திருமங்கலம் இடைத்தேர்தலை மிகவும் அமைதியாக துணை இராணுவக் கட்டுப்பாட்டில் எவ்வித முறைகேடும் இல்லாமல் மிகச்சிறப்பாக நடத்திக்காட்டி இருக்கிறது இந்தியத் தேர்தல் கமிஷன். எதிர்கட்சிகளை விட ஆளும் கட்சியிடமே அதிகமான கெடுபிடிகளைக் காட்டி வறுத்தெடுத்தது தேர்தல் கமிஷன். மக்களவைத்தேர்தல் மிக அண்மையில் வரும் ஒரு சூழலில் அவசர அவசரமாகத் திருமங்கலத்தில் இடைத்தேர்தலை வரவைத்ததில் அதிமுகவின் செல்வாக்கு தேர்தல் கமிஷனில் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது என்பதையும் உணர முடிகின்றது. ஆனால் நினைத்தது ஒன்று, நடந்தது வேறு! மக்களிடம் தொடர்ந்து அசைக்க முடியாத செல்வாக்கு பெற்ற மாபெரும் தலைவராகத் தமிழக முதல்வர் கலைஞர் திகழ்கிறார். கட்சியிலும் ஆட்சியிலும் அவரின் உழைப்புக்கு ஏற்ற வகையில் வெற்றி மிகப்பிரமாண்டமாக வெளி வந்திருக்கின்றது. திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் சுமார் எண்பதாயிரம். வாக்கு வித்தியாசம் மட்டும் சுமார் நாற்பதாயிரம் வாக்குகள். சென்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இரண்டு மடங்கு கூடுதலான வாக்குகளைப் பெற்று திமுக கம்பீரமாகவும், அதே சமயம் அதிமுக கூட்டணி சென்ற தேர்தலில் முன்பு பெற்ற வாக்குகளில் சுமார் ஐயாயிரம் வாக்குகளை இழந்து சோகமாகவும் காட்சியளிக்கிறன.


நடந்து முடிந்த திருமங்கலம் இடைத்தேர்தல் பல உண்மைகளை அரசியல் உலகுக்கு உரைத்திருக்கின்றது. அண்மையக் காலங்களில் திமுக மீதும் திமுக அரசு மீதும் அவதூறுப்பிரச்சாரம் செய்தும் திமுகவின் செல்வாக்கு குறைந்து வருவது போலவும் சில ஏடுகளும் சில அரசியல்தலைவர்களும் தொடர்ந்து பரப்பி வந்த கருத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது புலனாகின்றது. இந்நேரம் திமுக மட்டும் தோல்வியைத் தழுவியிருந்தால் பல்வேறு விஷஅம்புகள் விமர்சனம் என்ற பெயரில் கலைஞரைத் துளைத்தெடுத்திருக்கும். மாறாக அதிமுக படுதோல்வி என்றவுடன் பல்வேறு நொண்டிச்சாக்குகளைத் தேடி அலைகிறார்கள்.


பணநாயகம் வெற்றி பெற்றுவிட்டது. ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பது எல்லாம் தோல்வி அடைந்தவர்கள் புலம்பும் புலம்பல். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிடம் இல்லாத பணமா? பணப்பட்டுவாடாவில் திமுகவை முந்தியது அதிமுக என்று ஊடகங்களே செய்தி வெளியிட்டதை வசதியாக மறந்துவிட்டு விமர்சனம் செய்வது உண்மையை மறைப்பதாகும்.


இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது எல்லாம் அரசியல் வரலாறு தெரியாதவர்கள் கூறிடும் பொய்மூட்டை. அதிமுக கட்சி, தான் சந்தித்த முதல் தேர்தலான திண்டுகல் தேர்தலின் போது திமுக ஆளும் கட்சிதான். ஏன் அதிமுகவே, எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் காலத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் அண்ணாநகர் மற்றும் மயிலாடுத்துறை தொகுதிகளில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. இவை போல எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன. எனவே இடைத் தேர்தலில் ஆளும்கட்சிக்கே வெற்றி என்ற வாதம் எல்லாம் எடுபடாது. மக்கள் நினைத்தால் முடிவுகள் மாறியும் வரும்.


