1958 ஆம் ஆண்டு நான் பின்வருமாறு எழுதினேன்:

‘மெய்மைக்கும் மெய்மையற்றதற்கும் இடையில் கறாரான வித்தியாசங்கள் என்பது இல்லை. அதுபோல மெய்மைக்கும் பொய்மைக்கும் இடையிலும் கறாரான வித்தியாசங்கள் இல்லை. ஒன்று நிச்சயமாக மெய்யாகவோ அல்லது பொய்யாகவோ தான் இருக்க வேண்டும் என்றும் அவசியமுமில்லை. சமநிலையில் ஒன்று மெய்யாகவும் பொய்யாகவும் இருக்கலாம்’.

இந்த வலியுறுத்தல் இன்றும் அர்த்தமுள்ளது என்றுதான் நான் நம்புகிறேன். கலையின் வழி மெய்மையைத் தேடிச் செல்வதில் இதனை இன்றும் பொறுத்திப் பார்க்கலாம் என்றுதான் நான் நம்புகிறேன். எழுத்தாளனாக இந்த நிலைபாட்டை நான் பற்றி நிற்கிறேன். ஒரு குடிமகனாக என்னால் அப்படி இருக்க முடியாது. ஒரு குடிமகனாக நான் இதனைக் கேட்டே ஆக வேண்டும்: எது மெய்? எது பொய்?

நாடகத்தில் மெய்மை என்பது என்றென்றும் நழுவுகிறதாகவே இருக்கும்.. அதனை நீ முற்றிலும் கண்டுபிடித்துவிடமுடியாது. ஆனால் அதனைத் தேடிக்கொண்டே இருப்பது கட்டாயமானது. தேடுவது தான் உனது இலக்கு. அடிக்கடி இருளில் மெய்மையின் மீது நீ இடறிக்கொண்டே இருக்க முடியாது. மெய்மையொடு தொடர்புபட்டதாய்த் தோன்றுபவற்றுடன் நீ கலக்க வேண்டும் அல்லது ஒரு பிம்பத்தையோ அல்லது வடிவத்தையோ நீ அறிதல் வேண்டும். ஆனால் காணக்கூடிய மெய்மை யாதெனில், நாடகக் கலையில் ஒரேயொரு மெய்மை என்ற ஒன்றை என்றுமே நீங்கள் காணமுடியாது என்பதுதான்.

மெய்மைகள் பல. இந்த மெய்மைகள் ஒன்றையொன்று சவாலுக்கு அழைப்பவை. பரஸ்பரம் மோதிக்கொள்பவை. ஓன்றையொன்று பிரதிபலிப்பவை. ஒன்றையொன்று நிராகரிப்பவை. ஒன்றையொன்று அவமானப்படுத்துபவை. இவை ஒன்றையொன்று கண்டுகொள்ளாது. சில வேளைகளில் ஒரு நொடி மெய்மை எமது கையில் இருப்பது போல் தோன்றும். அப்புறம் அது எமது விரல்களின் வழி நழுவி இல்லாது போகும்.

எவ்வாறு எனது நாடகங்கள் உருக்கொள்கின்றன எனும் கேள்வியை நான் அடிக்கடி எதிர்கொள்வதுண்டு. நான் என்றும் சொன்னதில்லை. இது தான் நடந்தது. இதைத்தான் பாத்திரங்கள் சொன்னார்கள், இதைத்தான் எனது பாத்திரங்கள்; செய்தார்கள் என்பதற்கும் அப்பால் என்றும் எனது நாடகங்கள் குறித்து நான் தொகுப்புரை செய்ததில்லை.

பெரும்பாலுமான நாடகங்கள் ஒரு வரியிலிருந்து, ஒரு வார்த்தையிலிருந்து அல்லது ஒரு பிம்பத்திலிருந்து தோற்றம் பெற்றிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வார்த்தையைத் தொடர்ந்து அவ்வப்போது ஒரு பிம்பமும் தோன்றுவதுண்டு. உதாரணமாக இன்மையிலிருந்து எனது தலைக்குள் உதித்த இரண்டு வரிகள், அதனைத் தொடர்ந்து வந்த பிம்பம், அதனைத் தொடர்ந்து சென்ற ‘நான்’ என்பது குறித்துச் சொல்கிறேன்.

‘வீடு பெறல்’ மற்றும் ‘கடந்த காலங்கள்’ என்பன அந்த நாடகங்கள்.

இரண்டு நாடகங்களிலும் மேலதிக விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியாது

முதல் நாடகத்தில் ஒருவர் ஒரு ஜோடிக் கத்தரிக்கோல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். பிறதொருவர் அதைத் திருடியிருப்பார் எனும் சந்தேகத்தில்; அவரிடமிருந்து அதனை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்தப் பிரச்சினையில் கேள்வி கேட்கப்படுகிறவர் கேள்வியைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்பதோடு, கேள்வி கேட்பவர் பற்றியும் அவர் அக்கறைப்படுவதி;ல்லை என்பதும் எனக்குத் தெரியும்.

‘கறுப்பு நிறம்’ என்று ஒருவரின் தலைமுடிக்கு நான் விவரணம் கொடுத்தேன், ஒரு பெண்ணின் தலைமுடி, அதனோடு ஒரு கேள்விக்கும் பதில் கொடுத்தேன். இந்த இரு பிரச்சினையிலும் ‘இதனை மேலெடுத்துச் செல்’ என்று என்னை நானே நிர்ப்பந்தப் படுத்திக்கொள்வதை நான் உணர்ந்தேன். இது காட்சிபூர்வமாக நிகழ்ந்தது. நிழலிருந்து வெளிச்சம் நோக்கி, மிக மெதுவாக மங்கலாக, இது நிகழ்ந்தது.

நான் எப்போதுமே பாத்திரங்களை அ, ஆ, இ என்று அழைத்துத்தான் எனது நாடகங்களைத் தொடங்குகிறேன்.

‘வீடுபெறல்’ எனப் பிற்பாடு பெயர் பெற்ற நாடகத்தில், ஒரு ஆள் ஓரு மங்கலான அறையில் நுழைவதைப் பார்க்கிறேன். ஒரு அழுக்கடைந்த மெத்தையில் அமர்ந்தபடி, குதிரைப் பந்தயப் பத்திரிக்கை படித்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் மனிதனை நோக்கி அவர் கேள்வி கேட்பதைப் பார்க்கிறேன். அதில் அ என்பவர் தகப்பன் என்றும் ஆ என்பவர் மகன் என்றும் நான் சந்தேகம் கொள்கிறேன். ஆனால் அப்படித்தான என்பதற்கு என்னிடம் ஆதாரம் ஏதுவுமில்லை. ஆனால் பிற்பாடு கொஞ்ச நேரத்தின் பின் அது உறுதிப்பட்டது. ஆ கேட்கிறார் அ வைப் பார்த்து :

‘தந்தையே பேசிக் கொண்டிருக்கும் விஷயத்தை நான் மாற்றினால் உனக்குச் சங்கடமில்லைதானே? பிரச்சினையில்லைதானே? (மகன் பிற்பாடு லென்னியாகவும், தந்தை மேக்ஸ் ஆகவும் ஆகிறார்கள்).

‘நான் ஒன்று கேட்க நினைக்கிறேன். நாம் கொஞ்சம் முன்னால் சாப்பிட்ட இரவுச் சாப்பாடு இருக்கிறதே, அதன் பெயரென்ன? அதை என்னவென்று நீ சொல்வாய்? நீ ஏன் ஒரு நாய் வாங்கக் கூடாது? நீ ஒரு நல்ல நாய்ச் சமையல்காரன். நிஜமாகத்தான் சொல்கிறேன். பல நாய்களுக்கு ஒன்றாகச் சமைப்பதாக நீ நினைக்கிறாய்’ ஆகவே ஆ அப்பா என்று கூப்பிட்டதால், இவர்கள் இருவரும் தந்தை மகன் என்றும் யூகித்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. அ நிச்சயமாக சமையல் செய்தவர் என்பதும், அவரது சமையல் சொல்லிக் கொள்ளும்படித் தரமாக இல்லை என்பதும் தெரிகிறது. இது இப்படியென்றால் இவர்களுக்குத் தாய் இல்லை என்று அர்த்தமா? எனக்குத் தெரியாது. ஆனால் அப்போது நான் சொல்லிக் கொண்டது போல, எமது தொடக்கங்கள் ஒருபோதும் இறுதிகளை அறிவதில்லை.

