உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் கட்டியிருப்பது பற்றியும், அதில் மின்சாரவேலி போடப்பட்டது பற்றியும் ஏப்.17ம் தேதி இந்து நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. தமிழக அரசியலின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக அது மாறியது. இந்நிலையில் துவக்கத்தில் இப்பிரச்சனை குறித்து கருத்து ஏதும் சொல்லாமல் மௌனம் சாதித்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பின்னர் உண்மையறியும் குழுவை அனுப்புவதாகச் சொன்னது. இரண்டு முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உத்தப்புரம் சென்று தீண்டாமைச்சுவரை பார்வையிட்டு தலித் மக்களின் நியாயமான கோரிக்கைகளை எல்லாம் கேட்டு உங்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம் என்று அவர்களிடம் சொல்லிவிட்டுச் சென்றனர். ஆனால் பார்வையிட்டுப் போனவர்கள் அதன்பின் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.

பிரகாஷ் காரத் வந்ததையொட்டி சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. அதை ஏற்காத சாதி இந்துக்கள் ஊரைக் காலி செய்து மலையடிவாரம் இருந்த தலித்துகளை அடித்துவிரட்டி அங்குபோய் குடியேறினர். அதன் பின் ஒருவார காலம் தமிழகமே உற்று நோக்கும் பிரச்சனையாக இது மாறியது. இந்தக் காலங்களில் இதுபற்றி சட்டமன்றத்தில் இரு முறை காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்களது கருத்து எதையும் பதிவு செய்யவில்லை.

மக்கள் மன்றத்திலும் அனைத்து கட்சிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த பிரச்சனையில் என்னதான் கருத்து கொண்டுள்ளது என்பது மட்டும் வெளிவராத மர்மமாக இருந்தது. இந்நிலையில் மே15ம் தேதி சிபிஐ மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் தலைமையில் குன்றக்குடி அடிகளார், பேராயர்.செல்வராஜ் ஆகியோர் உத்தப்புரம் சென்று இரு தரப்பு மக்களையும் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தா.பா. உத்தப்புரம் சம்பந்தமாக வெளியிட்ட கருத்துக்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"அவமானச் சின்னம் என எவையாவது இருந்தால் அதை அகற்ற மக்கள் ஒற்றுமையுடன் முன்வரவேண்டும்" என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு மாத காலத்தில் இரண்டு குழுக்களை அமைத்து பார்வையிட்டு வரச் செய்தபின், தானே நேரில் வந்து இரண்டு மணிநேரம் உத்தப்புரத்தில் செலவிட்டுள்ளார் தோழர் தா.பா. அவர் வரும்பொழுது தலித் பகுதியில் இருந்த தோழர்கள் நீலமேகம், நாகராஜன் ஆகியோர் தங்களுக்காக வந்திருக்கிறார்கள் என்று நம்பிக்கையோடு ஓடோடிப் போய் அவரை வரவேற்று சுவர் முழுவதையும் கூட்டிப் போய் காண்பித்தனர்.

சுமார் 600 மீட்டர் நீளச்சுவர் ஊரை இரண்டாகப் பிரித்து கிடக்கிறது. 89ல் கட்டப்பஞ்சாயத்து மூலம் ஒப்பந்தம் போட்டுக் கட்டப்பட்டது சாதிச்சுவர். இப்படி ஒரு சுவர் இருப்பது தேசத்திற்கே அவமானம். உடனடியாக அதை இடி அல்லது நாங்கள் இடிப்போம் என மார்க்சிஸ்ட் கட்சி போராடியது. அதன் அகில இந்தியச் செயலாளர் நேரில் வந்தார். தமிழக அரசு தீண்டாமை சுவர் இருப்பதை ஏற்றுக்கொண்டு அதன் ஒரு பகுதியை இடித்து பொதுப்பாதையை திறந்துவிட்டுள்ளது.

