obc reservationஇடஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லையாம்!

சமூக நீதிக்காக இதுவரை நாம் போராடிப் பெற்ற பல உரிமைகள் பாஜக பாசிச ஆட்சியில் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. அந்த உரிமைகளை இந்த ஆட்சியாளர்கள் அவசர அவசரமாகவும், மறைமுக வழிகளிலும் பறித்துக் கொண்டிருப்பது நமக்குப் புது செய்தி இல்லை என்றாலும், இது தொடர்பில் பல விதமாகவும் உச்ச நீதிமன்றமும் பாசிசத்திற்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வருவதைப் பார்க்கிறோம்.

நம் தமிழ்நாடு பொதுவாகவே போராட்ட வரலாறு கொண்ட நாடு. தமிழ்நாட்டின் போராட்டம்தான் முதன்முதலாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரக் காரணமாக அமைந்தது.

இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் பொறிக்கப்பட்டுள்ள சமூக நீதியை நிலைநிறுத்த அமைக்கப்பட்டதே மண்டல் ஆணையம். இந்திய அரசியலில் சமூக நீதி நோக்கிய மிக முக்கிய மைல்கல்லாக இன்று வரை போற்றப்படுவது மண்டல் குழுவின் அறிக்கை.

இந்திய அரசியலமைப்பின் 340ஆவது உறுப்பின்படி பிற்படுத்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக அரசு ஒரு குழுவை அமைத்து, ஆய்வு செய்து அதன் பரிந்துரைகளைச் செயலாக்க முடிவெடுத்தது. அதன்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்காக 1953 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுவான 'காகா கலேல்கர் குழு'வின் பரிந்துரைகளை அரசு நிராகரித்து விட்டது.

பின்னர், 25 ஆண்டுகள் கழித்து மண்டல் தலைமையில் ஒரு குழு ’சமூக வழியிலும் கல்வி வழியிலும் பின்தங்கிய மக்களை’ அடையாளம் கண்டு அவர்களின் மேம்பாட்டுக்கான இடஒதுக்கீடு பற்றிய பரிந்துரைகள் அளிப்பதற்காக அமைக்கப்பட்டது.

மண்டல் குழு தன்னுடைய அறிக்கையை 1980 டிசம்பரில் அரசிடம் சமர்ப்பித்தது. 'இந்திய மக்கள் தொகையில் 52% உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு மத்திய அரசு பணிகளில் 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்பது மண்டல் குழுவின் முதன்மைப் பரிந்துரை. அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கிடப்பிலே போடப்பட்டிருந்தது. பின்னர், வி.பி.சிங் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபோது 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மண்டல் குழு அறிக்கையின் பரிந்துரைகள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் 'மண்டல் குழு'வின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவை செயலாக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்ததால் முட்டுக்கட்டை விழுந்தது. மூன்று வருடங்கள் நடைபெற்ற வழக்கை விசாரித்த 11 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு 6 - 5 என்ற பெரும்பான்மைத் தீர்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தது. அதற்கு பிறகு 1993 ஆகஸ்ட் 25 அன்றுதான் மண்டல் குழுவின் பரிந்துரை செயலுக்கு வந்தது.

நாம் பெற்ற நன்மைகள் இதனால் இன்று பறிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் இதற்கு எதிரான குரல்கள் இல்லாமல் இல்லை.

பொருளாதார வழியில் உயர் வகுப்பினர்க்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு மக்களிடையே ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு என்பதன் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மாநில மருத்துவக் கல்லூரிகளிலிருந்தும் இளநிலை மருத்துவப் படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவ டிப்ளோமா படிப்புகளுக்கான இடங்களில் குறிப்பிட்ட விழுக்காட்டை அகில இந்திய தொகுப்புக்குப் பறிகொடுத்து வருகிறோம்.

ஒவ்வோராண்டும் மருத்துவ இளநிலைப் படிப்புகளில் 15 விழுக்காடு இடங்களையும், மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் 50 விழுக்காடு இடங்களையும் அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் இழக்கின்றன. இந்த வகையில் நடப்புக் கல்வியாண்டில் மட்டும் மருத்துவ மேற்படிப்புக்கு 7,981 இடங்கள்; இதில் தமிழ் நாட்டிலிருந்து 1758 இடங்கள், இதில் நாம் பறி கொடுத்திருப்பது 879 இடங்கள். இவை இது வரை நாம் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு ஒதுக்கி வந்த இடங்கள் ஆகும். பல் மருத்துவ மேற்படிப்புகளுக்கு 274 இடங்கள் உட்பட மொத்தம் 8,000க்கும் அதிகமான இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு அளித்துள்ளன மாநில அரசுகள்.

மத்திய அரசு அகில இந்தியத் தொகுப்பு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டு முறையில் இடமளிப்பதில்லை. ஆனால், பட்டியல் இனத்தவர்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் உயர்சாதி வகுப்பினருக்கான 10 விழுக்காட்டு இடஒதுக்கீட்டு இடங்களை மட்டும் வழங்கி வருகிறது.

தமிழகத்தைப் பொருத்த வரை பெரும்பாலான அரசியல் கட்சிகள் (அஇஅதிமுக, திமுக, மதிமுக, பாமக, தமிழ்நாடு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள்) உச்ச நீதிமன்றத்தில், ஒபிசி மாணவர்களுக்கு மத்திய அரசு இடஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்குத் தொடுத்தன.