இருள். ஒரு பெரிய ஜன்னல். மாலைநேர வானம். ஒரு மனிதன். அ (பிற்பாடு அவன் டீலி ஆகிறான்) அதனோடு ஒரு பெண், ஆ (பிற்பாடு அவள் கேட் ஆகிறாள்). உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘குண்டா, ஒல்லியா’ ஆண் கேட்கிறான். யாரைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்? பிற்பாடு நான் பார்க்கிறேன்;. ஓரு பெண் ஜன்னலுக்கு அருகில் நின்றுகொண்டிருக்கிறாள். அவள் இ (பிற்பாடு அவள் அனா ஆகிறாள்), வேறொரு வகை விளக்கு வெளிச்சத்தில், அவர்களுக்கு அவள் முதுகைக் காட்டிக் கொண்டிருக்கிறாள். அவளது தலைமுடி கறுப்பாக இருக்கிறது.

இது ஒரு விநோதமான தருணம். அந்தநொடி வரை இல்லாத பாத்திரங்கள் உருவாகும் தருணம். தொடர்வதென்னவென்றால் நிச்சயமில்லாத, மங்கலாக மனதில் ஆடுகிற, கையகப்படுத்தக் கூடிய, சில வேளைகளில் இடை நிறுத்தமுடியாத அவஸ்தையாக இருக்கும். எழுத்தாளனின் நிலை சிக்கலானது. ஒரு அர்த்தத்தில் பாத்திரங்கள் அவனை வரவேற்பதில்லை. பாத்திரங்கள் அவனை எதிர்க்கும், அவைகளோடு வாழ்தல் அவ்வளவு எளிதில்லை. அவற்றைத் தீர்மானிப்பது அவ்வளவு எளிதில்லை. கறாராக அவர்களை நீ கட்டுப்படுத்த முடியாது. ஒரு கட்டம் வரையிலும் எல்லையற்ற வகையில் அவர்களோடு நீங்கள் விளையாட்டில் ஈடுபட வேண்டும். எலி பூனை விளையாட்டு, கண்கட்டு வித்தை, ஒளிந்து விளையாடும் விளையாட்டு. இறுதியாக உன் கையில் இரத்தமும் சதையுமான மனிதர்கள் இறக்கக் காண்பாய். பற்றுறுதி கொண்ட தமக்கேயுரிய தனித்துவப் பண்புகள் கொண்ட மனிதர்கள் இருப்பார்கள். தம்மிலிருந்து பிரிக்கமுடியாத பண்புகள் கொண்டவர்களாக, மேலதிகப்படுத்தமுடியாத, திரிக்க முடியாத தன்மைகள் கொண்டவர்களாக அவர்கள் இருப்பார்கள்.

கலையில் மொழியின் இடம் என்பது கூடார்த்தத் தன்மை கொண்ட ஊடாட்டம் கொண்டது. புதைமணல் போன்றது. கழைக் கூத்தாடியின் மெத்தை போன்றது. எழுத்தாளனாக மொழி என்பது எப்போதும் காலடியில் உங்களுக்கு வழிவிடும் உறைந்த ஏரி போன்றது.

ஆனால் நான் சொன்னபடி மெய்மைக்கான தேடுதல் என்றும் நின்று விடுவதில்லை. அதனைத் தள்ளிப்போட முடியாது. அதனைப் பிற்பாடென ஒத்திப்போட முடியாது. அதனை எதிர்கொள்ள வேண்டும். அந்த நொடியில், அந்த இடத்தில் அதனை எதிர்கொண்டே ஆக வேண்டும்.

அரசியல் நாடகம் முற்றிலும் வேறு வகையிலான பிரச்சினைகளை முன்வைக்கிறது. சூத்திரவயப்படுத்துதல் என்ன விலை கொடுத்தும் முற்றிலும் தவிரக்கப்பட வேண்டும். புறநிலைத்தன்மை என்பது முக்கியம். தமது காற்றைச் சுவாசிக்கப் பாத்திரங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். தனது சொந்த அபிலாசைகளுக்காகப் பாத்திரங்கைளைக் கட்டுப்படுத்தவோ அல்லது கட்டமைக்கவோ கூடாது. நிலைதடுமாற வைக்கவோ அல்லது முன்மதிப்பீடுகள் கொண்டோ பாத்திரங்களைப் படைக்கக்கூடாது. பல்வேறு கோணங்களிலிருந்தும் அவர்களை அணுகுவதற்கு அவன் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். பல்வேறு நோக்குகளில் இருந்து சார்புநிலைகள் அற்று, ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் அவர்களை எடுத்துச் செல்ல வேண்டும், சமயங்களில் - எப்போதுமல்ல - அவர்கள் விரும்புகிற எல்லைகளில் பயணம் செய்யவும் அவர்களுக்குச் சுதந்திரம் தர வேண்டும். இது எப்போதும் செல்லுபடியாகாது. எந்த அரசியல் ¨நாயண்டியும் இந்த முன்கருத்துக்களோடு பொருந்திப் போகாது.
நடவடிக்கை பூர்வமாக இதற்கு எதிர்திசையில்தான் நையாண்டி நாடகம் இருக்கும். அது தான் அதனது சரியான செயல்பாட்டு வடிவமாகவும் இருக்கும்

‘பிறந்த நாள் விருந்து’ எனும் நாடகத்தில் அறுதியாகக் குவிக்கப்பட்ட பாத்திர நடத்தைகள் நிகழ்வதற்கு முன்னால், ஒரு அடர்ந்த கானத்தின் அனைத்து சாத்தியங்களையும் நான் பாத்திரங்களுக்கு வழங்க வேண்டும் என நினைத்தேன்..

‘மலைமொழி’ இந்த மாதிரியான செயல்பாட்டைக் கொண்டது எனப் பாசாங்கு செய்யவில்லை. அது மனிதத் தன்மையற்றதாக, சுருக்கமானதாக, அசிங்கமாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அந்த நாடகத்தில் வரும் காவலர்கள் தமது விளையாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என நினைத்தேன். சித்திரவதையாளன் சீக்கிரமே சலிப்புற்று விடுவான் என்பதைப் பலர் மறந்து விடுகிறார்கள். அவர்களது வலிமையை அவர்கள் பெறவேண்டுமானால் அவர்களுக்குக் கொஞ்சம் சிரிப்பு வேண்டும். பாக்தாத் அபுஹாரிப் சிறையில் நடந்தேறிய சம்பவங்கள் இதனை நிரூபித்திருக்கின்றன. மலை மொழி இருபது நிமிடங்களே வரும் நாடகம். ஆனால் அந்த நாடகம் மணிக் கணக்கில் நிகழ்ந்து கொண்டேயிருக்கும், நடந்து கொண்டேயிருக்கும். அதே விதமான முறைகள் மறுபடி மறுபடி நடந்து கொண்டேயிருக்கும். மறுபடி மறுபடி மணிக் கணக்காக நடந்து கொண்டேயிருக்கும்.

‘சாம்பலுக்குச் சாம்பல்’ தண்ணீருக்கு அடியில் நிகழ்வதாக எனக்குத் தோன்றும். மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண். அவளது கைகள் அலையினின்றும் மேலெழுகிறது, நம்மால் காண முடியாது தளர்ந்து விழுகிறது, மற்றவரைத் தேடிச் செல்கிறது, ஆனால் எவரையும் கண்டடைவதில்லை, தண்ணீரின் மேல் அல்லது தண்ணீருக்கு அடியில், நிழல்களை மட்டுமே காண்கிறது, எதிரொளிப்புகள், மிதப்புகள், அமிழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிலவெளியில, தொலைந்து போன பெண் அவள். மற்றவர்களுக்கானது எனக் கருதப்படும் இருளிலிருந்து தப்ப முடியாதவள் அப்பெண். அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள். அவளும் இறந்துதான் ஆகவேண்டும்.

அரசியல் தவைவர்களால் உபயோகிக்கப்படும் அரசியல் மொழி இந்தப் பிரதேசங்களில் எல்லாம் சஞ்சரிப்பதில்லை. நமக்குக் கிடைத்திருக்கிற சாட்சியங்களின் படி, பெரும்பாலான அரசியல்வாதிகள் மெய்மையில் அக்கறை கொள்வதில்லை. மாறாக அதிகாரத்தில், அந்த அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் அக்கறையாக இருக்கிறார்கள். அந்த அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் மக்கள் அறியாமையில் இருக்க வேண்டும். அவர்கள் மெய்மை குறித்து அறியாமையில் இருக்க வேண்டும். தமது சொந்த வாழ்வின் மெய்மை குறித்த அறியாமையில் இருக்க வேண்டும்.. ஆகவே நம்மைச் சூழ்ந்திருப்பதெல்லாம் ஒரு பெரிய திரை. அதன் பின்னணியில்தான் நமக்கு எல்லாம் சொல்லப்படுகிறது.