இவ்வளவுக்கும் பின் உத்தப்புரத்திற்கு வந்து சுவர் முழுவதையும் பார்வையிட்டுவிட்டு "அவமானச்சின்னம் என எவையாவது இருந்தால் அது அகற்றப்படவேண்டும்" என்று பேட்டி கொடுக்கிறார் தோழர் தா.பா. அது கண்ணுக்குத் தெரியாமல் நிற்கிற சுவர் அல்ல 600 மீட்டர் சுவர். ஒரு நாள், இரண்டுநாள் அல்ல 18 ஆண்டுகள் நிற்கிற சுவர். 89ல் நான்கு தலித்துகளின் உயிர் பலிக்குப்பின் சாதி இந்துக்களால் கம்பீர உணர்வோடு கட்டப்பட்ட சுவர்.

ஜனநாயகவாதிகளும், சமூகநீதிக்கு குரல்கொடுப்பவர்களும் இது அவமானச் சின்னம் என்கிறார்கள். சாதீய மேலாதிக்கத்தில் அனுதினமும் மமதையில் மிதப்பவர்கள் இது எங்களுக்கு பாதுகாப்புச்சுவர் என்கிறார்கள். இந்த இரண்டு கருத்துக்களும் வெட்டவெளிச்சமாக அவரவர்கள் தரப்பினை உலகிற்கு சொல்கிறது.

முழு பூசணிக்காயை பார்த்தபின்பும் கையில் இருக்கிற கட்டுச்சோற்றின் மீது நம்பிக்கை வைத்துப் பேசுவது யாருக்காக? என்ற கேள்வி எழுகிறது.

கண்ணிருந்தும் குருடராய்
காலிருந்தும் முடவராய்
செவியிருந்தும் செவிடராய்... என்று வரிசையாக சொல்லிக்கொண்டே போகிற பழமொழியொன்று ஞாபகத்திற்கு வந்து 603 மீட்டருக்கு எழுந்து நிற்கிறது.

தோழர். தா.பா. சொன்ன இரண்டாவது கருத்து "உத்தப்புரத்தில் அரசியல், பொருளாதார கோரிக்கைகள் எதுவும் இல்லை. சமூக, ஆன்மீகம் சம்பந்தமாக கோரிக்கைகளே உள்ளது. எனவேதான் நாங்கள் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரை அழைத்து வந்து அருளுரை வழங்க வைத்துள்ளோம்" என்கிறார். இது இந்துக்களின் ஆன்மீகப் பிரச்சனை என்ற தன்மையில் இராமகோபாலனும் அறிக்கை விட்டுள்ளார். அது நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தா.பா.வின் அறிக்கையை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.

உத்தப்புரத்து தலித்கள் பொதுவெளியில் சம உரிமை, பொதுப் பாதையில் நடக்கும் உரிமை, ஆலயத்தில் நுழையும் உரிமை, மந்தையில் உட்காரும் உரிமை கேட்டு போராடுகின்றனர். இன்று நேற்றல்ல சுமார் 50 ஆண்டுகள் போராடி வருகின்றனர். இதன் காரணமாக 1948, 64, 89ஆம் ஆண்டுகளில் கடும் மோதல்களும் அதில் உயிர்ப்பலியும் நடந்துள்ளது. இந்நிலையில் தோழர் தா.பா. இங்கு அரசியல் கோரிக்கை இல்லை என்று கூறி இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது அரசியல் கோரிக்கை இல்லையென்றால் வேறு எதுதான் அரசியல் கோரிக்கை?

தலித்துகள் தங்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள சம உரிமையை அடைவதற்கான போராட்டத்தை குறைந்தபட்சம் அரசியல் போராட்டம் என்று சொல்லக்கூட தயாராக இல்லாததது எந்த வகையில் நியாயம்? இது உத்தப்புரம் தலித்துகள் நடத்தும் போராட்டத்தை கொச்சைபடுத்துவதல்ல, செங்கொடி இயக்கத்தின் மொத்த வரலாற்றையே கொச்சைப்படுத்துவதாகும். சாணிப்பாலுக்கும் சவுக்கடிக்கும் எதிராக தோழர் பி.எஸ்.ஆர், தலைமையில் கீழத்தஞ்சையில் நடைபெற்ற போராட்டம் அரசியல் போராட்டமா? ஆன்மீகப் போராட்டமா?

