அன்பார்ந்த விஜயகாந்த் அவர்களே,

Vijaykanthஉங்களுடைய ரசிகர்களாகிய இளைஞர்களுக்கு, தங்களின் கூர்மதியால் விஞ்ஞானபூர்வமான தொலைநோக்கோடு இளைஞர்களின் எதிர்காலத்தை கணித்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தோடு உங்களின் கட்சியின் இளைஞர் அமைப்பிற்கான கொடியை அறிமுகப்படுத்தி நீங்கள் ஆற்றிய அறிவுபூர்வமான உரைக்கு மிக்க நன்றி.

தமிழகத்தின் தலைவிதியே தடி எடுத்தோரெல்லாம் தண்டல்காரனாக மாறிய கதைதான். அதே கதை இன்றும் தொடர்கிறது. இதில் தாங்கள் மட்டும் விதிவிலக்கு அல்ல. திரைப்படம் என்கிற அற்புதமான ஊடகத்தை பயன்படுத்தி தமிழகத்தில் கொடிகட்டிப்பறந்த கழிசடைகள் எத்தனையோ பேர். இதையே மூலதனமாக்கி, ஆள்வோரைப்பற்றி மக்களிடையே ஏற்படும் கசப்பான அனுபவங்களை தங்கள் பக்கம் திசை திருப்பும் திருகுதாள வேலையையும், வெற்று கோஷங்களையும் முன்மொழிந்தவர்களும் பலர். இந்த வேலையைத்தான் கடந்த காலத்தில் திராவிட இயக்கங்களும் செய்தன. இருந்தபோதும், அவர்கள் மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்ததை யாரும் மறுக்க முடியாது.

இன்றைய கதை வேறு. குண்டு வெடிப்புகளும், மதக்கலவரங்களும் நித்தமும் தொடரும் தொடர்கதையாகி விட்டது. இதற்கான மூலவித்து யாரால் விதைக்கப்பட்டது? இதில் ஏற்படும் மனித உயிர் இழப்புகளைக் கண்டு நெஞ்சம் பதறாத மனிதர்கள் இருக்கமுடியுமா?

குண்டுவெடிப்பை தடுக்க ஓர் அவசர நிலையைக்கோரும் உங்களின் கோமாளித்தனத்திற்குத்தான் இந்தக்கடிதம்...

உங்களின் பேட்டியில் கண்டுள்ள அவசரநிலை பற்றிய உரைக்கு "புதுவிசை" ஆசிரியர் அளித்துள்ள பதிலைவிட அதிகமாக சொல்லிவிட முடியாது. இருந்தபோதிலும், 1975ல் கொண்டுவரப்பட்ட அவசரநிலை பற்றிய நிலைபாட்டை புரிந்துதான் பேசினீர்களா...அல்லது புரியாமலேயே உளறிக்கொட்டினீர்களா?

அவசரநிலை வந்த காரணத்தையும் அது யாருடைய வர்க்கநலன் சார்ந்தது என்று கொஞ்சநஞ்சமாவது சிந்திக்கும் திறனாவது உங்களுக்கு உண்டா?

பாகிஸ்தானோ, சீனாவோ அல்லது இலங்கையோ இந்தியாமீது போர்தொடுக்கும் உத்தியை எதிர்கொள்ளுவதற்காகவா அவசரநிலையை கொண்டு வந்தார்கள்?

இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என ஒரு நீதிமான் எதற்கும் அஞ்சாமல் தீர்ப்பளித்தார். ஆபத்து இந்திராவின் நாற்காலிக்குத்தானே தவிர, இந்திய நாட்டிற்கல்ல. அம்மையார் பதவியை தக்கவைக்கவும், அவர் வர்க்கம் சார்ந்த முதலாளித்துவ கொள்கையை பாதுகாக்கவும் எடுத்த முயற்சிதான் அவசரநிலை பிரகடனம் என்பதை உங்களுக்கு புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லையென்பதை நாடறியும்.

செப்டமபர் 14ம் நாள் தொலைக்காட்சியில் தாங்கள் அளித்த பேட்டியில், இந்த நாட்டின் மதவெறி அமைப்பான பாரதீய ஜனதாகூட ஆசைப்படாத அவசரநிலையை தாங்கள் கோரியிருப்பதன் உள்நோக்கத்தை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

நாட்டில் அவசரநிலையை இந்திரா அம்மையார் பிரகடனப்படுத்திய மறுநாள், பாரதநாடு கண்டிராத மாபெரும் ஊர்வலத்தை தலைநகரம் கண்டது. இந்த நாட்டின் தேசிய முதலாளிகளான டாட்டாவும்- பிர்லாவும், டால்மியாவும்- சிந்தியாவும், சிங்கரேணிகளும் என ஒட்டுமொத்த முதலாளிகளும் ஊர்வலமாகச் சென்று திருமதி இந்திராவிடம் நன்றி கூறினார்களே, எதற்காக?