இங்கு இருக்கிற ஒவ்வொருவரும் அறிவார்கள், ஈராக்கின் மீதான ஆக்கிரமிப்பிற்கான காரணமாக நாற்பத்தைந்து நிமிடங்களில் ஏவக் கூடிய மிகப் பயங்கரமான பேரழிவு அணு ஆயுதங்கள் இருக்கின்றன எனவும், அது மிகப்பொ¢ய அழிவைக் கொண்டு வரும் எனவும் சொன்னார்கள். இது மெய்மை எனவும் அவர்கள் வலியுறுத்திச் சொன்னார்கள். ஆனால் அது மெய்மையில்லை. ஈராக்கிற்கு அல்கைதாவுடன் உறவு இருக்கிறது எனவும், 2001 செப்டம்பர் 11 கொடுமையில் ஈராக்கிற்கும் பங்கிருக்கிறது எனவும் நமக்குச் சொல்லப்பட்டது. இது மெய்மை என்றும் நமக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அது மெய்மையில்லை.

மெய்மை என்பது முற்றிலும் வித்தியாசமானது. ஐக்கிய அமெரிக்கா தனது உலகப் பாத்திரத்தை எவ்வாறு புரிந்து கொள்ள விழைகிறது, எவ்வாறாக அதனது பாத்திரத்தை அது தேர்ந்தபடி வரித்துக் கொள்ள விரும்புகிறது என்பதோடு சம்பந்தப்பட்டதுதான் மெய்மையாகும்.

நிகழ் காலத்திற்கு நான் திரும்பவும் வருவதற்கு முன்னால் சமீபக் கடந்த காலத்தைப் பார்க்க விரும்புகிறேன். அதாவது இரண்டாவது உலகப் போர் முடிவுற்ற பின்னால் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை நான் பார்க்க விரும்புகிறேன். இங்கு நமக்குக் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தினுள் குறைந்த அளவிலாவது இந்தக் காலகட்டம் பற்றி அலசிப் பார்ப்பது நம் கடமை என்று நான் நினைக்கிறேன்.

யுத்த காலத்திற்குப் பின்னால் சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும். அமைப்புரீதியிலான கொடூரங்கள், விரிந்த அளவிலான அக்கிரமங்கள், சுதந்திரச் சிந்தனைகளின் மீதான காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறை. இவையனைத்தும் முழுக்கவும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆதாரங்கள் சரி பார்க்கப்பட்டிருக்கின்றன.

எனது கோபமெல்லாம் இந்தக் காலத்தில் நடந்த ஐக்கிய அமெரிக்காவின் குற்றங்கள் அனைத்தும் மேம்போக்காகப் பதியப்பட்டிருக்கின்றன. கவனத்தில் கொள்ளப்படாமல் இருக்கின்றன, குற்றங்கள எனவே அவை அங்கீகரிக்கப்படாமல் இருக்கின்றன என்பதுதான். இவை பேசப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். உலகம் இப்போது இருக்கிற நிலை குறித்த மெய்மைக்கு இவை குறிப்பிட்ட அளவில் காரணமாக இருக்கின்றன என நான் நினைக்கிறேன். வலிந்து உருவாக்கிக் கொள்ளப்பட்டதான நிலைபாட்டோடு குறிப்பிட்ட அளவுவரை , சோவியத் யூனியனைக் காரணம் காட்டி, ஐக்கிய அமெரிக்கா தான் என்ன செய்ய நினைக்கிறதோ அதனையெல்லாம் உலகெங்கும் செய்வதற்கு தனக்குப் பட்டயமிருக்கிறது என அது முடிவுகட்டிவிட்டதாகவே அதனது நடவடிக்கைகள் இருந்திருக்கின்றன.

நேரடியிலான ராணுவ ஆக்கிரமிப்பு என்பது எப்போதுமே அமெரிக்காவுக்கு விருப்பமான வழிமுறையாக இருக்கவில்லை. முக்கியமாகக் ‘குறைந்த அழுத்தம் கொண்ட மோதல்’ என்பதனை அது விரும்பியது. குறைந்த அழுத்தம் கொண்ட மோதல் என்றால் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள். ஆனால் குண்டுமழை பொழிந்து ஒரே வீச்சில் இறப்பதுபோல் அல்லாமல், மெதுமெதுவாக இறப்பார்கள். அதாவது ஒருநாட்டின் இதயத்தில் தாக்க வேண்டும். தொற்றுநோய் பரவுவதை துரிதப்படுத்த வேண்டும். பிற்பாடு அழுகிநாறிச் சாவதைச் சாவதானமாகப் பார்த்திருக்க வேண்டும். பொதுமக்கள் கீழ்மைப் படுத்தப்பட்டு - அல்லது அடித்துக் கொல்லப்பட்டு - அப்புறம் உமது சொந்த நண்பர்கள், ராணுவம் மற்றும் பகாசுரப் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகாரத்தில் செளகரியமாக அமர்ந்து கொள்ளலாம். பிற்பாடு கேமராவுக்கு முன்னால் நின்று ‘ஜனநாயகம் நிலைபெற்றுவிட்டது’ என்று சொல்லிக் கொள்ளலாம். இதுதான் நான் சொல்கிற காலங்களில் ஐக்கிய அமெரிக்காவின் பொதுவான கொள்கைகளாக இருந்தது.

நிகரகுவாவுக்கு நிகழ்ந்த சோகம் ஒரு மிக முக்கியமான உதாரணம். இப்போதும் அப்போதுமான ஐக்கிய அமெரிக்காவினது உலகப் பாத்திரத்தை விவரிக்க, நான் ஒரு உதாரணத்தைத் தேர்ந்து சொல்ல விரும்புகிறேன்.

1980களின் பிற்பகுதியில் இலண்டன் அமெரிக்க தூதரகத்தில் நிகழ்ந்த ஓரு சந்திப்புக்கு நான் சென்றிருந்தேன்.

நிகரகுவா அரசுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கான்ட்ரா ஆயுதக் குழுவுக்கு நிதி அளிப்பதா இல்ல¨யா என்பது குறித்த முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் அப்போது ஐக்கிய அமெரிக்கக் காங்கிரஸ் இருந்தது. நிகரகுவாவுக்கு ஆதரவாகப் பேசப் போன குழுவில் நான் ஒரு பிரதிநிதியாக இருந்தேன். ஆனால் அந்தக் குழுவின் மிக முக்கியமான பிரதிநிதி புனிதத் தந்தை ஜான் மேட்கிளப் ஆவார். அமெரிக்கக் குழுவின் தலைவராக இருந்தவர் ரேய்மண்ட் ஸிட்ஸ். (அப்போது அவர் இரண்டாவது நிலை தூதராக இருந்தார். பிற்பாடு அவர் பிரதானத் தூதராகவும் செயலாற்றினார்) புனிதத் தந்தை மேட்கிளப் சொன்னார் : ‘ஐயா, நான் வட நிகரகுவாவில இருக்கிற தேவாலயங்களின் பொறுப்பாளராக இருக்கிறேன்.

எமது அமைப்பினர் ஒரு பள்ளிக் கூடத்தைக் கட்டியிருக்கிறார்கள். ஒரு மருத்துவ மையம், ஒரு கலாச்சார மையம் போன்றவற்றையும் கட்டியிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு கான்டரா ஆயுதக் குழவினர் தேவாலயத்தைத் தாக்கினார்கள். அவர்கள் அனைத்தையும் அழித்து விட்டார்கள். பள்ளிக் கூடம். மருத்துவ மையம், கலாச்சார மையம் என அனைத்தையும் அழித்துவிட்டார்கள். தாதிகளையும் பள்ளியாசி¡¢யைகளையும அவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கினார்கள். மிகவும் மிருகத்தனமான முறையில் அவர்கள் மருத்துவர்களை வெட்டிக் கொலை செய்தார்கள். காட்டுமிராண்டிகள் போல அவர்கள் நடந்து கொண்டார்கள். இந்த அதிகொடுமையான பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பதில், தயவு செய்து ஐக்கிய அமெரிக்கா தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம் என நிர்ப்பந்தியுங்கள்’.

