“ஏன் ஒதுங்கியே நிற்கிறீர்கள்...? கொண்டாட மாட்டீர்களா...?” என்றது தொலைபேசிக் குரல்.
அதுவும் ஒரு பத்திரிகையாளருடையது.
எதற்காகக் கொண்டாட வேண்டும்...? என்றேன்.
“இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்ததை...” என்றார்.
ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவதுமில்லை. தோற்றால் செருப்பாலடித்து இழிவு படுத்துவதுமில்லை.
இரண்டுமே எனது வேலையில்லை...” என்றேன்
“இந்திய ராணுவத் தளபதி என்.சி.விஜ் கூட ‘இது இந்தியாவுக்கே கெளரவத்தை தேடித் தந்திருக்கிறது...’ என்று வாழ்த்தி இருக்கிறாரே...?”
அப்படியானால்... ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு ‘இது இந்தியாவுக்கே அவமானம்’ என்று கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்...? என்றேன்.
“என்ன இருந்தாலும் பாகிஸ்தானை ஜெயித்திருக்கிறோம்... இனி உலகக் கோப்பையே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை...”என்று
தனது அறியாமையை அள்ளிக் கொட்டினார் அந்தப் பத்திரிகையாளர்.
இதற்கு எங்கள் ஊரில் வேறு பழமொழி இருக்கிறது என்றேன்.
“என்ன பழமொழி...?”
“மகன் செத்தாலும் சரி... மருமக தாலி அறுக்கணும்...”
“ச்சே... தேசபக்தியே கிடையாதா...?” எரிச்சலின் உச்சத்தில் இருந்தது குரல்.
நிச்சயமாகக் கிடையாது. ஆனால்... தேசங்களில் உள்ள மக்களின் மீது மாளாக் காதல் உண்டு.
எம்மைப் போலவே பசியிலும்... பட்டினியிலும் உயிரை விடுகிற...
தள்ளாத வயதிலும் ஊதுபத்திகளையும்... தீப்பெட்டிகளையும்
வீடு வீடாகச் சுமந்துசென்று விற்று வயிறு வளர்க்கிற...
நிலங்களை இழந்து...
வாழ்க்கையை இழந்து...
விமானங்கள்வீசும் உணவுப் பொட்டலங்களுக்காக
வானத்தை அண்ணாந்து பார்த்துக் காத்திருக்கிற...
சோமாலியா மக்கள்மீது காதல் உண்டு...
பாகிஸ்தான் மக்கள்மீது காதல் உண்டு...
இலங்கை மக்கள் மீது காதல் உண்டு...
நிகரகுவா மக்கள்மீது காதல் உண்டு...
இவர்களைப் போன்றே இன்னமும் ஒடுக்கப்படுகின்ற
ஒவ்வோரு மூன்றாம் உலக நாடுகள்மீதும் எமக்கு காதல் உண்டு.
ஆனால் உங்களைப் போல கேவலம் ஒரு கிரிக்கெட்டிற்காக ஆர்ப்பரிக்கும் போலி தேசபக்தி மட்டும் நிச்சயம் இல்லை எமக்கு.
விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல், இந்தியாதான் ஜெயிக்கணும்... பாகிஸ்தான் தோற்கணும்... என்கிற ரசிகர் மன்ற மனோபாவத்தோடுதான் பார்க்கவேண்டும் என்றால்... மன்னித்து விடுங்கள் என்னை. நானிந்த ‘விளையாட்டிற்கு’ வரவில்லை.
அப்படி பார்த்தால் ஜாக்கிசான், அர்னால்டு படங்களைக்கூட பார்க்கக்கூடாது நீங்கள்...என்றேன்.
போனை வைத்து விட்டார் நண்பர்.
இந்த நவீன நீரோக்களை நினைத்தால் எரிச்சலைக் காட்டிலும் பரிதாபமே மேலிடுகிறது. அண்டை நாட்டிடம் தேற்றால் கேவலம்
வெள்ளைத் தோலர்களிடம் தோற்றால் கெளரவம் என்று கருதுகிற அடிமை மனோபாவம் எப்போது தொலையும் இந்த இரு நாட்டுக்கும்...?
இந்துஸ்தானோ...
பாகிஸ்தானோ...
இறுதியில் மண்டியிட்டுக் கிடப்பது அமெரிக்காஸ்தானிடம்தான்.
