நீண்ட நாட்களாக என்று சொல்வதைவிட பல பத்தாண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டாகி விட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர் மன்றத்தினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ரஜினின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் மட்டும் அல்லாமல், பல அரசியல்வாதிகளும் வரவேற்றுள்ளனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டும் என்றாலும் கட்சி ஆரம்பிக்கவோ, தேர்தலில் நிற்கவோ சுதந்திரம் உள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். நிச்சயமாக அதை யாரும் மறுக்க முடியாதுதான். கட்சி ஆரம்பிப்பதும், தேர்தலில் போட்டியிடுவதும் ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உள்ள உரிமைதான். ஆனால் கட்சி ஆரம்பிப்பதற்கும், தேர்தலில் போட்டியிடுவதற்கும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் வெறும் உரிமை மட்டுமே போதுமானதா என்ன? அதையும் தாண்டி சாதி, மதம், பணம், தனிநபர் கவர்ச்சி என பலவும் சேர்ந்தே தேர்தல் அரசியலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றது.
அதனால் நினைத்தவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கவோ, இல்லை தேர்தலில் போட்டியிட்டு வென்றுவிடவோ முடியாது. சாமானிய மனிதர்கள் எல்லா காலங்களிலும் தேர்தல் அரசியலில் இருந்து முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, வெறும் பார்வையாளர்களாய் மட்டுமே அமர்ந்திருக்கும்படி செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களால் தங்களுக்கு என்ன வேண்டும் என்று கூட தெளிவாகக் கேட்டு, அதற்கான அரசியலை கையில் எடுக்கும் திராணியற்றவர்களாய், அரசியல் என்றாலே பொறுக்கித் தின்னுவதற்கான இடம் மட்டுமே என்று, அதையும் ஒரு தொழிலாக அங்கீகரித்து விட்டவர்களாய்தான் பெரும்பாலான மக்கள் இருக்கின்றார்கள். சாமானிய அடித்தட்டு மக்களுக்கு மட்டும் அல்லாமல், உயர் நடுத்தரவர்க்க மக்களுக்கும் கூட, இங்கே உள்ள அரசியல் கட்சிகளின் அடிப்படையான கொள்கை என்பது என்ன? எந்த குறிக்கோளை அடைவதற்காக அவை தேர்தல் அரசியலில் பங்கெடுத்து இருக்கின்றன என்பதெல்லாம் தெரியாது.
கொள்கைகளின் இடத்தில் டிவியும், மிச்சியும், கிரைண்டரும், ஃபேன், ஆடு, மாடுகளும், மலிவுவிலை உணவகங்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இவை சாமானிய மக்களை ஏழ்மையில் இருந்து மீட்டெடுக்கும் தர்மபிரபுக்களாக அரசியல்வாதிகளை காட்சிப்படுத்துகின்றன. ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து அனுப்பும் அரசியல்வாதிகள் மூலம் எதுமே கிடைக்கப்போவதில்லை என்பதை தங்களின் நீண்ட கால அனுபவத்தின் மூலம் அறிந்து வைத்திருக்கும் மக்கள், அவர்களின் மூலம் கிடைக்கும் சில சில்லரை சலுகைகளிலேயே திருப்தி அடைந்து விடுகின்றனர். அதைத்தாண்டி தங்களின் அவல வாழ்க்கை நூற்றாண்டு தோறும் மாறாமல் இன்னும் அதே நிலையில் நீடித்திருப்பதற்குக் காரணம் ஆளும் வர்க்கம்தான் என்று சிந்திக்கும் நிலைக்கு இன்னும் இந்த மக்களின் அரசியல் அறிவு வளர்ச்சியடையவில்லை.
இதற்கு முக்கிய காரணம் இந்த மக்களை நிரந்தர ஆன்மீக அடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கும் பார்ப்பனியம். மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் பார்ப்பனக் கும்பல் மீதமுள்ள 97 சதவீத மக்களை சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும், மிலேச்சர்கள் என்றும் மூத்திரை குத்தி, அந்த மக்களை தங்களுக்குள் ஒன்று சேரவிடாமல் சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரித்து அவர்களை சுரண்டி வருகின்றது. முதலாளித்துவமும், பார்ப்பனியமும் இந்த மக்களை என்றுமே மீட்சியடைய முடியாமல் செய்யும் சுரண்டல் அமைப்புகளாக இந்தியாவில் உள்ளன. இந்த மக்களை பொருளாதார அடிமைத்தனத்தில் இருந்தும், சாதிய அடிமைத்தனத்தில் இருந்தும் மீட்டெடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த இரண்டைப் பற்றிய முழுமையான புரிதல் என்பது கட்டாயமானது.