ரேய்மண்ட் ஸிட்ஸ் காரண காரியமுள்ள, பொறுப்பான, மிக நாகரீகமான மனிதர் எனப் பெயர் பெற்றவர். தூதரக வட்டாரங்களில் அவர் வெகுவாக மதிக்கப்பட்டார். அவர் நாங்கள் சொன்னதைக் கேட்டார். மெளனமாக இருந்தார். பிற்பாடு அழுத்தத்துடன் அவர் பேசினார். ‘தந்தையே, நான் உங்களிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும். ஒரு யுத்தத்தில் எப்போதுமே அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள்’. அங்கே ஒரு உறைந்த மெளனம் நிலவியது. நாங்கள் அவரை வெறித்துப் பார்த்தோம். அவர் பின்வாங்காமல் நின்றார்.

சாதாரண மக்கள், ஆமாம், எப்போதுமே சாதாரண மக்கள் துன்புறத்தான் செய்கிறார்கள்.

இறுதியாக எமது குழுவிலிருந்த ஒருவர் சொன்னார்: ‘ஆனால் இந்தப் பிரச்சினையில், குரூரமான வகையில் கொல்லப்படும் சாதாரண மக்கள் உமது அரசாங்கத்தினால் பலிகடா ஆக்கப்பட்டவர்கள். கான்ட்ரா ஆயுதக் குழுவினர்க்கு உமது அரசாங்கம் மேலும் நிதி வழங்குமானால் இதுபோல மேலும் கொடுமைகள் நிகழும். இது ஒரு பிரச்சினை இல்லையா? ஒரு இறையாண்மை மிக்க நாட்டின் குடிமக்கள் மீது இவ்வாறான கொலைகள் புரிவதை ஆதரிக்கும் உங்கள் அரசு ஒரு குற்றவாளி இல்லையா?’

ஸிட்ஸ் நிதானம் இழக்காது சொன்னார்.: ‘நடந்த சம்பவங்கள் என நீங்கள் சொல்கிறவை, நீங்கள் வற்புறுத்துகிறவற்றை ஆதரிக்கிறது என்று நான் நினைக்கவில்லை’.

நாங்கள் அமெரிக்கத் தூதரகத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தபோது, ஒரு தூதரகச் சிப்பந்தி, என்னுடைய நாடகங்களை தான் விரும்புவதாகச் சொன்னார். நான் பதில் சொல்லவில்லை.

ஜனாதிபதி ரீகன் பின்வரும் அறிக்கையை வெளியிட்டார் என்பதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும். ‘அறம் சார்ந்த வகையில் எமது நாட்டை உருவாக்கிய தந்தையர்களுக்கு இணையானவர்கள் கான்ட்ரா குழுவினர்கள்.’

ஐக்கிய அமெரிக்கா கருணையற்று ஸமோசாவின் சர்வாதிகாரத்தை நாற்பது ஆண்டுகள் நிகரகுவாவில் ஆதரித்தது. ஸான்டினிஸ்ட்டாக்களால் தலைமை தாங்கப்பட்ட நிகரகுவா மக்கள், 1979 ஆம் ஆண்டு உன்னதமான வெகுமக்கள் புரட்சியின் மூலம் இந்த ஆட்சியைத் தூக்கியெறிந்தார்கள்.. குழந்தைச் சாவுகள் மூன்றில் ஒன்றாகக் குறைக்கப்பட்டன. போலியோ முற்றிலும் துடைத்தெறியப்பட்டது..

ஸான்டினிஸ்டாக்கள் முழுக்கச் சரியானவர்கள் என்று இல்லை. அவர்களிடமும் வலுவான மூர்க்கத்தனம் இருந்தது. அவர்களது அரசியல் தத்துவமும் பல்வேறு முரண்களைக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் புத்திசாலிகள். காரணகாரிய அறிவு கொண்டவர்கள். நாகரிகமானவர்கள். ஒரு நிலையான, மரியாதைமிக்க, பன்முகத்தன்மை கொண்ட ஒரு அமைப்பை அவர்கள் உருவாக்கினார்கள். மரணதண்டனை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. வறுமையில் உழன்ற பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் மரணத்தினின்றும் மீட்கப்பட்டார்கள். இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு நிலஉரிமை அளிக்கப்பட்டது. அற்புதமான கல்வித் திட்டத்தினால், எழுத்தறிவின்மையை ஏழில் ஒருபகுதிக்கும் கீழாகக் குறைத்தார்கள். இலவசக் கல்வியும் இலவச மருத்துவ உதவியும் மக்களுக்கு அளிக்கப்பட்டது.

ஐக்கிய அமெரிக்கா இந்தச் சாதனைகள் அனைத்தும் மார்க்சிய லெனினியச் சீரழிவு எனக் கழித்துக் கட்டியது. அமெரிக்க அரசின் பார்வையில் ஒரு ஆபத்தான உதாரணம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அடிப்படையான சமூகப் பொருளாதார நீதியை உருவாக்க நிகரகுவா அனுமதிக்கப்பட்டால், மருத்துவம் மற்றும் கல்வித்தரம் உயர்த்தப்பட்டுச் சமூக ஒறறுமையும் தேசிய சுயப் பெருமிதமும் பெற நிகரகுவா அனுமதிக்கப்பட்டால், அண்டை நாடுகளும் இதே விதமான கேள்விகளைக் கேட்கும், அவைகளும் இதே பாதையில் சென்றுவிடும் என அமெரிக்கா நினைத்தது. நிஜத்தில்; அந்த வேளையில் எல்ஸால்வடாரில் உக்கிரமான அரசு எதிரப்புக் கிளர்ச்சி நடந்து கொண்டுதான் இருந்தது.

நம்மைச் சூழ்ந்திருக்கும் பொய்களால் ஆன திரை பற்றி நான் ஏற்கனவே குறிப்பிட்டேன். ஜனாதிபதி ரீகன் பொதுவாக நிகரகுவாவை எதேச்சாதிகார இருட்கிடங்கு என விவரித்தார். இதனை மிகச்சரியான விவரணம் எனச் செய்தி ஊடகங்களும் எடுத்துக்கொண்டன. குறிப்பாகப் பிரித்தானிய அரசு இது கறாரான சமநிலைகொண்ட கருத்து என இதனை எடுத்துக் கொண்டது.. ஆனால் உண்மையில் ஸான்டினிஸ்ட்டா அரசின் கீழ் படுகொலைப் படைகள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் இருக்கவில்லை. நிகரகுவா சித்திரவதையில் ஈடுபட்டது என்பதற்கும் சான்றுகள் இல்லை. திட்டமிட்டபடியிலான ராணுவக் கொடுங்கோன்மைகள் இருந்தன என்பதற்கான சான்றுகளும் இல்லை. பாதிரியார்கள் என்றும் நிகரகுவாவில் கொல்லப்பட்டதில்லை. நிகரகுவா அரசில் மூன்ற பாதிரியார்கள் அங்கம் வகித்தார்கள். இரண்டு ரோமன் கத்தோலிக்கர் மற்றும் ஒரு மார்க்கினெல் மிஸினரிக்காரர்.

எதேச்சாதிகார இருட்சிறைகள் பக்கத்தில் எல்ஸால்வடாரிலும் குவாதமாலாவிலும் தான் இருந்தன. ஐக்கிய அமெரிக்கா 1954 ஆம் ஆண்டு ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குவாதமாலா அரசை அழித்தது. பின்வந்த ராணுவ அரசுகளுக்கு இரண்டு இலட்சம் மக்கள் அங்கு பலியாட்களாக ஆனார்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது..

