“நலத்துறையில் தனியார்மயம் தோல்வி அடைந்து விட்டது. எனவே, அரசிடம் உள்ள பொது நல நிறுவனங்களை வலுப்படுத்தும் முயற்சிகளில் நாம் இறங்கியாக வேண்டும்”
மேலுள்ளவாறு கூறியிருப்பது வேறுயாருமல்ல, பா.ச.க.வின் நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதிதான், கடந்த ஏப்ரல் 7 (2016) அன்று, புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு பேசியிருக்கிறார்.
“ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அறுவை சிகிச்சைகளுக்கு உதவி கேட்டு வரும் ஏழை மக்கள் பலருக்கு தலைமை அமைச்சர் நிதியில் இருந்து பணம் கிடைக்க என்னால் முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்து வருகிறேன். எனினும், இதுபோன்ற உதவியை குறிப்பிட்ட அளவுக்குதான் பெற்றுத்தர முடிகிறது.
கட்டணத்தை முழுமையாக செலுத்தாவிட்டால், சிகிச்சை முடிந்த பிறகும் நோயாளிகளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல சில தனியார் மருத்துவமனைகள் அனுமதிப்பதில்லை. சில சூழ்நிலைகளில் நானே நேரில் தலையிட்டு தனியார் மருத்துவமனை நிர்வாகத்தை கடுமையாகக் கண்டித்துள்ளேன்.
பொதுநலத்துறையைப் பொறுத்தவரையில் தனியார் மயம் என்பது தோல்வியில் முடிந்துவிட்டது. நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்க நலத்துறையில் அரசு முழுவீச்சில் கவனம் செலுத்த வேண்டியது தேவை. தரமான அரசு மருத்துவ மனைகள் பலவற்றை அமைக்க வேண்டுமென்று நடுவண் நலத் துறை அமைச்சரிடம் நான் கோரிக்கை விடுத்துள்ளேன். அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டால் மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய தேவை இருக்காது ’’ என்று உமாபாரதி, அந்நிகழ்வில் பேசினார்.
நன்றாக செயல்பட்டுவரும் அரசு நிறுவனங்களைக் கூட, தனியாரிடம் விற்பதற்கு தனி அமைச்சகத்தையே ஏற்படுத்திய, பாரதிய சனதாக் கட்சியிலிருந்து, இப்படி யொரு குரல் வரவேற்கத்தக்கதே! எனினும், அது காலம் கடந்த குரல் என்பதால் வேதனையே மிஞ்சுகிறது!
நலத்துறையில் மட்டுமல்ல, மக்களுக்கு சேவை அளிக்கும் அரசின் எல்லா துறைகளிலுமே தனியாரை அனுமதிக்கக்கூடாது, தனியார் நிறுவனங்களை அனுமதித்தால் மக்கள் கடுமையாகச் சுரண்டப்படுவர் என்று நாம் தனியார்மயத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.
நம் கூற்றை மெய்பிப்பது போல் நடக்கும் நிகழ்வுகள், மக்களை மட்டுமின்றி, அமைச்சர்களையே நேரில் பாதிப்பதால்தான் இது போன்ற பேச்சுகள் அவ்வப் போது ஆதங்கங்களாக வெளிப்படுகின்றன.
நலத்துறையின் பணி என்ன?
மக்களை நோயிலிருந்து காத்து - அவர்களது நலத்தைப் பேணி வளர்த்து நோயில்லா நிலையை உருவாக்க வேண்டிய கடமையை, அரசின் நலத்துறையே மேற்கொள்கிறது. குழந்தைப் பிறப்பு முதல், நோய்கள் தாக்காமலிருக்க தடுப்பு ஊசிகள் அளித்தல், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளுதல் எனப் பல்வேறு நலப் பணிகள் மட்டுமின்றி, நல வாழ்விடங்களை அமைப்பது வரை, இத்துறையே முகாமையான பொறுப்பிலிருந்து மக்கள் கடமையாற்றுகிறது.