நாம் இந்த அடிப்படையில் இருந்துதான் ஒவ்வொரு அரசியல் கட்சியையும் பார்க்க வேண்டும். முதலாளித்துவத்தைப் பற்றியும், பார்ப்பனியத்தைப் பற்றியும், அதை வீழ்த்துவதற்கான வழிவகைகளைப் பற்றியும் எந்தத் திட்டமும் இல்லாத அனைத்துக் கட்சிகளும் பார்ப்பனியத்துக்கும், முதலாளித்துவத்திற்கும் சேவை செய்யும் கட்சிகள்தான். அவை நேரடியாகவும் இருக்கலாம், இல்லை மறைமுகமாகவும் இருக்கலாம். அதே போல இவை இரண்டையும் பற்றி எந்த விமர்சனமும் செய்யாமல் சும்மா பொத்தம் பொதுவாக நேர்மையான அரசியல், தூய்மையான அரசியல் என்று மழுப்பல் வார்த்தைகளைப் பேசும் அரசியல்வாதிகள், விமர்சகர்கள், இலக்கியவாதிகள், பத்திரிக்கையாளர்கள் என அனைவருமே முதலாளித்துவத்தின், பார்ப்பனியத்தின் கைக்கூலிகளே. இவர்கள் தான் இந்தக் கோடிக்கணக்கான மக்கள் இன்று மிகக் கேவலாமன முறையில் வாழ்க்கையில் எந்தவித வசதி வாய்ப்புகளுமற்று வறியவர்களாய் புழுக்களைப் போல வாழ்வதற்குக் காரணமானவர்கள். இவர்கள் தான் இந்த அமைப்பை இப்படியே நிலைக்கச் செய்ய அதற்குத் தோதான ஆட்களை தொடர் பரப்புரைகளின் மூலம் மக்கள் மத்தியில் தனிப்பெரும் தலைவர்களாக உருவாக்குபவர்கள்.
இப்போது இந்தப் பிழைப்புவாத அடிவருடிக் கும்பல்தான் ரஜினியை விதந்தோதிக்கொண்டு இருக்கின்றது. ரஜினி வந்தால் ஏற்கெனவே கெட்டு நாறிக்கொண்டு இருக்கும் சிஸ்டத்தை அப்படியே புரட்டிப் போட்டு மாற்றிக் காட்டி விடுவார் என்று. ரஜினியை விட மிக மோசமான ஆபத்தான பிற்போக்குவாதக் கும்பல் யார் என்றால், அவரை ஆதரிப்பவர்கள்தான். தேர்தல் அரசியலில் பொறுக்கித் தின்னுவதற்காகவே கட்சி நடத்திக்கொண்டு இருப்பவர்களும், ரஜினியின் தோள்மீது ஏறி நின்று பொறுக்கித் தின்னலாம் என்ற கனவுடன் இருப்பவர்களும் தான் எந்தவித விமர்சனமும் இன்றி, இன்று ரஜினியின் புகழ் பாடிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், எப்படி ரஜினியின் சொட்டைத் தலையில் இனி முடி முளைப்பதற்கான வாய்ப்பு என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாததோ, அதே போலத்தான் ரஜினி வந்தால் அரசியலில் பெரிய மாற்றம் வரும், மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்பதும். சினிமாவில் டோப்பாவை போட்டுக்கொண்டு கொள்ளுப் பேத்திகளுடன் டூயட் ஆடுவதைப் போன்றெல்லாம் அரசியலில் ஒப்பேத்த முடியாது. ரஜினியின் பைத்தியக்காரத்தனமான உளறல்களை எல்லாம் நாடி, நரம்புகள் தளர்ந்துபோன அவரது ரசிக தாத்தாக்கள் வேண்டுமென்றால் பொறுத்துக் கொண்டு கைதட்டுவார்கள். ஆனால் எல்லா மக்களும் அதே மனநிலையில்தான் இருப்பார்கள் என்று ரஜினி கணக்குப் போட்டார் என்றால் அது நிச்சயம் தவறாகத்தான் முடியும்.