உலகின் மிகமுக்கியமான ஆறு பாதிரியார்கள் 1989 அம் ஆண்டு, ஸான் ஸால்வடாரில், அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்திலுள்ள டிபன்னிங் தளத்தில் பயிற்றுவிக்கப்பட்ட அல்காதல் படைப்பிரிவினால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். தீவிரமான அஞ்சா நெஞ்சனான ஆர்ச்பிஷப் ரோமரியோ பிரசங்கத்தின் போது கொல்லப்பட்டார். 75,000 பொதுமக்கள் அங்கு கொல்லப்பட்டார்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஏன் அவர்கள் கொல்லப்பட்டார்கள்? ஒரு மேலான வாழக்கையை அவர்கள் நம்பினார்கள். அந்த வாழ்க்கையைச் சாத்தியத்தில் சாதிக்க முடியும் எனவும் அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கை அவர்களை உடனடியாகக் கம்யூனிஸ்ட்டுகள் எனத் தகுதி பெற வைத்தது. அவர்கள் ஒப்புக்கொள்ளப்பட்ட நியதிகளைக் கேள்விக்கு உட்படுத்தியதால் கொல்லப்பட்டார்கள். முடிவற்ற வறுமையின் கொடுமையைக் குறித்து, வியாதிகள் குறித்து, ஒடுக்குமுறையைக் குறித்து, அவர்களது பிறப்புரிமை போன்றவை குறித்து கேள்விகளைக் கேட்டதால் அவர்கள் கொல்லப்பட்டார்கள்

ஐக்கிய அமெரிக்கா அறுதியில் ஸான்டினிஸ்ட்டா அரசைக் கவிழ்த்தது. அதற்குப் பல காலங்கள் எடுத்தது. எதிர்ப்பும் இருந்தது. ஆனால் தொடர்ந்த பொருளாதார நெருக்கடி, 30,000 மக்களின் மரணம் போன்றவற்றின் பின், அமெரிக்கா நிகரகுவா மக்களின் ஆன்மபலத்தினை அடிமைப்படுத்திவிட்டது. அவர்கள் முழுவதும் சோர்ந்து போயினர். மறுபடியும் வறுமை அவர்களைச் சூழ்ந்தது. சூதாட்ட விடுதிகள் மறுபடியும் அந்த நாட்டில் தோன்றின. இலவசக் கல்வியும் இலவச மருத்துவ உதவியும் முடிந்து போயின. ஒரு பழிவாங்கும் வெறியோடு சுதந்திர வர்த்தகம் அங்கு மறுபடி தோன்றியது. இவ்வாறு ‘ஜனநாயகம்’ நிலைநாட்டப்பட்டது.

ஆனால் இந்தக் ‘கொள்கை’ மத்திய அமெரிக்காவுடன்; மட்டும் நின்றுவிடவில்லை. உலகம் முழுவதும் இது செயல்படுத்தப்பட்டது. இதற்கு முடிவேயில்லை. அந்த முடிவு எப்போதும் வராது போலத் தோன்றுகிறது.

இரண்டாம் உலகப் போ¡¢ன்பின் ஐக்கிய அமெரி;க்காவானது பெரும்பாலுமான சமயங்களில் உலகின் அனைத்து வலதுசாரி ராணுவ சர்வாதிகாரங்களும் தோற்றம் பெறச்செய்திருக்கிறது, இந்தோனேசியா, கிரீஸ், உருகுவே, பிரேஸில், பராகுவே, ஹைதி, துருக்கி, பிலிப்பைன்ஸ், குவாதமாலா, எல் ஸால்வடார், அதனோடு ஆமாம் சிலியையும் சேர்த்துத்தான் நான் சொல்கிறேன். 1973 ஆம் ஆண்டு சிலியின் மீது ஐக்கிய அமெரிக்கா சுமத்திய பயங்கரத்தை என்றென்றும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது.

ஆயிரக்கணக்கான மரணங்கள் இந்த நாடுகளில் நிகழ்ந்தன. அவைகள் நிகழ்ந்தனவா? அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையின் விளைவாகத்தான் அது நிகழ்ந்ததா? அதற்கான பதில் ஆமாம் என்பதுதான். அவைகள் நிகழ்ந்தன. அதற்கான காரணம் அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கைகள்தான். ஆனால் அதனை நீஙகள் அறிந்து கொள்ள முடியாது.

அவை நடக்கவே இல்லை. எதுவும் எப்போதும் நடக்கவில்லை. அவை நடந்துகொண்டிருக்கும் போதும் கூட அவை நடக்கவில்லை. அது ஒரு பிரச்சினையேயில்லை. அது பற்றியெல்லாம் அக்கறையில்லை. ஐக்கிய அமெரிக்காவினது குற்றங்கள் திட்டமிட்ட வகையிலானது, தொடர்ந்து நடப்பது, கொடூரமானது, குற்றவுணர்வேயற்றது, ஆனால் சிலரே அதுபற்றிப் பேசுகிறார்கள். அமெரிக்காவிடம் கையளித்து விடுங்கள். உலகின் நலனுக்காக ஒரு படையை வழிநடத்திக்கொண்டு, உலகெங்கிலும் கறாரான சத்திரசிகிச்சையின் நுட்பத்துடன் அதிகாரத்தைப் பெருக்கிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அது. கெட்டிக்காரத்தனமானது, விளையாட்டுத்தனமானது கூட, மயக்க நிலையில் நடக்கும் அதி வெற்றிகரமான செயல்பாடு அதனுடையது.

ஐக்கிய அமெரிக்காவானது சந்தேகமில்லாமல் நெடுஞ்சாலையில் நடக்கும் மிகப்பெரிய காட்சி என்பதனை நான் சொல்ல வேண்டும். மிருகத்தனமானது, பாரபட்சமானது, இழிந்த தன்மை கொண்டது. மனிதத் தன்மையற்றது என்றாலும் அது புத்திசாலித்தனமானதும் கூட. ஒரு வியாபாரியாக அது தானே வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது. அதனது அதி விற்பனைச் சரக்கு : சுயமோகம். அது வெற்றியாளன். எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் தொலைக்காட்சிகளில் சொல்வதைக் கேளுங்கள். ‘அமெரிக்க மக்களே’ என்பதுதான் அந்த வார்த்தைகள். ‘அமெரிக்க மக்களின் உரிமைகளைக் காக்கவும், அவர்கள் வழிபாடு தொடங்கவும் இதுதான் நேரம் என நான் அமெரிக்க மக்களிடம் சொல்கிறேன். அமெரிக்க மக்களின் சார்பாக அமெரிக்க ஜனாதிபதி மேற்கொள் ளும் நடவடிக்கைகளை அமெரிக்க மக்கள் விசுவாசத்துடன் நம்ப வேண்டும் எனவும் நான் அமெரிக்க மக்களிடம் சொல்கிறேன் ’.

இது ஒரு மேனா மினுக்கித் தந்திரம். மொழியைச் சிந்தனையைச் சரியான தளத்தில் வைத்திருக்கத்தான் நாம் பாவிக்கிறோம். ‘அமெரிக்க மக்கள்’ எனும் சொற்றொடர் நிஜத்தில் ஒரு இன்பக் களியாட்ட உத்தரவாதத்தைத்தான் வழங்குகிறது. நீஙகள் சிந்திக்கத் தேவையில்லை. வெறுமனே மெத்தையில் சாய்ந்து கொண்டிருந்தால் போதும். மெத்தை உங்கள் அறிவுச்செயல்பாட்டையும் விமர்சன அறிவையும் மூச்சுமுட்ட வைத்தாலும் பரவாயில்லை, சுகமாக இருந்தால் அதுபோதும். வறுமைக் கோட்டுக்கும் கீழ் வாழ்கிற நான்கு கோடி அமெரிக்க மக்களுக்கு இது பொருந்தாது. அமெரிக்க நிலப்பரப்பில் விரிகிற சித்திரவதை முகாம்களான சிறைகளில் வசிக்கிற இருபது இலட்சம் அமெரிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது பொருந்தாது.

ஐக்கிய அமெரிக்கா இப்போதெல்லாம் ‘குறைந்த அழுத்தத்திலான மோதல்’ கொள்கை பற்றிக் கவலைப்படுவதில்லை. பேசாமல் தவிர்ப்பதிலோ அல்லது சுற்றிவளைப்பதிலோ ஏதும் அர்த்தமிருப்பதாக அது நினைப்பதில்லை. அது தனது நலன்களை மேஜையில் பயமின்றியும் பரிவின்றியும் முன்வைக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை குறித்தோ அல்லது சர்வதேசியச் சட்டங்கள் குறித்தோ அல்லது விமர்சனபூர்வமான எதிர்க்குரல்கள் குறித்தோ அது சுத்தமாகக் கவலைப்படுவதில்லை. இவைகள் இன்று பொறுத்தமற்றவை என்றும், மலட்டுத்தனமானவை என்றும் அது சொல்கிறது. கட்டப்பட்ட கயிற்றில் கத்தித் திரிகிற ஒரு ஆட்டுக்குட்டியும் அதன் பின்னால் திரிகிறது, பரிதாபமான சேம்பேறிப் பெரிய பிரித்தானியா.

