந்தப் பேச்சு ஏற்படுத்திய உடனடித் தாக்கம், எனது பழைய நினைவுகளைக் கிளறின. எனது பாட்டி, இந்தி மொழி வரலாறு குறித்த அன்று என்னிடம் பகிர்ந்து கொள்ள நினைத்த மொத்த விடயங்களையும் தேடித் தொகுக்க என்னைத் தூண்டின.

இன்று இந்தியைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் இந்த அரசியலுக்குப் பின்னால் இருக்கும் ‘மறைக்கப்பட்ட உண்மைகளையும்’ இந்தி மொழியின் இரகசிய வரலாற்றையும் அறிய வேண்டுமென முனைந்தேன்.

இந்திய மொழிகள் குறித்தும் இந்தி மொழி பற்றியும் நான் தொகுத்த சில அடிப்படையான உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.

இந்தியா பன்மொழிகளின் தாயகம்:

பப்புவா நியூ கினியா என்பது ஒரு மிகச்சிறிய நாடு. ஏழு மில்லியன் மக்கள் தொகை மட்டுமே கொண்ட இந்நிலப்பரப்பில் 852 மொழிகள் காணப்படுகின்றன. இவற்றில் 12 மொழிகள் அழிந்த நிலையில் மீதமுள்ள 840 மொழிகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன.

இந்நிலம் தான் பன்மொழிகள் நிலவும் நாடுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது, என 2009-ஆம் ஆண்டின் யுனெஸ்கோ (UNESCO 2009) கணக்கெடுப்பு கூறுகிறது. இந்தப் பட்டியலில் இந்தியா 0.930 புள்ளிகளுடன் 9-வது இடத்தைப் பிடித்துள்ளது.

மேற்கண்ட இந்தப் பட்டியலை நாம் மக்கட்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டோமேயானால், 1.3 பில்லியன் அதாவது 130 கோடி மக்கள் வாழ்கின்ற இந்திய நிலமே, முதன்மையான பன்மொழிகளின் தாயகமாக விளங்கும் என்பது திண்ணம். பன்மொழிகள் நிலவும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சீனா, மூன்றாமிடத்தில் இருக்கும் அமெரிக்கா, நான்காம் இடத்தில் இருக்கும் இந்தோனேசியா ஐந்தாம் இடத்தில் இருக்கும் பிரேசில் ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா முதலிடத்தைப் பிடித்துவிடும்.

ஆக, தற்பொழுதையச் சூழலில் பெருநிலபரப்பும் பெருமக்கட் தொகையும் கொண்ட நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான மொழிகள் நிலவும் ஒரே பெருநில நாடு இந்தியா தான்.

2001-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 1599 மொழிகள் நிலவுகின்றன. அவற்றுள் 122 மொழிகள் ’முதன்மை மொழிகளாக’ அறியப்பட்டுள்ளன.

மேலும் அவற்றுள் 30 மொழிகள் ஒவ்வொன்றும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கட்தொகையின் தாய்மொழியாக உள்ளன. அதைப்போல 122 மொழிகள் ஒவ்வொன்றும் குறைந்தது 10,000 எண்ணிக்கைக் கொண்ட மக்கட்தொகையில் பேசப்படுகின்றன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 1. அசாம், 2. வங்கம், 3. போடோ, 4. தோக்கிரி, 5. குசராத்தி, 6. கன்னடம், 7. காசுமீரி, 8. கோகணி, 9. மைதிலி, 10. மலையாளம், 11. மராத்தியம், 12. மணிப்பூரி, 13. நேபாளி, 14. ஒதியம், 15. பஞ்சாபி, 16. சமற்கிருதம், 17. சாந்தலி, 18. சிந்தி, 19. தமிழ், 20. தெலுங்கு, 21. உருது, 22.இந்தி ஆகியவை அட்டவணை மொழிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன. ஆங்கிலமும் இந்தியும் இந்திய ஒன்றியத்தின் ‘அலுவல் மொழியாக’ (official languages) கூறப்பட்டுள்ளன.