தமிழகத்தில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே அரசியல், பொருளாதார, சமூக விடுதலை என்பது தற்போது முக்கியமானதாக உள்ளது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். ஆனால் அதைக் கொண்டு வருவதற்கான திட்டம் என்ன உள்ளது, எதன் வழி நின்று அதைக் கொண்டு வரப் போகின்றோம் என்பதைப் பொறுத்துதான் அதன் அரசியலை நாம் மதிப்பிட முடியும். பிச்சைக்காரர்களுக்கு பிச்சைப் போடும் அரசியல் அல்ல நாம் விரும்புவது, பிச்சைக்காரர்களை உருவாக்கும் சமூக அமைப்பை மாற்றி அமைப்பதுதான் நாம் விரும்பும் அரசியல். ஆனால் பிஜேபியில் இருந்து காங்கிரஸ், திமுக, அதிமுக இன்னும் குட்டி குட்டியாக இருக்கும் தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் அனைத்துக்கட்சிகளும் பிச்சைக்காரர்களுக்கு தர்ம பிரபு இடத்தில் இருந்து பிச்சைப்போடும் அரசியலையே முதன்மைப்படுத்துகின்றன. அதன் வர்க்க சார்பு அதைத்தாண்டி ஒரு அடி கூட முன்னெடுத்து வைக்க அதை நிச்சயம் அனுமதிக்காது. சமூக அமைப்பை முதலாளிகளுக்கு எதிராக பொருளாதார சமத்துவத்தையும், பார்ப்பனியத்துக்கு எதிராக சமூக சமத்துவத்தையும் கோரும் நிலைக்கு வளர்த்தெடுத்தல் என்பது பிற்போக்குக் கட்சிகளின் இருத்தலையே கேள்விக்கு உள்ளாக்கிவிடும். பெரும் கார்ப்ரேட்டுகளால் நடத்தப்படும் கட்சிகள் ஒருநாளும் முதலாளித்துவத்திற்கு எதிராகவும், பார்ப்பனியத்துக்கு எதிராகவும் சிறு துரும்பைக்கூட தூக்கிப் போடாது.
அதனால் ரஜினியின் ஆன்மீக அரசியல் என்பது உண்டு கொழுத்த பன்றிகளின் வெட்கம்கெட்ட அரசியல். அது வாழ்க்கையின் பிரச்சினைகளுக்குத் தீர்வை, வாழ்க்கையை எதிர்கொள்ள திராணியின்றி காடுகளிலும், மலைகளிலும் ஓடி ஒளிந்த அம்மண சாமியார்களிடம் உள்ளதாய் உங்களுக்குப் போதிக்கின்றது. பிரச்சினைகளுக்கான தீர்வை சமூகத்தில் இருந்து கண்டறியாமல் தன்னுடைய அகமனதில் இருந்து கண்டறியும் ரஜினி போன்ற நபர்களால் ஒருக்காலும் பெரும்பான்மை மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து தீர்க்க முடியாது. அரசியலைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் தெளிவான மனநிலையில் இல்லாமல் பைத்தியக்காரன் போல தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் ரஜினி, ஏற்கெனவே எந்த இலக்கை எட்டுவதற்காக கட்சி ஆரம்பித்தோம் என்று தெரியாமலேயே தன்னையும் ஒரு அரசியல்வாதி என்று சொல்லிக்கொண்டு, சமூகத்தில் உழன்று கொண்டிருக்கும் சீரழிவுவாதிகளுடன் தன்னையும் இணைத்துக் கொள்ளப் போகின்றார். பன்றிகளின் இருப்பிடம் சேறும், சகதியும்தான்.
எனவே பார்ப்பனியத்தையும், முதலாளித்துவத்தையும் இந்த மண்ணில் இருந்து ஒழித்துக்கட்டி, இந்த மக்களுக்கு பொருளாதார சுதந்திரத்தையும், அரசியல் சுதந்திரத்தையும், சமூக சமத்துவத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமுள்ள முற்போக்குவாதிகள் ரஜினி போன்ற ஆன்மீக சேற்றில் படுத்துருளும் பன்றிகளை அம்பலப்படுத்த வேண்டும். ரஜினியை அம்பலப்படுத்துவது மட்டும் அல்லாமல், ரஜினி போன்ற கழிசடைகளை ஆதரிக்கும் ஒவ்வொருவரையும் நாம் மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும். நமக்கான அரசியல் என்பது முதலாளித்துவத்தையும் பார்ப்பனியத்தையும் கடப்பாறையைக் கொண்டு அடித்து நொறுக்கும் அரசியலே அல்லாமல், குண்டூசிகளைக் கொண்டு குத்திப்பார்க்கும் பிற்போக்கு அரசியல் அல்ல. ரஜினி போன்ற முதலாளித்துவத்தின், பார்ப்பனியத்தின் அப்பட்டமான கைக்கூலிகளை நாம் அரசியல் களத்தில் இருந்தே ஓட ஓட விரட்டியடிக்க மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கருத்தியல் ரீதியாக மிகப் பிற்போக்காக மக்கள் இருக்கும் வரை அவர்கள் மிக எளிதாக பார்ப்பனியத்தாலும், முதலாளித்துவத்தாலும் வீழ்த்தப்படுவார்கள் என்பதை உணர்ந்து நாம் செயலாற்ற வேண்டும்.
- செ.கார்கி