facebookமுகநூல் பற்றிய இத்தனை சிந்தனை தேவையா என்று கூட என்னையே கேட்டுக் கொண்டேன். கண்டிப்பாக மனித பரிணாமத்தின் அடுத்த கட்டம்.. முகநூல் மாதிரியான ஊடங்களின் வாயிலாக தான் நடந்து கொண்டிருக்கிறது. சத்தமே இல்லாமல் மூன்றாம் உலக போர் அரங்கேறிக் கொண்டிருப்பது போல.

முக்கியமான விஷயம் என்னவென்றால் முகநூலில் லைக்ஸ் எத்தனை பெரிய பங்கு வகிக்கிறது என்பது தான். எனக்கு லைக்ஸ் எல்லாம் வேண்டாம் என்று 90 சதவீத மனம் சொன்னாலும்... 10 சதவீதம் ஓரக்கண்ணால் தேடும் என்பது தான் நிஜம். நிஜத்துக்கு நான் நீ கிடையாது.

முகநூல் தோன்றிய காலத்தில் இருந்தே கண்டு கொண்டிருப்பது... மொக்கையாக இருந்தாலும் அது பெண் profile என்றால்.. மானாவாரியாக லைக்ஸ் விழுவதும்.. பொக்கிஷமாகவே இருந்தாலும்.. அது ஆண் profile என்றால்... போனா போகுது என்று 10... 20 லைக்ஸ் விழுவதும் சகஜமான ஒன்று தான்.

வழக்கத்தில் இருக்கும் வாழ்க்கை முறையைப் போலி profile கள் மாற்றி அமைப்பதாக நினைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும்... பெண்களின் பக்கத்துக்கான லைக்ஸை இழுக்கும் அதே பழைய போலி வழியைத்தான் பின்பற்றுகின்றன. இதில் விதி விலக்காக சில ஆண் profileகளுக்கும் குவியும் லைக்ஸ்களுக்கு காரணம் அவர் அன்பானவராக கூட இருக்கலாம்.

இதில் இன்னொரு கோணம் என்னவென்றால்... என்னை விட அறிவிலும்.. யதார்த்தத்தில்.. அனுபவத்திலும் கீழே இருந்தால் எனக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. அழகாகச் சென்று லைக்கிட்டு வாழ்த்தி பின்னூட்டமிட்டு... முடிந்தால் பகிர்ந்தும் வருவேன்.

ஆனால் என்னை விட மேலே சொன்னவைகளில் மேலே இருந்தால்.. ஒன்று ரகசியமாக படித்து... அல்லது மொத்தமாக புறக்கணித்து விடுவேன். அது அவர்களை வைத்து தன் அறிவை எடை போடும் ஆழ்மன அச்சம். அச்சத்தில் நகர்வுகள் இருக்கலாம். அது அடியோடு ஒருபோதும் நம்மை விட்டு அகலாது. அச்சம் ஆதி மனிதனின் அம்சம்.

மனித மனம் எப்போதும் நம்மை விட கீழே இருப்போரைக் கொண்டு நம்மை சமநிலை படுத்த பார்க்கிறது. அதே நேரம் நம்மை விட மேலே இருப்போரைக் கண்டு சமநிலையை தவற விட கூடாது என்று அஞ்சுகிறது. அதன் விளைவு தான்.. ஒரு உறைக்குள் இரு கத்திகள் இருக்காது போன்ற சொலவடைகள்.

கீழே இருப்போரை வாழ்த்தி விட்டு.. ஒரு பெருந்தன்மைக்குள் தன்னை நிறுத்திக் கொள்வது... பாலகுமாரன் சொன்ன.. "அவையடக்கமும் அகம்பாவம்" என்பது. அதே நேரம்.. மேலே இருப்போருக்கு ஒரு லைக்கோ வாழ்த்தோ சொல்லி விட்டால்... எங்கே தனக்கான இடம் தடுமாற்றம் ஆகி விடுமோ என்ற பேரச்சம் உள்ளே நிமிண்டுகையில் எதுக்கு வம்பு என்று கண்டாலும் காணாமல் கடந்து விடுகிறார்கள்.

இது எல்லாவற்றையும் மாற்றி யோசிக்கும்.... கொடுத்து வாங்கும்.. லாவகம் தெரிந்தோரும் சில சதவீதம் உண்டு. இவை எதிலும் சிக்காமல் போகிற போக்கில் படிக்கிறோமோ இல்லையோ கண்ணில் பட்டதுக்கெல்லாம் லைக்ஸ் இடுவோரும் உண்டு.

