இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம், இந்தி மொழியை எதிர்க்கவில்லை!

இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்தி மொழியில்தான் கல்வி கற்க வேண்டும். அவர்களுக்கு தமிழ் மொழியில் கல்வி கற்றுக் கொடுங்கள் என்று தமிழர்கள் கூறுவதில்லை.

Hindi Impositionஇந்தி மொழியை தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வேலை நிமித்தமாக கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். தமிழ்நாட்டில் அதிக வேலை கிடைக்கிறது என்பதற்காக இந்தி பேசும் மாநிலங்களில் தமிழை கட்டாயமாக்க வேண்டும், அப்பொழுது தான் வேலை கிடைக்கும் என்று யாரும் கூறுவதில்லை.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நடைமுறையில் இருக்கும் பொழுதே இந்தி கற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் இந்தி கற்றுக் கொள்வதை யாரும் எதிர்ப்பதில்லை.

தமிழ்நாட்டில் இந்தி பிரச்சார சபா மூலம் இந்தி மொழியை இலவசமாகக் கூட விரும்புகிறவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம், இதை யாரும் எதிர்க்கவில்லை.

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு பாதிப்பாக இந்தி மொழியை அல்லது ஏதேனும் ஒரு மொழியைத் திணிப்பதை ஏற்க முடியாது.

உலகம் முழுவதும் தமிழ் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. உலக மக்கள் பலரும் பல நாடுகளிலும் தமிழைக் கற்று வருகிறார்கள். தமிழர்களின் மொழிப் பற்றால் தமிழ்ச் சங்கம் அமைத்து நாடு தோறும் தமிழ் வளர்த்து வருகிறார்கள்.

இந்தி மொழி மீது பற்று கொண்ட மக்கள் இந்தி பிரச்சார சபா மூலம் இந்தியை உலகம் முழுவதும் கற்றுக் கொடுக்க யாரும் தடையாக இல்லை.

மும்மொழிக் கொள்கை என்பது இந்தி ஆதிக்கத்துக்கு வழிவகுப்பதாக அமையும்.

தமிழ்நாட்டு அரசு நடைமுறையிலுள்ள இருமொழிக் கொள்கையை மட்டுமே தொடர வேண்டும். மும்மொழிக் கொள்கைக்கான‌ வரைவுத் திட்டத்தை எதிர்க்க வேண்டும்.

இந்தியா முழுவதும் இந்தியர்களின் தாய்மொழிகள் மறக்கடிக்கப்பட்டு அன்னிய மொழி மோகம் வளர்த்தெடுக்கப்படுகிறது. கல்வித் துறையின் மூலமாகவே இந்த மோகம் பரவி வருகிறது. இதைத் தடுக்க தாய்மொழிக் கல்வி சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

தாய்மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் சமுதாயத்தை உருவாக்க வேண்டியது தான் கல்வித் துறையின் வேலை.

காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், அப்துல் கலாம் அனைவரும் போற்றிய தாய்மொழிக் கல்வியை இந்தியாவின் கல்விக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்.

தாய்மொழிக் கல்வி அவசியத்தை வலியுறுத்துவதை விட மும்மொழிக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பது இந்தி ஆதிக்கத்தை இந்தியா முழுவதும் உருவாக்க நினைப்பதாகவே தோன்றுகிறது.

முழங்குவோம்
மும்மொழிக் கல்வி வேண்டாம்
தாய்மொழிக் கல்வி வேண்டும்.

- மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தமிழ்வழிக் கல்வி இயக்கம்

Pin It