அந்தந்த மாநிலங்களின் தட்ப வெப்ப சூழலுக்கேற்ப பல்வேறு தனித்தனி பழக்க வழக்கங்கள் - மருத்துவ முறைகள் கொண்ட தேசிய இனத்தவர்கள் வாழும் இந்தியத் துணைக் கண்டத்தில், நலத்துறையின் பணிகள் அந்தந்த மாநிலங்களுக்குள் திட்டமிட்டே நடத்த வேண்டும்.
ஆனால், மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், மருந்து விலை நிர்ணயம் - மருந்து உற்பத்தி அனுமதி உள்ளிட்ட நலத் துறை தொடர்பான பல முகாமையான முடிவுகளை நடுவண் அரசே எடுத்து வருகின்றது. மாநில அரசு அம்முடிவுகளை செயல்படுத்தும் பணியை மட்டுமே செய்கின்றது.
அரசின் நல மையங்கள், மருத்துவ உதவி மையங்கள், பெரும் மருத்துவமனைகள் ஆகியவை மக்களுக்கு இலவசமாக சேவையாற்றி வந்த நிலையில், 1990களில் உலகமயப் பொருளியல் கோலோச்சத் தொடங்கிய பிறகு, அந்நிலைமை மாறத் தொடங்கியது.
எந்த நோய்க்கு - எந்த நிறுவன மருந்தை உட் கொள்ள வேண்டும், எந்த சிகிச்சைக்கு - எந்தத் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்பன உள்பட நலம் தொடர்பாக புதுதில்லியில் சில முதலாளிகளும், அரசியல்வாதிகளும் இணைந்து குளிரூட்டப்பட்ட அறையில் முடிவெடுத்து அறிவித் தார்கள்.
மருத்துவத்தின் தரத்தை உயர்த்தவே தனியாரை அனுமதிக்கிறோம் எனச் சொன்னாலும், உண்மையில் மக்களை தமது மருந்து அல்லது மருத்துவமனையின் “வாடிக்கையாளர்”களாக மாற்றுவது -- சந்தைப் படுத்துவது மட்டுமே தனியார் நிறுவனங்களின் முதன்மை நோக்கமாக வெளிப்பட்டது. ஆங்கில மருத்துவத்தின் அறிவியல் வளர்ச்சியும், மருத்துவத் துறையில் தனியாரின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்றாக இணைந்து, இந்த நோக்கத்திற்கு வலுசேர்த்ததும் ஆய்வுக்குரியது.
மருந்துகளின் விலை குறித்து முடிவெடுக்க 1978ஆம் ஆண்டே, மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் ஏற்படுத்தப்பட்டு, 340 இன்றியமையா மருந்துகளின் விலைக் கட்டுப்படுத்தப்பட்டது. காலப்போக்கில், இப் பட்டியலில் இருந்த பல மருந்துகளை உற்பத்தி செய்த தனியார் நிறுவனங்கள், அம்மருந்துகளை அப் பட்டிய லிலிருந்து நீக்க பல்வேறு “வழி’களைக் கையாண்டு, அவற்றை ஒவ்வொன்றாக விலக்கின.
1994-இல், உலக வர்த்தகக் கழகத்துடன் ‘காட்’ ஒப்பந்தம் கையெழுத்தானப் பிறகு, அயல்நாட்டு மருந்து நிறுவனங்களின் மருந்துகள் மீது ஓரளவுக்கு ஆதிக்கம் செலுத்திய இந்தியக் காப்புரிமைச் சட்டம் வலுவிழந்து, மருந்துகளின் விலைக் கட்டுப்பாட்டு ஆணையமும் செயலிழந்து போனது. பன்னாட்டு மருந்து - மருத்துவ நிறுவனங்கள் புதிய அதிகாரத் தோடு, இந்தியாவில் நுழையத் தொடங்கின. காலப்போக்கில், புதிய புதிய மருத்துவமனைகள் மட்டுமின்றி, புதிய புதிய நோய்களும் சேர்ந்தே முளைத்தன.