சென்ற தேர்தலில் திமுக பக்கம் இருந்த கம்னியூஸ்ட்டுகள் தற்போது இல்லை. பாமக கட்சியும் நடுநிலை என்று அறிவித்து விட்டது. காங்கிரஸ் கட்சியின் நிலைமையோ படுமோசம். எப்போதும் காங்கிரஸ் கட்சியில் மாற்றுக் கட்சி ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இருப்பார்கள். தற்போது இருக்கும் பல்வேறு குழுக்களில் இருக்கும் ஜெயலலிதா/விஜயகாந்த் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பையும் மீறி திமுக இமாலய வெற்றி பெற்றிருக்கின்றது. ஆக ஒருவிதத்தில் பார்த்தால் இந்த வெற்றி திமுக என்ற தனிப்பட்ட இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகவே எடுத்துக்கொள்ளலாம்.

கூட்டணியால் பாமக மற்றும் கம்னியூஸ்ட் கட்சிகளால் பிரதான கட்சிகளுக்கு எவ்விதப்பயனும் இல்லை. பிரதான கட்சிகள் வழியேதான் அக்கட்சிகள்தான் பயன் பெற்று வருகின்றன என்பதும் தெளிவாகி விட்டது. வட்டாரக் கட்சியான மருத்துவர் இராமதாசு பாமக அண்மையக்காலங்களில் மத்தியில் ஆளும் அமைச்சர்களாக வலம் வருவது பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினால்தான் என்பதை சம்பந்தப்பட்ட கட்சிகள் உணர வேண்டும். இது திருமங்கலம் தெரிவிக்கும் ஒரு உண்மையாகும். வட்டாரக்கட்சிகள் தேர்தல்சமயத்தில் பிரதான கட்சிகளிடம் சீட்டுகளுக்காகப்பேரம் பேசிக் கெடுபிடி செய்வதற்குத் திருமங்கலம், திருமங்களம் பாடிவிட்டது. இனி கொடுப்பதைத்தான் பெற்றுக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் பாமக, மதிமுக, கம்னியூஸ்ட்டுகள் தள்ளப்பட்டுவிட்டன.


இன்று அரசியல் களத்தில் பலத்த அடிவாங்கி கட்டுத்தொகையை (ஜாமீன்தொகை) இழந்து மிகவும் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது விஜயகாந்தின் தேமுதிக கட்சி. மிகப்பெரிய தோல்வி. ஊடகங்களால் ஊதி ஊதிப் பெரிதாகக் காட்டிய பிம்பமாகக் காற்றுடைத்த பலூன் கதையாக பட்டென்று வெடித்துச் சிதறிய நிலையில் விஜயகாந்தின் மீது இருந்த நம்பிக்கை உடைந்து சிதறியிருக்கிறது. அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்திற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்தின் படுதோல்வி அதிமுக தொண்டர்களுக்குச் சற்று ஆறுதலான விஷயம்தான். விஜயகாந்த் தனது உயரத்தைச் சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டியதன் உண்மையைப்போட்டு உடைத்திருக்கிறது திருமங்கலம்.

நடிகர் விஜயகாந்தின் வீரியத்தை பெருமளவு குறைத்த பெருமை நடிகர் சரத்குமாரையே சாரும். அரிதாரம் பூசிய சினிமா நடிகர்களை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மக்கள் எண்ணியதற்கு இந்த இரண்டு நடிகர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்தது ஒரு காரணமாக அமைந்தது எனலாம். சினிமாவினால் கிடைக்கும் பிரபலத்தை முதலாகப் போட்டு, நடிகர்கள் எல்லாம் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைப்புக்கு ஆப்பு வைத்துத் திருமங்கலம், திருமங்களம் பாடிவிட்டது.