எமது அறவுணர்வுக்கு என்ன ஆயிற்று? எப்போதேனும் அது நம்மிடம் இருந்ததா? இந்த வார்த்தைகளுக்கு என்னதான் அர்த்தம்? இன்றைய நாட்களில் வெகு அசாதரணமாகவே உச்சரிக்கப்படுகிற மனசாட்சி என்பதைத்தான் அது குறிப்பிடுகிறதா? நமது நடவடிக்கைகளில் மட்டுமல்ல மனசாட்சி, பிறரது நடவடிக்கைகளில் நாம் பங்கு பெறுகிற, பொறுப்பு மற்றும் பகிர்தலோடும் சம்பந்தமுள்ளதல்லவா மனசாட்சி? இவையெல்லாம் செத்தா போய்விட்டது? குன்டனாமோ சிறைகளைப் பாருங்கள். மூன்று வருடங்களாக எந்தவிதமான குற்றப் பத்திரிக்கையும் இல்லாமல் நூற்றக்கணக்கான பேர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். பின் தொடரும் நடவடிக்கைகளோ அல்லது சட்டப் பிரதிநிதித்துவமோ இல்லாமல் அவர்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளார்கள்.

சொல்லப் போனால் என்றென்றைக்குமாக நிரந்தரமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். முற்றிலும் சட்டவிரோதமான இந்த அமைப்பை, ஜெனீவா மனித உரிமைப் பிரகடனத்துக்கு எதிராகப் பராமறித்து வருகிறார்கள். இது சகித்துக் கொள்ளப்பட்டிருப்பது மட்டுமல்ல, ‘சர்வதேசியச் சமூகம்’ என்ற சொல்லப்படுபவற்றால் இது உரத்துச் சிந்திக்கப்படாமலும் கூட இருக்கிறது. இந்தக் குற்றத் தன்மையுள்ள அத்துமீறல் ஒரு நாட்டினால் செய்யப்பட்டிருக்கிறது. அது தன்னை சுதந்திர உலகின் தலைவன் என்றும் சொல்லிக் கொள்கிறது. குன்டனாமோ சிறைகளில் வாடுபவர்கள் பற்றி நீங்கள் நினைத்துப் பாரத்ததுண்டா? ஊடகங்கள் அவர்கள் பற்றி என்ன சொல்கின்றன? அவ்வப்போது ஆறாம் பக்கத்தில் அவர்களை எட்டிப் பார்க்கின்றன ஊடகங்கள். ஆளற்ற தீவில் அவர்கள் விடப்பட்டிருக்கிறார்கள்.

சிலவேளை அவர்கள் திரும்ப வராமலே போகலாம். தற்போது அவர்களில் பலர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் பலவந்தமாக உணவருந்தச் செய்யப்படுகிறார்கள். அதில் பிரித்தானியக் குடிமக்களும் அடங்குவர். பலவந்தமாக உணவருந்தச் செய்தலில் எந்தவிதமான நாகரிக முறைகளும் இல்லை. மயக்க மருந்துகளோ அல்லது வலிமறக்கும் மருந்துகளோ இல்லை. ஒரு குழாய் உங்கள் மூக்கின் வழி உங்கள் தொண்டைக்குள் இறக்கப்படும். நீங்கள் இரத்த வாந்தி எடுப்பீர்கள். இது சித்திரவதை. பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் இது பற்றி என்ன சொல்கிறார்? ஒன்றுமில்லை. பிரித்தானியப் பிரதமர் இது பற்றி என்ன சொல்கிறார்? ஒன்றுமில்லை. ஏன்? ஏனென்றால் குன்டனாமோ சிறைகளில் தங்களது நடத்தைகளை விமர்சிக்கிறவர்கள், விரோதிகளின் நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள் என்று அமெரிக்கா சொல்கிறது. ஓன்று நீங்கள் எங்களுடன் இருக்க வேண்டும் அல்லது எதிரியுடன் இருக்க வேண்டும். ஆகவே பிரதமர் பிளேர் மூடிக் கொண்டிருக்கிறார்.;

ஈராக்கின் மீதான படையெடுப்பு என்பது ஒரு கொள்ளைக்காரத்தனமான நடவடிக்கை. அப்பட்டமான அரச பயங்கரவாத நடவடிக்கை. சர்வதேசியச் சட்டம் எனும் கருத்தாக்கத்திற்கு முற்றிலும் விரோதமானது. ஊடகங்களால் ஊதிப் பரப்பப்பட்டு மக்களையும் ஏமாற்றி, தொடர் பொய்களால் உந்தப்பட்ட தன்னிச்சையான ராணுவ நடவடிக்கை ஈராக்கிய ஆக்கிரமிப்பு. மத்தியக் கிழக்கில் அமெரிக்காவின் ராணுவப் பொருளாதாரக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கம் கொண்ட நடவடிக்கை இது. எல்லா விதமான நியாப்படுத்தல்களும் நியாயமிழந்து போனபின்னால் கடைசி முயற்சியாக - விடுதலை எனும் பெயரில் மேற்கொள்ளப்பட்ட- மத்திய கிழக்கைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இது. பல்லாயிரக் கணக்கான மக்களின் மரணத்திற்கும் சிதைக்கப்பட்ட உடல்களுக்கும் பெரும் ராணுவச்சக்தியை அங்கு திணித்ததே காரணம்.

நாங்கள் ஈராக்கிய மக்களுக்கு சித்திரவதையைக் கொடுத்திருக்கிறோம். வெடிகுண்டுக் கூட்டத்தைக் கொடுத்திருக்கிறோம்.. செறிவற்ற யுரேனியத்தைக் கொடுத்திருக்கிறோம். எண்ணற்ற நடவடிக்கைகளால் வரைமுறையற்ற கொலைகளை, அழிவை, கீழ்மையை, மரணத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். பிற்பாடு ‘மத்தியக் கிழக்குக்குச் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும்’ கொண்டுவருகிறோம் என்று இதனைச் சொல்கிறோம்.

வெகுமக்கள் கொலையாளி, யுத்தக் குற்றவாளி என்று அழைக்கப் பெறுவதற்கு முன்னால் எத்தனை கொலைகளைச் செய்தால் அதற்கு நீ தகுதி பெறுவாய? ஒரு இலட்சம் பேர்கள்?. அதற்கும் மேலாகவே ஆயிற்றென்று நான் நினைக்கிறேன். சர்வதேசியக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் புஷ்ஷும் பிளேரும்தான். புஷ் புத்திசாலி. அவர் சர்வதேசியக் குற்றவியல் நீதிமன்றத்தை அங்கீகரிக்கவில்லை. ஆகவே ஏதாவது அமெரிக்க ராணுவத்தினனோ அல்லது அமெரிக்க அரசியல்வாதியோ கூண்டில் நிற்பார்களாகப் புஷ் கண்டால், உடனே அவர் அவர்களை எச்சரிக்கை செய்து அமெரிக்க ராணுவத்தினிடம் அனுப்பி விடுவார். ஆனால் டோனி பிளேர் இந்த நீதிமன்றத்தை அங்கீகரித்திருக்கிறார். ஆகவே அவர் விசாரணைக்குக் கிடைப்பார். அவர்களுக்கு விருப்பமிருந்தால் அவர்களுக்கு நாம் முகவரியைக் கொடுப்போம. முகவரி இதுதான்: எண் 10, டவுனிங் தெரு. இலண்டன்.

இந்த உள்ளடக்கத்தில் சாவு பற்றிப் பேசுவது பொறுத்தமற்றது. புஷ்ஷும் பிளேரும் சாவை, ஈராக் எரிவதற்கு முன்பே தள்ளிக் கொண்டு போய்விட்டார்கள். ஈராக்கிய எதிர்ப்புக் கிளர்ச்சிகள் துவங்குவதற்கு முன்பாகவே ஒரு இலட்சம் ஈராக்கியர்கள் அமெரிக்காவின் வெடிகுண்டு வீச்சினாலும் ஏவுகணைகளாலும் கொல்லப்பட்டுவிட்டார்கள். இந்த மக்களுக்கு ஒரு தருணமும் வாய்க்கவில்லை. அவர்களது மரணம் சம்பவிக்கவில்லை. அவர்கள் ஏதுமற்றவர்கள். அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று கூடப் பதியப்படவில்லை. ‘நாங்கள் உடல்களை எண்ணுவதில்லை’ என்கிறார் அமெரிக்கப் படைத்தளபதி டோமி பிரேங்க்ஸ்.

