பா.ஜ.க. அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு அடுத்த, மற்றுமொரு திட்டம் தான் தேசியக் கல்வி கொள்கையை மாற்றியமைப்பது. வளரும் இளம்தலைமுறையினர் மத்தியிலும், காவிமயத்தின் சிந்தனையை ஊற்றுவதே மிக முக்கியமான ஒன்றாக எடுத்துச் செல்லப்படுகிறது.
அதன்படி, மத்திய பா.ஜ.க. அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு ஒன்றை வெளியிட்டு, அது குறித்த கருத்தை ஜுன் 30ம் தேதிக்குள் மக்கள் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்திருந்தார்கள். இந்த அறிவிப்பு வெளியானவுடனேயே தமிழகத்தில் கூட மும்மொழிக் கொள்கை, நீட் தேர்வு குறித்த எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால், அவர்களின் முழுமையான கல்விக் கொள்கையின் வரைவு குறித்த எதிர்ப்புகள் பெரியளவில் கிளம்பவில்லை.
அதை, உணர்ந்து பா.ஜ.க.வின் கல்விக் கொள்கையின் ஆபத்துகளை பெற்றோர்களுக்கும், அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கும் கொண்டுபோய் சேர்ப்பது இன்றைய தலைமுறையின் முக்கியமான பணியாக இருக்கிறது.
அதுகுறித்த சில செய்திகளை ஆராய்வது அவசியமாகும். பா.ஜ.க. அரசு கொண்டு வந்த நீட் தேர்வை, தமிழகத்தில் எதிர்த்தது போன்று, இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் எதிர்த்ததை காண முடியவில்லை. அப்படியிருந்தும், தமிழகத்தில் அரியலூர் அனிதா, பட்டுக்கோட்டை வைசியா, திருப்பூர் மாவட்டம் வில்லியங்கோட்டைச் சேர்ந்த ரித்துஸ்ரீ உள்ளிட்ட நான்கு பேர்களை பலி கொடுத்துள்ளோம்.
இதற்காக, தமிழக அரசோ, மத்திய அரசோ கவலைப்பட்டதாக தெரியவில்லை. மத்திய அரசு சர்வாதிகாரமாக நீட் தேர்வு நடத்திக் கொண்டிருப்பதை சுயநலம் கருதி தமிழக அரசும், முதலமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருப்பதே தமிழகத்திற்கான பெரிய துரோகமாகும்.
தற்போது, மத்திய அரசு கல்வியை காவிமயமாக்கும் நோக்கோடு மிக மிக அவசரமாக புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து அமலாக்குவதற்கு துடிக்கிறது. புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தால் மாநில மொழிகள் சிதையும். அம்மொழிகளுக்கு கலாச்சாரம், பண்பாடு அனைத்தும் ஒழிக்கப்படும் என்பதே உண்மையாகும்.
புதிய கல்விக் கொள்கையில் முக்கியமாக பாதிக்கப்படுவது மாநிலத்தின் சுயாட்சியும், தன்னாட்சியும் பறிக்கப்படுவதுமாகும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடாக இருந்தாலும், மாநில உரிமைகள் என்பது மிக முக்கியமானதாகும். அதை பறிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது பா.ஜ.க.வின் புதிய தேசிய கல்விக் கொள்கை.
பா.ஜ.க. அறிவிக்கின்ற கல்விக் கொள்கையின் மூலக்கருவான ஒரே நாடு, ஒரே கடவுள், ஒரே மொழி என்ற, இந்த மூன்றுமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடந்த 80 வருடங்களுக்கும் மேலாக பேசிவரும் சித்தாந்தமாகும். இது அமல்படுத்தப்பட்டால் ஆர்.ஆர்.எஸ். அமைப்பு தான் கொடிகட்டி பறக்கும். இந்த கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டவுடன் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து, தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.