இடுப்பில் கிடந்த துண்டை தலையில் இறுக்கக்கட்டி பொதுத்தெருவில் தலித்களை கம்பீரமாக நடக்க வைக்க காவிரிப் படுகையில் செங்கொடி இயக்கம் நடத்தியது அரசியல் போராட்டமா? ஆன்மீகப் போராட்டமா? இரணியம் சிவராமன் உள்ளிட்ட எண்ணற்ற தோழர்கள் களத்திலே நின்று உயிரைக் கொடுத்து நடத்திய போராட்டம் அரசியல் போராட்டமா? ஆன்மீகப் போராட்டமா?

திருப்பனந்தாள் மடத்தின் தேசிகரையும், திருவாடுதுறை மடத்தின் மகாசன்னிதானத்தையும் அழைத்துவந்து அருளுரை ஆற்ற வைக்காமல் லட்சக்கணக்கான உழைக்கும் வர்க்கத் தோழர்களை களத்திலே இறக்கி பொதுவுடைமை இயக்கம் நடத்திய போரட்டம் அரசியல் போராட்டமா? ஆன்மீகப் போராட்டமா?

இந்த கேள்விகளுக்கான பதில் வரலாற்றிலும் வாழ்விலும் தெளிவாக இருக்கிறது. அதைத் தாண்டி நாம் சொல்ல எதுவும் இல்லை. தோழர் தா.பா. சொன்ன மற்றொரு கருத்து 'பல ஆயிரம் ஆண்டுகளாக ரத்தத்தில் ஊறிப்போன சாதி வேறுபாட்டை ஒரே நாளில் எந்த ஒரு கட்சியும் அப்புறப்படுத்த முடியாது'. அப்புறப்படுத்துவதற்கான போராட்டக்களத்திலே நின்று பேசுகிற பேசுகிறபோது, அவர் யார் பக்கம் நின்று பேசுகிறார் என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது. அப்புறப்படுத்த போராடுபவர்களின் பக்கமா? அல்லது அப்புறப்படுத்தவே முடியாது என்று தோள் தட்டுபவர்கள் பக்கமா?

சாதி ரத்தத்தில் ஊறிய அதே ஈராயிரம் ஆண்டுகளாகத்தான் அதற்கு எதிரான போராட்டமும் நடந்து வருகிறது. புத்தனில் துவங்கி பார்ப்பனிய அடுக்குமுறைக்கு எதிரான போரில் தளபதிகளாக விளங்கியவர்கள் எத்தனையோ பேர். 19, 20ம் நூற்றாண்டில் வள்ளலார், வைகுந்தசாமிகள், நாராயணகுரு, அய்யன்காளி, மகாத்மாபூலே, ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் என்று இவர்கள் வழியில் நின்று எண்ணற்றவர்கள் போராடியதன் விளைவாகத்தான் மனுவின் சட்டத்திற்கு எதிராக இன்றைய ஜனநாயக கட்டத்தையாவது இந்தியச் சமூகம் எட்டியிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் இன்றைய தளபதிகளாக விளங்கவேண்டிய பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் ஒருவர் இப்படி பேசியிருப்பது பற்றி சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது?

உத்தப்புரம் பிரச்சினையில் தோழர் தா.பா. செய்தியாளர்களிடம் கூறிய கருத்தை வைத்துப் பார்த்தால் அவர் சுவற்றின் எந்தப் பக்கம் நின்று பேசுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் பேட்டியில் சொன்ன கருத்து எதையும் வெளியிடாமல் அவர் போய் வந்த செய்தியை மட்டும் பிரசுரித்து அவர் அந்தப் பக்கம் இல்லை என காட்ட முயற்சித்துள்ள ஜனசக்தியின் ஆசிரியர் குழுவிற்கு நமது பாராட்டுகள். ஆனால் இந்த முயற்சி மட்டுமே அப்படி காட்டிவிடாது.

- சு.வெங்கடேசன்

Pin It