ஆக்கிரமிப்பின் ஆரம்ப காலத்தில் டோனி பிளேர் ஒரு ஈராக்கியச் சிறுவனின் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் பிரித்தானியப் பத்திரிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டது. ‘அற்புதமான சிறுவன்’ என்று தலைப்பு சொன்னது. சில நாட்களின் பின் வேறொரு புகைப்படமும் ஒரு செய்தியும் வந்தது. உள்பக்கத்தில், கைகள் இல்லாத வேறொரு சிறுவன் பற்றிய செய்தி அது. ஒரு ஏவுகணைத் தாக்குதலால் அவனது குடும்பம் முழுக்கத் தகர்ந்து போயினர். அவன்தான் உயிர் தப்பிப் பிழைத்த ஒரெயொருவன். ‘எனது கைகளை எப்போது நான் திரும்பப் பெறுவேன்’. அவன் கேட்டான். அந்தக் கதை உதிர்ந்து போனது. நல்லது, டோனி பிளேர் அந்தச் சிறுவனைத் தன் கையில் ஏந்தியிருக்கவில்லை. உடல் சிதைந்த எந்தக் குழந்தையையும் அவர் ஏந்தியிருக்கவில்லை. இரத்தம் உறைந்த எந்த உடலையும் அவர் ஏந்தியிருக்கவில்லை. இரத்தக் கறை. நீங்கள் மிகவும் நேர்மையுடன் தொலைக்காட்சியில் உரையாற்றும்போது அது உமது சட்டையையும் டையையும் கறைப்படுத்தும்.

மரணமுற்ற அமெரிக்கப் படைவீரர்கள் பற்றிப் பேசுவது சங்கடமானது. இருளில் புதைக்கப்பட அவர்கள் கொண்டு செல்லப்படுகிறார்கள். இறுதி மரியாதைகள் தடங்கலில்லாமல், சேதமின்றி நடக்கின்றன. உடல் சிதைந்தவர்கள் தமது படுக்கையில் நாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் தம் மீதி வாழ்நாள் முழுக்கவும் நாறிக் கொண்டிருப்பார்கள். ஆகவே மரணமுற்றவர்களும் உடல் சிதைந்தவர்களும் என இருவரும் வேறுவேறு கல்லறைகளில அழுகிக் கொண்டிருப்பார்கள்.

பாப்லோ நெருதாவின் ‘ஒரு சில விஷயங்களை நான் விளக்குகிறேன்’ எனும் கவிதையிலிருந்து ஒரு பகுதியை இங்கு தருகிறேன்:

ஒரு அதிகாலையில் அனைத்தும் பற்றியெறிந்தன.
அதிகாலையில் பெரும் தீ பூமியிலிருந்து கிளர்ந்தது
உயிர்த்திருக்கும் மனிதர்களைக் கொன்றொழித்தது
அப்போதிருந்து தீ
அப்போதிருந்து வெடிமருந்தின் நெடி
பிறகெல்லாம் இரத்தம்

விமானங்களுடனும் நாடோடி மூர்களுடனும்
கொள்ளைக்காரர்கள்,
மோதிரங்களுடனும் இளவரசிகளுடனும் கொள்ளைக்காரர்கள்,
ஆசிர்வாதங்கள் தெறிக்கப் பாதிரிகளுடன் கொள்ளைக்காரர்கள்
குழந்தைகளைக் கொல்ல வான் வழி வந்தனர்.
குழந்தைகளின் இரத்தம் போலவே எந்தப் பாசாங்குமின்றி
குழந்தைகளின் இரத்தம் தெருக்களில் ஓடியது

நரிகளே வெறுக்கும் நரிகள்
வறண்ட முட்செடிகள் காறி உமிழும் கற்கள்
நச்சரவங்களே வெறுக்கும் நச்சரவங்கள்

நேருக்கு நேரிருந்து உன்னை நான் பார்த்திருந்தேன்
ஸ்பெயினின் குருதி ஒரு பேரலையாக எழந்ததை,
பெருமிதமும் கத்திகளும் கொண்டு ஓரலை உன்னை
விழுங்கியதைப் பார்த்திருந்தேன்.

ஜெனரல்களே துரோகிகளே-

வாருங்கள் வந்து பாருங்கள் என் அழிந்த வீட்டை
உடைந்து நொறுங்கிய ஸ்பெயினைப் பாருங்கள்
மலர்களுக்கு மாறாக
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் எரியும் உலோகம் வழிகிறது
ஸ்பெயினின் ஒவ்வொரு கண்குழியினின்றும்
ஸ்பெயின் எழுகிறது
மரணித்த ஒவ்வொரு குழந்தையினிடமிருந்தும் விழிகளுடன்
ஒரு துப்பாக்கி பிறக்கிறது
செய்த ஒவ்வொரு குற்றத்திலிருந்தும்
துப்பாக்கி ரவைகள் பிறக்கின்றன
ஒரு நாளில் அவை உமது
இதயத்தின் மையத்தைக்; கண்டடையும்;

நீங்கள் கேட்பீர்கள்-

ஏன் அவனது கவிதைகள்
கனவுகள் குறித்தும் இலைகள் குறித்தும்
அவனது பிறந்த இடத்தின்
மகத்தான எரிமலைகள் குறித்தும் பேசுவதில்லை?

வாருங்கள் வந்து பாருங்கள் தெருக்களில்
இரத்தத்தை
வாருங்கள் வந்து பாருங்கள்
தெருக்களில் சிந்தியிருக்கும் இரத்தத்தை
வாருங்கள் வந்து பாருங்கள் இரத்தத்தைத்
தெருக்களில்!

நெருதாவினது கவிதையினைக் குறிப்பிடுவதால் நான் குடியரசுக்காகப் போராடிய ஸ்பெயினையும் ஸத்தாம் குசைனது ஈராக்கையும் ஒப்பிடவில்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். நான் நெருதாவை மேற்கோள் காட்டக் காரணம் யாதெனில், சாதாரணக் குடிமக்கள் மீது குண்டுவீசுவதை இத்தனைக் காத்திரத்துடனும் சரீரத்தின் உள்ளார்ந்த விவரிப்புடனும் சொன்னதைச் சமகாலக்கவிதையில் நான் இதுபோல வேறெங்கும் படித்ததில்லை.

ஐக்கிய அமெரிக்காவானது தனது நோக்கங்களை முழுமையாக எந்தவிதத் தயக்கமுமின்றி முன்வைத்து வருகிறது என நான் முன்பு சொன்னேன். இது தான் இருக்கிற நிலைமை. அதிகாரபூர்வமாக அதனது அறிவிக்கப்பட்ட நிலைபாடு என்பது, முழுமையான அனைத்தும் தழுவிய ஆதிக்கமே தனது நோக்கம்: ‘முழு நிறமாலை ஆதிக்கம்’ என வரையறை செய்கிறது. இது என்னுடைய வாக்கியம் அல்ல, அவர்களுடையது. முழுமையான அனைத்தும் தழுவிய ஆதிக்கம் எனில் நிலத்தின் மீதான ஆதிக்கம், கடல், காற்று மற்றும் வான்வெளி அதுபோல தட்டுப்படுகிற ஆதாரவளங்கள் அனைத்தின் மீதுமான ஆதிக்கம் என்று அர்த்தம்.

ஐக்கிய அமெரிக்கா தற்போது 702 ராணுவக் கேந்திரங்களை உலகின் 132 நாடுகளில், மரியாதைக்குரிய ஸ்வீடன் நீங்கலாக, வைத்திருக்கிறது. எப்படி அவர்கள் இந்த நாடுகளை எல்லாம் சென்றடைந்தார்கள் என்பது முழுமையாக எமக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் ஏற்கனவே இந்த நாடுகளில் இருக்கிறார்கள்.

