என் உடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் சற்றே பருத்த உருவம் கொண்டவர். அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுக்குள் இல்லை.  உணவுக் கட்டுப்பாடும் அறவே கிடையாது. கூடவே ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால் இத்யாதி இத்யாதி வேறு. எப்போதும்  ஏதேனும் ஒரு வலி நிவாரணியோடுதான் இருப்பார்.  யாரேனும் இனிப்பு கொடுத்தால் ஒன்றிற்கு இரண்டுதான். நீரழிவு நோய் இருப்பதைச் சுட்டிக் காட்டினால், தினமுமா சாப்பிடுகிறேன்? எப்போதாவதுதானே! அதெல்லாம் ஒண்ணும் செய்யாது. அப்படியே ஏதாவதென்றால் ஒன்றுக்கு இரண்டு மாத்திரையாகப் போட்டால் சரியாகிவிடும் என்று புது வியாக்யானம் சொல்வார்.

overweightபல நேரங்களில் அவரைப் பார்த்து பரிதாபப்படுவதுண்டு.  சதா  அங்கே வலிக்கிறது இங்கே வலிக்கிறது என்று புலம்பல் வேறு.  கூடவே மற்றவர்களின் அனுதாபத்தைத் தேடுவார்.  நடுத்தர வயதைத் தாண்டியவர் என்பதால் அவருக்கு பல நேரங்களில் சலுகைகள் உண்டு.  அவ்வப்போது அருகில் இருக்கும் மருத்துவரிடம் செல்வதும் உணவுக்கு இணையாக இடையிடையே மாத்திரைகளை சாப்பிடுவதும் உண்டு. ஒருபோதும் மருத்துவர் சொன்ன அறிவுரைகளில் ஒன்றைக்கூட முழுதும் கடைபிடித்ததில்லை. 

”எனக்கு வேக வேகமாய்க் கைகளை வீசி நடைபயிற்சி போறவங்களைப் பார்த்தாலே எனக்கு வேர்க்குது” என்பார். சரியான நக்கல் பேர்வழி.  மற்றவர்களுக்கு மருத்துவம் சொல்வதில் கில்லாடி. அவரைத் தெரியும் இவரைத் தெரியும் எனப் பீற்றீக் கொள்வது அவருக்கே உரித்தான இயல்பு.  

உணவுக் கட்டுப்பாடு, தினசரி எளிய உடற்பயிற்சி,  நடை பயிற்சி, கூடவே மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை உடன் பணிபுரிபவர்கள்  சொன்னால் உடனே அவரின் பதில் இதுவாகத்தான் இருக்கும்.  ஸ்ட்ரிக்டா டயட்டில் இருந்து தினசரி வாக்கிங் போவாரு நம்ம குமாரு அவருக்கு என்னாச்சு? உங்களுக்கே தெரியும்தானே,   போனவாரம் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போயிட்டாரு. இதுக்கு என்ன சொல்றீங்க என்பார்.

ஒரு முறை உயர் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக ஒருவாரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி வந்தது. பின் மகள் மற்றும் மனைவியின் வலியுறுத்தலில் புதிய  ’வாக்கிங் ஷூ’வும், ’ட்ராக் ஷூட்டும்’  வாங்கியதோடு சரி.  அது தற்போது மூலையில் சிலந்தி வலை பின்னி குடும்பம் நடத்த இனாமாக கொடுத்தாகிவிட்டது. இது போதாதென்று வீட்டிற்குள்ளேயே வாக்கிங் போகிறேன் பேர்வழி என்று  ஈ.எம்.ஐ யில் (TREAD MILLER) நடை பயிற்சி செய்ய ஏதுவான இயந்திரம் வாங்கினார். புதிதாய் வாங்கிய அதை அனைவரிடமும் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொண்டதோடு சரி.  இப்போது அதன் மீதுதான் உடுத்திப் போட்ட பழைய துணிகள் தொங்குகிறது. கொசுக்கள் குடித்தனம் நடத்துவதாகக் கூடுதல் தகவல்.

உடல் ஒத்துழைக்காத பட்சத்தில்தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உடல் சார்ந்த பயம் ஏற்படுகிறது.  இதுவாக இருக்குமா? அல்லது அதுவாக இருக்குமா? என்ற பயம். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணம்.

இப்போதெல்லாம் எல்லா வயதினருக்கும் மாத்திரை சாப்பிடுவதென்பது அல்வா சாப்பிடுவது மாதிரி   ஆனால் அல்வா சாப்பிடுவது மாத்திரை சாப்பிடுவது போல இல்லை. விருந்தின் போது  கொஞ்சம் கூடுதலாய் சாப்பிடுவதுதான் நடைமுறை.   உடல் சார்ந்த பிரச்சனை எது வந்தாலும் ஒரே மாத்திரையில் சரியாகிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏறக்குறைய எல்லாரிடமும் குறைந்தபாடில்லை. 

சரி, இது போன்ற மனிதர் நம்மைச் சுற்றி எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால்  இதை வாசிப்பவர்கள் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல்  தனக்குத் தெரிந்த ஒருவரைச் சுட்டிக் காட்டுவார்கள் அல்லது அது தாங்கள்தான் என்று ஒத்துக்கொள்வார்கள். 

”விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு” என்பதெல்லாம் பழைய பழமொழி.  தற்போதெல்லாம் மருந்து சாப்பிடாத நாளே இல்லை என்றாகிவிட்டது.  சில தீராப் பிணி என்ற பெயரோடு.    

ஒரு டாக்டர் கொடுத்த மருந்து கேட்கவில்லை என்றால் மற்றொரு டாக்டர்.  அதுவும் கேட்கவில்லையா நகரத்தில் இருக்கும் பெரிய மருத்துவமனைக்குப் போய் மணிக்கணக்கில் காத்திருந்து அந்த மருத்துவர் எழுதிக் கொடுக்கும் விலையுயர்ந்த மருந்தை வாங்கித் தின்றால்தான் மனத்திருப்தி. அதில் பெருமை வேறு. அப்படித்தான் நோய் குணமானதா என்றால் அதுவும் இல்லை. நாளுக்கு நாள் ஏதாவது ஒரு நோய் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

அவர் சொன்னார் இவர் சொன்னார் என முழங்கால் வலி, குதிகால் வலிக்கென பிரத்யேகமாய்த் தயாரிக்கப்பட்ட எல்லாவகை செருப்பையும் ஆன்லைனில் ஆர்டர் செய்துகூட வாங்கியாகிவிட்டது. கழுத்தெலும்பு தேய்ந்துவிட்டது என்று காலர் பெல்ட் போட்டாகிவிட்டது. இன்னும் எதெதெதற்கெல்லாம் என்ன செய்யச் சொன்னாலும் செய்யத் தயார். ஆனால் உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மட்டும் ஏனோ முடிவதில்லை.   

இவ்வகைத் தீராப்பிணிக்கான காரணமென்று ஏராளமாய் வரையறுக்கலாம். வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம், காரணமே இல்லாத பரபரப்பு, சகிப்புத்தன்மை இல்லாதது, நாக்குக்கு அடிமையாகி புதிது புதிதாய் சுவைத்துப் பார்ப்பது, உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லாதது, மருந்து மாத்திரைகள் மாயாஜாலம் செய்யும்  என்று நம்புவது, உடல் உழைப்பு என்பது தனக்கானதல்ல என்ற அலட்சியத்தோடு சுகவாழ்க்கைக்குப் பழகிக்கொண்டது. எதற்கும் உடனடித் தீர்வை எதிர்நோக்குவது என்று பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்ததாகவே இருக்கிறது.

இது ஒருபுறம் இப்படியிருக்க, ஒரு சிலர் மருத்துவ மனைக்குச் செல்லவே தயக்கம் காட்டுகிறார்கள்.  போலி மருத்துவர், போலி மருந்து, பணத்தை குறிவைத்து செய்யப்படும் பல கட்ட சோதனைகள்,  அறுவைச் சிகிச்சை இல்லையென்றால் அவ்வளவுதான் என பயமுறுத்தல்கள் நீண்டுகொண்டே செல்கிறது.

இதற்கு மத்தியில் படித்த ஒரு சிலர் மருத்துவத்தில் எந்த மருந்து என்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று அறிந்துகொள்ள கூகுளில் நுழைந்து நெண்டி நெளிந்து வெளியேவந்து மேதாவியாய்க் காட்டிக் கொள்வதும், இது சரியில்லை அது சரியில்லை என்று முழங்குவதும், மருத்துவம் சார்ந்த வார மற்றும் மாத இதழ்களை தவறாமல் வாசித்து அதில் சுட்டிக்காட்டப்பட்ட அறிகுறிகள் அனைத்தும் தனக்கு இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.

நம் நாட்டில் மட்டும்தான் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குபஞ்சர், அக்குப் பிரசர், அலோபதி என்று ஏராளமான மருத்துவங்கள் ஒன்றோடு ஒன்று சளைக்காமல் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.  ஒரு மருத்துவத்தில் இருக்கும் சிறப்புகளை மற்றொரு மருத்துவம் ஏற்றுக்கொள்வதில்லை. சமீபகாலமாக ஒன்றையொன்று எதிரிகளாகவே பாவித்துக்கொள்ளும் போக்கு அதீதமாக காணப்படுகிறது.

இவற்றை எல்லாம் ஆழ்ந்து கவனிக்கும்போது இத்தனை நோய்களுடனா உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற வியப்பு ஒருபுறமும்,  ஏதேனும் ஒன்றில் தீர்வு கிட்டாதா என்ற நம்பிக்கை ஒரு புறமுமாக நாட்கள் நகர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

அதெல்லாம் இருக்கட்டும், விருந்தா மருந்தா என்ற கேள்வி  வரும்போது அநேக நேரங்களில் நாக்கு சொல்வதைத்தான் மனம் கேட்டுத் தொலைக்கிறது. ’உடல் நலக்குறைவுக்கு ஏதேனும் ஒரு மாத்திரை இல்லாமலா போய்விடும்’ என்று என் நண்பர் கேட்கும் குரல் தூரத்தில் ஒளித்துக் கொண்டுதான் இருக்கிறது.

Pin It