இவ்வளவு கொடூரமான, அஞ்சி நடுங்கத்தக்க, வெட்கக் கேடான சம்பவம் தமிழகத்தில் நடக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டோம். தினம் தினம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில அரிப்பெடுத்த அயோக்கியர்களால் அவை நிகழ்த்தப்பட்டாலும், பொதுவாக பெண்களிடம் மிக கண்ணியமாக தமிழக ஆண்கள் நடந்து கொள்வார்கள் என்ற பார்வை தான் இருந்தது. ஏற்கெனவே உலகில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு என இந்தியா பெயர் எடுத்திருக்கின்றது. ஆனால் இனி இந்தியாவில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற மாநிலம் தமிழ்நாடுதான் என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு இன்று தமிழ்நாட்டின் பெயர் சீரழிந்து இருக்கின்றது. பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதற்குத் தகுதியற்ற மாநிலமாக இந்த மானங்கெட்ட குற்றக் கும்பலின் ஆட்சி மாற்றி இருக்கின்றது.

pollachi gang rapistsஎங்கெல்லாம் அதிகார பலமும், பணபலமும் கட்டுக் கடங்காமல் அதிகரிக்கின்றதோ அங்கெல்லாம் அது அரிப்பெடுத்து ஊர் மேய்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கின்றது. நக்கீரன் பத்திரிக்கை வெளியிட்ட அந்த வீடியோ நம்மை அதிர்ச்சியில் ரத்தம் உறைய வைக்கின்றது. நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என நினைக்கும்போது, உடல் முழுவதும் மலத்தை பூசிவிட்டது போல அருவருப்பு உணர்வு ஏற்படுகின்றது. தன்னை நம்பி வந்த பெண்களை பல பேருடன் சேர்ந்து இப்படி சீரழித்து, அதை வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் அவர்களைப் பயன்படுத்தி காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும் என்ற நிலை தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் போது, இனி தமிழ்நாட்டில் பெண்களைப் பெற்றவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை படிக்கவும், வேலைக்குப் போகவும், ஏன் பொதுவெளியில் நடமாடக் கூட விடுவார்களா என்பது கேள்விக்குறியாகி இருக்கின்றது.

200க்கும் மேற்பட்ட இளம் பெண்களை நட்பு, காதல் என நம்ப வைத்து கடந்த 7 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்து, ஆயிரக்கணக்கான வீடியோக்களை எடுத்திருக்கின்றார்கள். இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரி, வசந்தகுமார், சதிஷ்குமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். 7 ஆண்டுகளாக இந்த சம்பவம் தொடர்ந்து நடந்துள்ளது என்றால் காவல்துறை என்ன ………புடுங்கிக் கொண்டு இருந்தது என்ற கேள்வி இயல்பாக எழுகின்றது. பாதிக்கப்பட்ட ஒரு பெண் புகார் கொடுத்த போதுதான் உண்மை வெளி உலகிற்குத் தெரிய வந்தது என்று சொல்வது, காவல்துறை குற்றத்தில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள சொல்லும் அப்பட்டமான பொய்யாகும். தற்போது காவல் துறையில் புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை ஜெயலலிதா பேரவையின் செயலாளரான பார் நாகராஜ் என்ற அதிமுக காலி பாபு, செந்தில்குமார் போன்றோருடன் சேர்ந்து கொடூரமாகத் தாக்கி இருக்கின்றான். இந்த நாய்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. இந்த வழக்கை அப்படியே ஊத்தி மூட அதிமுக தரப்பில் இருந்து பெரிய அளவில் அழுத்தம் தரப்படுவதாகவும், அதிமுகவைச் சேர்ந்த பல பேருக்கு இந்த பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் நேரடித் தொடர்பு இருப்பதாகவும் நம்பத்தகுந்த செய்திகள் வருகின்றன. அது உண்மையாக இருக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

ஏற்கெனவே கல்லூரிக்குப் படிக்க வந்த பல பெண்களை விபச்சாரத் தொழிலுக்கு தள்ளிய நிர்மலா தேவி வழக்கை இந்த அரசு திட்டமிட்டு ஒன்றுமில்லாமல் செய்து வருகின்றது. நிர்மலா தேவியைப் பயன்படுத்தி மாணவிகளை சீரழித்த அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் என யாரையுமே இதுவரை காவல் துறை கைது செய்யவில்லை. தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த வழக்கை இந்த அரசு கையாண்டு கொண்டிருக்கும் முறை வெட்கக்கேடானது. இவர்களுக்குப் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் பற்றியெல்லாம் சிறிதளவுகூட அக்கறை கிடையாது. அதனால் தான் தமிழ்நாட்டுப் பெண்களை விபச்சாரத் தொழிலுக்கு அழைத்த, அதை நியாயப்படுத்திய பொறுக்கிக் கட்சியான பிஜேபியுடன் கூட்டு வைத்திருக்கின்றார்கள்.

தற்போது தமிழ்நாட்டுப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வதில் பிஜேபிக்கு தாங்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என்பதைக் காட்டியிருக்கின்றார்கள். அதிமுக - பிஜேபி என்ற இரண்டு குற்றக் கும்பல்களைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இதைக் கண்டித்திருக்கின்றன. ஒரு பக்கம் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கு சேலை போன்றவற்றை அதிமுக லஞ்சமாக கொடுத்துக் கொண்டு இருக்கின்றது. இன்னொரு பக்கம் தமிழ்நாட்டுப் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்பவர்களை காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றது. இவர்களின் யோக்கியதை இதுதான் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உலக அளவில் தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய தலைக்குனிவையும், அவப்பெயரையும் இந்த மானங்கெட்ட ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருநாவுக்கரசு இதில் பல அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பதாக சொல்லி இருப்பதால், இந்த வழக்கை தமிழக காவல்துறையை ஏவல் நாய்கள் போன்று பயன்படுத்தி வரும் இந்த அரசு நிச்சயம் ஊற்றி மூடி விடவே பார்க்கும் என்பதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து நாம் போராட வேண்டும். சிபிஐயும் மத்திய பிஜேபி அரசின் ஏவல்நாயாக செயல்பட்டு வந்தாலும் இந்த அமைப்பு முறையில் நம்மால் அதிகபட்சமாக இந்தக் கோரிக்கையை மட்டுமே எழுப்ப முடியும். குற்றவாளிகளை மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் காலம் நிச்சயம் ஒருநாள் வரும். அப்போது இதுபோன்ற அரிப்பெடுத்த குற்றக் கும்பல்கள் உடனடியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். அதுவரை நமக்கு வழங்கப்பட்டுள்ள உச்சபட்ச ஜனநாயகத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுப்போம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு அமைப்புகளும் இந்தப் பிரச்சினையை மிகத் தீவிரமாக முன்னெடுத்து, சம்மந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும்வரை போராட்டத்தை நிறுத்தாமல் தொடர வேண்டும்.

- செ.கார்கி

Pin It