தொடர்பே இல்லாமல் பகிர்வோரும் உண்டு. இதில்... முகநூலுக்கு வந்திருக்கும் ஆரம்பக் கட்ட கோளாறுகளும் அடங்கும். படைப்பு தாண்டி அந்த படைப்பாளியை பிடிக்கும் என்பதற்காகவே நிகழும் லைக்ஸும் பின்னூட்டமும் பகிர்தலும் தனி வகையறா.

எல்லாவற்றிலும் விதி விலக்குண்டு என்பது போல.. நிஜமாகவே மேல் சொன்ன எந்த வகைக்குள்ளும் சிக்காமல் நிஜமாகவே நன்றாக இருக்கும் பட்சத்தில் வந்து பாராட்டுவதும்.. இல்லையென்றால் நேரடியாக நன்றாக இல்லை என்று சொல்லி விடுவதும்...அல்லது எதுவும் சொல்லாமல் கடந்து விடுவோரும் உண்டு.

கூட்டு மனப்பான்மை... குழு சார்ந்து இயங்குதல்.... ஒருவரை பிடிக்கும் என்பதாலேயே அவர் எந்த மொக்கை போட்டாலும் ஆகா ஓஹோ... என்று பாராட்டி தள்ளுவதும்... ஒருவரை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே அடுத்த புக்கர் அவார்டு உங்களுக்குத்தான் என்று அடித்து விடுவதும்... சில சதவீத தனிப் பெரும்பான்பை அது. இதில்.. உள்பெட்டியில் சென்று வழிவதெல்லாம் கணக்கில் இல்லை.

ஒரு ரெண்டு சதவீதம் எது பதிந்தாலும் வந்து வம்பிழுப்பது.. பால் உறுப்பு பெயர்களைச் சொல்லி கிளர்ச்சி அடைவது என்று அது காலத்துக்கும் சபிக்கப்பட்ட தொகுதி. முகநூல் வழியாக டிரஸ்ட் ஆரம்பித்து... ஆட்டையைப் போடும் கூட்டமும் உண்டு. அதில் எத்தனை சதவீதம் ஊருக்கு.. எத்தனை தனக்கு என்பது தனிக்கணக்கு.

நிஜமாகவே ஊருக்கு உழைக்கும் கூட்டமும்... இங்கே குறிப்பிட்ட சதவீதம் உண்டு. மற்றபடி.. ஸ்ட்ரைட்டா ஹீரோவாகி... கோட்டையைப் பிடிக்கும் எண்ணமும் மிக சிறிய முகநூல் வட்டத்துக்கு உண்டு. என்ன செய்ய. ஏதாவது செய்ய வேண்டுமே. வாழ்வு சிறியது.

போன வாரம் எனக்கு வந்தார். இந்த வாரம் அவருக்குப் போக வேண்டும் என்று குறிப்பிட்ட சதவீதம் கட்டுக்கோப்பாக முகநூலை கையாள்வதையும் கவனிக்க முடியும். நான் மட்டும் உனக்கு லைக்கிட்டே இருக்கேன்.. நீ என்ன கண்டுக்கறதே இல்ல என்று உறவை முறித்துக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

கருத்தியல் ரீதியான மாற்றங்களை மக்களின் விழிப்புணர்வுக்காகக் கொண்டு செல்லும் தொண்டு உள்ளங்களும் உண்டு. இஸங்களை தவறாகப் புரிந்து கொண்டு கத்திக் கொண்டே இருப்போரும் உண்டு. தூங்குவதை கூட லைவிட்டு லக லக லக செய்யும்.... பேரிளம் பெண்களின் அட்டகாசம் தான் கொஞ்சம் அச்சுறுத்துபவை.

எல்லாம் தாண்டி முகநூல் என்ற காலத் தேவையை கனக்கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டிருப்போரும் உண்டு. அவர்களின் பெருந்தன்மை எப்போதாவது சறுக்கும் போதுதான் இந்த மாதிரி கட்டுரைகள் கொப்பளித்து விடுகிறது என்ற உண்மையையும் இங்கே போட்டுடைக்க வேண்டும்.

முகநூல் மயக்கத்துள் சிக்கிக் கொண்டு வீணா போவது ஒரு பக்கம் என்றால்.. முகநூல் மைதானத்தில் நிதானமாக ஆடி கோல் போட்டுக் கொண்டே இருப்பது கலை. வாய்த்தோருக்கு வாழ்த்துக்கள். மற்றோருக்கு வாய்க்கட்டும்.

ஜெய் mark zuckerberg

- கவிஜி

Pin It