சரி திமுகவின் இந்த மாபெரும் வெற்றிக்கு என்னதான் காரணம்?

அனைவரின் விரலும் ஒரு குறிப்பிட்ட நபரைத்தான் முதலில் சுட்டிக் காட்டுகின்றது. அந்த நபர் “ஹாட்ரிக் வீரர்” அழகிரிதான். இக்கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. சரியான தலைமைத்துவப் பண்புகளுடன் தேர்தல் வேலைகளை முடுக்கிவிட்டுத் தொண்டர்களுடன் தொண்டராகக் கடுமையாக உழைப்பவர் அழகிரி.

திமுக தமது ஆரம்பக்காலங்களில் தொண்டர்களின் எழுச்சியைத் தட்டி எழுப்பி வெற்றிக்கனியை சுவைத்து வந்த ஒரு இயக்கம். இடையில் ஒரு தொய்வு ஏற்பட்டது. அந்தத் தொய்வுக்குச் சற்றும் இடம் தராமல் மதுரையில் அழகிரி தலைமையில் திமுக தொண்டர்கள் எழுச்சி பெற்று விளங்குகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை! அவர்களின் கடுமையான உழைப்பே இந்த மாபெரும் வெற்றி ஏற்பட சாத்தியமானது.

ஆனால் அடிப்படையில் கலைஞரின் நல்லாட்சியின் பயன்கள் அடித்தள மக்களுக்கும் சென்றடைந்திருக்கின்றது என்பதே இவ்வெற்றிக்கு விலாசமாகின்றது. இதை அழகிரியே அண்மைய பேட்டிகளில் கூறியிருக்கிறார். ஒன்றும் ஒன்றும் சேர்ந்து இரண்டு என்பது போல அழகிரியின் ஆற்றல் கலைஞரின் நல்லாட்சி இரண்டும் சேர்ந்து வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றது. ஆக, தொடர்ச்சியாக மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும், அதே சமயம் அழகிரி போன்ற ஆற்றலாளர்களின் சேவை கட்சிக்குத் தேவை. அழகிரி போன்ற ஆற்றலாளர்கள் அனைத்துப் பகுதிகளிலும் உருவாகிச் செயல்பட வேண்டும்.

இங்கே முக்கியமாக ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். ஸ்டாலின் உழைப்பை யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. தொடர்ந்து தொகுதியில் தமது அண்ணனுடன் இணைந்து அருமையான முறையில் யாரையும் தரம்தாழ்த்தி விமர்சிக்காது சிறந்ததொரு பிரச்சார உத்தியை மேற்கொண்டார். ஸ்டாலின் உருவத்தில் மக்கள் கலைஞரைக் கண்டனர். தயாநிதி மாறன், ஸ்டாலின், அழகிரி கூட்டு மக்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. இந்த ஒற்றுமை நீடித்து நிலைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். இவ்வுண்மையே திமுகவிற்குத் திருமங்கலம் கூறும் நற்செய்தியாகும்.

அமைதியான ஆர்ப்பாட்டாமில்லாத ஸ்டாலின் பிரச்சாரம் மக்களிடம் எடுப்பட்டது போல ஆவேச பேச்சாளர் வைகோ கடுமையாகப் பிரச்சாரம் செய்தும் எதுவும் மக்களிடம் சென்று சேரவில்லை. மக்கள் எல்லாம் தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள். யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்கிறார்கள். இனி வைகோவின் அரசியல் வாழ்வு ஒரு கேள்விக்குறிதான்! மதிமுக கரைந்துகொண்டிருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

மதிமுக வெற்றி பெற்ற தொகுதியை அதிமுகவிடம் தாரைவார்த்ததன் மூலமாக வைகோவே மதிமுக கரைந்துகொண்டிருப்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். திமுகவை எதிர்க்கும் ஆற்றல் தமக்கு இல்லை, அந்த ஆற்றல் அதிமுகவிற்கே உள்ளது என்பது போல அவர் செய்கை அமைந்து விட்டது.