ரயில்கள் குறித்தநேரத்தில் ஓடவேண்டும் என்பதற்காகவா?
அலுவலகங்களில் ஒழுங்காக வேலை நடைபெறவேண்டும் என்பதற்காகவா?
நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காணவேண்டும் என்பதற்காகவா?
இவற்றில் எது சரி?... சொல்லுங்கள் கேப்டன் அவர்களே!

அவசரநிலையை உலக அரங்கில் நியாயப்படுத்தும் முயற்சியைத்தான் இந்திராவின் இருபது அம்சத்திட்டம் செய்தது. இந்தத்திட்டம் சோசலிச கோட்பாடுகளைக்கொண்டது என பிரஷ்னெவ்களால் சிவப்பு முக்காடு...இல்லையில்லை...கறுப்பு முக்காடு போடப்பட்டது.

அலுவலகங்களை சரிப்படுத்த... பொதுத்துறையின் ரயில்வேயை சரிவர இயக்க... விலைவாசியை கட்டுப்படுத்த...என பீலா விட்டு ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்தார் இந்திரா. இது உழைப்பாளிகளின் உரிமையைப்பறித்தது. பாரதநாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முற்போக்கு அரசியல்வாதிகளை கூண்டிலடைத்தது. தொழிற்சங்க கூட்டுபேர உரிமையை மறுத்தது.

அவசர நிலையை நியாயப்படுத்துவதற்காக லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் சல்போர்ன் அவர்களை இந்திய அரசு வரவழைத்தது. நாடுமுழுவதையும் அவர் சுற்றிப்பார்க்க ஏற்பாடும் செய்தது. தாயகம் திரும்பும்போது இந்திய அரசால் அளிக்கப்பட்ட ஒரு மாலை விருந்திலும் பின்னர் லண்டன் பர்மிங்காம் அரங்கிலும் அவர் உரையாற்றினார். அவருடைய உரையில் முக்கியமான ஒரு பகுதியை உங்களுக்காக நான் சொல்லத்தான் வேண்டும்.

வழியனுப்பும் விழாவில் அவர் சொன்னார்:

"பி.கே. பிர்லா அவர்களே, ஆர்.கே.தவான் அவர்களே, இந்திய நாட்டின் செலவில் எங்களை வரவழைத்தீர்கள். கடந்த மூன்றுமாதமும் காஷ்மீரிலிருந்து, கன்னியாகுமரிவரை சுற்றிப்பார்க்க வாகன வசதி, உண்ண உணவு, தங்குமிடம் கொடுத்து எந்தக்குறைவுமின்றி பாதுகாத்தீர்கள். இந்த அவசரநிலை சம்பந்தமாக உலக அரங்கில் பேச வாய்ப்பும் அளித்தீர்கள். எங்களை இவ்வளவு நேர்த்தியோடு கவனித்த உங்களிடையே சில உண்மையான செய்திகளை கூறிவிடுவதுதான் எனக்கு சரியென்று படுகிறது. இந்த மாலை விருந்தில் என்னுடைய உரையை கேட்டபின்னால், நான் ஒரு நன்றிகெட்டவன் என்று நீங்கள் கருதுவீர்களேயானால், அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

இந்தியாவை சுற்றிப்பார்க்கும்போது எங்கும் ஓர் அசாத்தியமான அமைதியே தோன்றுகிறது. அந்த அமைதி மயானங்களில் புதைக்கப்பட்டிருக்கும் பிணங்களிடையே காணப்படும் அமைதியே. இந்திய நாட்டின் சிறைக்கூடங்கள் தேசத் துரோகிகளும், சமூகக் குற்றவாளிகளும் நிறைந்து இருக்கவேண்டியவை. மாறாக இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதிகளும் அவர்தம் இயக்கங்களும் முடக்கப்பட்டு அதன் ஊழியர்கள் பல்லாயிரமானோர் சிறைபட்டிருப்பதை காணமுடிந்தது. சிறையில் இருக்க வேண்டியவர்கள் வெளி உலகிலும், வெளிஉலகில் இருக்க வேண்டியவர்கள், சிறைக்கொட்டடியிலும் இருப்பதை என் கண்ணால் காணமுடிந்ததை நான் சொல்லாமல் இருந்தால் குற்றவாளியாகி விடுவேன்..." என்று பேச்சைத் தொடருகிறார்.

இதுதான் அவசரநிலையின் எதார்த்த உண்மைநிலை. விஜயகாந்த் அவர்களே, நீங்கள் இதைத்தான் கோருகிறீர்களா? உங்களுக்கு அரசியல் ஆலோசகராக இருக்கும், அரசியல் விதவை பண்ணுருட்டியாரும்கூட தெரிந்தும் தெரியாதவர் போல் மவுனமாக இருந்திருக்கிறாரே?

விளையும் பயிர் முளையிலே என்றொரு பழமொழி. உங்களைப்பற்றி படித்தஒரு தகவல் அதை உண்மையாக்குகிறது.