குறிப்பாக, கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கத்தினர், மாணவர் சங்கத்தினர், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் புதிய கல்விக்கொள்கை பற்றிய கருத்தினை தெரிவிக்க ஆறுமாத கால அவகாசம் தேவையென கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால், மத்திய அரச அதை ஏற்காமல் 484 பக்கங்களைக் கொண்ட அவ்வறிக்கையை பற்றிய கருத்தை ஒரு மாதத்திற்குள் தர வேண்டுமென மத்திய அரசு கூறியிருப்பது தன்னிச்சையாக, அக்கொள்கையை அமல்படுத்த துடிக்கிறது என்பதை நமக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
பா.ஜ.க. அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையில் உள்ள சில ஆபத்தான விஷயங்களாக கருதப்படுவது, புதிய கல்விக் கொள்கை வரைவின்படி பார்த்தால் கல்லூரியின் எந்தப் பிரிவு படிப்புக்கு என்றாலும் அதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியமாகிறது. இதனால், கல்லூரிக் கல்வி எல்லோருக்கும் கிடைப்பதில் பெரிய தேக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
பள்ளியளவில் பார்த்தால், குழந்தைகள் வெவ்வேறு சூழலில் இருந்து படிக்க வருகிறார்கள். செய்தித்தாளே பார்க்காத குடும்பங்களிலிருந்து வரும் முதல் தலைமுறையாகக் கல்வி பெறும் குழந்தைகளும் இருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு தேர்வு வைக்கும்போது ஒரே மாதிரியான வெளிப்பாட்டை எதிர்பார்க்க முடியாது. எல்லோரும் கற்றல் திறனடைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதைச் சோதிப்பதற்கு எழுத்துத் தேர்வு மட்டும்தான் என்று வரையறுத்துத் தேக்குவதுதான் தவறு.
அதேப்போன்று, 8-ம் வகுப்புக்குப் பிறகு செமஸ்டர் முறையும் சிக்கலானதே! ஏனெனில், அந்த வயதில் மாணவர்களுக்கு இந்த முறை எந்தளவுக்குப் புரியும் என்பதே கேள்விக்குறி. அதனால், நிறைய அரியர் வைத்து, பள்ளியிலிருந்து இடைநிற்றலுக்கே வாய்ப்புகள் அதிகம். இப்போதே நீட் தேர்வு மூலம் ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. இப்படி, பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையில் பல குளறுபடிகள் உள்ளன.
பா.ஜ.க.வின் இந்த பேராயுதம் குறித்து, தமிழகத்தில் அந்த வாதம் விரிவாக்கப்பட வேண்டும். ஆங்காங்கே இதுகுறித்த விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பா.ஜ..க அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின், தமிழ் மொழிபெயர்ப்பை இந்திய மாணவர் சங்கம் அமைப்பினர் வெளியிட்டனர். சென்னையில் நடந்த வெளியீட்டு நிகழ்ச்சியில், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி அவர்கள் ஆற்றிய உரையில், “பா.ஜ.க. அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. மனுதர்மத்தை நவீன முறையில் அமல்படுத்துவதற்குண்டான முயற்சிகள் தாம் அது. அதை நாம் தீவிரமாக எதிர்க்க வேண்டும். இப்போது எதிர்க்காவிட்டால், நீட் தேர்வுக்கு எப்படி நம்முடைய மாணவர்கள் தகுதித்தேர்வு என்ற ஒன்றை எழுதுகிறார்களோ,
அதேப்போன்று தான், 12ம் வகுப்பு முடித்துவிட்டு எந்த டிகிரி பிரிவை படிக்க வேண்டும் என்றாலும், ஒரு தகுதித்தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும் என்ற ஒரு நிலையை கொண்டு வருவார்கள். இதனால், நம்முடைய மாணவர்களின் கல்வி நலன் மிகவும் பாதிக்கப்படும். தமிழகமும், தமிழக மக்களும் நீட் தேர்வினால் இழந்த மாணவர்களே போதும். இனி யாரையும் இழக்க வேண்டும். பா.ஜ.க.வின் புதிய கல்விக் கொள்கை குறித்த விவாதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே, இக்காலக்கட்டத்தின் முக்கிய தேவையாக இருக்கிறது என்கிறார்.
- நெல்லை சலீம்