assam against modi

(மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அஸ்ஸாம் மக்கள்)

இதற்கு முன் இந்திய வரலாற்றில் இது போன்று நடந்ததே இல்லை. ஒரு நாட்டின் பிரதமரை அவர் செல்லும் மாநிலங்களில் எல்லாம் அந்த மாநில மக்கள் ஓரணியில் நின்று, தங்கள் மாநிலத்திற்குள் வரவேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து விரட்டி அடிப்பது. அசாம், கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு என எங்கு சென்றாலும் தங்கள் வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி வந்ததாக நினைத்து மக்கள் விரட்டி விரட்டி அடிக்கின்றார்கள். கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் தொடங்கி மோடியின் உருவ பொம்மையை கொளுத்துவது வரை மக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கின்றார்கள். Gobackmodi என்ற வாசகம் ட்விட்டரில் டிரண்டிங் ஆவது சமீக காலமாக அதிகரித்து வருகின்றது. அதுவும் மாநிலத்தைத் தாண்டி, இந்தியாவைத் தாண்டி, உலக அளவில் டிரண்டிங் ஆகின்றது. ஆனால் இவ்வளவு எதிர்ப்பைத் தாண்டியும் மோடி தான் உரையைத் திட்டமிட்ட படியே நிகழ்த்துகின்றார். தம்மீதான மக்களின் எதிர்ப்பை அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அது மோடி தம்மீது வைத்திருக்கும் அதீதமான நம்பிக்கையால் அல்ல, இந்த நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால்!.

பொய்களுக்கும், புரட்டுகளுக்கும், விளம்பரங்களுக்கும் அதி முக்கியத்துவம் கொடுக்கும் நாட்டில் மோடி போன்றவர்கள் மக்களின் எதிர்ப்பைக் கண்டு நிச்சயமாக பயப்பட மட்டார்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்றோமோ, இல்லையா என்பது ஒரு பிரச்சினையே இல்லை; மக்கள் கொதிப்பில் இருக்கும் போது அவர்களை ஆசுவாசப்படுத்துகின்றோமோ என்பதுதான் மிக முக்கியமானது. அந்த விசயத்தைப் பொருத்தவரை மோடிக்கு நிகர் அவரேதான். 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம், சிறு குறு தொழில்களில் அழிவு, விவசாயிகள் தற்கொலை, ஆயிரக்கணக்கான கோடி வங்கி மோசடிகள், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் சூறையாடல், சாமானிய எளிய மக்கள் மீதான இந்து மத வெறியர்களின் தாக்குதல், சமூக செயல்பாட்டாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்படுதல் மற்றும் கைது செய்யப்பட்டு சித்தரவதை செய்யப்படுதல், நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டு நீதி மிரட்டப்பட்டும், விலை கொடுத்தும் வாங்கப்படுதல், சிபிஐ, வருமான வரித்துறை, ரா போன்ற அமைப்புகள் மோடியின் ஏவல் நாய்களாக மாற்றப்படுதல் என ஒட்டுமொத்தமாக நாட்டையும் அதை ஆட்சி செய்யும் உறுப்புகளையும் வரலாறு காணாத அளவிற்கு சீரழித்து ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இந்த ஆட்சியைக் கண்டு மிரண்டுபோய் நிற்கும்படி மோடி செய்துள்ளார்.

மோடியின் ஆட்சி பணக்காரர்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குமான ஆட்சியாகவே இந்த ஐந்து ஆண்டுகளில் நடந்து வந்திருக்கின்றது. சாமானிய மக்கள் தங்கள் வாழ்வில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் அடையவில்லை. மோடியின் வாயில் இருந்து தினம் தினம் கருத்தறிந்து பிறந்த புதிய இந்தியாவை அவர்கள் எங்குமே பார்க்கவில்லை. அவர்கள் காணும் இந்தியா அழுக்கடைந்து அகோரமாக காணப்படுகின்றது. அங்கே வறுமையும், பசியும், நோயும், சுகாதார சீர்கேடுமே ஆட்சி செய்கின்றது. தூய்மை இந்தியாவும், டிஜிட்டல் இந்தியாவும் அவர்களின் உலகத்திற்கு வெளியே இருக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் வாழ்நிலை எப்படி இருந்ததோ அதில் இருந்து ஒரு அடி கூட அவர்கள் முன்னேறவில்லை. அவர்களின் ஊதியம் வீழ்ச்சியடைந்து இருக்கின்றது. உணவுப் பொருட்களுக்காகவும், பெட்ரோலுக்காகவும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் அவர்களின் செய்யும் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. அவர்கள் கையில் வைத்திருந்த நாணயத்தின் மதிப்பு கூட பெரிய அளவில் வீழ்ந்துள்ளது.

flex against modi in andra

(மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் வைக்கப்பட்ட பதாகை)

