thiruppur road 2திருப்பூர் மாநகராட்சி சுகாதார அதிகாரிகளின் பணிகளைப் பார்த்தால்...

தெர்மாகோல் கொண்டு வைகை அணை நீர் ஆவியாவதைத் தடுத்த,

பசும்பாலில் தங்கம் இருப்பதைக் கண்டுபிடித்த ...

விநாயகர் தான் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தவர் என்று சொன்ன அமைச்சர்கள் தான் ஞாபகத்திற்கு வந்து போகின்றனர்.

தெருவெங்கும் குப்பை அள்ளாமலும், கழிவுநீர் தேங்கிக் கிடக்கும் சாக்கடைகளை சரி செய்யாமல், நாம் காசு கொடுத்து வாங்கி பாத்திரங்களில் வைத்திருக்கும் தண்ணீரை ரோட்டில் கொட்டிவிட்டுச் செல்கிறார்கள்...

எதிர்த்துக் கேட்டால் கொசுப்புளு வளர்ப்பதாக அபராதமும், வழக்கும் போடுவோம் என்று மிரட்டுகிறார்கள் அந்த அறிவாளிகள்.

இப்போது திருப்பூர் சுமார்ட் சிட்டியாக மாறிக் கொண்டிருப்பதை விளம்பரங்கள் பிளக்ஸ் பேனர்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். www.tiruppurcorporation.tn.gov.in - இந்தப் பக்கத்தில் சென்றும் முழுவிபரத்தை படித்துக் கொள்ளுங்கள்.

தோராயமாக ₹1255.71 கோடி திட்டத்தில் தற்போது ₹918.60 கோடிக்கான பணிகள் நடந்து வருகிறது.

தமிழக அரசு நிதி ₹459.30 கோடி, மத்திய அரசு நிதி ₹459.30 கோடி.

குறிப்பாக

1) நொய்யல் ஆற்றைச் சீரமைக்க ₹156.76 கோடி
2) பஸ் நிலைய மேம்பாடுகளுக்கு ₹36.5 கோடி
3) வாரச்சந்தை மேம்பாட்டிற்கு ₹12.86 கோடி
4) தினசரி சந்தை மேம்பாட்டிற்கு ₹28.99 கோடி
5) குடிநீர் மேம்பாட்டிற்கு ₹166.75 கோடி
6) மீன் மார்க்கெட் ₹2.175 கோடி
7) பூ மார்க்கெட் ₹4.47 கோடி

இந்த 'Smart City' திட்டத்தின் படி நகரெங்கும் கட்டிடங்களாக கட்டிக் கொண்டு திருப்பூர் முழுவதும் கட்டிடக் கழிவுகளும், சாக்கடை நீரும் ரோடெங்கும் தேங்கி கொசுவை உற்பத்தி செய்து கொண்டுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது எந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு போடலாம்...? யார் வழக்கு போடுவது?

புஷ்பா தியேட்டர் பகுதியிலிருந்து அவினாசி ரோட்டில் ரோட்டோரம் நடைபாதை அல்லது சைக்கிளிங் போக என்று இருந்த ரோட்டின் மேல் 2.5 அடி அகலத்தில் M Sand பரப்பி அதன் மேல் கல் அடுக்கிக் கொண்டு செல்கிறார்கள். ரோட்டில் கழிவு நீர் வெளியேறக்கூட வழி இல்லை.

என்ன வேலை, எதற்காக வேலை என்று கூட யாரும் தெரிந்து கொள்ள நேரமில்லாமல் தங்கள் பொழப்புக்கு என்ன வழி என்று தொழிலாளிகள் ஓடிக் கொண்டுள்ளார்கள்....

திருப்பூரில் Smart City திட்டத்தின் கீழ் என்னென்ன வேலை நடைபெறுகின்றது என்பதை தமிழ் பேப்பர்களில் செய்தியே வருவதில்லை. ஆனால் Times of India ஆங்கில ஆன்லைன் பேப்பரில் தினமும் செய்தி வருகின்றது.

thiruppur road 1புதிய பேருந்து நிலையத்திற்குள் ₹29.50 கோடி, டவுன்ஹால் கட்டிடத்தை இடித்துவிட்டு சுமார் ₹51கோடி செலவில் வணிக வளாகங்கள் கட்டும் பணி, நிறைய இடங்களில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள் கட்டி தண்ணீர் பிடிக்க மீட்டர் பொருத்துவது என ஜரூராக ₹918.60/- கோடிகளுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

தொழில் நிமித்தமாக அங்குமிங்கும் அலைந்து திரியும்போது, கண்ணில் படும் இந்தப் பணிகளின் 'தரம்' பற்றி அரசு வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ( 97000 41114 ) தகவல் அனுப்பினாலோ அல்லது கலெக்டருக்கு போன் செய்து தகவல் கூறலாம் என்று நினைத்தாலோ கரூர் கலெக்டர் கேட்டது போல இவரும்,

'நாங்க என்ன சரவணபவன் சர்வரான்னு' கேட்டு போனை வைடா ராஸ்கல்னு சொல்லிடுவாரோன்னு நினைச்சு அந்த நினைப்பை ரப்பர் கொண்டு அழித்து விட்டேன்.

சுமார்ட் திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பை தற்போது ஏற்றுள்ள திருப்பூர் MP தோழர் சுப்பராயன் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் கட்டிடங்களில் கம்பி மட்டும் இருக்கும், கலவை அடுத்த மழையில் காணாமல் போகும்.

நடைபாதை கல் இருக்கும், ரோடு இருக்காது.

SMART CITY திட்டத்தில் செலவு கணக்கு இருக்கும், திருப்பூர் இருக்குமா...?

கொசுறு தகவல்:

இத்திட்டத்திற்காக செலவிடும் ₹918.60 கோடி பணத்தை அரசு 20 ஆண்டுகளுக்குள் ₹1601.64 கோடியாக மக்களிடம் வசூல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

ஜெய் சுமார்ட் சிட்டி..!

- தருமர், திருப்பூர்

Pin It