ஜீன் 26 1975 - எமர்ஜென்சி பிரகடனப் படுத்தப்பட்ட நாள் 

1975, ஜுன் 26 என்பது இந்தியாவின் வரலாற்றில் ஒரு இருண்ட நாள் ஆகும். அன்றுதான் இந்தியாவில் எமர்ஜென்சி என்ற அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு எமர்ஜென்சி காலத்தைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நமது நாட்டின் தற்போதைய நிலை எமர்ஜென்சியை அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கு முன்னதாக அந்தச் சூழ்நிலையை மூச்சு கூட விட முடியாத பாசிச சர்வாதிகாரமாக வர்ணித்து நாவலாசிரியர் ஜார்ஜ் ஆர்வெல் தனது சிறுகதைகளில் கற்பனை புனைவாக முன்வைப்பதைக் காண்போம்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மெகா திரை கொண்ட டிவி இருக்கும். அது நீங்கள் வீட்டுக்குள் நுழைந்துவுடன் அரசுக்கான விசுவாசம் உங்களின் முகபாவனைகளிலிருந்தே மதிப்பிடும். உங்கள் புருவங்களை உயர்த்தினால் அரசின் மீது அதிருப்தி கொள்வதாகக் கருதப்படும். உடனடியாக நீங்கள், ராணுவ உடையில் திரையில் தோன்றும் நாட்டின் அதிபருக்கு அதிருப்திக்கான விளக்கமளிக்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிக்கும் நிறங்கள் என்பதால் கருப்பு, சிவப்பு நிறங்கள் கொண்ட ஆடைகள் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு குறிப்பிடும் உணவுகளைத் தவிர மற்ற உணவுகள் போராட்ட உணர்வுகளைத் தூண்டும் என்பதால் அவை அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆர்வெலின் இந்தப் புனைவுகளை விட மிகக் கடுமையான ஒடுக்குமுறையையே அன்றைய எமர்ஜென்சி கொண்டிருந்தது.

ஏன் எமர்ஜென்சி?

1975இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் மக்களின் கொந்தளிப்பான போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தது. 1971இல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் நமது பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சி அடைந்திருந்தது. அன்றைய காங்கிரஸ் அரசின் பொருளாதாரக் கொள்கையினால் கடுமையான விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம் ஆகியவற்றினால் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தி ஏற்பட்டிருந்தது. இதனால் பல இடங்களிலும் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அரசின் அனைத்துத் துறைகளிலும் லஞ்சமும், ஊழலும் நிறைந்திருந்தன.

indra gandhi and emergency

1974இல் அன்றைய அனைத்திந்திய ரயில்வே தொழிலாளர்களின் பேரவையின் தலைவராக இருந்த ஐார்ஜ் பொ்னான்டஸ் தலைமையில் நாடு தழுவிய ரயில்வே வேலை நிறுத்தம் நடைபெற்றது. அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தி அனலாகத் தகித்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் 1971இல் உத்தரப் பிரதேசத்தில் நடந்த ரே பரேலி தொகுதிக்கான தேர்தலில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ராஜ் நாரயணனை எதிர்த்து இந்திரா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் இந்திரா காந்தி அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பல முறைகேடுகளைச் செய்து வெற்றி பெற்றார் என்று கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ராஜ் நாரயணன். இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என்றும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அவர் எம்பி பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்று கூறி அவரது எம்பி பதவியை நீதிபதி ரத்து செய்தார். இந்திரா காந்தி தேர்தலில் நிற்கவும் 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து இந்திராவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. நாடு முழுவதும் அரசுக்கு எதிரான நெருக்கடிகள் வலுத்தன. சட்ட ரீதியாகவும், அரசியல் களத்திலும் பெரும் நெருக்கடியில் சிக்கிய இந்திரா காந்தி இதைச் சமாளித்து, தன் பதவியையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அறிவித்தார். பதவியைத் தக்க வைத்துக் கொள்வதும், போராடும் மக்களை ஒடுக்க வேண்டியதுமே நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தப்பட வைத்தன. இதை அரசியல் அறிஞர்கள் பாசிசம் அல்லது சர்வாதிகாரம் என்று அழைக்கின்றனர்.

பாசிசம் அமலாக்கப்படுவது எப்படி?

பொதுவாக ஒரு நாட்டில் பாசிசம் அமல்படுத்துவதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஆட்சி முறையையே ராணுவ ஆட்சியாக மாற்றுவது. ஆட்சியை ராணுவத்தின் மூலம் கவிழ்த்துவிட்டு ராணுவமே அனைத்து அதிகாரங்களையும் எடுத்துக்கொள்வது. இந்த முறையில் நீதிமன்றம், நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக நிறுவனங்களும் மூடப்படும் அல்லது ஒழித்துக் கட்டப்படும். இரண்டாவது முறையில் பாசிச சக்திகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் அதாவது தேர்தல் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி படிப்படியாக தங்களுக்கேற்றவாறு ஜனநாயக நிறுவனங்களை ஒழித்துக் கட்டிவிட்டு அல்லது பலவீனமாக்கிவிட்டு, பாசிச ஆட்சி முறையாக மாற்றுவது. இந்தியாவைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் ராணுவ ஆட்சி சாத்தியமில்லாதது. எனவே இரண்டாவது முயற்சியே சாத்தியமாகும்.

இந்த இரண்டாவது முயற்சிதான் தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் பலரும் கூறுகிறார்கள். இந்துத்துவ சக்திகள் நாட்டின் ஜனநாயக நிறுவனங்களைப் பல விதங்களிலும் பலவீனமாக்கிக் கொண்டிருக்கின்றனர். இது தனியாக அலசப்பட வேண்டிய விஷயம்.

இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்திய அடுத்த நிமிடம் அரசியல் சாசனமும், அதிலுள்ள அடிப்படை உரிமைகளும் ரத்து செய்யப்பட்டன. நீதிமன்றங்கள் செயலிழக்க வைக்கப்பட்டன. இதனால் அரசின் எந்த நடவடிக்கைகளையும் எதிர்த்து மக்கள் யாரும் முறையீடு செய்ய முடியாது. எதிர்க்கட்சிகள் வேட்டையாடப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்களான ஜெயப்பிரகாஷ் நாரயண், வாஜ்பாய், அத்வானி, ஜார்ஜ் பெர்னான்டஸ், மொரா்ஜி தேசாய், தமிழகத்தில் கருணாநிதி, அவருடைய மகனான ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான திமுக கட்சித் தலைவர்கள், இரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் முதலானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் சிறையில் கடுமையாக அடித்து நொறுக்கப்பட்டனர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்புகளின் தலைவர்கள், ஊழியர்கள் கடுமையான சித்திரவதைக்கு உள்ளானார்கள். சிலர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். போலீசுக்கும் ராணுவத்தினருக்கும் எல்லையற்ற அதிகாரங்கள் அளிக்கப்பட்டன.

இதில் ஊடகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடும் தணிக்கை செய்யப்பட்டே நாளிதழ்கள் வெளியிடப்பட்டன. இந்தத் தணிக்கையைக் கிண்டல் செய்து ‘கத்திரிக்காய் கூட்டு செய்வது எப்படி?’ என்று தலைப்புச் செய்திகள் வெளியிடப்பட்டன. ஏராளமானோர் தலைமறைவாகினர். நாடாளுமன்றத்தில் ரகசிய பிரசுரங்கள் அச்சடித்து விநியோகம் செய்ததாக 7000 பேர் கைது செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். எண்ணற்ற அரசியல் தொண்டர்கள் கொல்லப்பட்டனர். சிறுபான்மையினர், பழங்குடியினர் கொல்லப்பட்டனர். இந்திரா காந்தியின் மூத்த மகனான சஞ்சய் காந்தி அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஏராளமான முஸ்லீம் மக்களுக்குக் கட்டாய குடும்பக் கட்டுபாடு அறுசைச் சிகிச்சை மேற்கொள்ளச் செய்தார். காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பலர் திரும்பி வரவேயில்லை. கேரளாவில் மாணவர் ராஜன் தொடங்கி தமிழகத்தில் அப்பு, பாலன், மேற்கு வங்கத்தில் சாரு மஜ்முதார் எனப் பலர் கேள்வி கேட்பாரன்றிக் கொல்லப்பட்டனர்.

1,10,896 பேர் கைது

21 மாதங்கள் நீடித்த எமர்ஜென்சி காலக் கொடுமைகள், போலீஸ் துறையும் மற்றும் சிறைத்துறையும் மேற்கொண்ட அத்துமீறல்கள் குறித்து விசாரணை செய்ய நீதிபதி ஷா தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. ஷா கமிஷன் எமர்ஜென்சி காலத்தில் நடந்த கொடூரங்களை அறிக்கையாக முன்வைத்தது. அந்த அறிக்கையில் மிசா சட்டத்தின்படி 1,10,806 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் போலீஸ் காவலிலும், சிறைக் காவலிலும் வைக்கப்பட்டதாகவும் கூறியது.

எமர்ஜென்சிக் காலத்தினை போலவே இன்று நிலைமைகள் உருவாகின்றன என்பதைச் சுட்டிக்காட்டவே இந்த நினைவூட்டல். ஆனால் சில வேறுபாடுகளுடன் தற்போது ஒடுக்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அந்த எமர்ஜென்சி காலத்தில் முழுமையாக அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது அடிப்படை மனித உரிமைகள் ரத்து செய்யப்படவில்லை. ஆனால் அரசியல் செயற்பாட்டாளர்கள், சிறுபான்மையினர் மற்றும் அவர்களது அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், தீவிர இடதுசாரி அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் மட்டுமே குறிவைத்து கைது செய்யப்படுகின்றனர். அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம், தேச விரோத சட்டம் ஆகிய கடுமையான சட்டங்களின் கீழ் வழக்கு தொடரப்படுகின்றன.

இதுவரை தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் வேல்முருகன், சமூக ஆர்வலர் வளர்மதி, மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த 6 பேர், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் கௌதமன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திமுக கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், மாணவர் மற்றும் இளைஞர் இயக்கங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. பசுமை வழிச்சாலைத்திட்டத்தை எதிர்த்துப் போராடியதற்காக ஒரு மூதாட்டியைக்கூட விட்டுவைக்காமல் கைது செய்துள்னர். அது மட்டுமின்றி பொதுப் பிரச்சினைக்காகப் போராடும் யாரையும் சமூக விரோதி என முத்திரை குத்தும் புதிய போக்கு வளர்ந்து வருவது ஆபத்தான விசயமாகும்.

பெரும்பான்மை மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல்தான் இவை நடக்கின்றன என்பதுதான் நம்மை அச்சமடைய வைக்கக்கிறது. மக்களுக்காக போராடும் இயக்கங்களும், தலைவர்களும் ஒடுக்கப்பட்டால் அதற்கு அடுத்தபடியாக கேள்வி கேட்பாரற்ற நிலையில் மக்களை நோக்கியும் நீளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- சேது ராமலிங்கம்

Pin It