பல நூறு ஆண்டுகளாக சாதிய ஒடுக்குமுறையால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு சம வாய்ப்பு கிடைக்கச் செய்யக் கொண்டு வரப்பட்டதே இடஒதுக்கீடு. ஆனால், உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல என்று சொல்லி, இந்த வழக்கை ’வாபஸ்’ பெற்று சென்னை உயர் நீதிமன்றத்திலேயே வழக்குத் தொடுக்கும் படி அறிவுறுத்தியது. அதன் படி பல தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மத்திய மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு கோரி வழக்குத் தொடுத்துள்ளன.

இந்திய அரசியலமைப்பு 22 பகுதிகள் கொண்டது. அதில் பகுதி 3 அடிப்படை உரிமைகள் பற்றியது. இப்பகுதியில் 12 முதல் 35 வரையிலான உறுப்புகள் உள்ளன. உறுப்புகள் 14 முதல் 18 வரை சமத்துவ உரிமை தொடர்பானது இதன்படிதான் 1951இல் சென்னை மாகாணத்தில் சாதிவழி இடஒதுக்கீடு சமத்துவத்திற்கு எதிரானது என செண்பகம் துரைராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றியும் பெற்றார். அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.

இதன் பிறகு தமிழ்நாட்டிற்கே உரிய போராட்டங்களால் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. இடஒதுக்கீடு சட்ட அங்கீகாரம் பெற்றது. இதன் பிறகும் கடந்த 70 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் என்றும் இடஒதுக்கீட்டை அடிப்படை உரிமையாகக் கருதியதில்லை.

ஆரம்ப காலங்களில் பட்டியலின மக்களுக்கும் தொல்குடியினருக்கும் மட்டுமே இடஒதுக்கீடு இருந்தது. பின்னர் தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தன.

மண்டல் ஆணையப் பரிந்துரையின் பேரில் வி பி சிங் அரசாங்கம் கல்வி வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு இடஒதுக்கீடு தந்தது. இந்நேரத்தில் இந்திரா சாஹ்னி தொடுத்த வழக்கில் மண்டல் குழுப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட அரசாணை செல்லும் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வகையான இடஒதுக்கீடுகளும் மொத்தம் 50 விழுக்காட்டுக்கு மிகைப்படக் கூடாது என்றும், `சூப்பர் ஸ்பெஷாலிட்டி' என்று சொல்லக் கூடிய மருத்துவ மேற்படிப்புகளுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது என்றும் கூறி விட்டது.

1994 ஆம் வருடம் முதல் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் சேர்த்து 50 விழுக்காடு இடஒதுக்கீடும், பட்டியலின மற்றும் தொல்குடியினருக்கு 19 விழுக்காடு இடஒதுக்கீடும் வழங்கப்பட்டன. இதில் 1989 இல் அரசாணை மூலம் பெண்களுக்கென அரசு வேலை வாய்ப்புகளில் உள் ஒதுக்கீடாக 30 விழுக்காடு பல வருடங்களாக வழங்கப்பட்டு வரும் சிறப்பெல்லாம் தமிழ்நாட்டிற்கே உரியது.

ஆக, தமிழகத்தைப் பொருத்த வரை இடஒதுக்கீடு மொத்தம் 69 விழுக்காடு ஆயிற்று. இது செல்லுமா செல்லாதா என்ற வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.

இப்போது தொடுக்கப்பட்ட வழக்கிலும் கூட உச்ச நீதிமன்றத்தில் 27 விழுக்காடும், உயர்நீதிமன்றத்தில் 50 விழுக்காடும் கோரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்ல, நாம் இந்திய அளவில் கேட்கிறோம். இந்திய அளவில் பட்டியலின மக்களுக்குப் பட்டியல் உள்ளது, ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு இந்தப் பட்டியல் இல்லை. மேலும் தமிழ்நாட்டில் உள்ளது போல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உள்ள உட்பிரிவுகள் இந்திய அளவில் இல்லை.

ஆக, இங்கு நம் கோரிக்கை வெறும் இடஒதுக்கீடு மட்டுமல்ல, கல்வி மாநில பட்டியலில் இருக்க வேண்டும் என்பதும்தான்.

கொரோனா காலத்தில் புலம்பெயர் மக்கள் படும் துன்பம் நாம் அறிந்ததே. இதில் மருத்துவப் படிப்புக்கென மாணவர்கள் வேறு மாநிலங்கள் செல்வதால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் போன்ற காரணிகளையும் கணக்கில் கொண்டு அகில இந்தியத் தொகுப்பு இடங்கள் நீக்கப்பட வேண்டும்.

வரலாற்று வழியில் நிகர்மையும் நீதியும் நம் அடிப்படை உரிமைகள். சமத்துவம் நிலைத்த சமூக நீதித் தேசம் படைக்க இடஒதுக்கீடு ஓர் அடிப்படை உரிமையே என்பதை நிலைநாட்டுவோம்! உச்ச நீதிமன்றத்தின் பிழையை உயர் நீதிமன்றம் சரி செய்கிறதா? பார்ப்போம்.

- சுதா காந்தி,
ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்
மனிதி

Pin It