எந்த திருமங்கல மேடை பேச்சிற்காக எழுச்சி பெற்று பொடாவில் உள்ளே சென்றரோ அதே திருமங்கலம் இன்று வைகோவின் அரசியல் வாழ்விற்கு முடிவுரையும் எழுதிவிட்டது. திருமங்கலம் வைகோவின் அரசியலுக்குத் திருமங்களம் பாடிவிட்டது. மதிமுக தொண்டர்கள் மெல்ல மெல்ல தாய்க்கழகமான திமுகவை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர். இனி தனிக்கடை நடத்துவதினால் யாதொரு பயனும் இல்லை என்பதைத் திட்டவட்டமாக வைகோவிற்குத் தெரிவித்து விட்டது திருமங்கலம். மதிமுகவின் ஒரு பிரிவு எல்.கணேசன் தலைமையில் திமுகவுடன் இணைவது போல வைகோ பிரிவும் அதிமுகவில் இணைந்து விடலாம். இவரின் சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளால் இவரை தங்கள் கட்சிகளில் சேர்த்துக்கொள்ள அக்கட்சித்தலைமையும் விரும்பாது என்றே தோன்றுகிறது. பாவம் திரிசங்கு நிலைதான் வைகோவிற்கு. வினை விதைத்தால் வினையைதானே அறுவடை செய்ய முடியும்!

மதிமுகவிடம் இருந்த தொகுதியைக் கைப்பற்றி தனது செல்வாக்கை நிலைநாட்ட அதிகமான நாட்கள் தொகுதியில் தங்கி அனல் பறக்கும் வகையில் அபாண்டமான பொய்களை அடுக்கடுக்காகக் கூறி பரபரப்பான முறையில் பிரச்சாரம் செய்தார் அதிமுகவின் தலைவி செல்வி ஜெயலலிதா. அப்படிப் பிரச்சாராம் செய்தும் முன்பு தமது கூட்டணி கட்சியான மதிமுக வாங்கிய ஓட்டை விட சுமார் ஐந்தாயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றுப் படுதோல்வி அடைந்திருக்கின்றது அதிமுக.

மக்கள், அதிமுக மீதும் அதன் தலைமை மீதும் நம்பிக்கை இழந்திருப்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. திமுகவைத் தவிர்த்து அனைத்து எதர்க்கட்சிகளின் ஓட்டுகளைக் கூட்டினாலும் கூடத் திமுகவின் வாக்கு வித்தியாசம் மலைக்கும் மடுவிற்கும் உள்ள இடைவெளியாகத் தெரிகிறது. மக்கள் தெளிவான முடிவு எடுத்து திரண்டு வந்து வாக்களித்திருக்கின்றனர்.

அதிமுக கட்சிக்குத் திருமங்கலம் தேர்தல் முடிவு சொல்லும் உண்மை என்ன? அதிமுகவில் தற்போது சரியான தலைமைத்துவமில்லாத நிலையில் அதிமுகவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்ல செல்வி ஜெயலலிதா கட்சிப்பொறுப்புகளில் இருந்து முற்றிலும் விலகிக்கொண்டு ஆற்றல்மிக்கவர்களைக் கட்சிப்பொறுப்புகளில் அமர்த்தினால் மட்டுமே எதிர்காலத்தில் எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக நிலைத்திருக்கும். ஜெயலலிதா மீது நம்பிக்கை இழந்த அதிமுக தொண்டனுக்கும் கட்சியில் மாற்றம் ஏற்பட்டால் சற்று நம்பிக்கை வருவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.

இவையே திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியல் கட்சிகளுக்குத் தெரிவிக்கும் உண்மைகளாகும். திருமங்கலம் திருவாய் மலர்ந்து திருமங்களம் பாடிவிட்டது. சம்பந்தபட்டவர்கள் சிந்திப்பார்களா?

- அக்னிப்புத்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It