விஜயராஜா என்கிற விஜயகாந்த்தைப்பற்றி விக்ரமசிங்கபுரம் செய்ண்ட் மேரிஸ் பள்ளி ஆசிரியை ஸ்டான்லி ஜான் இப்படிச்சொல்லுகிறார்.

"ஒரு முறை நாங்கள் எல்லாம் உலகத்தமிழ் மாநாட்டை பார்ப்பதற்காக சென்னைக்கு டூர் புறப்பட்டோம். ரெயில் பயணம் செய்தபோது விஜயராஜா யாருக்கும் தெரியாமல் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்திவிட்டான். டி.டி.ஆர். இதனைக்கண்டுபிடித்து அவனிடமிருந்து ரூ.50 அபராதமாக வசூலித்தார். நான் ஏண்டா இப்படிச்செய்தாய்? என்று கேட்டேன். நீங்கதானே எதையும் ஆராய்ந்துபார்த்து உண்மையை தெரிந்துகொள்ளணும் என்று விஜயராஜா சொன்னதும் நாங்களெல்லாம் சிரித்துவிட்டோம்."

திரு. விஜயகாந்த் அவர்களே, ஆராய்ந்துபார்த்து தெரிந்துகொள்ள நீங்கள் ஆசைப்படுவதைக்கேட்டு உங்களுடைய ஆசிரியர் சிரித்திருக்கலாம். அவசரநிலையின் கொடுமைகளை அனுபவித்துப் பார்த்து தெரிந்துகொள்ள நீங்கள் ஆசைப்படுவதைக் கேட்டு நாங்கள் சிரிக்க முடியாது.

அவசரநிலை காலத்தில் பேரணி எதுவும் நடத்த முடியாது.

சிவப்பு விளக்கை போட்டு போக்குவரத்தை முடக்கமுடியாது.

கடற்கரைதானே...யார் கேட்கப்போகிறார்கள் என்று ஒதுங்கக்கூட முடியாது.

அது ஒரு இருண்டகாலம்.

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யரை படித்துப் பாருங்கள்...இந்தியாவின் ஜனநாயக பக்கங்களில் அந்த பதினெட்டு மாதங்களும் இருண்ட பக்கங்கள் என்பதை உங்களுக்கு புரியவைப்பார். இந்தியாவின் நீதித்துறை வரலாற்றில் அது எப்படி இருண்ட காலமாகிப்போனது என்பதையும் சொல்லிக்கொடுப்பார்..

அந்தக்காலத்திய நாளேடுகளை புரட்டிப்பாருங்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் அவமானகரமான பக்கங்களை அவை வெளிச்சம் போட்டுக்காட்டும். மக்களின் அடிப்படை உரிமைகளை ஏறிமிதித்த காங்கிரஸ்காரர்களின் பட்டியல் இன்னும்கூட அந்தப்பக்கங்களில் நிறைந்திருக்கிறது.

அவ்வளவு ஏன்?...அவசரநிலை காலத்தில் கைதாகி சிறைக்கொட்டடியில் அடைபட்டவர்களும், மிதிபட்டவர்களும், நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஜெயில் சூப்பிரண்டின் காலடியில் கைதொழுது கிடந்தவர்களும் இன்றும்கூட உங்களின் சமகால அரசியலில் இருக்கிறார்கள். அவர்களின் அனுபவங்களை ரகசியமாக கேட்டுப்பாருங்கள். ஜெயில் சூப்பிரண்டு வேடம்போட்ட உங்களுக்கு அந்த பயங்கரம் புரிந்துபோகும்.

ஒன்றுமட்டும் நிச்சயம் கேப்டன் அவர்களே! அன்னாடங்காச்சிகளுக்கு நாடு அவசர அவசரமாக இயங்கினாலும் ஒன்றுதான். நிதானமாக இயங்கினாலும் ஒன்றுதான். மண்ணை கிளறிக்கொண்டிருக்கிறவன் என்றைக்கும் பொன் எடுக்கப்போவதில்லை.

எலிமிதித்த எருமைமாடு மாதிரி அவன் அவனுடைய வயிற்றுப்பாட்டை பார்த்துக்கொண்டே இருப்பான். கஷ்டப்படப்போவதெல்லாம், தொண்டர்களின் உடுக்கடி கோஷத்தால் மைக்கைபிடித்து சாமியாட்டம்போடும் உங்களைப்போன்ற தலைவர்கள்தான்.

நீங்கள் வெகுதூரம் போகவேண்டாம். உங்களுடைய அவைத்தலைவர் பக்கத்திலேயே தான் இருக்கிறார்...அன்றைய உண்மையான எம்.ஜி.ஆரால் பாராட்டப்பெற்றவர்... ஐ.நா.சபையில் எல்லாம் பேசியவர். அவரைக்கேளுங்கள்... அவரும் சொல்லட்டும்... அவசரநிலை மறுபடியும் வரவேண்டும் என்று.

நீங்கள் அனுபவித்து தெரிந்துகொள்வதில் எங்களுக்கு சந்தோஷமே!

Pin It