இதனைத் தவிர, தனித்துவமான பண்பு நலன்களையும் உயரிய இலக்கிய வளமும் செறிவும் கொண்ட ஆறு மொழிகளை செம்மொழிகளாக (classical language) அறிவிக்கப்பட்டுள்ளன. அவை கன்னடம், மலையாளம், ஒதிசா, சமற்கிருதம், தமிழ், தெலுங்கு ஆகிய ஆறு மொழிகள்.

இவற்றுள் தமிழ் மிகத் தொன்மை வாய்ந்த பழமைமொழி. திராவிட மொழிக்குடும்பத்தின் முதன்மை மொழியாக தமிழ் மொழியின் பழைமைக்கு நிகராக இன்றும் உயிர்ப்புடன் மிகப் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்ற மொழி உலக அளவில் வேறொன்றில்லை. இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த சமற்கிருதத்தை விடவும் இது மிகத் தொன்மையானது என்பது அறிவியல் ஆய்வு முடிவுகளின் வழி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தற்பொழுது அறிவியலுக்கும் வரலாற்றுக்கும் முற்றிலும் முரணாக தவறானத் தகவல்களை திரும்ப திரும்பக் கூறி முன்னெடுக்கப்படும் இந்த மூர்க்கத்தனமான இந்தி பிரச்சாரத்தில், ’இந்தி தேசிய மொழி’ என்ற உண்மைக்கு புறம்பான தகவல் வலதுசாரி சங்கிக் கும்பல்களால் திரும்பத் திரும்ப முன் வைக்கப்படுகிறது. இந்தி இந்தியாவின் தேசிய மொழியில்லை என்பதும் மட்டுமன்று, இந்தியாவிற்கு என்று எந்தத் தேசிய மொழியுமில்லை என்பது தான் அடிப்படையான உண்மை.

இந்தி மொழி:

இந்தியைப் பற்றிய ஓர் அடிப்படையான உண்மையைக் கூறவேண்டுமெனில், இந்தி மொழி தான் இந்திய மொழிகளிலேயே மிக வயது குறைந்த மொழி. இது, 18-ஆம் நூற்றாண்டில் தான் தோற்றுவிக்கப்பட்டது. தில்லியையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பேசக்கூடிய ‘கரிபோலி’ (Khariboli) எனும் வட்டார மொழியை அடிப்படையாகக் கொண்டு இம்மொழி செயற்கையாக உருவாக்கப்பட்டது.

இந்தக் கரிபோலி மொழியும் ‘அவதி’ என்ற மொழியின் திரிந்த வடிவம் தான். இனிய ஒலி ஓசைகளைக் கொண்ட அவதி மொழியில் தான் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துளசிதாசர் தனது ‘இராமசரிதமனஸ்’ எனும் காப்பியத்தை இயற்றினார்.

இந்த அவதி மொழியில் பாடப்பட்ட இராம பத்தி பாடல்கள் வட இந்தியாவில் புகழ்பெற்றிருந்த காரணத்தால், அதனை நவீன இந்திய அரசியலின் உருவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்வது என ஆங்கிலேயர்களால் திட்டமிடப்பட்டது.

ஏனைய கடவுள்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இராமன் எவ்வாறு ‘இந்துக் கடவுள்’ ஆனார், என்ற தந்திர வரலாற்றை 2018-ஆம் ஆண்டு நான் எழுதியதை இங்கு நினைவுக்கூர வேண்டியுள்ளது.

1800- ஆம் ஆண்டு தொடங்கிய பிற்பகுதியில் உருது மொழியை அடிப்படையாகக் கொண்ட ‘இந்துஸ்தானி’ மொழி, உருதுமொழியின் முழுச்செல்வாக்குடன் வளர்ந்து வந்த காலகட்டத்தில் தான், அதனை முறியடிக்க இந்தி மொழி உருவாகி மேலெழுந்தது.

18,19-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் கோலோச்சிய பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனி, தனது பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஏதுவாக ஒருங்கிணைந்த இந்துஸ்தானி மொழியை இந்தி என்றும் உருது என்றும் தனித்தனி அளவுகோலில் பிரித்து வளர்த்தது.

