"எதற்காக இப்பபடி போராட்டம் செய்கிறீர்கள்? இந்த சட்டம் வெளிநாட்டிலிருந்து வரும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தானே இயற்றப்பட்டுள்ளது. இதனால் உங்களுக்கு என்ன பாதிப்பு?" என்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.

பாஜக எந்தவொரு திட்டம் கொண்டு வந்தாலும் அதனை கழுகுப் பார்வையோடு தான் பார்க்க வேண்டும்.

say no to cabஅஸ்ஸாம் மாநிலத்தில் ஏறத்தாழ 13 லட்சம் முஸ்லிம்கள் வெளியேற வேண்டும். அவர்கள் நேற்றோ, இன்றோ நாடு கடந்து வந்தவர்கள் அல்ல... கால் நூற்றாண்டிற்கு முன் நடந்த நாட்டுப் பிரிவினை, உள்நாட்டுப் போர், ராணுவ ஆட்சி, சிறுபான்மை மக்கள் மீதான ஒடுக்குமுறை இவைதான் அவர்கள் இடம்பெயர உண்மையான காரணங்கள்.

இந்த நாட்டின் ஜனநாயகம் அந்த மக்களை வாரி அணைத்ததால் தான் அவர்களை இந்த தேசத்தை நோக்கி வந்தார்கள்.

அப்படி வந்தவர்களுக்கு எல்லாம் குடியுரிமை கொடுத்துவிட முடியுமா என்று கேட்கிற அரசு, எதற்காக பதினோரு வருடம் கழித்து வழங்கப்படும் இந்தியக் குடியுரிமையை ஆறு ஆண்டுகளாகக் குறைத்தது?

உண்மையில் சொல்லப் போனால் இந்த அரசு வழங்கப் போவது இந்தியக் குடியுரிமை அல்ல... மற்ற மதத்தினரை எல்லாம் புறக்கணித்து இந்துக் குடியுரிமை வழங்கப் போகிறது.

இந்த அரசு பொறுப்பேற்ற பின் இந்தியாவில் தொழில் தொடங்கவே வெளிநாட்டினர் யோசிக்கின்ற இந்தத் தருணத்தில், இந்தியக் குடியுரிமை கேட்டு யாரும் வரப் போவதில்லை.

அஸ்ஸாம் மாநிலத்தில் அகதி முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படுபவர்களில் யாரும் சோற்றுக்கு வழியில்லாமல் கொண்டு செல்லப்படுபவர்கள் அல்ல..! அனைவரும் இஸ்லாமியர்கள். அவர்களின் தந்தையோ, தாயோ பக்கத்து நாட்டில் பிறந்திருப்பார்கள்.

பெற்றோர்கள் அண்டை நாட்டில் பிறந்த காரணத்தால், தான் பிறந்த நாட்டிலிருந்து இவர்கள் ஏன் வெளியேற்றப்பட வேண்டும்?

அடுத்து தமிழர்களுக்கு இந்த சட்டத்தால் பாதிப்பில்லை என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். பர்மா தமிழர்களில் அதிகம் குடிபெயர்ந்தவர்கள் முஸ்லிம்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பர்மா பஜார், பர்மா காலனி, பர்மா மசூதி என்று ஏனோ சென்னையில் மட்டும் உள்ளது என்று எண்ணிவிட வேண்டாம். தமிழகத்தின் பல்வேறு உள் மாவட்டங்களிலும் உள்ளளர்.

நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு களமாடுவதே சிறந்தது. போராடினால் அரசு இந்த நிலையிலிருந்து பின் வாங்கிவிடுமா என்கிற கேள்விக்கு ஒரே விடை, பிரிட்டிஷ் ஆட்சியாளரிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற கால் நூற்றாண்டிற்கு மேல் போராடினார்கள். அவர்களாவது நீ எனக்கு அடிமை என்று ஆட்சி செய்தார்கள். இவர்கள் "இந்த நாடே உனக்குச் சொந்தம் இல்லை. இந்த நாட்டிலிருந்து வெளியேறு" என்று சொல்கிறார்கள்.

போராட்டத்தால் சுதந்திரம் கிடைத்தபோது, போராட்டத்தால் ஏன் ஒரு சட்டத்தை திரும்பப் பெற வைக்க முடியாது ...?

போராட்டத்தால் ஆங்கிலேயன் நாட்டை விட்டு ஓடியபோது, போராட்டத்தால் இந்த நாட்டில் உள்ள ஆட்சியாளர்கள் எப்படி மாற்றாமல் போவார்கள்?

போராட்டங்கள் இந்த ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தைக் கேள்வி கேட்கும்போது, மக்களுக்காக நடத்தப்படும் அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். 

- அ.முஹம்மது அஸாருதீன், இளைஞரணி மாநிலச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி

Pin It