காங்கிரஸ் எதிர்ப்பில் கரை சேர்ந்த பிஜேபி தன்னை இந்தியா முழுமைக்குமான ஒரு கட்சியாக நிலை நிறுத்திக் கொள்வதில் பெரும் தோல்வியடைந்து இருக்கின்றது. ஒவ்வொரு மாநிலத்தின் தனித்தன்மையையும், பண்பாட்டு அடையாளங்களையும், மொழியையும் அழித்து பார்ப்பன மேலாண்மையை வம்படியாக திணிப்பதில் காட்டிய ஆர்வத்தில் ஒரு சிறிய அளவு கூட சாமானிய மக்களின் முன்னேற்றத்தில் மோடி அரசு காட்டவில்லை. கேரளா மழை வெள்ளத்தால் பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்ட போது, அந்த மாநில மக்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் போனதோடு, அதை மிக வக்கிரமான முறையில் மோடி அரசு அணுகியது. தமிழ்நாட்டில் ஓக்கிபுயல், கஜா புயல் போன்றவை மாநிலத்தையே புரட்டிப்போட்டு பல நூறு உயிர்களை காவு கொண்ட போதும் எந்த நிவாரணத்தையும் அளிக்காமல் தமிழர்கள் மீதான தன்னுடைய வரலாற்றுப் பகையை தீர்த்துக் கொண்டது. தங்களால் நிச்சயம் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்ற நிலையுள்ள மாநிலங்களை மோடி அரசு திட்டமிட்டே வஞ்சித்தது. தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட மத வன்முறையாலும், கீழ்த்தரமான ஆட்சியாலும் பெரிய அளவிற்கு எதிர்ப்பை சம்பாதித்து வைத்திருக்கின்றது.

வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்து எந்த ஒரு மாநிலத்திலும் பிஜேபி ஆட்சியைப் பிடிக்கவில்லை, மாறாக அந்தந்த மாநிலத்தில் உள்ள சாதியக் கட்சிகளை ஒருங்கிணைத்தோ, மத வன்முறைகளைத் தூண்டிவிட்டோ தான் அது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இன்று இந்தியாவில் மத வன்முறைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களாக பிஜேபி ஆளும் மாநிலங்களே உள்ளன. அதனிடம் எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் இல்லை. அப்படி இருப்பதாக சொல்வது மக்களை ஏமாற்றி ஓட்டு பெறுவதற்காக மட்டுமே. மாறாக அதனிடம் இருப்பது ஆர்.எஸ்.எஸ் யின் செயல் திட்டங்களே. அதன் பார்ப்பனிய மேலாண்மையை ஏற்றுக்கொண்ட லட்சிய இந்தியாவை கட்டமைக்கும் முயற்சியையும், அதற்கான திட்டங்களை செயல்படுத்தியதுமே மோடியின் இந்த ஐந்தாண்டு ஆட்சியின் சாதனைகள். மோடியின் டிஜிட்டல் இந்தியா கோஷம் ஓட்டுக்காக என்றால், மாட்டு மூத்திரத்தை விற்பனை செய்யும் அதன் திட்டத்தை அது கட்டமைக்க நினைக்கும் உண்மையான இந்தியா என நாம் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.

பிஜேபியினர் எவ்வளவுதான் இந்தத் தேர்தலில் மோடிக்கு முட்டுக் கொடுக்க நினைத்தாலும் வெறுங்கையில் நிச்சயம் முழம் போட முடியாது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற பிஜேபி ஆளாத மாநிலங்களில் இருந்து மட்டும் அல்லாமல், அசாம் போன்ற பிஜேபி ஆளும் மாநிலங்களிலேயே அதற்கு எதிர்ப்பு வலுத்து வருவதில் இருந்து இதனை நாம் உணர்ந்து கொள்ளலாம். ஆர்.எஸ்.எஸ் சின் பிடி இறுக்கமாக உள்ள மாநிலங்களில் மட்டுமே தற்போதைக்கு மோடியால் தன்னுடைய பிம்பத்தை தற்காத்துக் கொள்ள முடிந்திருக்கின்றது. ஆனால் இதுவும் கூட இன்னும் இரண்டு மாதங்களில் பெரிய அளவில் மாறுவதற்கான சூழல் உள்ளது. வட மாநிலத் தேர்தல்களில் தொடர்ந்து பிஜேபி தன்னுடைய பிடியை இழந்து வருகின்றது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் அக்கட்சி ஆட்சியை இழந்திருக்கின்றது. இந்தத் தோல்விகள் அனைத்தும் அதன் மோசமான மதவெறி ஆட்சிக்கும், நாட்டை பெருமுதலாளிகளுக்கு விற்கும் அதன் கொள்கைக்கும் கிடைத்த பரிசாகும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய அவமானகரமான தோல்வியை பிஜேபி நிச்சயம் சந்திக்கும் என்பதைத்தான் கள நிலவரங்கள் எதிரொலிக்கின்றன. கறுப்பு தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் பரவிக் கொண்டு இருக்கின்றது. கறுப்பை அமங்களத்தின் சின்னமாகக் கருதி வந்த மக்கள் இன்று கறுப்பை வரப்போகும் நல்வாழ்க்கையின் தொடக்கமாக கருதத் துவங்கியிருக்கின்றார்கள். கறுப்புச் சட்டை அணிந்தும், கறுப்புக் கொடி பிடித்தும், கறுப்பு பலூன்களை பறக்க விட்டும் தங்களை அழிக்க வரும் தீய சக்தியை மக்கள் விரட்டி அடிக்கின்றார்கள். காவியிடம் இருந்து தங்களைக் காக்கும் கேடயமாக மக்கள் கறுப்பை அடையாளம் கண்டுள்ளார்கள். வரும் காலம் மோடிக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த காவிக்கூட்டத்திற்கே பெரும் அச்சுறுத்தல் தரும் காலமாக இருக்கப் போகின்றது. அவர்கள் செல்லும் பாதை எங்கும் இனி கறுப்பு வண்ணமே ஆக்கிரமிக்கப் போகின்றது.

- செ.கார்கி

Pin It