இதற்கு மிக முக்கியமான காரணமாவது, ஒன்றுக்குள் ஒன்றாக பின்னிக்கிடந்த இசுலாமிய மக்களுக்கும் இசுலாமிய அல்லாத மக்களுக்கும் (இந்தக் கூட்டத்திற்கு ‘இந்து’ என்று பின்னால் பொதுப்பெயர் இடப்பட்டது) இடையே மொழி வழிப்பட்ட பிளவினை ஏற்படுத்தி, அவர்களை தனித்தனியாக பிரித்தாள்வதன் வழி தனது எதேச்சதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் தந்திரமே.

அதாவது இசுலாமிய மக்களுக்கு உருது என்றும், இசுலாமியர் அல்லாதவர்களுக்கு இந்தி என்றும் இருமொழிகள் வழி மக்களை பிளவுப்படுத்தி, அந்தப் பிளவு உணர்ச்சியை மேலும் மேலும் வலுப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கிடையே ஒரு பகையுணர்வை வளர்த்தெடுப்பது என்பது அவர்களின் திட்டம்.

ஆனால், இந்தப் பிளவை திட்டமிட்டு முன்னடத்திய ஒருவரைப் பற்றி, இந்திய வரலாறு பற்றிய பொதுப்புத்தியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதும் வியப்பானது. ஆனால், அவர் இல்லாமல் போயிருந்தால் இன்று இந்தி மொழி என்றவொன்றே தோன்றியிருக்காது எனலாம். அவர் பெயர் ஜான் கில்கிறிஸ்ட் (John Gilchrist).

நவீன இந்துசுதானிய மொழிகளின் தந்தை – ஜான் கில்கிறிஸ்ட்:

ஜான் பாத்விக் கில்கிறிஸ்ட் (1759-1841) ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஓர் அறுவைச் சிகிச்சை நிபுணர். மருத்துவம் தாண்டி, தனது சொந்த முயற்சியினாலும் ஆர்வத்தாலும் ஒரு மொழியியலாளரகவும் அவர் உருவாகியிருந்தார். எடின்பர்க்கை தனது தாய்நிலமாக கொண்ட இவர், தோல்வியடைந்த ஒரு வங்கியாளராக இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.

மொழியியலில் ஆர்வம் கொண்டிருந்த இவர், தனது தொடக்ககால மொழியியல் ஆய்வை இந்துஸ்தானி மொழி பற்றிய ஆய்வாக இங்கே தொடங்கினார்.

சேம்பர்களின் தன் வரலாற்றுத் தொகுப்பில் இவரைப் பற்றி குறிப்பிடும்போது, அடர்ந்த தலையும் மீசையும் இமயமலை பனிக்கட்டிகளின் வெண்மையையொத்த நிறமும் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் காணப்படும் அவரது முகமும் மக்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அன்னாளில் அவரை ‘வங்காளப் புலி’ என்று அழைத்தது இன்றளவும் பெருமைக்குரியது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1782- ஆம் ஆண்டில் ஆங்கிலேய கப்பற்படையில் துணை அறுவைச் சிகிச்சைப் பயிற்சிக்காக இந்தியாவிற்கு வந்த கில்கிறிஸ்ட் பம்பாயில் வந்திறங்கினார். பிறகு, 1784-ஆம் ஆண்டு ஆங்கிலேயக் கிழ்க்கிந்திய கம்பனியில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியமர்த்தப்பட்டார்.

அவர் இந்தியாவை நோக்கி பயணம் தொடங்கிய காலத்திலேயே இந்துசுதானி மொழி ஆய்வில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்தார். அந்த ஆர்வத்தினால், 1785-ஆம் இந்துசுதானி மொழி ஆய்வில் ஈடுபடுவதற்காக ஓராண்டு காலம் பணிவிடுப்பு வேண்டுமென கோரிக்கை வைத்து அனுமதி பெற்றார்.

ஆனால், அந்த ஆய்வுப் பணியில் ஈடுபாடு மிகவே தனது பணி விடுப்பை 1787-ஆம் ஆண்டுவரை நீட்டிக்கொண்டே சென்றவர், மீண்டும் மருத்துவ பணிக்கு திரும்பவேயில்லை.