ஐக்கிய அமெரிக்கா செயல்வேகமுள்ள 8,000 அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. இதில் 2000 ஆயதங்களை மயிரிழையில் தூண்டக் கூடியதாக வைத்திருக்கிறது. 15 நிமிட எச்சரி;க்கையில் இவைகள் ஏவப்பட முடியம். பதுங்குகுழி வெடி எனும் புதிய வகையிலான ஒரு புதிய ரக அணு ஆயுதத்தினையும் இது உருவாக்கி வருகிறது. எப்போதுமே அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் பி¡¢த்தானியாவும் தமது சொந்த அணு ஆயுதங்களையும் மாற்றி அமைத்து வருகிறது. எனக்கு ஆச்சர்யமாகவிருக்கிறது, யாரை இவர்கள் குறி வைக்கிறார்கள்? ஒசாமா பின் லாடனையா? உங்களையா? என்னையா? ஜோ டோக்ஸையா? சீனாவையா? பாரிஸ் நகரத்தையா? யாருக்குத் ¦தரியும்? எமக்குத் தெரிந்ததெல்லாம் இது சிறுபிள்ளைத்தனமான பைத்தியக்காரத்தனம் - அணு ஆயுதங்கைள வைத்துக் கொண்டு ஏவி விடுவேன் என மிரட்டிக் கொண்டிருப்பது - இதுதான் இன்றைய அமெரிக்க அரசியல் தத்துவத்தின் மையமாகவிருக்கிறது. ஐக்கிய அமெரிக்காவானது நிரந்தரமாக ராணுவரீதியில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது என்பதனையும், அதனை மாற்றிக் கொள்வதற்கான எந்தச் சமிக்ஞையும் அதனிடம் இல்லை என்பதனையும் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பத்துலட்சக் கணக்கில் இல்லாவிட்டாலும், ஆயிரக் கணக்கான அமெரிக்க மக்கள் கணிசமான அளவில் வருத்தப்படுகிறார்கள். தமது அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்காக அவமானம் கொள்கிறார்கள். கோபம் கொள்கிறார்கள. இருக்கிறபடி பார்க்கிறபோது அவர்கள் ஒரு அரசியல் சக்தியாக இல்லை. ஆனால் அனுதினமும் அதிகரித்து வரும் கிலி, நிச்சயமின்மை, பயம் போன்றவை அணைந்துவிடும் என்று தோன்றவில்லை. ஜனாதிபதி புஷ்க்கு உரை எழுதுவதற்கென வேகமிக்க உரை எழுத்தாளர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும், நானே முன்வந்து அவருக்கு உரை எழுதும் வேலை செய்ய ஆசை கொள்கிறேன். இந்தச் சின்ன உரையை அவர் நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என நான் பரிந்துரை செய்கிறேன். விறைப்பான, தலைமுடியைப் படிய வாரிய, கடுமையான, வெற்றிகொண்ட, ஈடுபாடுடைய. சமயங்களில் வெருட்டுகிற, சில சமயங்களில் வறண்ட புன்னகை காட்டுகிற, விநோதமான வகையில் கவர்ச்சி கொண்ட, ஆண்களின் ஆணாக அவரை நான் காண்கிறேன்.

‘கடவுள் நல்லவர். கடவுள் மகத்தானவர். எனது கடவுள் நல்லவர். பின்லாடனது கடவுள் கெட்டவர். அவனது கடவுள் கெட்ட கடவுள். அவனுக்கு ஒரு கடவுள் இல்லை என்பதற்கும் அப்பால், ஸத்தாம் குசைனது கடவுள் கெட்டவர். அவன் ஒரு காட்டுமிராண்டி. நாம் காட்டுமிராண்டிகள் அல்லர். நாம் பொதுமக்களின் தலைகளைக் கொய்வதில்லை. நாம் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். கடவுளும் அப்படித்தான். நான் கட்டுமிராண்டி இல்லை. சுதந்திரத்தை விரும்பும் ஜனநாயகத்தினால்; ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான். நமது சமூகம் இரக்க குணமுள்ள சமூகம். நாம் இரக்க குணமுள்ள மின்சார நாற்காலியில் கொல்கிறொம். இரக்க குணமள்ள விஷ ஊசியில் கொல்கிறோம். நாம் மகத்தான தேசத்தவர். நான் சர்வாதிகாரி இல்லை. அவன் தான் சர்வாதிகாரி. நான் காட்டுமிராண்டி இல்லை. அவன்தான் காட்டுமிராண்டி. அவர்கள் எல்லோரும் காட்டுமிராண்டிகள். நான் ஒழுக்கத்தை நிலைநாட்டும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறேன். இதனைத்தான் முதலில் நீங்கள் கவனம் வைக்க வேண்டும். இது என்னுடைய ஒழுக்க அதிகாரம். இதனை நீங்கள் மறக்கக் கூடாது’.

எழுத்தாளனுடைய வாழ்க்கை என்பது அதி பலவீனமானது. அநேகமாக அம்மணமான நடவடிக்கை. அதற்காக நாம் அழுது கொண்டிருக்கத் தேவையில்லை. எழுத்தாளன் தனது தேர்வை மேற்கொள்கிறான். அதில் அவன் உறுதியாக நிற்கிறான். நீங்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் வீசம் காற்றுக்கும் திறந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். சில திசைக் காற்று கடுங்குளிராகத்தான் இருக்கும். உங்கள் விருப்பப்படிதான் நீங்கள் வெளியே வந்திருக்கிறீர்கள். நீங்கள் இடர்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். உங்களுக்குத் தங்குமிடமில்லை. பாதுகாப்பில்லை - நீ¢ங்கள் பொய் சொன்னால் ஒழிய- நிஜத்தில் நீங்கள்தான் உமது சொந்தப் பாதுகாப்பைக் கட்டமைத்துக் கொள்கிறீர்கள், இப்படியும் இதனை விவாதிக்கலாம், நீங்கள் அரசியல்வாதியாக ஆகிறீர்கள்.

இன்றைய மாலை நேரத்தில் பல தடவைகளில் நான் மரணம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். இப்போது ‘மரணம்’ எனும் தலைப்பிலான என் சொந்தக் கவிதையைக் குறிப்பிட விரும்புகிறேன்.

எங்கே சடலம் கண்டுபிடிக்கப்பட்டது?
யார் சடலத்தைக் கண்டார்கள்?
சடலம் கண்டுபிடிக்கப்பட்டபோதே உயிரற்று இருந்ததா?

அந்தச் சடலம் யாருடையது?

மரணமுற்ற நிலையில் கைவிடப்பட்ட சடலத்தின்
தந்தை அல்லது மகள் அல்லது சகோதரன் அல்லது
மாமா அல்லது சகோதரி அல்லது மகள்
யாரென்று தெரியுமா?

கைவிடப்பட்டபோதே உடல் உயிரற்று இருந்ததா?

சடலம் உண்மையில் கைவிடப்பட்டதுதானா?
யாரால் இந்தச் சடலம் கைவிடப்பட்டது?
சடலம் நிர்வாணமாக இருந்ததா அல்லது
பயணத்துக்கான உடைகள் ஏதேனும் உடுத்தி இருந்ததா?

சடலம் உயிரற்றுத்தான் இருக்கிறது என்று நீ சொன்னதற்கு என்ன ஆதாரம்?
நீ தான் இந்தச் சடலம் உயிரற்று இருக்கிறது என்று
உறுதிப்படுத்தினாயா?
இந்தச் சடலம் பற்றி எவ்வளவு தூரம் நீ அறிவாய்?
இந்தச் சடலம் உயிரற்றுத்தான் இருக்கிறது என்று
எப்படி உனக்குத் தெரியும்?

சடலத்திற்கு நீ குளிப்பாட்டினாயா?

சடலத்தின் இரண்டு விழிகளையும் நீதான் மூடினாயா?
சடலத்தை நீ புதைத்தாயா?
சடலத்தை நீ தான் கைவிட்டுச் சென்றாயா?

சடலத்திற்கு நீ முத்தம் தந்தாயா?

நாம் கண்ணாடியைப் பார்க்கும்போது நம்மை எதிர்கொள்ளும் பிம்பம் துல்லியமானது என நாம் நினைக்கிறோம். ஒரு மில்லிமீட்டர் நகர்ந்து பாருங்கள். நமது பிம்பம் மாறிவிடும். நாம் காண்பதெல்லாம் என்றும் முடிவுறாத பிரதிபலிப்புகள்தான். ஆனால் சில சமயங்களில் எழுத்தாளன் என்பவன் கண்ணாடிகளை உடைத்தெறிய வேண்டும். கண்ணாடியின் அடுத்த பக்கத்தில்தான்; நிஜம் நம்மை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நிலவுகிற பெரூமளவிலான சிரமங்கள் இருந்தபோதிலும் நான் நம்புகிறேன்: அச்சமற்ற, நெறி திறம்பாத, உக்கிரமான அறிவுசார் கடப்பாட்டுடன், ஒரு குடிமகனாக, நமது சமூகங்களினதும் எமது வாழ்வினதும் மெய்ம்மைகளை நாம் வரையறுக்க வேண்டியது நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள, நமக்கு முன்னுள்ள கடமையாகும். நிஜத்தில் இது நமக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டளையாகும்.

நமது அரசியல் தரிசனத்தில் இந்தக் கடப்பாட்டுணர்வை நாம் வரித்துக் கொள்ளவில்லையானால், மனிதர்களாக நமக்கு மிகவும் நெருக்கமான, நாம் இழந்த மனிதனது பெருமிதத்தை, நாம் மீள அடைவதென்பதற்கான நம்பிக்கை எமக்கு இல்லாது போகும்.. 

- யமுனா ராஜேந்திரன்

Pin It