“சுதேசியம்” - “இந்துத்துவா” என “தேசபக்த” கூச்சலிடும் பா.ச.க. ஆட்சிக்கு வந்தபிறகு, 1999ஆம் ஆண்டு திசம்பரில், அரசுத்துறைகளைத் தனியாருக்கு தாரை வார்ப்பதெற்கென்றே புதிய அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. 2000ஆம் ஆண்டு சனவரியில், நலத்துறையில் 100 விழுக்காடு வெளிநாட்டு முதலீடுகள் அனுமதிக்கப்பட்டன. இதன் விளைவு, நலத்துறையில் தனியார்மயம் மிக வேகமாக வளர்ந்தது.
தனியாரின் பிடியில் நலத்துறை
அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துதல், புதிய கருவிகள் வாங்குதல் உள்ளிட்ட அடிப்படைப் பணி களுக்காக நலத்துறை செலவிட்ட நிதி குறைக்கப் பட்டது.
தொழில் வளர்ச்சிக்கான கல்வி நிறுவனம் (Institute for Studies in Industrial Development - ISID), 1974இல் வெறும் 18.5 விழுக்காடாக இருந்த தனியார் மருத்துவமனைகள், 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு 75 விழுக்காட்டைத் தாண்டி உயர்ந்ததாகவும், 1950இல் 3.6 விழுக்காடாக இருந்த தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், 2014இல் 54.3 விழுக்காடாக உயர்ந்த தாகவும் கணக்கிட்டுள்ளது. (காண்க: http://www.isid.org.in/pdf/WP181.pdf) அந்தளவிற்கு, தனியார் மருந்துவமனைகள் பெருமளவில் வளர்ந்தன.
இன்னொருபுறத்தில் மருந்துகளின் விலை, கட்டுப் பாடுகள் ஏதுமின்றி கடுமையாக உயர்ந்தது. 2011ஆம் ஆண்டு இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட பிறகே, 348 மருந்துகளை இன்றிய மையா மருந்துகள் எனப் பட்டியலிட்டு, அதன் விலை யைக் கட்டுப்படுத்த 18.10.2011 அன்று நீதிமன்றத்திலேயே உறுதிமொழி அளித்தது இந்திய அரசு. இது, அம் மருந்துகளை உற்பத்தி செய்து வந்த பல பன்னாட்டு நிறுவனங்களின் கண்களை தொடர்ந்து உறுத்தியது.
இதன் விளைவாக, கடந்த 2014ஆம் ஆண்டு, வட அமெரிக்காவிற்கு சுற்று(லா)ப் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்தப் பயணத் திற்கு முந்தைய நாள், 108 இன்றியமையா மருந்துகளின் விலைக் கட்டுப்பாடுகளை நீக்கி அறிவிப்பு வெளியிட் டார்.
அந்த அறிவிப்புக்குப் பிறகு, புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களிலிருந்து மக்களின் உயிரைக் காக்கும் மருந்துகளின் விலை 14 மடங்கு உயர்ந்தது. அதுவரை வெறும் 8,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட புற்றுநோய்க் கான கில்வெக் மாத்திரையின் விலை 1 இலட்சத்து 18,000 ரூபாயாக உயர்ந்தது.
மருந்து விலைகளின் கட்டுப்பாட்டை இந்திய அரசு நீக்கியதைத் தொடர்ந்து, சன் பார்மா, ரான்பாக்ஸி ,உள்ளிட்ட பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் இலாபம் எவ்வளவு விழுக்காடுகள் உயர்ந்தன என பங்குச்சந்தை செய்திகள் தெரிவித்தன. ஆனால், புதிதாக விலையேற்றப்பட்ட இந்த மருந்துகளை வாங்க முடியாமல் -- அதற்குரிய நோய்களுக்கு பலியானோர் - பாதிக்கப்பட்டோர் குறித்த எந்த ஊடகங்களிலும் செய்தியில்லை!