அவரது ஆய்வுப்பணியின் விளைவாக ஆங்கிலம் - இந்திசுதானி அகராதியை (A Dictionary: English and Hindoostanee) முதன்முதலாக வெளியிட்டார். ஸ்டார்ட் மற்றும் கூப்பர் நிறுவனத்தின் வாயிலாக 1787 - 1790 ஆண்டுகளில் இது வெளியிடப்பட்டது. அவர் இந்துசுதானியை பிரித்தானிய நிர்வாகத்தில் புகுத்தவும் பரவாலக்கவும் விரும்பினார்.

ஆங்கிலேயர்களுக்கு இந்துசுதானி பயிற்சியளிக்க, கல்கத்தாவில் ஒரு பயிற்சி நிறுவனத்தைத் தொடங்க வேண்டுமென ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும், அன்றைய இந்திய ஆளுநரான இருந்த வெல்லெஸ்லி பிரபுவிற்கும் கடிதம் எழுதினார்.

அவரது திட்டத்தையும் முயற்சியையும் உற்றுப் பார்த்த நிர்வாகம் அதற்கு அனுமதி வழங்கியது. முதலில் கீழைத்தேய மொழிப் பயிற்சி நிறுவனம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனம், அடுத்த ஆண்டே அதுவொரு கல்லூரியாக உருவெடுத்து, அக்கல்லூரி வில்லியம் கோட்டைக்குள் ஒரு பகுதியாக 1800-ஆம் நிறுவப்பட்டது.

அக்கல்லூரியின் முதல் முதல்வராக பொறுப்பேற்ற கில்கிறிஸ்ட் 1804-ஆம் ஆண்டு வரை அப்பணியில் தொடர்ந்தார். பணியிலிருந்த காலம் வரை இந்துசுதானி மொழி தொடர்பாக பல்வேறு நூல்களை வெளியிட்டார். ”கீழைத்தேய மொழிகளை அறிவதற்கான மேலைத்தேய ஒலிப்பு முறைகளைக் கொண்ட நிலையான நடைமுறைக் கோட்பாடுகள்” போன்ற பல்வேறு முக்கிய அறிமுக நூல்களை அவர் வெளியிட்டார்.

கில்கிறிஸ்ட் இந்தி மொழியை வளர்ப்பதற்காக, இந்திய எழுத்தாளர்களையும் ஆய்வாளர்களையும் கல்லூரிக்குள் கொண்டு வந்து அவர்களுக்கு தேவையான நிதியுதவிகளையும் சலுகைகளையும் வழங்கி ஊக்கப்படுத்தினார். அக்கல்லூரிக்குள் நுழைந்த இந்திய எழுத்தாளர்களின் பங்களிப்பால் பல இந்திப் படைப்புகளும் இலக்கியங்களும் வெளி வந்தன.

பிரேம்சாகரும் (அன்புக்கடல் எனும் நூலை எழுதியவர்) லல்லுலாலும் (1763-1825) கில்கிறிஸ்ட் கண்டடைந்த இரண்டு முக்கியமான இந்திப் படைப்பாளிகள். கில்கிறிஸ்ட்டின் கடின முயற்சியாலும் ஊக்குவிப்பாலும் 1818-ஆம் ஆண்டு பைபிளின் இந்திமொழி பதிப்பு வெளிவந்தது.

மேலும் ’உதந்த் மார்த்தண்ட்’ என்ற இந்திமொழி தின இதழும் வெளிவந்தது. இது தான் இந்தி மொழியில் வந்த முதல் இதழாகும். இது, 1826-ஆம் ஆண்டு கல்கத்தாவில் வெளியிடப்பட்டது.

கில்கிறிஸ்ட் கரிபோலி மொழியை இரண்டு வடிவங்களாகப் பிரித்தார். இந்துசுதானியை உள்ளடக்கிய கரிபோலி மொழியானது, இந்தி, உருது என இருமொழிக்கு வித்திட்டது. இரண்டிற்கும் தனித்தனியான எழுத்துருக்களும் மொழியமைப்புகளும் உருவாக்கப்பட்டன. அதாவது, தேவநாகரி வடிவில் எழுதப்பட்ட இந்துசுதானி இந்தி எனவும், பெர்சியன் வடிவில் எழுதப்பட்ட இந்துசுதானி எனவும் உருது எனவும் திருத்தப்பட்டது.