அதில் மட்டும் சுயமரியாதையைத் தொலைத்துவிட்டுத் திரிவார்கள் இவர்கள்.
கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுவது மாதிரிதான் கிரிக்கெட்டும்.
மாலைக்கு மாலை போட்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளியோ...
விவசாயக் கூலியோ...
மலை ஏறி முடிக்கிற வரைக்கும் ராஜ மரியாதைதான்.
வரப்பில் நிற்கும் பண்ணையார்...’சாமி! மலைக்கு போயிட்டு எப்பத் திரும்புவீங்க...?’ என்பான்.
கடன் கொடுத்த மீட்டர் வட்டிக்காரன்....”சாமிக்கு இது எத்தனாவது வருசம்...?” என்பான்.
எங்கு திரும்பினாலும் ஏக மரியாதைதான்.
ஆனால் ‘சாமி’ மலை இறங்கியது தெரிந்த மறு நிமிடத்திலிருந்து ‘முதல் மரியாதை’தான்.
அப்படிதான் கிரிக்கெட்டும்.
மேட்ச் முடிகிறவரைக்கும் எம்.டி.யிடம் பியூன் ஸ்கோர் கேட்கலாம்.
“கும்ப்ளே அந்த கேட்ச்சை விட்டிருக்கக் கூடாதுங்க...” என்று
கடை முதலாளியிடம் சரக்கு சுமக்கிற பையன் அளவளாவலாம்.
ஆனால் மேட்ச் முடிந்த மறு நொடியே... “...யோளி... அங்க என்ன பராக்கு பார்த்திட்டு இருக்கே...?” என்று குரல் வரும், ‘மாலை’யைக் கழட்டிய மாதிரி....
அதுவரை டீக்கடை தொடங்கி பெரும் தொழில் நிறுவனங்கள் வரைக்கும் கிரிக்கெட்டை அக்குவேறு ஆணிவேறாக அலசுவதென்ன...?
அரிய பல ஆலோசனைகளை அள்ளி வீசுவதென்ன...?
சூப்பர்தான் போங்கள்.
ஆனால் பந்தயம் முடிந்த மறு கணத்திலேயே இவர்களுக்குள் பதுங்கிக் கிடக்கும் வக்கிரங்கள் விழித்துக் கொள்ளும்.
அதுவரையில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டவர்கள் பிறகு ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடிக் கிளம்புவார்கள்.
அது உட்சாதிச் சண்டையாக...
சாதிச் சண்டையாக ...
மதச் சண்டையாக...
மாநிலச் சண்டையாக...
உருவெடுத்து தற்காலிகமாக
இவர்களது தேசபக்தி மூட்டை கட்டி பரணில் போடப்படும்.
அப்புறமென்ன... வழக்கமான தலைப்புச் செய்திகளுக்குள் மூழ்கிப் போகும் தேசம்.
இவர்களது தேசபக்தியை வெளிச்சம் போட்டுக் காட்ட பிறகொரு சந்தர்ப்பம் வராமலா போகும்...? அதுவும் வரும்.
ஒரு விளம்பர இடைவேளைக்குப் பிறகு.
இன்னொரு கிரிக்கெட் பந்தய ரூபத்தில்
நாட்டை அடகு வைக்கிற உலக வர்த்தக நிறுவனம் குறித்துக் கூட்டமாகக் கூடி குரல் எழுப்பமாட்டார்கள் இவர்கள்...
பட்டினிச் சாவுகள் குறித்து கூட்டமாகக் கூடி விவாதிக்க மாட்டார்கள் இவர்கள்...
உலகில் யுத்த மேகங்கள் சூழ்ந்தால் நமது நிலை என்ன என்பதற்கு கூட்டமாகக் கூடி குரல் கொடுக்க மாட்டார்கள் இவர்கள்...
ஆனால் தெருக்களிலும்... தேநீர்க் கடைகளிலும்... திரையரங்குகளிலும் கூடுகிற கூட்டம் கிரிக்கெட் மேட்சிற்காம்.
என்னே தேசபக்தி...?
பாவம்...
இவர்கள் விளையாட்டை போராகப் பார்க்கிறார்கள்
போரையோ விளையாட்டாகப் பார்க்கிறார்கள்.
இவர்கள் மத்தியில் வாழ்வதைவிடவும்
தண்டனை நம்மைப் போன்ற
‘தேசத்துரோகி’களுக்கு அப்புறம் வேறென்ன இருக்கிறது...?
- பாமரன்