நசுக்கப்படும் அரசு மருத்துவமனைகள்
இந்தியாவுக்குள் நுழையும் தனியார் வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள், அவற்றை அரசின் மூலம் மக்களிடம் கொண்டு சென்று “சேவையாற்ற” ஒரு போதும் முயன்றதில்லை. அதை சந்தைப்படுத்தி, இலாபகரமாக விற்பனை செய்யவே அவர்கள், இந்தியாவுக்குள் நுழைகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் கிடைக்காத பல மருந்துகள், தனியார் மருந்தகங்களில் அதிக விலைக்கு கிடைப்பதை யாரும் கேள்வி கேட்பதில்லை. மக்களை அந்தளவிற்கு தனியார்மயத்திற்குப் பழக்கி வைக்கும் பணியை தொடர்ச்சியான செயல்பாடுகளின் மூலம் அரசே வளர்த்தெடுத்துள்ளது.
சுகாதாரமின்றி காணப்படும் அரசு மருத்துவமனை வளாகங்கள், கையூட்டு பெறும் மருத்துவமனை ஊழியர்கள், உயர் சிகிச்சைக்கான வசதிக் குறைபாடு, மருத்துவர் பற்றாக்குறை, ஊழல் - முறைகேடுகள் எனப் பல்வேறு குறைபாடுகளுடன்தான் அரசின் நலத்துறை நிலையங்களும், மருத்துவமனைகளும் இன்றைக்கு செயல்பட்டு வருகின்றன.
தனியார் மருத்துவமனைகளில் உள்ள எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட ஊடு கதிரியக்கக் கருவிகள் அரசு மருத்துவமனைகளில் காணப்படுவதில்லை. காணப் பட்டாலும் அவை இயக்கப்படுவதில்லை. அவற்றை இயக்குவதற்கும் அரசுப் பணியாளர்கள் அமர்த்தப் படுவதில்லை. ஆனால், தனியாரில் இவையெல்லாம் எளிதில் கிடைக்கின்றன.
சிறுநீரக அறுவை சிகிக்சைக்கு பயன்படும் சிறு நீர் கல் உடைக்கும் “லித்தோட்ரிப்சி” என்ற கருவி, மதுரை, சென்னை, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு மாநகரத் திலும் பல தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைகள் பல இலட்சம் செலவில் நடத்தப்படு கின்றன.
அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தி வளர்க்க வேண்டிய அமைச்சர்களோ, தானே சொந்தமாக தனியார் மருத்துவமனைகள் வைத்துள்ள போது, அரசு மருத்துமனைகளை மேம்படுத்துவது குறித்தா அவர்கள் சிந்திப்பார்கள்?
தமிழ்நாட்டை உலுக்கிய தானே புயலின் பாதிப்பு களை நேரில் காண வராத அன்றைய இந்தியத் தலை மையமைச்சர் மன்மோகன் சிங், காரைக்குடியில் வாசன் தனியார் மருத்துவமனைத் திறப்புக்கு ஓடோடி வந்ததை நாம் நேரில் கண்டோம்.