இந்திய மொழிகள் பற்றிய உண்மைகள்: என்ற கட்டுரையில் இந்தியின் தோற்றம் குறித்து சந்தோசு குமார் கரே குறிப்பிடுகையில், “இந்தி மொழியும் உருது மொழியும் தனித்தனியான மொழிகள் என்ற கருத்துருவாக்கம் 19-ஆம் நூற்றாண்டில் கல்கத்தாவில் வில்லியம் கோட்டைக் கல்லூரியில் தோற்றுவிக்கப்பட்டது.

மேலும், இந்தி மொழி சமற்கிருதத்திலிருந்தும் உருதுமொழி பெர்சிய அல்லது அரேபிய மொழியிலிருந்தும் தத்தம் இலக்கிய இலக்கணங்களைக் கடன் வாங்கி உருப்பெற்றவை” என்று தெளிவாக அதில் குறிப்பிடுகிறார்.

”இன்று நாம் காண்கின்ற இந்த இந்தி மொழியானது 19-ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது” என ’இந்திமொழி இலக்கியத்தின் வரலாறு’ எனும் நூலில் அதன் ஆசிரியர் கே.பி. சிண்டால் (K.B. Jindal) குறிப்பிடுகிறார்.

தாமசு தி புரிஜின் (Thomas De Bruijin) எனும் தட்சு (Dutch) நாட்டைச் சேர்ந்த சமகாலத்திய வரலாற்று ஆய்வாளரும், “நவீன இந்தியின் பிறப்பிடம் கல்கத்தாவின் வில்லியம் கோட்டை தான்” என்று குறிப்பிடுகிறார்.

”தூய இந்தி என்று சமகால இந்தி பேசும் மக்களால் கொண்டாடப்படும் இந்தி மொழியானது, இந்தியாவில் பிறந்த எந்தொவொரு பூர்வக்குடி மக்கள் பேசிய மொழியே கிடையாது. அது முழுக்க முழுக்க செயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட ஒரு மொழி. ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட இம்மொழி அவர்களாலேயே இந்தி என பரப்புரை செய்யப்பட்டது.” என்று, 19, 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற ஐரிசு நாட்டு மொழியியல் அறிஞரான ஜார்ஜ் ஆபிரகாம் கிரியர்சன் (George Abraham Grierson,) குறிப்பிடுகிறார்.

மேலெ குறிப்பிடுப்பட்டுள்ள அத்துணைத் தரவுகளையும் வரலாற்றையும் உற்றுநோக்கும்போது, “நவீன இந்திமொழியின் பிறப்பிடம் கல்கத்தா தான். ஜான் கில்கிறிஸ்ட், வில்லியம் கோட்டையில் பெற்றெடுத்த குழந்தை தான் இந்தி” என்று என் இளமைக்காலத்தில் எங்கள் பாட்டி கூறியது, ஐயத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்ட உண்மை தான் என்பது தெளிவாகிறது.

ஆங்கிலம் பேசுபவர்கள் மெக்காலேவின் குழந்தைகள் என்றால், இந்தி பேசுபவர்கள், கில்கிறிஸ்ட் பெற்றக் குழந்தைகள் என்பது சற்றும் மிகையானக் கூற்றல்ல.

நிறைவுரை:

குடியாட்சி நாடாக மலர்ந்துள்ள இன்றைய நவீன இந்தியாவின் வரலாறு என்பது கிட்டதட்ட 8000 ஆண்டுகால பழைமையான வரலாற்றைக் கொண்டது. அதன் பண்பாட்டுத் தன்மையும் மொழியியல் பன்மைத் தன்மையும் விரிந்து கொண்டே செல்பவை.

அவ்வாறு இருக்க, வெறும் 200 ஆண்டுகாலம் மட்டுமே ஆகியிருக்கின்ற அதுவும், இந்தியாவை ஒட்டுமொத்தமாக சுரண்டி கொழுப்பதற்காக வந்த ஓர் ஆங்கிலேயத் தனியார் கம்பெனியால் அவர்களுடைய தன்னலத்திற்காகவும் ஏகாதிபத்தியத்திற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான மொழியை இந்தியாவின் தேசியமொழி என்று கூறுவது கிஞ்சித்தும் பொருத்தமற்றது; அதற்கான எந்தத் தகுதியும் அம்மொழிக்குக் கிடையாது என்பதே வரலாற்று அடிப்படையிலான உண்மை.