மோசடிகளை அம்பலப்படுத்திய மருத்துவர்கள்
மருத்துவத்துறையில் தனியார் மருத்துவமனைகளின் மோசடிகளையும், அதுசார்ந்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திவரும் சதி (Support for Advocacy and Training to Health Initiatives - SATHI) என்ற அமைப்பு அண்மையில் வெளியிட்ட நூல், மருத்துவ உலகில் பல அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
மருத்துவர்கள் அருண் காட்ரே மற்றும் அபேய் சுக்லா ஆகியோர் இணைந்து எழுதிய Dissenting Diagnosis என்ற அந்நூலில், அறுவை சிகிச்சை நடத்தா மலேயே அறுவை சிகிச்சை நடத்தியதாக பணம் பறித்த தனியார் மருத்துவமனைகள் முதல், எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவற்றை நோயாளி களுக்குப் பரிந்துரைப்பதன் காரணமாக மருத்துவர்களுக்கு எவ்வளவு விழுக்காடு பணம் கிடைக்கும் என்பது வரை பல மோசடிகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவின் நலத்துறையை ஆய்வு செய்த உலக நல நிறுவனம் (WHO), இந்திய மக்கள் தொகையில் 3.2 விழுக்காட்டினர் மருத்துவச் செலவின் காரணமாகவே வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்படுகின்றனர் என்று 2011ஆம் ஆண்டு எச்சரிக்கை வெளியிட்டது. பல்வேறு துறைகளில் செயல்படும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படும் IEEE R10 HTC மாநாடு, 2014ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்ட போது, அதில் பேசிய மருத்துவ வல்லுநர் சுமந்தராமன், “மருத்துவச் செலவு காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் 38 இலட்சம் இந்தியர்கள் வறுமைக் கோட் டுக்குக் கீழ் தள்ளப்படுகின்றனர். 65 விழுக்காட்டு மருத்துவச் செலவுகள் கடன் வாங்கியே மேற்கொள்ளப் படுகின்றன” என்று தெரிவித்தார். (காண்க: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 07.08.2014).
மருத்துவச் செலவுகள் மக்களின் வாழ்வை - வருமானத்தை வெகுவாக பாதிப்பதன் உண்மையான காரணம், தனியார்மயம் என்ற கொடிய நஞ்சு!
இன்றைக்கு, 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வணிக மதிப்புடையதாய் மதிப்பிடப்படும் இந்திய நலத்துறை, 2020-ஆம் ஆண்டு 280 பில்லியன் டாலர் களாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளதும், இந்தப் பின்னணியில்தான்!
என்ன செய்ய வேண்டும்?
கல்வியும் நலமும் மிகப்பெரும் வணிகமாக மாற்றப் பட்டுள்ள தற்கால சூழல், பணமிருப்பவர் படிக்கலாம், பணமிருப்பவர் நோயின்றி வாழலாம் என்ற கொடிய சூழலையே உருவாக்கி வருகின்றது.
எனவே, கல்வி - சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் இன்றியமையாச் சேவைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
நிலைமை கைமீறிச் செல்வதற்குள், அரசு போர்க் கால நடவடிக்கை எடுக்க வேண்டும்! தற்போது உடன டியாக, தனியார் மருத்துவமனைகளில் மேற் கொள் ளப்படும் மருத்துவ சிகிச்சைகளுக்கு, படுக்கைக் கட்ட ணங்களுக்கு தற்போது எவ்வித விலைக் கட்டுப்பாடும் இல்லாத நிலையை விட்டொழிக்க வேண்டும். மருந்துகளின் விலைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கே இருக்க வேண்டும். தரமான சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகளின் எண்ணிக் கையை உயர்த்த வேண்டும்.
மக்களுக்கு இன்றைக்கும் நலம் அளித்துவரும் மரபுவழிப்பட்ட மருத்துவ முறைகளைப் பாதுகாத்தல் -- பரப்புதல், தேவையற்ற மற்றும் மூடநம்பிக்கை சார்ந்த மரபுவழிப்பட்ட மருத்துவப் பழக்க வழக்கங்கள் இருப்பின் அவற்றைக் கண்டறிந்து -- போக்குதல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான அடிப்படைப் பணிகளை யும், நலமான வாழ்விடங்கள் ஏற்படுத்த மற்ற துணைகளுடன் இணைந்தும், அரசு நலத்துறையே மேற்கொள்ள வேண்டும்.
மக்களின் தேவையும் விருப்பமும் அதுதான்!