உள்துறை அமைச்சர் அமித் சா ‘இந்தி நாளில்’ வெளியிட்டிருக்கும் செய்தியானது, ‘அகண்ட இந்து வைதீகப் பாரதம்’ என்ற அவர்களது அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்துவதோடு, “இந்தி தேசிய மொழி”, “சமற்கிருதம் தாய்மொழி” என ஆக்க வேண்டும் என்ற அவர்களது மொழி சார்ந்த அரசியலும் இதில் தெளிவாக வெளிப்படுகிறது.

ஆனால், சமற்கிருதம் ஒருபோதும் இந்தியாவின் தாய்மொழியாகி விட முடியாது என்பதே யதார்த்தமான உண்மை. இந்தி மட்டுமல்ல எந்தவொரு தனித்த மொழியும் இந்தியா முழுமைக்கும் தாய் மொழியாகிவிட முடியாது என்கிற அளவுக்கு மொழி பன்மைத்துவம் நிலவுகின்ற நிலப்புரப்பு இந்தியா.

இங்கு, இந்தோ - ஆரிய மொழிக் குடும்பங்கள், திராவிட மொழிக் குடும்பங்கள், சீன - திபெத்திய மொழிக் கொடும்பங்கள், ஆஸ்திரேலிய பழங்குடியின மொழிகள், டை - கடை மொழிகள், அந்தமான் பழங்குடியின மொழிகள் என பல்வேறு வகையான மொழிக்குடும்பங்களும் ஒவ்வொன்றிற்குள்ளும் பல்வேறு வகையான மொழிகளும் காணப்படுகின்றன.

இவ்வளவு பன்மைதன்மை மொழியமைப்பு நிலவுகின்ற ஒரு நாட்டிற்கு ஒரேயொரு தாய்மொழி; தேசியமொழி என்பது குருட்டுத் தனமானது; அடிப்படைத் தன்மையற்றது.

எனவே, இந்தியோ அல்லது வேறெந்தோ மொழியோ இந்தியாவின் ஒற்றைத் தேசிய மொழியாகி விட முடியாது. இந்தியா ஒருபோதும் ஒற்றைத் தேசிய மொழியை வேண்டி நிற்கும் நாடல்ல. பன்மை மொழியமைப்பும் பன்மை பண்பாட்டுக் கூறுகளும் அடங்கிய இந்தியாவே என்னாளும் வேண்டப்படுவது.

’இந்தி – இந்து - இந்தியா’ என்று ’பசுப்புனிதம்’ பேசும் இந்திய மாநிலங்களைச் சேராத மற்ற மாநிலங்களின் இந்தியர்கள், சங்கிகளின் ’சமூக - பண்பாட்டு போர்த் தொடுப்பையும் முயற்சிகளையும்’ மிகக் கவனமாக புரிந்துகொள்ள வேண்டும்.

காலனியாதிக்கக் காலத்தில் பிரித்தானியர் முயன்றதைப் போலவே இந்தியாவின் பன்மையடையாளங்களைச் சிதைத்து “இந்துத்துவா” என்ற ஒற்றை அடையாளத்திற்குள் இந்தியாவை சமுக - பண்பாட்டு மடைமாற்றம் செய்வதுதான் இவர்களது ஒரே நோக்கம் என்பதனை மாட்டு மூத்திரப் புனிதம் பேசாத மற்றைய இந்திய மாநிலத்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

”அகண்ட இந்து - வைதீகப் பாரதம்” என்பதனை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்சின் செயல் திட்டத்திற்காகவே, இந்தி மொழிப் பேசாத மக்களின் மீது இந்தி வேண்டுமென்றே திணிக்கப் படுகிறது.

இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் அவர்களது மொழியையும் பண்பாட்டையும் பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்கான சம உரிமைகளை, இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு-29 (Article 29 ) ஆனது உறுதிப்படுத்துகிறது. எனவே, ஒரு மொழி பேசும் மக்களின் மீது இன்னொரு மொழியைத் திணிப்பது என்பது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

ஆனால், அத்தகைய முயற்சியை அரசு தொடர்ந்து மேற்கொள்ளுமேயானால், பன்மைத்துவம் நிலவுகின்ற இந்தியச் சமூகத்தில் மிகப்பெரிய விளைவுகளை சமூக ரீதியிலும் மாநில ரீதியிலும் மொழியியல் ரீதியிலும் எற்படுத்தும் என்ற எச்சரிக்கையை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும்.

”ஒரு மொழி: ஒரு நாடு” என்பதனை இந்தியா ஒருபோதும் ஏற்காது; விரும்பாது. “பன்மைத்துவத்தை பேணுவதன் வழி ஒருமை காணல்” அதாவது, “பன்மையில் ஒற்றுமை” (வேற்றுமையில் ஒற்றுமை என்பது சரியானக் கூற்றாக மொழிப்பெயர்ப்பாளருக்குத் தோன்றவில்லை) என்பதே இந்தியா என்னாளும் காக்க விரும்புகின்ற கோட்பாடு.

அனைத்து கோளாறுகளுக்கும் ஊற்றுக்கண் எது?

”இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் எப்படி ‘இந்துக்கள்’ ஆக்கப்பட்டார்கள்; இந்துத்துவா என்பது இந்தியமில்லை” என்று 2017-ஆம் ஆண்டு நானொரு கட்டுரை எழுதியுள்ளேன். அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டவற்றை இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இன்று இந்தியாவை அச்சுறுத்துகின்ற ஆர்.எஸ்.எஸ் – பாஜக – வி.எச்.பி போன்ற வலதுசாரி சங்கப் பரிவாரங்களின் அடிப்படையான சொல்லாடல் நான்கு. 1. இந்தி, 2. இந்து, 3. இந்துத்துவம், 4. இந்துசுதான்.

இந்த வலதுசாரிக் கும்பல்களின் கருத்துப்படி, இசுலாமியர்களும் கிறித்துவர்களும் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தவர்கள். ஆனால், நகை - முரணான உண்மையென்னவென்றால், இசுலாமியர்கள் தான், ‘இந்து’, ‘இந்துசுதான்’ என்ற சொற்களை உருவாக்கிக் கொடுத்தவர்கள்.

பின்னால், வந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியும் பிரித்தானிய வல்லாதிக்கப் பேரரசும் தங்களின் சுய நலத்திற்காக, இசுலாமியர்கள் உருவாக்கிய அந்த இரண்டு சொல்லாடல்களையும் பயன்படுத்தி ‘இந்தி’யும் ‘இந்து’ என்பதனுடன் ஓர் ‘இயத்தை’ச் சேர்த்து ‘இந்துத்துவம்’ என்பதையும் உருவாக்கி உலவவிட்டார்கள்.

ஆக, இசுலாமியர்களும் கிறித்துவர்களும் கொடுத்த பிச்சைக் கொடையை வைத்துக் கொண்டு தான், இன்றயைய இந்த வலதுசாரி சங்கி கும்பல்கள், இந்து - வைதீகத் தேசியத்தையும் அதற்கான அடையாளத்தையும் உருவாக்கத் துடிக்கின்றன.

ஆக, யார் இவற்றிற்கெல்லாம் ஆதாரமாக விளங்கினார்களோ அவர்களையே அடித்து நொறுக்குவது என்பது தான் முரண்களின் ஊற்றுக்கண். இதைவிட ஒரு மோசமான முரண் உறுதியாக இருக்கவே முடியாது இல்லையா!

கட்டுரையாளர் : தேவதான சவுத்திரி (Devdan Chaudhuri), சாகித்திய அகாதெமி விருதுப் பெற்றவர், கட்டுரையாளர், எழுத்தாளர், கவிஞர். ‘கொத்து’ (punch) என்ற இதழின் ஆசிரியர். Anatomy of Life என்ற நாவலின் ஆசிரியர். கொல்கத்தாவில் வசிப்பவர்.

தமிழில் : ப.பிரபாகரன்